இணை கற்பித்தல் 20 - மறைவான ஞானம்
தொடர்: 20
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
ஒரு மனிதனால் ஒன்றைச் செய்வதற்கு ஆற்றல் இருக்கிறதா இல்லையா
என்பது இரண்டாவது விஷயம். ஒரு மனிதருடைய அறிவு என்ன? மகானுக்கெல்லாம்
மிகப்பெரிய மகானாக இருக்கட்டும். அவருடைய அறியும் திறன் என்ன?
நான் ஒரு அறையில் இருந்து என்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்
என்றால் அந்தச் சமயத்தில் என்னால் எதையெல்லாம் பார்க்க முடியும்? நண்பர்கள் எனக்கு முன்னால் இருப்பதால் நான் அவர்களைப் பார்ப்பேன்.
நான் அவர்களுக்கு முன்னால் இருப்பதால் அவர்கள் என்னைப் பார்ப்பார்கள். இவ்வளவு தான்.
இது அல்லாமல் அந்த அறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்? அறைக்கு வெளியே யார் இருக்கிறார் என்பதை அறைக்குள் இருந்து கொண்டே
என்னால் பார்க்க முடியுமா? முடியாது. இதுபோன்ற மறைவானவற்றை
அறிந்து கொள்வதற்கான ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்று அல்லாஹ் மறுக்கிறான்.
அவ்லியா என்று நாம் யாரைச் சொல்கிறோமோ அவர் இறந்து போய் விட்டார்.
அவருக்கு முன்னால் நாம் நின்றால் அவருக்குத் தெரியுமா? அவரால் நம்மைப் பார்க்க முடியுமா?
நாம் அவரிடம் கேட்டு அவர் தருவார் என்பது இரண்டாவது விஷயம்.
நாம் ஒரு பிரார்த்தனை செய்தால் முதலில் அது அவருக்குத் தெரியுமா? நாம் அவருக்கு முன்னால் உட்கார்ந்திருப்பது தெரியுமா? இந்த மறைவான ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
இந்த ஆற்றலை அல்லாஹ் வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. மறைவானதை தனக்கு மட்டும் உரியதாக
அல்லாஹ் ஆக்கிக் கொண்டான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆறு வகை அறிவுகள்
முதலில் நாம் மறைவான ஞானம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
அல்லாஹ் நமக்கு ஐந்து புலன்களைத் தந்திருக்கிறான். ஆறாவதாக அறிவை தந்திருக்கிறான்.
இந்த ஆறு வகைகளில் தான் நாம் ஒன்றை அறிந்து கொள்ள முடியும்.
பார்த்தல்
ஒரு பொருளை கண்ணால் பார்த்து அறிந்து கொள்கிறோம். பிறக்கும்
போதே நமக்குப் பார்வை இல்லையென்றால் நம்மால் நிறத்தை பார்த்து இது சிகப்பு, இது பச்சை என்று அறிந்து கொள்ள முடியுமா? அவனுக்கு அழகு தெரியுமா? அல்லது அசிங்கம்
தெரியுமா? எதுவும் தெரியாது. எனவே கண் இருப்பதால் ஒருவரைப் பார்த்து இவர்
உயரமானவர்,
இவர் குள்ளமானவர், இவர் குண்டானவர், இவர் ஒல்லியானவர், இது அழகாக
இருக்கிறது,
இது அசிங்கமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம். பல விஷயங்களை
நாம் கண் மூலமாக அறிகிறோம். இது முதல் வகை.
கேட்டல்
இன்னும் சில விஷயங்களைக் காதால் அறிகிறோம். ஒருவர் பேசுவதை நாம்
காதால் கேட்கிறோம். இவர் திட்டுகிறார், இவர் பாட்டுப்
பாடுகிறார்,
இவர் நல்லதைப் பேசுகிறார், இவர்
உளறுகிறார் என்று நாம் சப்தங்களை வைத்து அறிந்து கொள்கிறோம்.
இவர் ஆங்கிலத்தில் பேசுகிறார், இவர் மலையாளத்தில் பேசுகிறார், இவர் ஹிந்தியில் பேசுகிறார் என்று வேறுபடுத்தி அறிந்து கொள்கிறோம்.
கண் பார்வை இல்லையென்றால் கூட ஒருவர் சொல்வதைக் காதால் கேட்டு அறிந்து கொள்கிறோம்.
இது இரண்டாவது வகை.
நுகர்தல்
இன்னும் சில பொருட்களை மூக்கினால் நுகர்ந்து அறிந்து கொள்கிறோம்.
இது நல்ல வாடை,
இது கெட்ட வாடை, இது பிரியாணி, இது சாம்பார் சாதம், இது மல்லிகைப்பூ
வாடை, இது சாக்கடை வாடை என்று நாம் நம்முடைய கண்ணையும் காதையும் பொத்திக்
கொண்டால் கூட நம்முடைய மூக்கு இதை அறிந்து கொள்கிறது. இது மூன்றாவது வகையான அறிவு.
சுவைத்தல்
நாவின் மூலமாக சில பொருட்களை அறிகின்றோம். இது இனிப்பு, இது புளிப்பு, இது கசப்பு, இது கெட்டுப் போன உணவு, இது புளித்துப்
போன பொருள் என்று நாம் நம்முடைய காது, கண், மூக்கு இவைகளை பொத்திக் கொண்டாலும் நாவின் மூலமாக இவற்றை அறிந்து
கொள்ள முடிகின்றது. இது நான்காவது அறிவு.
உணர்தல்
அடுத்ததாக, நம்முடைய உடம்பு முழுவதும் இருக்கின்ற
தொடுதல் என்கிற தொட்டு உணரக்கூடிய அறிவு. நம்மை யாரேனும் தொட்டால் அறிந்து கொள்கிறோம்.
எறும்பு கடித்தால், ஊரல் எடுத்தால் அதை அறிந்து
கொள்கிறோம். கொசு நம்முடைய உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் கடித்தது என்றால் அந்த இடத்திற்குக்
கையைக் கொண்டுபோய் அடிக்கிறோம். வெயில் நேரத்தில் உடல் வெப்பத்தை உணருகின்றது. குளிர்
நேரத்தில் குளிரை நம்முடைய தோல் உணருகின்றது. இது ஐந்தாவது வகை.
சிந்தனை அறிவு - பகுத்தறிவு
நமக்கு ஆறாவதாக, சிந்திக்கின்ற
மூளையை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கிறான். அது பகுத்தறிவு என்று சொல்லப்படக்கூடிய சிந்தனை
அறிவாகும்.
கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட
மற்ற எல்லா படைப்பினங்களை விட மேலதிகமாக மனிதனுக்கு இந்த ஆறாவது அறிவை வழங்கியிருக்கிறான்.
ஏதேனும் ஒன்றைப் பார்க்காமலேயே இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை நாம் சிந்தித்துச்
சொல்லிவிடலாம்.
இது ஏன் இப்படி வந்தது? எங்கே இருந்து
வருகின்றது என்று நாம் சிந்திக்கின்றோம் அல்லவா? இது
தான் இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மிகப்பெரிய அருட்கொடையாகும்.
இந்த ஆறு வகையான அறிவுக்கு வெளியே உள்ள விஷயங்கள் தான் மறைவானவையாகும்.
இந்த ஆறுக்கு வெளியே உள்ளதை ஒருவனால் அறிய முடியுமா? என்றால்
எவராலும் அறிய முடியாது. நம் கண்ணுக்குக் தெரிவதை அறிய முடியும். கண்ணுக்குத் தெரியாததை
நான் அறிகின்றேன் என்று யாராவது சொன்னால் அவன் பொய் சொல்கின்றான் என்று அர்த்தம்.
சொர்க்கத்தை நம்மால் பார்த்து அறிய இயலுமா? அறிய முடியாது. பிற மாநிலங்களில், பிற நாடுகளில் எந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை நம்மால்
அறிய முடியுமா?
நமக்கு முன்னால் என்ன நடக்கிறது? யார் வருகிறார்கள்? யார் போகிறார்கள்
என்று நம்மால் அறிய முடியும். நமக்குப் பின்னால் என்ன நடக்கிறது? யார் யாரெல்லாம் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று நம்மால்
அறிய முடியுமா?
முடியவே முடியாது.
அதே போன்று காதால் நாம் எவ்வளவு கேட்டு அறிய முடியுமோ அதைக்
கேட்டேன் என்று ஒருவர் சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம். அதல்லாமல் நான் எவ்வளவு
தூரத்தில் யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அதை நான் அறிகிறேன் என்று ஒருவன் சொன்னால்
அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இன்றைக்குத் தொழில் நுட்பங்கள் பல்வேறு வகையில் வந்துவிட்டன.
இன்றைக்கு உலகத்தில் எந்த மூளையில் யார் இருந்தாலும் அவருடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு
கொள்ளலாம். இண்டர்நெட் (ஸ்கைப், வாய்ஸ் சாட்) போன்ற சாதனங்கள்
மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.
ஆனால் எந்த ஒரு சாதனமும் இல்லாமல் நான் இங்கிருந்து கொண்டே யாருடனும்
பேச முடியும்;
யார் பேசுவதையும் இங்கிருந்து கொண்டே கேட்க முடியும் என்று ஒருவர்
சொன்னால் அதை ஒத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு யாராலும் செய்யவும் முடியாது.
அமெரிக்க அதிபர் தற்போது வெள்ளை மாளிகையில் இப்போது உரையாற்றிக்
கொண்டிருக்கிறார். அது எந்த ஒரு சாதனமும் இல்லாமல் எனக்குக் கேட்கிறது என்று ஒருவன்
சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எந்த மனிதனாக இருந்தாலும் காதால் கேட்பதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது.
அந்த அளவுகோலைத் தாண்டி யாராலும் கேட்க முடியாது. ஆக இந்த ஆறு புலன்களுக்கும் அப்பாற்பட்டதுதான்
மறைவானவை என்று பொருள்.
அடுத்த அரை மணி நேரத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? நாளை என்ன நடக்கும் என்பது மறைவான விஷயம். ஏனென்றால் பின்னால்
நடக்கவிருப்பதை நாம் கண்ணால் பார்க்க முடியாது. காதால் கேட்க முடியாது. நாக்கால் சுவைத்துப்
பார்க்க இயலாது. மூக்கினால் முகர்ந்து பார்க்க இயலாது. உடல் உறுப்புகளால் தொட்டுப்
பார்க்க இயலாது. அறிவால் சிந்திக்கவும் முடியாது. அப்படியிருந்தால் அது மறைவான விஷயமாகும்.
நாளை என்ன நடக்கும் என்பதை இன்று எவனாலும் கூற முடியாது.
வழக்கமான நிகழ்வுகளை வேண்டுமானால் சிந்திக்கின்ற அறிவின் மூலம்
கணித்து ஒருவன் சொல்லலாம். ஆனால் அது நடந்தாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உதாரணமாக, ஆறு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்திற்கு வரும்
என்று ஒருவன் சொல்கின்றான். இது வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கணித்து அவன் சொல்கின்ற
விஷயம். இதை அவன் ஆறாவது அறிவான பகுத்தறிவின் மூலம் சிந்தித்துச் சொல்கின்றான். அது
நடக்கவும் செய்யலாம்; நடக்காமலும் போகலாம். ஆறு மணிக்கு
வர வேண்டிய ரயில் ஏழு மணிக்கு வரலாம்; அல்லது வராமலே
போய்விடலாம். ஏதேனும் விபத்து ஏற்பட்டு வராமல் ஆகிவிடலாம். இதற்குப் பெயர் மறைவான ஞானம்
அல்ல.
ஆக, காலத்தால் பிந்திய அனைத்தும், இடத்தால் பிந்திய அனைத்தும் மறைவானவையாகும். இந்த மாதிரி மறைவாக
இருக்கக்கூடிய விஷயங்களையெல்லாம் அறியக்கூடியவராக எந்த மனிதரையும் அல்லாஹ் படைக்கவேயில்லை.
நபிமார்களாக இருந்தாலும் சரி! மகான்களாக இருந்தாலும் சரி! பார்வையின்
மூலம் நாம் எப்படி அறிந்து கொள்வோமோ அதே போன்று தான் அவர்களுடைய பார்வையும்.
இறைவன் மூலமாகப் பெற்ற அற்புதங்களைத் தவிர்த்து எல்லா நபிமார்களும்
மறைவான ஞானத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள். அந்த நபிமார்களுடைய செய்திகளைப்
பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
சுலைமான் நபியின் ஆற்றலும் அறிவும்
நபிமார்களிலேயே அதிகமான பாக்கியங்கள், சிறப்புகள் வழங்கப்பட்டவர் சுலைமான் நபி தான். அவருக்கு வழங்கப்பட்ட
பாக்கியங்களைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆட்சியதிகாரத்தை மட்டும் கொடுக்காமல்
ஷைத்தான்கள்,
ஜின்கள் ஆகியவற்றை வசப்படுத்தும் அதிகாரத்தையும் சேர்த்தே கொடுத்தான்.
அவர் கட்டளையிட்டால் ஜின்கள் அவருக்குச் சேவை செய்யும்.
அது மட்டுமல்லாமல் காற்றை வசப்படுத்தும் அதிகாரத்தையும் அவருக்கு
அல்லாஹ் கொடுத்தான். இப்படிப்பட்ட சிறப்புகள் வேறு யாருக்குமே வழங்கப்படவில்லை. அதுபோன்று
பறவைகள் பேசுவதை அவர் அறிந்து கொள்வார். எறும்புகள் பேசுவதை அறிந்து கொள்வார். நாம்
மனித இனத்திற்கு மட்டும் தான் ஆட்சி செய்கிறோம்; கட்டளை
இடுகிறோம். அவர்கள் பேசுவதை அறிந்து கொள்கிறோம். இது தான் ஒரு மனிதருக்குரிய தன்மைகள்.
ஆனால் சுலைமான் நபிக்கு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற இனத்துக்கும் தனது அதிகாரத்தைப்
பயன்படுத்தக்கூடிய, அவர்களுடன் உரையாடக் கூடிய ஆற்றலை
இறைவன் வழங்கினான்.
தனக்கு வழங்கப்பட்ட சிறப்புகளைப் பார்த்து விட்டு சுலைமான் நபியவர்கள், "இந்தச் சிறப்புகள் நமக்கு வழங்கப்பட்டதால் நாம் அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தச் சிறப்பு வேறு எந்த மனிதருக்காவது வழங்கப்பட்டிருந்தால்
அவன் தன்னைக் கடவுள் என சொல்லிக் கொண்டு திரிவானே' என
நினைக்கிறார்.
பிர்அவ்ன் இவ்வாறு தான் சொல்லிக் கொண்டு திரிந்தான். சுலைமான்
நபிக்கு வழங்கப்பட்ட சிறப்புகளில் ஒரு சதவீதம் கூட அவனுக்கு வழங்கப்படவில்லை. மிஸ்ர்
என்ற பகுதியை ஆட்சி செய்யக்கூடிய ஒரு அதிகாரத்தை மட்டும் தான் அவனுக்கு அல்லாஹ் வழங்கினான்.
ஆனால் அதை வைத்துக் கொண்டு அவன், நானே மிகப் பெரிய இறைவன் என்று
சொல்லிக் கொண்டான்.
ஆனால் சுலைமான் நபிக்கு எவ்வளவோ சிறப்புகளை அதிகாரத்தை அல்லாஹ்
வழங்கினான். அப்படியானால் அவர்கள் தன்னை பிர்அவ்னை விட மிகப்பெரிய இறைவன் என்று சொல்லியிருக்கலாமல்லவா!
அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை. மாறாக இது என்னுடைய இறைவனின் அருட்கொடை என்று தான் சொன்னார்.
இது என்னுடைய உழைப்பினால் கிடைத்தது அல்ல என்று தான் சொன்னார்.
அதுமட்டுமல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட இந்த அருட்கொடைகளைப் பார்த்து
விட்டு, "இறைவா! எனக்குப் பின்னால் இது போன்ற அருட்கொடைகளை யாருக்கும்
நீ வழங்கிவிடாதே!'' என்று பிரார்த்தனை செய்கிறார்.
பொதுவாக யாராக இருந்தாலும் தனக்கு வழங்கப்பட்ட நல்லவற்றைப் பிறருக்கும்
கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். ஆனால் சுலைமான் நபி பயந்து போய், இப்படி யாருக்கும் கொடுத்து விடாதே என்று கூறுகிறார்கள். இவ்வளவு
அருட்கொடைகளையும் வேறு யாருக்கேனும் கொடுத்தால் அவனால் தாங்க முடியாது. கண்டிப்பாக
அவன் தடம்புரண்டு விடுவான்.
இந்த உலகத்தில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு
மனிதனுக்குத் திடீரென்று கார் கிடைத்தால், அல்லது அவன்
கோடீஸ்வரனாக மாறிவிட்டால் அவன் எப்படி எல்லாம் மாறிவிடுகிறான். அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறான்.
அவனுடைய குணம், பண்பாடு, பழக்க வழக்கம், நடைமுறைகள்
எல்லாமே மாறிவிடுவதைப் பார்க்கிறோம். அதை அவனால் தாங்க முடியவில்லை. நிலைமை இப்படியிருக்கையில்
சுலைமான் நபிக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கு வழங்கப்பட்டிருந்தால் நாம் என்ன கதிக்கு
ஆளாவோம்?
எனக்கு வழங்கப்பட்டது போன்று யாருக்கும் கொடுத்துவிடாதே என்று
சுலைமான் நபி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அதையும் அல்லாஹ் ஏற்றும் கொண்டான்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அத்தகைய சிறப்புகளைப் பெற்ற சுலைமான் நபியின் வாழ்க்கையில் நடந்த
ஒரு சம்பவம்...
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். "ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். "அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக்
கொண்டு வர வேண்டும்'' (என்றும் கூறினார்).
(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத்
தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு
வந்துள்ளேன்''
என்று கூறியது. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை
ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான
சிம்மாசனமும் உள்ளது''
"அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி
சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக்
காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி
பெற மாட்டார்கள்'' (என்றும் கூறியது.)
வானங்களிலும், பூமியிலும்
மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும்
அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின்
அதிபதி என்றும் கூறியது.
"நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில்
ஆகி விட்டாயா?
என ஆராய்வோம்'' என்று அவர்
கூறினார்.
அல்குர்ஆன் 27:20-26
"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால்
அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார்.
"உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம்
நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள்
அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.
தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?' என்று
என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே
நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன்
தேவைகளற்றவன்;
கண்ணியமிக்கவன்.
அல்குர்ஆன் 27:38-40
இத்தனை ஆற்றல், சக்தி, அதிகாரத்தை அல்லாஹ் சுலைமான் நபிக்கு வழங்கியிருக்கிறான். அவர்களால்
அவருடைய சக்திக்கு உட்பட்டவற்றைத் தான் பார்க்க முடிந்ததே தவிர அவர்களால் ஸபாவைப் பார்க்க
முடிந்ததா?
அப்படிப்பட்ட ஓர் ஊர் இருப்பதையே அவர்கள் அறிய முடியவில்லை.
பறவைக்குத் தெரிந்த அந்த ஊர் சுலைமான் நபிக்குத் தெரியாமல் போனது.
அந்த நாட்டில் உள்ள ராணியைப் பற்றியும் அறிய முடியாமல் போனது. அங்கு அந்த ராணி என்ன
செய்கிறாள் என்பதைப் பற்றியும் அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் அவர்களால்
அறிய முடியவில்லை.
ஆக, நம்மால் இங்கிருந்து கொண்டே
அடுத்த தெருவில், அடுத்த ஊரில் என்ன நடக்கிறது
என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது. பிறர் வந்து சொன்னால் மட்டும் தான் தெரிந்து கொள்ள
முடியும். இத்தனை சிறப்புகள், அதிகாரங்கள் பெற்ற சுலைமான்
நபிக்கு இந்த மறைவான ஞானம் இருக்கவில்லை என்பதை மேற்கண்ட சம்பவம் நமக்குத் தெளிவாக
எடுத்துரைக்கின்றது.
அவர் சொல்வதை ஜின்களும் ஷைத்தான்களும் கேட்டன. அவர் சொன்ன சொல்லுக்குக்
கட்டுப்பட்டன என்பது தனி விஷயம். ஆனால் அவருக்கு என்ன தெரிந்தது? கண்ணைக் கொண்டு அவரால் எதைப் பார்க்க முடிந்தது? காதைக் கொண்டு அவரால் எதைக் கேட்க முடிந்தது? அனைவரும் எந்த அளவுகோலைக் கொண்டு எவ்வளவு கேட்க முடியுமோ அந்த
அளவு தான் அவரால் கேட்க முடிந்தது; பார்க்க முடிந்தது.
இறைவனுக்கு இருக்கக்கூடிய எல்லையற்ற பார்வைப் புலன், கேட்கும்
திறன் அவருக்கு இருந்ததா? இல்லவே இல்லை.
அதுபோன்று இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட பல நபிமார்களுடைய
வாழ்க்கையிலெல்லாம் மறைவான விஷயங்கள் அவர்களுக்குத் தெரியவே இல்லை; அனைத்து மறைவான ஞானமும் இறைவன் ஒருவனுக்குத் தான் என்பதற்கு
ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அவற்றை இன்ஷா
அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.
EGATHUVAM MAR 2014