அழகாக்கப்பட்ட அமல்கள் - 2
கடந்த ஜனவரி இதழில் "அழகாக்கப்பட்ட அமல்கள்' என்ற தலைப்பின்கீழ், ஒவ்வொருவரும்
தங்கள் செயல்களை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதையும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் பெரும் பாவத்தைக் கூட அவர்கள் இவ்வாறு
நியாயப்படுத்துவதற்குக் காரணம் ஷைத்தான் அவர்களுடைய அமல்களை அலங்கரித்துக் காட்டுவது
தான் என்பதையும் விரிவாகப் பார்த்தோம்.
அண்மையில் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி இந்தத் தலைப்புக்கு
மிகப் பொருத்தம் என்பதால் அதை இங்கே உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.
கொடும்பாவி கட்டி மக்கள் இழுத்ததால் பெய்த மழை?
மூன்று புயல்கள் கரையைக் கடந்தும், மூன்று புயல்கள் வலுவிழந்தும் போய்விட்ட நிலையிலும் நாகப்பட்டினம்
மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை போதிய மழையைத் தரவில்லை.
அக்டோபர் 20-ம் தேதி தொடங்கிய பருவமழை டிசம்பர்
31 வரையிலுமான காலத்தில் வெறும் 3 நாட்கள் மட்டுமே வேதாரண்யத்தில் பெய்தது. மழை இல்லாததால் அப்பகுதியில்
மழையை நம்பி செய்யப்பட்டிருந்த சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் தென்னடார்
கிராம மக்கள் கடந்த நவம்பரிலும், சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த
மக்கள் கடந்த டிசம்பரிலும் மழை வேண்டி தங்கள் கிராமங்களில் கொடும்பாவி கட்டி அனைத்து
ஊர்களுக்கும் அதனை இழுத்துச் சென்றனர். அப்போதும் மழை பெய்யவில்லை.
வேதாரண்யத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி பல்வேறு
பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் திங்கள்கிழமை முதல் மழை பெய்து வருகிறது.
அதிலும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை 4 செ.மீ அளவு மழை பொழிந்து மக்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப
பல்வேறு விதமான பழக்க வழக்கங்களை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். சரியோ தவறோ, அதனை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் தங்களுக்கு
அதில் இருக்கும் அசைக்க முடியாத, மாறாத நம்பிக்கையின் விளைவாக
மக்கள் காலம் காலமாக அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அப்படி ஒரு நம்பிக்கைதான்
மழை வேண்டி கொடும்பாவி கட்டி இழுக்கும் பழக்கம். காவிரி டெல்டாவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் கொடும்பாவி கட்டி இழுக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
அதென்ன கொடும்பாவி?
களிமண்ணால் மிகப்பெரிய மனித உருவம் செய்து அதற்கு ஆடைகள் அணிவித்து
அதை கொடிய பாவியாக சித்தரிப்பார்கள். யாரோ ஒரு கொடிய பாவி ஊரில் இருப்பதால்தான் மழை
பெய்யவில்லை என்று கருதும் மக்கள், அந்தக் கொடிய
பாவியை அவமானப்படுத்தி அடித்து இழுத்துச் சென்று ஊரைவிட்டு அப்புறப்படுத்தி விட்டால்
மழை பெய்துவிடும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பெண்கள் ஒப்பாரி
அந்தக் கொடிய பாவியாக இந்த மண் உருவம் பாவிக்கப்படும். ஊர் மக்கள்
எல்லோரும் கொடும்பாவியைச் சுற்றிக் கூடுவார்கள். பெண்கள் அந்தக் கொடிய பாவி இறந்து
போனதாகக் கருதி ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஆண்கள் கொடிய பாவியை தரையில் போட்டு இழுத்தவாறு
ஊரில் வலம் வருவார்கள். "கெட்ட கொடும்பாவி, கேடுகெட்ட
சக்களத்தி'
என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் அந்தக் கொடும்பாவியை கேவலமாக விமர்சிக்கும்.
சாவு ஊர்வலத்துக்கு அடிக்கும் பறை மேளம் ஒலிக்க ஊரை விட்டு அந்தக் கொடும்பாவியை அப்புறப்படுத்துவார்கள்.
அதற்குப் பிறகு நிச்சயம் மழை பெய்யும் என்று மக்கள் மனநிறைவோடு ஊர் திரும்புவார்கள்.
இதுவும் ஒரு வழக்கம்தான்.
இந்த பழக்கம் குறித்து தமிழறிஞரும் பிரபல இலக்கியச் சொற்பொழிவாளருமான
பேராசிரியர் அகரமுதல்வன் கூறியது:
"மரபின் வழியில் இப்படி செய்யப்படுவது வழக்கம் தான். பன்னெடுங்காலமாக
தஞ்சை மண்ணில் இப்படிப்பட்ட பழக்கம் இருந்து வருகிறது. ஆனால், அதைப் பற்றிய பதிவுகள் எதுவும் இலக்கியத்தில் இல்லை. ஆன்மிக
ரீதியாக நந்தியைச் சுற்றிலும் தண்ணீரை தேக்குவது, மகாகாளன்
மீது பானை நீரை சொட்டச் செய்வது போன்ற பழக்கம் இருப்பது போல கிராமப்புற மக்களிடம் இப்படிப்பட்ட
வழக்கம் இருந்து வருகிறது.
கொடும்பாவிக்காக பெய்கிறதோ இல்லையோ மக்கள் ஓரிடத்தில் கூடி மழைக்காக
இறைஞ்சுவதை முன்னிட்டாவது மழை பெய்யும். கோயில்களில் விழா என்றாலும் இப்படி உருவம்
செய்து ஊரின் எல்லா வீதிகளிலும் இழுத்து வருவதைப் போல இதுவும் ஒரு வழக்கம்தான்'' என்றார்.
இவ்வாறு தி இந்து தமிழ் நாளிதழில், மூட நம்பிக்கை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
மழை எவ்வாறு பொழிகின்றது என்பதை இன்று அறிவியல் சந்தேகத்திற்கு
இடமின்றி நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. அப்படியிருந்தும் இப்படி ஒரு கூட்டம் இதுபோன்ற
மடமையான நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றது.
மின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும்
உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில்
உள்ளவை. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30:24
எல்லாம் வல்ல இறைவன் மழையை, தானே
இறக்குவதாகத் திருக்குர்ஆனில் கூறுகின்றான். இந்தக் கருத்தில் திருக்குர்ஆனில் பல வசனங்கள்
இடம்பெற்றுள்ளன.
இந்த வசனங்கள் யாவும் மழை பொழிவது இறைவனின் கைவசம் உள்ளது என்பதை
அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.
மழை இல்லாது போனால் அதற்காக வேண்டி தன்னிடமே பிரார்த்தனை செய்ய
வேண்டும் என்றும், தன்னிடம் பாவ மன்னிப்பு தேட
வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றான்.
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக
இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.
அல்குர்ஆன் 71:10,11
மழைப்பொழிவை, கொடும்பாவி
எரிப்பதன் மூலம் பெற்றுவிடலாம் என்ற மாயையை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கி, அலங்கரித்துக் காட்டுகின்றான் என்பதை விளக்கவே இந்த எடுத்துக்காட்டு.
அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி
பெற மாட்டார்கள்.
அல்குர்ஆன் 27:24
இந்த வசனத்தை இங்கு பொருத்தமாக நினைவு கூர்வோமாக!
EGATHUVAM MAR 2014