இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 12 - அழுது புலம்பிய ஆதம் நபி?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்து, அவரிடமிருந்து அவருடைய மனைவியையும் படைத்து இருவரையும் சொர்க்கத்தில்
தங்குமாறு உத்தரவிட்டான். சொர்க்கத்தில் தாங்கள் விரும்பியதை தாராளமாகப் புசிக்குமாறும், அதேவேளை குறிப்பிட்ட ஒரு மரத்தின் பக்கம் நெருங்கக்கூடாது என்றும்
இறைவன் எச்சரிக்கை செய்தான்.
ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் இறைவன் தடுத்த மரத்தை அவ்விருவரும்
நெருங்கி அதன் கனிகளைப் புசித்தார்கள். இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். எனவே இறைவன்
கோபம் கொண்டு சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் வெளியேற்றி விட்டான். பிறகு தாங்கள்
செய்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி, துஆ செய்தார்கள்.
இச்சம்பவம் திருக்குர்ஆனில் 2வது அத்தியாயம், 35, 36, 37 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.
ஆதம் நபி, இறைவனிடமிருந்து ஒரு பிரார்த்தனையை
கற்றுக் கொண்டு,
இருவரும் அந்தப் பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பாவ மன்னிப்பு
கோரினார்கள் என்று அவ்வசனங்கள் கூறுகின்றன. ஆதம் நபி இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட
பிரார்த்தனை எது என்று அந்த வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வ இன்லம் தக்ஃபிர்லனா வ தர்ஹம்னா ல
நகூனன்ன மினல் காஸிரீன்.
இது தான் அந்த துஆ!
பொருள் : "எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம்.
நீ எங்களை மன்னித்து, அருள்புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்''
ஆதம் அலை அவர்கள் செய்த பிரார்த்தனை இது தான் என்று திருக்குர்ஆனில்
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறைவனுடைய வசனத்திற்கு மாற்றமாக, முரணாக, ஆதம் நபி செய்த துஆ என்று வேறுபட்ட
பல துஆக்களை விரிவுரையாளர்கள் தங்கள் நூல்களில் எழுதியுள்ளார்கள்; புழுகியுள்ளார்கள். அதன் விவரம் வருமாறு:
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை பூமியில் இறக்கிய போது அவர் கஃபாவை
ஒரு வாரம் சுற்றினார்கள். கஃபாவிற்கு நேராக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அல்லாஹும்ம
அன்த தஃலமு ஸிர்ரி வ அலானிய்யத்தி ஃபஅக்பில் மஃதிரதீ வ தஃலமு ஹாஜதீ ஃப அஃதினீ சுஅலி
வ தஃலமு மா இன்தீ ஃபக்ஃபிர்லீ துனூபி அஸ்அலுக ஈமானன் யுபாஹி கல்பி வ யகீனன் ஸாதிகன்...
என்ற பிரார்த்தனையைச் செய்தார். அப்போது அல்லாஹ் "ஆதமே! நீ என்னிடம் பிரார்த்தனை
புரிந்தாய். நான் உனக்கு பதிலளித்து விட்டேன்'' என வஹீ அறிவித்தான்.
பொருள்: இறைவா நீ எனது இரகசியத்தையும், வெளிப்படையானவற்றையும் அறிவாய். எனவே எனது காரணத்தை ஏற்றுக்
கொள். எனது தேவையை நீ அறிவாய். எனவே நான் கேட்பதை வழங்கி விடு. என்னிடத்தில் உள்ளதை
நீ அறிவாய். எனவே எனது பாவத்தை மன்னிப்பாயாக. எனது உள்ளத்தை வலுப்படுத்தும் ஈமானையும்
உண்மையான உறுதியையும் இறைவா நான் உன்னிடம் கேட்கிறேன்.....
நூல் : அத்துர்ருல் மன்சூர், பாகம்
1, பக்கம் 315
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் நழ்ர் பின் தாஹிர் என்ற
பொய்யர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று பல இமாம்கள் கூறியுள்ளார்கள்.
பார்க்க: அல்லுஅஃபாஉ வல் மத்ருகீன், பாகம் 3, பக்கம் 161
ஆதம் (அலை) அவர்கள் இப்படி ஒரு துஆ செய்தார்கள் என்று இட்டுக்கட்டப்பட்ட
செய்தியைத் தவிர தகுந்த வேறு ஆதாரம் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அது குர்ஆன் கூறும்
செய்திக்கு மாற்றமாகவே ஆகும். ஏனெனில் ஆதம் நபி செய்த துஆ குர்ஆனிலேயே விளக்கப்பட்டுவிட்டது.
அதற்கு மாற்றமாக வேறு ஒரு துஆவை ஓதினார்கள் என்று ஒரு செய்தி வருமேயானால் அது குர்ஆனுடன்
மோதுகின்ற காரணத்தினாலே அந்த செய்தி நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
இது தவிர இன்னும் பல துஆக்கள் கட்டுக்கதைகளோடு பின்னிப் பிணைந்து, புனைந்து விரிவுரை நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. அவற்றில்
உதாரணத்திற்கு ஒரு கதை உங்கள் பார்வைக்கு....
200 வருடங்கள் பாவமன்னிப்பு
ஆதம் அலை அவர்கள் இருநூறு வருடங்கள் பாவமன்னிப்பு வேண்டினார்கள்.
இறுதியில் இறைவன் அவர்களுக்குச் சில வார்த்தைகளை வழங்கினான். அதை அவருக்கு சொல்லிக்
கொடுத்தான். (அதன் விவரம்) ஆதம் நபி தனது உள்ளங்கையை நெற்றியில் வைத்து அழுது கொண்டிருந்தார்கள்.
அப்போது ஜிப்ரீல் அவரிடத்தில் வந்து ஸலாம் கூறினார். ஆதம் நபி அழுததினால் ஜிப்ரீலும்
அழலானார்கள். பிறகு "ஆதமே உங்களை பீடித்துள்ள துன்பம் என்ன? எதற்காக இந்த அழுகை?'' என்று கேட்டார்கள்.
அதற்கு ஆதம் நபி "ஜிப்ரீலே எப்படி நான் அழாமல் இருப்பேன்? சொர்க்கத்திலிருந்து இழிவான பூமியின் பக்கம், நிலையான வீட்டிலிருந்து இழிவான, அழிவுள்ள உலகை நோக்கி, அருள் நிறைந்த
உலகிலிருந்து கேடு உள்ள உலகை நோக்கி, நிரந்தரமான
உலகத்திலிருந்து அழியும் உலகத்திற்கு, என்னை எனது
இறைவன் அனுப்பி விட்டானே! ஜிப்ரீலே இந்த துன்பத்தை நான் எப்படி அடக்கி கொள்வேன்'' என கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் தமது இறைவனிடம் சென்று ஆதம் அவர்கள்
கூறியதை தெரிவித்தார். பிறகு அல்லாஹ் "ஜிப்ரீலே நீ ஆதமிடம் சென்று (நான் கூறியதாக)
நான் உன்னை எனது கரத்தால் படைக்கவில்லையா? என்று கேளும்.
அவர் "ஆம் இறைவா' என்று கூறுவார். எனது ரூஹை நான்
உன்னில் ஊதவில்லையா என்று கேளும். "ஆம் இறைவா' எனக்
கூறுவார். எனது வானவர்களை உனக்காக பணியச் செய்யச் சொல்லவில்லையா என்று கேளும். ஆம்
இறைவா என்பார். சொர்க்கத்தில் தங்க வைக்கவில்லையா என கேட்க, ஆம் இறைவா என்பார். நான் உனக்குக் கட்டளையிட்டு அதை நீ மீறவில்லையா
என கேளும்;
அதற்கும் ஆம் என்பார். ... இறுதியில் ஆதமே உனது சப்தத்தை, கெஞ்சுதலை நான் செவியுற்றேன். உனது பாரத்தைக் குறைத்து, உனது அழுகைக்காக நான் உனக்கு அருள் புரிகிறேன். இதோ லாயிலாஹ
இல்லா அன்த்த சுப்ஹானக வபிஹம்திக அமில்து சூஅன் வ ளலம்து நஃப்ஸி ஃபர்ஹம்னனி இன்னக்க
அன்த்த கைருர் ராஹிமீன். லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக வபிஹம்திக அமில்து சூஅன் வ
ளலம்து நஃப்ஸி ஃதுப் அலைய்ய இன்னக்க அன்த்த தவ்வாபுர் ரஹீம் எனக்கூறுவீராக. என்று ஆதமிடம்
தெரிப்பீராக''
என இறைவன் கூறினான்.
நூல் : அத்துர்ருல் மன்சூர், பாகம்
1, பக்கம் 319
ஆதம் நபி இருநூறு வருடங்கள் பாவமன்னிப்பு கேட்டதாகவும், சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக நெற்றியில் கை வைத்து
அழுததாகவும்,
இறைவன் ஆறுதல் கூறியதாகவும், இறுதியில்
லாயிலாஹ இல்லல்லாஹ் என்று துவங்கும் ஒரு துஆவை இறைவன் கற்றுக் கொடுத்தான் எனவும் பல
விஷயங்கள் இந்த கட்டுக் கதையில் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. (இதை அருகில் இருந்து
பார்த்தது யாரோ தெரியவில்லை.) இதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. இது
முழுக்க முழுக்க கப்ஸா தானே தவிர இதற்குக் குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஏற்கத்தக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
இது போன்ற கட்டுக்கதைகளை பதிவு செய்த இமாம்கள் அதே இடத்தில்
இது கதை என்று இனங்காட்டியிருக்க வேண்டாமா? என்பதே நமது
கேள்வி.
முஹம்மதின் பொருட்டால்...
இது சம்பந்தமாக இன்னொரு தவறான நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு மத்தியில்
நிலவுகின்றது. அதாவது ஆதம் (அலை) இறைவனிடம் குறிப்பிட்ட தவறுக்காகப் பாவமன்னிப்பு கோரும்
போது, முஹம்மதின் பொருட்டால் தன்னை மன்னிக்குமாறு இறைவனிடம் துஆ செய்தார்
என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சில விரிவுரை
நூல்களில் இந்தத் தகவல் கூறப்படுகின்றது. ஆனால் இதுவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
ஆதம் அலை பாவம் புரிந்த போது தனது தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, "இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்'' என கூறினார். அப்போது, "முஹம்மது
யார்?'' என இறைவன் வஹீ மூலம் கேட்க, "நீ கண்ணியம் பொருந்தியவன். நீ என்னை படைத்த போது எனது தலையை
உனது சிம்மாசனத்தை நோக்கி உயர்த்தினேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
என எழுதப்பட்டு இருந்தது. உன்னுடைய பெயரோடு யாரை சேர்த்திருந்தாயோ அவரை விட உன்னிடம்
மதிப்பு பெற்றவர் எவரும் இல்லை என அறிந்து கொண்டேன்'' என
கூறினார். அதற்கு அல்லாஹ், "ஆதமே! அவர் உமது சந்ததியிலிருந்து
தோன்றும் நபிமார்களில் இறுதியானவர். அவர் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்'' என இறைவன் வஹீ மூலம் கூறினான்.
நூல் : அத்துர்ருல் மன்சூர்
பாகம் 1, பக்கம் 312
இது சில ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றிருந்தாலும் அந்தச் செய்திகள்
அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும். இட்டுக்கட்டி, பொய்யான தகவல்களைச் சொல்லும் அப்துர் ரஹ்மான் என்ற அறிவிப்பாளர்
இதில் இடம்பெறுகிறார். அபூஹாதம், ஹாகிம், இப்னுல் ஜவ்ஸீ போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவராலும் இவர்
ஹதீஸ்களை அறிவிக்கத் தகுதியற்றவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
(பார்க்க: தஹ்தீபுத்
தஹ்தீப், பாகம் 6, பக்கம் 178)
அது மட்டுமின்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறிய பிரார்த்தனைக்கு
மாற்றமாக இருப்பதினாலும் இது மறுக்கப்பட வேண்டியதாகும்.
எனவே இது போன்ற நம்பிக்கை முஸ்லிம்களுடைய உள்ளத்தில் இருக்குமானால்
அது குர்ஆனுக்கு எதிரானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
EGATHUVAM FEB 2012