May 2, 2017

மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும்

மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும்

கே.எம். அப்துந் நாசிர்

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களை அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களை மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான்.

நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன்அதை ஒரு நிபந்தனையுடன் தான் கடமையாக்குகிறான். அதாவதுநபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் நபிமார்கள் செய்தவைகளைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.

நபிவழி - சுன்னா என்றால் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒன்று வணக்க வழிபாடுகள். மற்றொன்று உலகம் சம்பந்தப்பட்ட காரியங்கள். வணக்க வழிபாடுளைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் அவை மார்க்கச் சட்டமாகி விடும். ஆனால் உலகக் காரியங்களைப் பொறுத்த வரை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும் அவை மார்க்கச் சட்டமாகாது. தாம் செய்ததுடன் அவர்கள் வாயால் கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கச் சட்டமாக ஆகும்.

ஒட்டகத்தில் பயணம் செய்ததுகோதுமை உணவை உட்கொண்டது போன்ற காரியங்களை இரண்டாம் வகைக்கு உதாரணமாக நாம் குறிப்பிடலாம். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும்தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர். ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை.

தாடியும்தலைமுடியும் வணக்க வழிபாடுகளில் உள்ளவை அல்ல. எல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்துக் கட்டளையிட்டதால் அது சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை முடி வளர்க்குமாறு மற்றவர்களுக்குக் கட்டளை இடாததால் அது சுன்னத்தாக ஆகவில்லை.

மற்றொரு உதாரணத்தின் மூலமும் இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொண்டனர். இதனால் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொள்வது சுன்னத் என்று யாரும் கூற மாட்டோம். ஆனால் நோன்பு துறக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறந்ததுடன் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறங்கள் என்று அவர்கள் ஆர்வமூட்டியதால் அது சுன்னத்தாக ஆகி விடுகிறது.

எனவே மார்க்க விஷயங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதும் மார்க்கமாகும். அவர்கள் செய்ததும் மார்க்கமாகும். அவர்கள் அங்கீகரித்ததும் மார்க்கமாகும்.

உலக விஷயங்களைப் பொறுத்த வரை அவர்கள் கட்டளையிட்ட அனைத்தும் மார்க்கமாகும். ஆனால் அவர்கள் செய்தவை அனைத்தும் மார்க்கமாகாது. அது போல் அவர்கள் அங்கீகரித்தவை அனைத்தும் மார்க்கமாகாது. மாறாக அவர்கள்  செய்ததுடன் மற்றவர்களுக்கும் அது குறித்துக் கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கமாக ஆகும்.



வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத் தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத் தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும்ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.



மகரந்தச் சேர்க்கையும் மாநபி விளக்கமும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இதைச் செய்யாதிருக்கலாமே?'' என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்'' எனக் குறிப்பிட்டார்கள்.

(நூல்: முஸ்லிம் 4358)

மற்றொரு அறிவிப்பில்நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான்என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  (நூல்: முஸ்லிம் 4357)

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  (நூல்: முஸ்லிம் 4356)



பரீரா சம்பவமும் பகுத்தறிவுக் கேள்வியும்

மற்றொரு ஹதீஸும் இந்த அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது.

பரீரா என்ற பெண் முகீஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப்பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீஸ் அதிக அன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடியவில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறினார்கள். அப்போது பரீரா "இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கட்டளையில்லைபரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியானால் எனக்கு முகீஸ் வேண்டாம்'' என்று பரீரா கூறி விட்டார்.

நூல்: புகாரி 5283

கணவரைப் பிடிக்காத போது அவரிடமிருந்து விலகிக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தி பரீரா விலகிக் கொண்டார்.

கணவன் மனைவியர் சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் போது இருவரும் சேர்ந்து வாழலாமே என்று நாம் அறிவுரை கூறுவோம். பிரியும் உரிமை இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்துப் போகலாமே என்ற எண்ணத்தில் இவ்வாறு ஆலோசனை கூறுவோம். இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை கூறினார்களாஅல்லது இனிமேல் இந்த உரிமை கிடையாது என்ற அடிப்படையில் ஆலோசனை கூறினார்களாஎன்று பரீராவுக்குச் சந்தேகம் வருகிறது.

எனவே தான் இது மார்க்கக் கட்டளையாஅல்லது உங்களின் சொந்தக் கருத்தாஎன வினவுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எனக் கூறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விருப்பத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்.

வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை பரீரா ஏற்காததால் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கருதவில்லை. எந்த அறிஞரும் இவ்வாறு கருதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங்களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லைவஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் எனும் போது வஹீயுடன் தொடர்பில்லாத நபித் தோழர்களையோநல்லறிஞர்களையோ பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் எப்படி அனுமதி இருக்கும்என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


வஹீ தொடர்பில்லாத நபித் தோழர்களின் சொற்களோசெயல்களோ மார்க்கத்தின் ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறினால் நபித் தோழர்களை இழிவுபடுத்துவதாகப் பிரச்சாரம் செய்வது எந்த அளவுக்கு அறியாமை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்... இன்ஷா அல்லாஹ்!

EGATHUVAM FEB 2012