May 2, 2017

அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும்

அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும்

கே.எம். அப்துந் நாசிர்

இஸ்லாம் என்பது இறைவனுக்குரிய மார்க்கமாகும். இஸ்லாம் என்ற பெயரில் எந்த ஒரு சட்டத்தைக் கூறவும் நீக்கவும் இறைவனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

இஸ்லாம் இறை மார்க்கம் என்பதன் உண்மையான பொருள், இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் மார்க்கமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.

(அல்குர்ஆன் 12:40)

இறைத்தூதரும் கூட இறைவனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகின்றான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

(அல்குர்ஆன் 7:3)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

 (அல்குர்ஆன் 6:106)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 43:43, 44)

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களை மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான். நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன் அதைக் கூட நிபந்தனையுடன் தான் கடமையாக்குகிறான். நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் நபிமார்கள் செய்தவற்றைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.

இதனை தெளிவாகப் பிரித்துக் காட்டுவது தான் ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் ஏனைய நூற்களில் இடம் பெற்றுள்ள "பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை'' செய்வது தொடர்பான ஹதீஸ் ஆகும்.

நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தெளிவான கொள்கைகளுக்குப் பதில் சொல்ல முடியாத போலி முல்லாக்கள் தங்களுடைய மத்ஹபு வண்டவாளங்களை நியாயப்படுத்துவதற்காக, சரியான ஹதீஸ்களையும் கூட எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் பலவீனமாக்கத் துவங்கி விட்டனர்.

எந்த ஒரு செய்தியையும் முறையான சான்றுகளைக் காட்டி பலவீனம் என்று நிரூபித்தால் அதனைத் ஏற்றுக் கொள்வதில் முதலாவதாக நாம்தாம் இருப்போம். அதே நேரத்தில் நபியவர்கள் செய்ததாக வரக்கூடிய சிறிய காரியமாக இருந்தாலும் பொய்யான காரணங்களைக் கூறி அதனை மாற்ற நினைத்தால் அத்தகையவர்களுக்கு முதல் எதிரியாகவும் நாம் நிற்போம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இறுதி நபித்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய பி.ஜே., "நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து நமக்கு போதித்தவை தான் மார்க்கம். அவர்கள் உலக விஷயங்களைப் போதிக்க வரவில்லை' என்பதை "பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை'' செய்வது தொடர்பான ஹதீஸைக் கூறி விளக்கினார்கள்.

இதற்கு மறுப்பளிக்கப் போகிறேன் என்று வந்த ஸைபுத்தீன் ரஷாதி என்பவர் இந்த ஹதீஸ் பலவீனம் என்று குறிப்பிட்டார். இது முஸ்லிமில் இடம் பெற்று இருந்தாலும் இதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.

இந்த ஹதீஸை பலவீனப்படுத்துவதற்கு அவர் கூறிய காரணங்கள் தான் மிகவும் பலவீனமானவையாகவும் அறியாமையின் வெளிப்பாடாகவும் இருந்தது. குழந்தைக்குப் புரையேறியதற்கான காரணத்தை பிறவிக் குருடி ஆய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்று தான் இவரின் வாதங்கள் அமைந்துள்ளன. அவர் இரண்டு காரணங்களைக் கூறினார்.

1. இது நபித்துவத்தின் தன்மைகளை தகர்க்கக்கூடிய வகையில் உள்ளது.

2. இதன் அறிவிப்பாளர்களில் பலவீனமானவர்கள் உள்ளனர்.

இவை தான் அந்த இரண்டு காரணங்கள் ஆகும்.

இந்த ஹதீஸ் நபித்துவத்தின் தன்மைகளைப் பாதிக்கிறதா? என்பதை மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும் என்ற தனிக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அறிவிப்பாளர்கள் ரீதியாக அவர் கூறும் காரணங்கள் சரியானதா? என்பதை இதில் நாம் காண்போம்.

"குர்ஆனிற்கு அடுத்த படியாக உலகில் மிகச் சிறந்த நூற்கள் புகாரி, முஸ்லிம்' என்று கூறும் மத்ஹப்வாதிகளில் ஒருவரான ஸைபுத்தீன் ரஷாதி, முஸ்லிமில் இடம் பெற்ற இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறுவது மிகவும் வியப்பானதாகும்.

அது மட்டுமில்லாமல் லயீஃப் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் மிகவும் வேடிக்கையானதாகவும், அறியாமையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.

"பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை'' செய்வது தொடர்பான ஹதீஸ் நான்கு ஸஹாபாக்கள் வழியாக முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கிலுமே ஏதாவது ஒரு அறிவிப்பாளரை போகிற போக்கில் பலவீனம் என்று வாதிக்கின்றார். அறியாத மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்பதைக் காண்போம்.

தல்ஹா பின் உபைதில்லாஹ்வின் அறிவிப்பு

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை'' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் (4711)

இதன் அறிவிப்பாளர் தொடரில் "ஸிமாக் பின் ஹர்ப்'' என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார் என்று "ஸைபுதீன் ரஷாதீ'' கூறியுள்ளார்.

ஸிமாக் பின் ஹர்ப் பலவீனமானவரா?

ஸிமாக் அவர்களைப் பற்றிப் பாராட்டியும், குறை கூறியும் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன.

காரணம் இவர் தனது முதுமைக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அதனால் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். அந்த நேரத்தில் இவரைக் கண்டவர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.

முதுமைக்கு முந்தைய காலத்தில் மிகச் சரியாக அறிவிப்பவராக இருந்தார். அந்த நிலையில் இவரைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

இது போன்ற அறிவிப்பாளர்கள் எந்த ஹதீஸை மூளை குழம்புவதற்கு முன் அறிவித்தார்களோ அவை சரியான ஹதீஸ்களாகும்.

மூளை குழம்பிய பின் அறிவித்தவை பலவீனமானவை.

மூளை குழம்புவதற்கு முன்பா, பின்பா என்பது தெரியாவிட்டால் அவை முடிவு ஏதும் இன்றி நிறுத்தி வைக்கப்படும்.

இவர் மூளை குழம்பிய பின் இவரிடம் கேட்டவர் இக்ரிமா மட்டும் தான். ஸிமாக் வழியாக இக்ரிமா அறிவித்தால் அது பலவீனமானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் தீர்வு கண்டுள்ளனர்.

(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 4 பக்கம் 204)

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட ஹதீஸில் "ஸிமாக்''கிடமிருந்து அறிவிப்பவர் "அபூ அவானா'' என்பவராவார். எனவே இந்த ஹதீஸ் மிகவும் சரியானதாகும். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

"ஸிமாக்''  என்ற அறிவிப்பாளர் முஸ்லிமில் 62 இடங்களில் இடம் பெற்றுள்ளார். அனைத்துமே "இக்ரிமா'' அல்லாதவர்கள் வழியாக வரக்கூடிய அறிவிப்புகளாகும். இக்ரிமா அல்லாதவர்கள் வழியாக ஸிமாக்கின் அறிவிப்புகள் ஸஹீஹானவை என்பதால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் அவர் இடம் பெறக்கூடிய 62 அறிவிப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். முஸ்லிம் அல்லாத திர்மிதீ, நஸாயீ, அபூதாவுத் போன்ற பிற நூற்களிலும் இவருடைய அறிவிப்புகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. அவை அனைத்துமே பலவீனம் என்று "ஸைபுத்தீன்'' அறிவிப்பாரா?

பெரும்பாலான அறிவிப்பாளர்களுக்கு இரண்டு நிலைகள் இருக்கத் தான் செய்யும். அல்லது குறிப்பிட்ட ஒருவர் வழியாக வரும் அறிவிப்புகளில் தவறிழைத்திருப்பார். அவற்றை பிரித்தறிந்து அவர் எந்நிலையில் சரியாக அறிவித்துள்ளாரோ அந்த அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஹதீஸ் கலையின் அடிப்படையாகும். அறிவு ரீதியிலும் சரியானதாகும்.

ஒரு அறிவிப்பாளர் மீது யாராவது, ஏதாவது ஒரு குறையைக் கூறி விட்டால் அதை மறுத்து விட வேண்டும் என்ற பாணியில் புகாரியின் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யப் புகுந்தால்  புகாரியை 40 பக்க புத்தகத்தில் சுருக்கி விடலாம். ஸைபுத்தீன் ரஷாதீயின் விமர்சனம் அந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.



ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் அறிவிப்பு

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் "(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்'' என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் "உதிர்ந்துவிட்டன' அல்லது "குறைந்து விட்டன'.

அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், "நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே'' என்று சொன்னார்கள்.

(இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆகவே, (அந்த ஆண்டில்) கனிகள் உதிர்ந்துவிட்டன'' என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.

(நூல்: முஸ்லிம் 4712)

இந்த அறிவிப்பில் "இக்ரிமா இப்னு அம்மார்'' என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என ஸைபுத்தீன் வாதிக்கின்றார்.

இக்ரிமா பின் அம்மார் பலவீனமானவரா?

ஸைஃபுத்தீன் ரஷாதி மிகப் பெரும் பொய்யர் என்பதற்கும் அவர் கூறுபவற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கும்  அவரது இந்த விமர்சனமே போதுமான சான்றாகும். உண்மையை மறைத்து மக்களுக்குக் கூறுபவர் எப்படி உண்மையாளராக இருக்க முடியும்.

இக்ரிமா பின் அம்மார் என்ற அறிவிப்பாளரை ஏராளமான அறிஞர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அவற்றை இங்கு வரிசைப்படுத்தினால் மிகவும் நீண்டு விடும். எனவே சுருக்கத்தைக் கருதி அவற்றைக் கூறவில்லை.

இக்ரிமா பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் "யஹ்யா பின் அபீ கஸீர்'' என்பவர் வழியாக அறிவிப்பவற்றை மட்டுமே பலவீனம் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இதை அப்படியே மறைத்து பொதுவாக அறிஞர்கள் அவரைக் குறைகூறியுள்ளது போல் ஸைபுத்தீன் நாடகமாடியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம்: 20, பக்கம்: 25ல் இக்ரிமா பின் அம்மாரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ள விமர்சனங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் அஹ்மத் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். என்றாலும் இமாம் யஹ்யல் கத்தான் அவர்கள், யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக வரக்கூடிய ஹதீஸ்களிலே இவரை பலவீனமாக்கியுள்ளார்.

யஹ்யா பின் அபீ கஸீருடைய ஹதீஸில் மட்டும் குழம்பியுள்ளார் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.

இக்ரிமா பின் அம்மார் உறுதியானவர். யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள அறிவிப்புகளில் குளறுபடிகள் உள்ளது என்று இமாம் அபூதாவூத் கூறுகிறார்.

யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள ஹதீஸ்களில் குழம்பியுள்ளார் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.

யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள ஹதீஸ்களிலே தவிர மற்றவற்றில் இவர் மீது பிரச்சனையில்லை என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்ண்ட ஹதீஸில் "அபூ அந்நஜாஸீ'' என்பவரிடமிருந்து தான் இக்ரிமா பின் அம்மார் அறிவிக்கின்றார். எனவே இந்த ஹதீஸ் இரு நூறு மடங்கு ஸஹீஹானதாகும் என்பதில் எள்ளளவு சந்தேகம் கூட கிடையாது.

மேலும் "இக்ரிமா பின் அம்மார்'' என்ற அறிவிப்பாளர் முஸ்லிமில் 38 இடங்களில் இடம் பெற்றுள்ளார். இவை அனைத்தும் பலவீனம் என்று இவர் ஒத்துக் கொள்வாரா? இன்ன பிற நூற்களிலும் இவரது அறிவிப்புகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.



அனஸ் மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்த மக்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, "நீங்கள் (இவ்வாறு) செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே!'' என்று சொன்னார்கள். ஆகவே, (அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். அதனால் அந்த மகசூலில்) நன்றாகக் கனியாத தாழ்ந்த ரகக் காய்களே காய்த்தன.

அப்போது அவர்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, "உங்கள் (பேரீச்ச) மரங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். மக்கள், "நீங்கள் இப்படி இப்படிச் சொன்னீர்கள். (அதனால் நாங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது)'' என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், "உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்'' என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் (4713)

இதன் அறிவிப்பாளர் தொடரில் "ஹம்மாத் பின் ஸலமா'' என்ற அறிவிப்பாளர் பலவீனம் என்று ஸைபுத்தீன் ரஷாதீ கூறுகிறார்.

ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா?

"ஹம்மாத் பின் ஸலமா'' என்ற அறிவிப்பாளரை ஏராளமான இமாம்கள் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர். அவற்றை இங்கே பட்டியலிட்டால் மிகவும் விரிவாகி விடும். இவர் வயோதிகர் ஆன போது மனனத் தன்மையில் குறையுடையவராகி விட்டார் என்று இமாம் பைஹகி கூறியுள்ளார். ஆனால் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் நம்பகத் தன்மையின் உச்சகட்டத்தில் உள்ளதாகும்.

இமாம் புகாரி அவர்கள் ஹம்மாத் பின் ஸலமா உடைய அறிவிப்புகளை துணைச் சான்றாக பதிவு செய்துள்ளார்கள். ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் ஸாபித் என்பவர் வழியாக அறிவிக்கும் (6439வது ஹதீஸ்) அறிவிப்பை முதன்மை ஆதாரமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

ஏனெனில் ஹம்மாத் பின் ஸலமா என்பவர் ஸாபித் என்பவர் வழியாக அறிவித்தால் அது மிக மிக உறுதியானதாகும் என பல ஹதீஸ் கலை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட செய்தி "ஸாபித்'' என்ற ஆசிரியரிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கக்கூடியதாகும். அதிகப்படியாக "ஹிஸாம் பின் உர்வா'' என்ற மற்றொரு ஆசிரியர் வழியாகவும் அறிவித்துள்ளார்.

ஸாபித் என்பார் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவித்தால் அந்த அறிவிப்பு மிக உறுதியானதாகும் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.

ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிப்பவர்களில் மஃமர் என்பவரை விட ஹம்மாத் பின் ஸலமா மிகவும் உறுதியானவராவார் என இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.

ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹம்மாத் பின் ஸலமாவிற்கு மாற்றமாக யாராவது அறிவித்தால் ஹம்மாத் பின் ஸலமாவின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும் என இமாம் இப்னு மயீன் கூறியுள்ளார்.

ஹம்மாத் பின் ஸலமா என்பார் ஸாபித்திடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளைத் தவிர வேறு எதையும் மூலச் சான்றாக (முதன்மை ஆதாரம்) பதிவு செய்யவில்லை. பிற அறிவிப்பாளர்களில் ஒரு சாராரிடமிருந்து அவர் அறிவிப்பவற்றை துணைச் சான்றாக இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.

இந்த விவரங்கள் தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம்: 3, பக்கம்: 11) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

எனவே மேற்கண்ட அறிவிப்பும் மிக மிகச் சரியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

அல்லாஹ் உண்மையை உண்மை என்றும், பொய்யைப் பொய் என்றும் நமக்கு அறியச் செய்வானாக! வழிகேடர்களின் வழிகேட்டிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக!


EGATHUVAM FEB 2012