May 15, 2017

குடும்பவியல் 12 - சந்திப்புகளும் உரையாடல்களும்

குடும்பவியல் 12 - சந்திப்புகளும் உரையாடல்களும்

தொடர்: 12

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள். நம்மை விடப் பலநூறு மடங்கு மனைவியின் மீது அன்பும் மரியாதையும் வைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். நம்மைப் போன்று அற்பமான விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அப்படிப்பட்ட நபியவர்கள் தமது மனைவி ஆயிஷாவின் வீட்டிற்கு வருகிற போது, அவர்களுடன் ஒரு ஆண் அமர்ந்திருக்கிறார். அவர் யாரென நபியவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு முன் நபியவர்களுக்கு அறிமுகமில்லாதவராகவும் இருக்கிறார் என்பதால் அவரைப் பார்த்ததும் நபியவர்களின் முகம் மாறிவிடுகிறது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், இவர் எனது பால்குடிச் சகோதரர் என்று பதிலுரைக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க அடிப்படையில் சரியாகத் தான் பதிலுரைத்தார்கள். இருப்பினும் நபியவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். உங்களது பால்குடிச் சகோதரர்கள் யார் யார்? என்பதைச் சரியாக ஆய்வு செய்து முடிவெடுங்கள். சாதாரணமாகப் பால் குடிப்பதை வைத்துக் கொண்டெல்லாம் பால்குடிச் சகோதரர் என்று முடிவெடுத்துவிட முடியாது என்று கூறிவிட்டு, பால்குடியின் சட்டத்தையும் நன்றாகத் தெளிவுபடுத்துகிறார்கள். இரண்டு வயதுக்குட்பட்ட பருவத்தில், பசியை நிறைவேற்றும் அளவுக்கு பால் குடித்திருக்க வேண்டும். அப்போது தான் பால்குடிச் சகோதரன், சகோதரரி என்ற சட்டம் பொருந்தும் என்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உணர்த்துகிறார்கள்.

அழுகின்ற காரணத்தினால் ஒரு அந்நியப் பெண் குழந்தைக்குப் பால் கொடுப்பதையெல்லாம் பால்குடிச் சட்டத்தில் எடுக்க முடியாது. அக்குழந்தையின் வயிறு நிறைகின்ற அளவுக்குப் பால் கொடுத்தால் தான் பால்குடிச் சட்டம் பொருந்தும். அதுவும் ஓரிரு தடவைகளல்ல. குறைந்தது 5 முறையாவது பசியை நிறைவேற்றும் அளவுக்குப் பால் கொடுத்தால் தான் பால்குடிச் சட்டம் பொருந்தும்.

அதே போன்று பால் சுரக்காத நிலையில், குழந்தையின் அழுகையை அமர்த்துவதற்காகப் பால் கொடுப்பதைப் போன்று நடந்து கொண்டாலும் பால்குடிச் சட்டம் பொருந்தாது.

இந்தச் செய்தியின் மூலம் விளங்குவது என்னவென்றால், ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு தாயாரிடத்தில் பால்குடித்த செய்தியை நபியவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அழுகையை அமர்த்துவதற்காகத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் பால் குடித்திருக்கிறார்களே தவிர வயிறு நிரம்புவதற்காகக் குடிக்கவில்லை என்கிற செய்தியையும் நபியவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் தான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இப்படியொரு சட்டத்தைச் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிப் பால் குடிக்கும் வகையில்) பாலூட்டுவது, (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவை ஏற்படுத்தாது.

அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் (ரலி)

நூல்: முஸ்லிம் 2874

அந்நிய ஆண், அந்நியப் பெண் என்கின்ற சட்டத்தைத் தாண்டி இன்னும் கூடுதலாக இஸ்லாம் நமக்கு எச்சரிக்கிறது. இன்று நடைமுறையில் திருநங்கைகள் என்ற பெயரில் ஆணாகவும் இல்லாத, பெண்ணாகவும் இல்லாதவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கிறவர்கள் கூட அந்நியப் பெண்களுடன் அமர்வதற்கோ தனிமையில் பேசுவதற்கோ நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கிறார்கள்.

திருநங்கைகளுக்குப் பெண் தன்மை தான் மிகைத்து இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவர்கள் பெரும்பாலும் ஆணை விட பெண்களிடம் பேசுவதற்கு அதிகம் விரும்புவார்கள். இவர்கள் அரவாணிகள் என்றும், அலி என்றும், ஒன்பது என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இப்படி திருநங்கை எனப்படுபவர்கள், பெண்களுடன் தனித்திருப்பதையே இஸ்லாம் தடுக்கிறது எனில் ஒரு ஆண் எப்படி இன்னொரு அந்நியப் பெண்ணுடன் தனிமையில் பேசவோ, தனித்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) "அலி' ஒருவர் அமர்ந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த "அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், "அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியüத்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், "இந்த அலிகள் (பெண்களாகிய) உங்கüடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று சொன்னார்கள்.

இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் "ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 4324, 5887

எனவே ஆண்கள் தமது வீட்டில் பெண்களை அனுமதிக்கும் போதும் பெண்கள் தமது வீட்டில் ஆண்களை அனுமதிக்கும் போதும் அவ்வீட்டில் அந்தப் பெண்ணுக்கும் ஆணுக்கும் முறையான மஹ்ரமானவர்களின் துணை இருக்கிறதா? என்று பார்த்தே அனுமதிக்க வேண்டும். அப்படியில்லையெனில் எந்த ஆணையும் பெண்ணையும் தனிமையில் அனுப்பிவிடக் கூடாது.

பெண் தன்மை மிகைத்திருக்கின்ற, பெண்களிடம் பேசுவதை விரும்புகின்ற அரவாணிகளையே தனித்திருக்கும் பெண்களிடம் பேசுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை எனில், ஒரு ஆண்மகன் கண்டிப்பாக பெண்களிடம் செல்லக் கூடாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிகிறது,

அதே போன்று, ஒரு பெண்ணுடைய வீட்டில் ஒருவன் தங்குவதாக இருந்தால் அந்த ஆண் அந்தப் பெண்ணுக்குக் கணவனாக இருக்க வேண்டும். இல்லையெனில் மஹ்ரமாக (திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவு) இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பெண் இன்னொரு ஆண் வீட்டில் தங்குவதாக இருந்தால் அந்த ஆணுக்கு இவள் மனைவியாக இருக்க வேண்டும். அல்லது இந்தப் பெண்ணுக்கு திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவுகளான அண்ணன், தம்பி போன்றவர்களின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். அப்படியில்லாமல் வேறெந்த உறவு முறையைச் சொல்லிக் கொண்டும் அந்நியப் பெண்களின் வீடுகளில் அந்நிய ஆண்களோ, அந்நிய ஆண்களின் வீடுகளில் அந்நியப் பெண்களோ தங்குவது கூடாது என நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவனத்தில் வையுங்கள்! கன்னி கழிந்த எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் இரவில் (தனியாகத்) தங்க வேண்டாம்; அவர் அவளை மணந்து கொண்டவராகவோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராகவோ இருந்தால் தவிர!

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4382

எனவே ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட, கடுமையாக எச்சரிக்கப்பட்ட காரியமாகும். இது மோசமான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்காகத் தான் நபியவர்கள் இப்படியெல்லாம் கண்டிக்கிறார்கள்.

எனவே எந்தக் கட்டத்திலும் பெண்கள், அந்நிய ஆண்களுடன் தனித்திருப்பதை அறவே அனுமதிக்கவே கூடாது. மார்க்கம் அனுமதித்த வகையில் மேற்சொன்ன வரம்புகளை மீறாமல் ஒரு சில இடங்களில் பலர் அமர்ந்திருக்கும் ஒரு சபையில் தனியாக இருப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

மக்கள் அருகிலிருக்க, அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனியாகப் பேசிக்கொண்டு இருப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மக்கள் கூட்டத்தை முன்னால் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தனியாக பேசிக் கொள்வதற்கு, செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு அனுமதியிருக்கிறது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

அன்சாரிகüல் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்கüடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்கüலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5234

தனியாகப் பேசுவது என்றால் யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்தோ, அறையிலிருந்தோ பேசுவதற்கு அனுமதியில்லை. ஒரு ஆணும் பெண்ணும் மார்க்க வரம்புக்கு உட்பட்ட பேச்சுக்களை தனியாகப் பேசுவதை பிற மக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் அது கூடும். அதாவது இருவர் பேசுகிற சத்தம் மட்டும் தான் பிறருக்கு விளங்காதே தவிர மற்றபடி காட்சிகள் அனைத்தும் நன்றாகத் தெரியும் வகையில் பேசுவதாகும். இந்த முறையில் தான் நபியவர்கள் பேசியதாக மேற்சொன்ன செய்தியில் உள்ளது.

அந்தப் பெண்மணியிடம் நபியவர்கள், அன்சாரிகளிலேயே நீங்கள்தான் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்று சொல்கிறார்கள். ஏனெனில் அன்சாரிகள் தான் மார்க்கத்திற்காக அதிகமான பொருளுதவியைச் செய்தவர்களாக இருந்தார்கள். வீட்டில் பாதியைக் கொடுத்தார்கள், சொத்தில் பாதியைக் கொடுத்தார்கள், மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து அகதிகளாக வந்த ஒரு சமூகத்தையே உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதால் நபியவர்கள் அன்சாரித் தோழர்கள் மீது அளவு கடந்த விருப்பம் வைத்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட உதவி செய்த சமூகத்திலிருந்து இன்ன பெண்மணி வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் நபியவர்கள் மக்கள் முன்னிலையில் அவர்கள் பார்க்கும் விதத்தில் சிறிது தூரம் தனித்து சென்று மக்களுக்குப் பேச்சு கேட்காத வகையில் பேசினார்கள் என்று இந்தச் செய்தி கூறுகிறது. அதே நேரத்தில் என்ன பேசினார்கள் என்று இந்தச் செய்தியில் விரிவாக ஒன்றும் இல்லை. ஆனாலும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த வார்த்தையில் ஒரு சில வார்த்தைகளை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்படியெனில் அறையினுள் மறைந்திருந்து தனியாகப் பேசவில்லை என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது.

ஆக, தனியாக ஒரு ஆணும் பெண்ணும் பேசுவதாக இருந்தால், ஒரு கண்ணாடி அறையிருந்து அதனைப் பிறர் பார்க்கும்படி பேசிக் கொள்ளலாம். குடும்பப் பிரச்சனைகளில் கணவன், மனைவி விசாரணையின் போது தனியாக சில விஷயங்களைச் சொல்வதற்கு சிலர் விரும்புவார்கள். அல்லது வேறு ஏதேனும் அவசரத் தேவையாக ஒரு ஜமாஅத்தை அணுகுவார்கள்.

இதுபோன்ற கட்டங்களில் பேச்சு மட்டும் தனியாக இருக்கலாமே தவிர அங்கு நடக்கிற காட்சிகள் பொதுமக்களோ அல்லது மற்ற ஊழியர்களோ பார்க்கும் விதத்தில் இருந்தால் தவறு கிடையாது. இன்றைக்குள்ள வங்கிகளில் மேலாளருக்குக்கென்று கண்ணாடி அறை இருக்கும். அனைத்து மக்களும் பார்க்கும் விதத்தில் தான் தனியாகக் கண்ணாடி அறையில் இருந்து பேசுகிறார்கள். இதுவெல்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுத் தான் இருக்கிறது.

இந்த நிலையில் இருக்கும் போது, இருவருக்கும் வேறு மாதிரியான எண்ணங்கள் வராது. இவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் பிறருக்குத் தெரிந்துவிடுகிற போது மார்க்க வரம்புகளை மீறுகிறாரா இல்லையா என்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.

தூரத்திலிருந்து தனியாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நம்மைப் பிற மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் விஷயத்தை மட்டும் சுருக்கமாக அளந்து பேசவேண்டும் என்று அந்த ஆணும் பெண்ணுமே பேசுவார்கள். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் மேற்கண்ட செய்தி நமக்குணர்த்துகிறது.


எனினும் இதுபோன்ற பேச்சுக்கள் மார்க்க வரம்பை மீறாத வகையில் இருக்க வேண்டும். நாம் பேசுவது யாருக்கும் கேட்காது என்பதால் குழைந்து பேசுவதோ, தவறான பேச்சுக்களைப் பேசுவதோ கூடாது.

EGATHUVAM APR 2014