இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 9 - காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி
தொடர்: 9
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
இஹ்யாவை பல்வேறு இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனங்களை
ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இமாம் மாலிக் அவர்கள் மக்களிடம் மார்க்கத் தீர்ப்பு அளிக்கும்
போது, இதற்கு இதுதான் விளக்கம், இதற்கு
இதுதான் கருத்து, இதைத் தாண்டி வேறு விளக்கமில்லை
என்று சொல்லாமல் மிகப் பெரிய பேணுதலையும் பாதுகாப்பையும் மேற்கொண்டார்கள். இதை அவரது
ஆதரவாளர்கள் நன்கு உணர்ந்து வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆதரவாளர்கள் பொய்யான அடிப்படையில்
அமைந்த கஸ்ஸாலியின் மார்க்கத் தீர்ப்பை ஆஹா ஓஹோ என்று பாராட்டத் தலைப்பட்டுவிட்டனர்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் பலவீனமான ஹதீஸ்களைக் கலந்து, மந்திர தந்திர, மாய்மால வித்தைகள்
நிறைந்த சித்து வேலைகள் தான் கஸ்ஸாலியின் நூலில் பரவிக் கிடக்கின்றன. முன்னோர்கள் சொன்னார்கள், செய்தார்கள் என்று அவர் சொல்கின்ற சங்கதிகளும் சமாச்சாரங்களும்
இந்த அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன.
அவ்லியாக்களின் உதிப்புகள், ஆன்மீகவாதிகளின்
ஊதல்கள் என்று அவர் அள்ளிக் கொட்டுகின்ற விஷயங்கள் அடிப்படையில் எங்கிருந்து வந்தன
என்று அறிய முடியவில்லை. எனினும் நல்ல பயிர்களை களைகளுடனும், நல்ல உணவை நஞ்சுடனும் கலந்து விட்டார்.
பொத்தாம் பொதுவாக ஒரு சில செய்திகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.
அவற்றைப் பார்க்கும் போது அவை இறைமறுப்பாளர்களின் சிந்தனைகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.
குர்ஆன், ஹதீஸ்களில் வருகின்ற ஒருசில
செய்திகளுக்குக் கொஞ்சம் கவனக்குறைவாக விளக்கம் கொடுத்தாலும் அது தவறான விளக்கமாக அமைந்துவிடும்.
அதனால் அறிஞர்கள் அதில் அதிகப்பட்ச கவனத்தையும் சிரமத்தையும் எடுத்துக் கொள்கின்றனர்.
குர்ஆன், ஹதீஸில் இப்படி ஒரு கவனமும் சிரமமும் அவசியம் தான்.
ஆனால் கஸ்ஸாலியின் நூல்கள் குர்ஆன், ஹதீஸ் போன்ற ஏதோவொரு பெரிய செய்தியைப் போன்று அவரின் உளறல்களுக்கு
அறிஞர்கள் பெரிய கவனத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது என்று இமாம் மாஸிரி அவர்கள்
அல்கஷ்ஃபீ வல் இன்பாஃ அன்கிதாபில் இஹ்யா (இஹ்யாவை அடையாளங்கண்டு அறிவித்தல்) என்ற நூலில்
குறிப்பிடுகின்றார்.
பிதற்றலும் பித்தலாட்டமும்
ஃபிக்ஹ் கலையில் அடுத்தவர்களின் கருத்துக்களை தமது கருத்தாகப்
பதிவு செய்த ஒரு சில ஆசாமிகள், கஸ்ஸாலியின் நூல்களில் காதல்
கொண்டு அந்தப் பக்கம் தாவி, சில ஏடுகளை எழுதியுள்ளனர். அந்த
ஏடுகளில் பிடிவாதமாக கஸ்ஸாலியின் பித்அத் பாதையை நிலைநாட்டியுள்ளனர்.
மார்க்கத்திற்கு முரணான, அருவருக்கத்தக்க
அவரது வழிகேடுகள் கொஞ்ச நஞ்சமா? அவற்றை ஏட்டில் எளிதில் எழுதிவிட
முடியாது. எழுத்தில் வடித்துவிட முடியாது. அந்த அளவுக்கு அவை நிரம்பி வழிகின்றன. இந்த
வழிகேடுகளுக்கும் வாய் உளறல்களுக்கும் அவர் வைத்திருக்கும் மறுபெயர் இல்முல் முஆமாலா
என்பதாகும். இது இறை ரகசியத்தை அறிகின்ற இல்முல் முகாஷபா எனும் அகமிய ஞானத்தில் கொண்டு
போய் சேர்க்குமாம்.
தன்னை அடக்கியவர் தான் இந்த ஞானத்தை அடைவார்; இந்த ஞானத்தை ஒருவர் அறிவதற்கும் அடைவதற்கும் குறைந்தபட்ச தகுதி, முதலில் அவர் இப்படி ஒரு ஞானம் இருக்கிறது என்பதை நம்ப வேண்டும்.
இந்த ஞானத்தை நம்ப மறுப்பவருக்குரிய தண்டனை, இந்த ஞானம்
வழங்கப்படாமல் இருப்பது தான் என்றும் கஸ்ஸாலி பிதற்றுகின்றார்.
குர்ஆன், ஹதீஸைப் படிக்கக்கூடாது
குர்ஆன் ஓதுவதிலும், ஹதீஸை எழுதுவதிலும்
ஈடுபடக்கூடாது. ஏனென்றால் ஞானம் என்ற சட்டையை அணிவதை விட்டும் குர்ஆன், ஹதீஸின் ஈடுபாடு தடுத்து நிறுத்திவிடும்.
குர்ஆன் ஓதுவதையும் ஹதீஸ் எழுதுவதையும் விட்டு இந்த ஞானத்தில்
இறங்கி, ஈடுபட்டுவிட்டால் சத்தியத்தின் அழைப்பை, அதாவது வஹீ எனும் இறை அறிவிப்பைச் செவியுற ஆரம்பித்துவிடுவான்.
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடந்த முன்னோர்
சென்ற வழியை விட்டுவிடுங்கள். நான் உங்களுக்கு ஆணையிடுகின்ற வழியின் பக்கம் விரையுங்கள்
என்று கஸ்ஸாலி கூறுகின்றார்.
இவ்வாறு காழி அபூஅப்தில்லாஹ் பின் முஹம்மத் பின் ஹம்தைன் அல்குர்துபி
அவர்கள் கூறுகின்றார்கள்.
சுதந்திர ஞானிகளின் உள்ளங்கள் அகமிய ரகசியக் கல்லறைகள். இறை
ரகசியத்தைப் பரப்பியவர் இறைமறுப்பாளர் ஆகிவிடமாட்டார் என்று கஸ்ஸாலி கூறுகின்றார்.
(அனல் ஹக் - நான் தான் அல்லாஹ் என்று) பொதுவாகச் சொன்ன ஹல்லாஜ்
கொல்லப்பட்டார். அது நல்லது தான். அந்த ஒருவர் போனதால் ஒன்றும் பாதிப்பில்லை. அதற்குப்
பதிலாக பத்து பேர்களுக்கு இந்தக் கொள்கையை ஊட்டிவிட்டு அவர்களை உயிர்ப்பித்து விடலாம்
என்றும் கஸ்ஸாலி கருதுகின்றார்.
அகமிய இறைத்தன்மைக்கு என்று ரகசியம் உண்டு. அது அம்பலமாகிவிட்டால்
நபித்துவம் பாழாகிவிடும். நபித்துவத்திற்கு என்று ரகசியம் உண்டு. அது வெளியே தெரிந்தால்
கல்வி, ஞானம் பாழாகிவிடும். கல்வி, ஞானத்திற்கு
என்று ரகசியம் உண்டு. அந்த ரகசியம் வெளியானால் சட்டங்கள் பாழாகிவிடும் என்றெல்லாம்
கஸ்ஸாலி உளறுகின்றார்.
தஹபி அவர்கள் இந்த மேற்கோள்களைக் கூறிய பின்னர் இதன் அடிக்குறிப்பில், "கல்வி ஞானத்தின் ரகசியம் இந்தக் கேடுகெட்ட சூபிகளுக்குத் தான்
வெளிச்சமாகின்றது. இவர்கள் சட்ட வரைகளைத் தகர்த்தெறிந்து விடுகின்றார்கள். ஹலால், ஹராம் இரண்டும் இவர்களிடம் அழிந்து போய்விட்டன' என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஆரிஃப் (அல்லாஹ்வை அறிந்தவர்) தொடர்பாக கஸ்ஸாலி குறிப்பிடும்போது, "உண்மையின் ஒளி அவருக்கு உதயமாகின்றன. மற்றைய படைப்புகளுக்கு
மறைக்கப்பட்டு,
இவருக்கு மட்டும் அடையாளம் காட்டப்பட்ட ஞானங்கள் இவருக்குத்
திறந்துவிடுகின்றன. அவர் நபித்துவத்தின் பொருளை அறிகின்றார்.
ஷரீஅத்தின் வார்த்தைகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படியாகி
விடுகின்றன. நாம் அந்த வார்த்தைகளின் வெளிப்படையை மட்டுமே அறிவோம். ஆனால் அவர்களோ அதன்
அந்தரங்கத்தையும் அகமியத்தையும் அறிவார்கள் என்றெல்லாம் கஸ்ஸாலி கதையளக்கின்றார்.
ஆரிஃப் (அல்லாஹ்வை அறிந்தவரை) ஆரம்பத்தில் பார்க்கும் போது சித்தீக்
- மாபெரும் உண்மையாளர் என்று சொல்லிவிடுவாய். இறுதியில் நீ அவரைப் பார்க்கும் போது, மதம் மாறியவர் என்று சொல்லிவிடுவாய் என்று யாரோ ஒருவர் சொன்னதாக
கஸ்ஸாலி குறிப்பிடுகின்றார். கடமையான வணக்கங்களை மறுப்பவருக்குத் தான் மதம் மாறியவர்
என்ற பட்டம் தரப்படும். உபரியான வணக்கங்களை மறுப்பவருக்கு இந்தப் பட்டம் தரப்படுவதில்லை
என்று அதற்கு வியாக்கியானம் வேறு கொடுக்கின்றார்.
சத்திய அழைப்பா? சாத்தானிய
அழைப்பா?
சூபிகள் தங்களது ஆசிரியர்கள், ஏடுகள்
மூலம் கற்கும் பாதையைக் கைவிட்டு விட்டு, இல்ஹாம் என்ற
ஞான உதிப்பு,
உதயம் என்ற பாதைக்கு மாறி விடுகின்றனர்.
உதிப்பு ஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன், வெறும் வெள்ளை உள்ளத்துடன் ஊக்கத்துடன் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ் அல்லாஹ் என்று அழைக்க வேண்டும். அவனது உள்ளத்தில் வேறெதுவும்
குடியேறாமல்,
கூட்டாகாமல் வெறுமனே ஆகிவிடவேண்டும். குர்ஆன் ஓதுவதிலோ, ஹதீஸைப் புரட்டுவதிலோ அவன் தனது கவனத்தைத் திருப்பக்கூடாது.
இந்தக் கட்டத்தை அடைந்து விட்டால் இருள்படர்ந்த வீட்டில் தனது
மெஞ்ஞான ஆடையைப் போர்த்திக் கொண்டு தனிமையில் தவத்தைக் கையாண்டால், கடைப்பிடித்தால் அப்போது, யா
அய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் - போர்வை
போர்த்தியிருப்பவரே என்ற சத்திய அழைப்பைச் செவியுறுவான் என்று கஸ்ஸாலி காதில் பூச்சுற்றுகின்றார்.
இந்த மேற்கோள்கள் அனைத்தும் ஸியரு அஃலாமின் நுபலா நூலில் பதிவானவையாகும்.
இந்தக் கருத்தைப் பதிவு செய்த ஹாபிழ் தஹபீ அவர்கள், இந்த வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அகோரத்தையும் அக்கிரமத்தையும்
அநியாயத்தையும் தாங்க முடியாமல் வெகுண்டெழுந்து, வேதனையுடன்
தமது அடிக்குறிப்பில் பின்வருமாறு தமது ஆத்திரத்தைப் பதிவு செய்கின்றார்.
மக்களின் மாண்புறு தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செவியுற்ற
இந்த வார்த்தைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரயீல் மூலம் பெற்ற வார்த்தைகளாகும்.
தவம் என்ற பெயரில் தனித்திருக்கும் இந்த மடையன் செவியுற்றது சத்திய அழைப்பல்ல! ஷைத்தானிய
அழைப்புகள்! அல்லது உதறல் எடுத்த, வலிப்பெடுத்த அவனது மூளை உதிர்த்த
உளறலைத் தான் அவன் செவியுற்றிருக்கின்றான். இதையெல்லாம் விட்டு விட்டு ஒருவன் பற்றிப்
பிடிக்க வேண்டியது குர்ஆன், ஹதீஸ் தான்.
இவ்வாறு ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்கள்.
இந்நூலாசிரியர் மக்ராவீயும் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கின்றார்.
கஸ்ஸாலியைப் பற்றியும், இஹ்யாவைப்
பற்றியும் நன்கு அறிந்த அறிஞர் தஹபீ! இஹ்யாவுக்குள் கொட்டிக் கிடக்கின்ற, இஸ்லாமிய கொள்கையை வேட்டு வைத்துத் தகர்க்கின்ற அந்தச் செய்திகளின்
தொகுப்பை நம் கண்முன்னால் எடுத்துக்காட்டுகின்றார்.
நடுநிலைச் சிந்தனையுடன் இஹ்யாவைப் படிப்பவர் அதன் உண்மை நிலையைப்
புரிந்து கொள்வார். இஹ்யாவை இயற்றிய ஆசிரியரின் நோக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ
இருக்கலாம். அதை அல்லாஹ் மட்டுமே நன்கறிந்தவன். ஆனால் அதை விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு பார்ப்பவர், இஹ்யா என்ற நூல் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச்
சதி செய்வதற்கு ஏவி விடப்பட்ட நூல் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்.
கஸ்ஸாலியைப் புகழ்ந்து, இஹ்யாவைப்
படிக்க வேண்டும் என்று இளைஞர்களை ஏவி, அவருக்காக
வாரி வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் இக்கால இஹ்யாவின்
ஆதரவாளர்கள்,
இஹ்யாவைப் பற்றிய மார்க்க அறிஞர்களின் திறனாய்வுகளையும் தீர்ப்புகளையும்
பார்த்தார்களா?
படித்தார்களா? இல்லையா என்று
எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தும் அப்படிச் செய்கின்றார்கள் என்றால் மக்களை கொள்கை, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், குணநலப் பண்புகள் ரீதியாக வழிகெடுக்கும் நோக்கத்தைத் தான் இவர்கள்
கொண்டிருக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும். மார்க்க அறிஞர்களின் இந்தத் திறனாய்வுகளும்
தீர்ப்புகளும் இஹ்யா வெளிவந்த துவக்க காலத்தில், அதை
முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியானவை என்பதை ஒவ்வொருவரும்
புரிந்து கொள்ளவேண்டும்.
இமாம் இப்னுல் ஜவ்ஸியின் மதிப்பீடு
கஸ்ஸாலி என்ற ஒருவர் கிளம்பி மக்கள் செல்கின்ற தவறான பாதைக்கு
ஏதுவாக இஹ்யா என்ற நூலை இயற்றினார். பொய்யான ஹதீஸ்களைக் கொண்டு அதை நிரப்பினார். அவை
பொய்யான ஹதீஸ்கள் என்று அவருக்குப் புரியவில்லை. ஃபிக்ஹ் வரையறையைத் தாண்டி விலகிப்
போன அகமிய ஞானத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பித்துவிட்டார்.
இப்ராஹீம் நபி பார்த்த நட்சத்திரங்கள், சூரிய சந்திரன் அனைத்தும் ஒளிகள். அவை அல்லாஹ்வின் திரைகள்.
இப்ராஹீம் நபி தெரிந்தே இவற்றைப் பார்க்கவேண்டும் என்று விரும்பவில்லை. இவை அகமிய ஞான
பேச்சின் வகையைச் சார்ந்ததாகும் என்று கஸ்ஸாலி கூறுகின்றார்.
இவ்வாறு இப்னுல் ஜவ்ஸி குறிப்பிடுகின்றார்கள்.
இஹ்யாவில் உள்ள அபத்தங்களுக்கும் ஆபத்தான கருத்துக்களுக்கும்
மறுப்பு தெரிவிப்பதற்காகவே "அல் அஹ்யா' என்ற நூலை
எழுதியுள்ளார்கள். இந்த நூல் பல பாகங்களைக் கொண்ட நூலாகும்.
"சூபிய்யாக்கள் விழித்த நிலையிலேயே மலக்குகளையும் நபிமார்களையும்
உயிர்களையும் நேரடியாகப் பார்க்கின்றார்கள். அவர்களிடமிருந்து குரல்களையும் செவியுறுகிறார்கள்.
அவர்களிடமிருந்து பல்வேறு பயன்களையும் செவியுறுகிறார்கள். இந்தக் காட்சிகளைக் காண்பதிலிருந்து
நிலைமை படிப்படியாக உயர்ந்து மிக உன்னதமான கட்டங்கள், படித்தரங்களுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றது. அந்த உச்ச நிலையை, உன்னத நிலையை வார்த்தை வடிவில் சொல்ல முடியாது'' என கஸ்ஸாலி அல்முஃப்ஸிஹ்ருல் அஹ்வால் என்ற தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்றார்.
இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள், தல்பீஸ்
இப்லீஸ் என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள்.
அசத்தியத்தின் ஆணி வேர்களை அறிய வேண்டும் என்று விரும்புவோர்
இஹ்யாவைப் பற்றிய அறிஞர்களின் இந்த மார்க்கத் தீர்ப்புகளையும் திறனாய்வுகளையும் மதிப்பீடுகளையும்
பார்க்க வேண்டும்.
அறிஞர்களின் இந்த விளக்கத்தைப் படித்தாலே இஹ்யாவின் லட்சணம்
தெரிந்துவிடும். இதற்கு வேறு எந்த அடிக்குறிப்பும் அதிக விளக்கமும் தேவைப்படாது.
மொழிபெயர்ப்பாளனின் விளக்கம்
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற
இந்த மொழியாக்கத்தை சென்ற இதழ் வரை மூல நூலாசிரியரின் அரபு மூலத்திற்கு ஏற்பவே மொழிபெயர்த்திருந்தேன்.
என்னதான் கருத்து அடிப்படையில் மொழிபெயர்த்தாலும் நேரடி மொழிபெயர்ப்பு என்றால் அதற்குச்
சில கடிவாளம் உண்டு. மூல நூலாசிரியர் என்ன எழுதியிருக்கின்றாரோ அதை மட்டும் தான் சொல்ல
முடியும். அதைத் தாண்டி வேறு பக்கம் பார்வையைச் செலுத்த முடியாது. மூல நூலாசிரியர்
சொல்லாத எதையும் இடையில் சேர்க்க முடியாது.
எனவே, இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற இந்த நூலை நேரடியாக மொழிபெயர்ப்பாக இல்லாமல் கருத்தாக்கமாக, மூல நூலின் தழுவலாக வெளியிடலாம் என எண்ணுகின்றேன்.
இந்த நூலின் மூலத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் மக்ராவீ அவர்களது
நாட்டின் நடப்புகளுக்கும் அவரது காலத்திற்கும் ஏற்ப அமைந்துள்ளது. எனவே, இதை நேரடி மொழியாக்கம் செய்யும் போது தமிழ் முஸ்லிம் உலகிற்குப்
பொருத்தமற்றதாக சில இடங்கள் அமைந்துள்ளன. எனவே தமிழ் வாசகர்களுக்குப் புரியும் வகையிலும்
தமிழக நடப்பைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த நூலின் தழுவலை எழுதினால் பயனளிக்கும்
என்பதால் இந்த நடை கையாளப்படுகின்றது.
இத்தொடரின் இந்தப் பகுதிக்கு, "காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி' என்று
தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பு நிச்சயமாக சுன்னத் ஜமாஅத்தினருக்கு கோபத்தையும்
கொதிப்பையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தக் கோபமும் கொதிப்பும்
போய்ச் சேரவேண்டிய பொருத்தமான இடம் புளுகுமூட்டையான இஹ்யா தான்.
இஹ்யா உலூமித்தீன் என்ற கஸ்ஸாலியின் நூல் தமிழகத்தில் உள்ள பல்வேறு
மதரஸாக்களில் ஐந்து, ஆறு அல்லது ஏழாம் வகுப்பு மாணவர்களின்
பாடத்திட்டத்தில் உள்ள ஒரு நூலாகும். "இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?' என்ற இந்த நூலை மொழிபெயர்க்கும் நானும் ஆறாம் வகுப்பில் இஹ்யாவைப்
பாடமாகப் பயின்றிருக்கின்றேன். மறைந்த ஷம்சுல்ஹுதா ஹஜரத்திடம் இஹ்யாவைப் படித்ததைப்
பாக்கியமாகக் கருதியவன். ஆனால் அதை இப்போது நரகப் படுகுழியில் தள்ளுகின்ற பயங்கர விஷமாகப்
பார்க்கின்றேன். அதனால் தான் இந்த மொழிபெயர்ப்பு.
நவ்விர் இலாஹஸ் ஸமா கல்பல் கரீபி கமா
நவ்வர்த கல்ப இமாமின் நாஸி கஸ்ஸாலி
"வானத்தின் ரட்சகனே! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச்
செய்தது போன்று இந்த அற்பனின் உள்ளத்தை ஒளிரச் செய்!''
இந்த துஆவை தமிழகத்தின் மதரஸாக்களில் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.
மக்தபுகளில் படிக்கும் சிறுவர்கள் முதல் ஏழு ஆண்டு படிக்கும் ஆலிம்கள் வரை இந்த துஆவைச்
செய்யாதவர்கள் இருக்க முடியாது.
அறிவுக் கடலாம் கஸ்ஸாலி
அடையும் நெஞ்சின் விரிவைப் போல்
அறிவின் ஒளீயாய் எம் நெஞ்சை
அழகாய் அமைப்பாய் அருளாளா!
மேற்கண்ட இந்த வரிகள் நாகூர் ஹனீபாவின் "ஹஸ்பீ ரப்பீ' எனத் துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ளவையாகும். இதிலிருந்து
தமிழக மக்களிடம் கஸ்ஸாலியின் தாக்கம் எந்த அளவுக்கு ஊடுறுவியுள்ளது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
தமிழக ஆலிம்கள் தங்களை காதியானிகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்
என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள். ஷரீஅத் பேரவை என்ற பெயரில் காதியானிகளுக்கு
எதிராகப் போர் தொடுக்கின்ற போராளிகள் என்ற பறைசாற்றிக் கொள்கின்றனர்.
சுன்னத் ஜமாஅத் ஆலிம்களே! தவ்ஹீத் ஜமாஅத் உங்களிடம் சொல்லிக்
கொள்வது ஒன்றே ஒன்று தான். காதியானிகளை எதிர்ப்பதற்கு முன் நீங்கள் எதிர்த்துப் போராட
வேண்டியது இஹ்யா உலூமித்தீனைத் தான்; கஸ்ஸாலியின்
சிந்தனையைத் தான். அவர் தான் காதியானிகளுக்கு ஆஸ்தான ஆசானாக இருக்கின்றார்.
கும்மிருட்டில் தன்னந்தனியாக ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு
தவமிருப்பவர்களுக்கு இறைச் செய்தி, அதாவது வஹீ
வரும் என்று சொல்கின்றார். வஹீயின் வாயிற்கதவுகள் அடைக்கப்படவில்லை என்று நம்புகிறார்.
இந்த விஷக் கருத்தை வெளியிடவும் செய்திருக்கின்றார். இஹ்யாவில் இடம்பெறும் அந்த விஷக்கருத்தை
இப்போது பார்ப்போம்.
(இறை சந்திப்பும், இறை உரையாடலும்) இருண்ட வீட்டில் தனித்து தவமிருப்பதாலே தவிர
நிறைவு பெறாது. இந்தக் கட்டத்தில் (தவமென்னும்) போர்வை அல்லது ஆடை அணிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற நிலையில் தான் சத்திய நாயனின் அழைப்பைச் செவியுறுகின்றார். ரட்சகனின் கண்ணியமிகு
சமூகத்தை, வருகையை கண்ணால் காண்கின்றார்.
இதுபோன்ற நிலையில் இருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுக்கு அல்லாஹ்வின் அழைப்பு வந்தது. போர்வை போர்த்தியவரே! என்று அவரை நோக்கி அழைப்பு
விடுக்கப்பட்டது.
கண்களுக்குக் காட்சியாகும் அல்லாஹ்?
காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி என்று தலைப்பிட்டதற்குக் காரணம்
புரிகின்றதா?
காதியானிகள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மிர்ஸா என்ற ஷைத்தானுக்கு
வஹீ வருகின்றது என்று வாதிடுகின்றனர். ஆனால் கஸ்ஸாலியோ, தனித்து தவமிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் காட்சியளிப்பான், அவதரிப்பான் என்று சொல்கின்றார் என்றால் இவர் காதியானிகளுக்கெல்லாம்
அப்பனாக, ஆசானாக இருக்கிறார் என்று தானே அர்த்தம்.
கஸ்ஸாலியின் இந்த வார்த்தைகளைப் பதிவு செய்யும் போது ஹாபிழ்
தஹபீ அவர்கள்,
இவர் செவியுற்றது சத்திய அழைப்பல்ல, சாத்தானிய அழைப்பு என்று கூறியதைப் பார்த்தோம். அந்த அளவுக்கு
நபித்துவத்தின் தனித் தன்மையை, தவம் என்ற பெயரில் தனித்திருக்கும்
பைத்தியங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கின்றார் கஸ்ஸாலி. அல்லாஹ் காப்பாற்றுவானாக!
கஸ்ஸாலி தனது இந்த வாக்குமூலம் வாயிலாக இரண்டு அபத்தங்களை, வானம் பூமி அனைத்தும் நடுங்குகின்ற இரண்டு அபாண்டங்களைப் போதிக்கின்றார்.
அபத்தம்: 1
வஹீயைப் பொதுவுடைமை ஆக்குகின்றார். இது முதல் அபத்தமும் முழு
அபாண்டமும் ஆகும்.
தமிழகத்தில் சுன்னத் ஜமாஅத் என்று கூறும் ஆலிம்களிடம் நாங்கள்
கேட்பது இதைத் தான். காதியானிகளிடம் போர்ப் பிரகடனம் செய்வதாகக் கூறும் நீங்கள் கஸ்ஸாலியுடன்
ஏன் போர்ப் பிரகடனம் செய்யவில்லை? காதியானிகளை விமர்சிப்பதற்கு
முன்னால் மதரஸாக்களின் பாடத்திட்டத்திலும் பாதுகாப்பான அலமாரிகளிலும் நீங்கள் அடுக்கி
வைத்திருக்கும் இஹ்யா உலூமித்தீனுடன் போர் செய்யுங்கள். அதாவது அந்நூலைத் தீயிட்டுப்
பொசுக்குங்கள். இல்லையேல் வஹீ என்பது இறைத்தூதர்களுக்கு மட்டுமல்ல, முயற்சி செய்யும் அனைவருக்கும் கிடைக்கும் என்ற கஸ்ஸாலியின்
பொதுவுடைமைக் கொள்கை உங்களிடம் குடிகொண்டிருக்கின்றது என்று தான் அர்த்தம்.
வஹீ முடிந்து விட்டது என்று நீங்கள் வாதிக்கின்றீர்கள். ஆனால்
நடைமுறையில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் அத்தனையையும் ஆதரிக்கின்றீர்கள். காதியானிகளின்
அத்தனை செயல்களையும் அப்படியே பின்பற்றுகின்றீர்கள். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு
தான் கஸ்ஸாலியும் அவரது நூலான இஹ்யாவும்.
கஸ்ஸாலி மீதுள்ள காதல் ஒவ்வொரு ஆலிமின் கண்ணையும் மறைக்கின்றது.
அவரது இஹ்யா உங்களின் வேதமாகத் திகழ்கின்றது. ஆனால் அந்தக் கஸ்ஸாலியோ நுபுவ்வத்தின்
தன்மையை, தத்துவஞானிகளுக்குக் கூறு போட்டுக் கொடுக்கின்றார். அவர் யார்
என்பதை அவரது இந்த வார்த்தைகள் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன.
அபத்தம்: 2
இதில் இடம்பெற்றுள்ள இரண்டாவது அபத்தம், தனித்துத் தவமிருப்பவர் அல்லாஹ்வின் சன்னிதானத்தைக் கண்ணால்
காண்பார் என்பதாகும். அல்லாஹ்வை நேரடியாகப் பார்ப்பது, அவனது ஒளியைக் காண்பது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க
முடியாது. ஆனால் அல்லாஹ்வை இந்த உலகில் யாரும் பார்க்க முடியாது என்று மார்க்கம் கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்களுக்குக் கூட அல்லாஹ்வின் காட்சி இல்லை என்பதை
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளக்குவதைப் பின்வரும் ஹதீஸில் பார்க்கலாம்.
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர் களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன்.
அப்போது அவர்கள் (என்னிடம்), "அபூஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும்
அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள்; நான், "அவை எவை?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்
என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்'' என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்)
கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை
நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க
அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்' (81:23) என்றும், "நிச்சயமாக அவர் மற்றொரு
முறையும் அவனைக் கண்டார்' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட
முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே
குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்)
தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து
(பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம்
வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது'' என்று கூறினார்கள். மேலும், ஆயிஷா
(ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) "அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள்
செவியுறவில்லையா?'' என்று கேட்டார்கள். "கண்
பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான்.
அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்'' (6:103). அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? "எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (தனது அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை
அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச் செய்தோ
அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தோனும்
ஞானமிக்கோனும் ஆவான்'' (42:51)
நூல்: முஸ்லிம்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் ஆதாரங்களுடன் அத்தனை தெளிவாக, நெற்றியடியாக அடிக்கின்றார்கள்.
ஆனால் கஸ்ஸாலியோ கண்டவரும் அல்லாஹ்வின் காட்சியைக் கண்ணால் காண்பார்
என்று கூறுகின்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை.
மற்றவர்கள் யாரும் அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா? என்றால்
அதுவும் முடியாது.
உங்களில் எவரும் மரணிக்காத வரை கண்ணியமும் கம்பீரமும் நிறைந்த
தனது இறைவனைப் பார்க்க முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 5215
நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் அவனது காட்சியைக் கேட்கும்
போது அல்லாஹ் மறுத்து விடுகின்றான். இந்த வசனம் இதைத் தெளிவாக விளக்குகின்றது.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக்
காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார்.
அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக!
அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் பின்னர் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது
அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ
தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார்.
அல்குர்ஆன் 7:143
இதையெல்லாம் தாண்டி, தவமிருக்கும்
இந்த ஆசாமிக்கு அல்லாஹ் காட்சியளிப்பான் என்று கூறுகின்றார் என்றால் கஸ்ஸாலியின் கருத்து
இஸ்லாமிய மார்க்கத்தின் கருத்தா? என்று ஒவ்வொருவரும் சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.
எல்லாற்றுக்கும் மேலாக, இப்படி தவமிருப்பது
இஸ்லாத்தில் உள்ளதா? இது நபி (ஸல்) அவர்கள் காட்டித்
தந்த வழிமுறையா?
துறவு, தவம், தனித்திருத்தல், ஞானம் என்ற
சூபிஸ சித்தாந்தம் - கலாச்சாரம் இஸ்லாத்தில் அறவே கிடையாது. இது இந்து மதம், கிரேக்க மதத்தின் கலாச்சாரமாகும். இதைத் தான் கஸ்ஸாலி இஸ்லாத்திற்குள்
இஹ்யா என்ற வண்டி மூலம் இறக்குமதி செய்கின்றார். இன்னுமா இவரைப் பற்றித் தெரியவில்லை?
வளரும இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM APR 2014