May 18, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 14 - இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 14 - இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா

தொடர்: 14

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவில் இடம் பெறுகின்ற கஸ்ஸாலியின் கருத்துக்களை தர்உத் தஆருள் என்று நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அவர் குறிப்பிடுவதாவது:

கஸ்ஸாலி வெளிப்படையான, அந்தரங்கமான ஞானத்தைப் பற்றியெல்லாம் தனது இஹ்யாவில் பேசுகின்றார். அப்போது அவர் கொள்கைச் சட்டங்கள் என்ற பாடத்தில் தெரிவிக்கின்ற ஒரு செய்தியை இப்போது நாம் பார்ப்போம்.

ஒரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளிலும் பண்புகளிலும் மாற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். (உதாரணத்திற்கு, "அல்லாஹ்வின் கை என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும்' என்பது போன்றது.)

அதே சமயம் சொர்க்கம், நரகம் தொடர்பான விஷயங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதற்கு மாற்று விளக்கம் கொடுக்கக் கூடாது என்று தடையும் விதிக்கின்றனர். இவர்கள் அஷ்அரிய்யா என்று அழைக்கப்படுகின்றனர்.

இன்னொரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளான பார்த்தல், செவியுறுதல் போன்றவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுக்கின்றனர். மிஃராஜுக்கு மாற்று விளக்கம் கொடுத்து, மிஃராஜின் போது நபி (ஸல்) அவர்கள் தமது உடலுடன் செல்லவில்லை என்று விளக்கம் அளிக்கின்றனர். இத்துடன் மட்டும் இவர்கள் நிற்கவில்லை. கபர் வேதனை, மீஸான் (தராசு), ஸிராத் (பாலம்) போன்ற மறுமை சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் மாற்று விளக்கம் சொல்கிறார்கள். இவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இதில் உச்சக்கட்டமாக மூன்றாவது சாரார், மறுமை சம்பந்தப்பட்ட அத்தனைக்குமே மாற்று விளக்கம் தான் அளிக்கின்றனர். நரகத்து வேதனை என்றால் அது அறிவுரீதியிலானது மற்றும் ஆன்மா அளவிலானது. சுவனத்து இன்பம் என்றால் அதுவும் அறிவுரீதியிலானது தான் என்று விளக்கம் தருகின்றனர். அத்துடன் மனித உடல்கள் மறுமையில் மீண்டும் எழுப்பப்படாது என்று மறுக்கின்றனர். இவர்கள் ஃபல்ஸஃபா என்ற தத்துவவியலாளர்கள்.

மேற்கண்ட அத்தனை சாராரும் வரம்பு கடந்தவர்கள்; எல்லை மீறியவர்கள். இவற்றுக்கு இடையே ஒரு நடுநிலையான நிலைப்பாடு உள்ளது. இறை ஒளி வழங்கப்பட்டவர்கள் மட்டும் அந்தப் பாக்கியத்தை அடைவார்கள். அவர்கள் இந்த செவிவழிச் செய்தியின் வாயிலாக (அதாவது ஹதீஸ் வாயிலாக) இதை அடைய மாட்டார்கள்.

பின்னர், விஷயங்களின் ரகசியங்கள் அவர்களுக்கு அப்படியே காட்சியளிக்கும் போது தான் அவர்கள் செவிவழிச் செய்தியையும் (அதாவது ஹதீஸையும்) அதில் வந்திருக்கும் வார்த்தைகளையும் அவர்கள் உற்று நோக்குவார்கள்.

அது அவர்கள் ஏற்கனவே கண்ட உறுதிமிக்க ஒளிக்கு ஒத்திருந்தால் ஏற்பார்கள். இல்லையென்றால் அதற்கு மாற்று விளக்கம் சொல்வார்கள். செவிவழிச் செய்தி (ஹதீஸ்) மூலம் மட்டுமே கல்வி அனைத்தைம் கற்பவருக்கு இதில் ஓர் உறுதிப்பாடு உருவாகாது.

கஸ்ஸாலியின் இந்தக் கருத்து தெரிவிக்கின்ற சாராம்சம் என்ன? கல்வி ஞானத்தை ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் வழியாக ஒருபோதும் அடைய முடியாது. ஒரு மனிதன் அதை அடைய முடியும் என்றால் அது இறைக்காட்சி, வெளிப்பாடு, ஒளி இவற்றின் மூலம் தான் அடைய முடியும்.

இதுதான் கஸ்ஸாலி தெரிவிக்கின்ற கருத்தின் சாராம்சமாகும்.

ஆன்மீக ஞானிக்குக் காட்சியளிக்கும் ஒளிக்கு ஒத்திருந்தால் குர்ஆன், ஹதீஸில் உள்ளதை அவர் ஒத்துக் கொள்வார். அவருடைய அந்தரங்க ஞானத்தில் கிடைத்த அந்தச் செய்தி குர்ஆன், ஹதீசுக்கு ஒத்திருக்கவில்லை என்றால் அவர் மாற்று விளக்கம் கொடுப்பார் என்ற கஸ்ஸாலியின் வாதம் கடைந்தெடுத்த இறைமறுப்பாகும்.

ஞானி எவராக இருக்கட்டும். அவர் தன்னுடைய ஞானத்தை, குர்ஆன் ஹதீஸை வைத்துத் தான் எடைபோட வேண்டும். குர்ஆன் ஹதீசுடன் தான் அதை உரசிப் பார்க்க வேண்டும். அப்படி எடை போட்டு உரசிப் பார்க்கவில்லை என்றால் அவர் வழிகேட்டில் வீழ்ந்தவராவார்.

இருபெரும் இறைநேசர்கள்

இறைநேசர்களில் மிகவும் சிறந்தவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவர். இந்தச் சமுதாயத்தில் ஞானம் கொடுக்கப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள் என்று சொன்னால் அது இரண்டு ஹதீஸ்களின் அடிப்படையில் மிகப் பொருத்தமாக இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்கüல், (பல்வேறு பிரச்சினைகüல் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3689

அல்லாஹ் உமரின் நாவிலும் உள்ளத்திலும் சத்தியத்தை ஆக்கியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 2573, அஹ்மத் 4898

உமர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய சிறப்பு இருந்தாலும் அவர்களை விட அபூபக்ர் (ரலி) சிறந்தவர் ஆவார். இந்த உண்மையாளர் அபூபக்ர் (ரலி) ஞானத்தைக் கற்றதும் பெற்றதும் தூதர் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி என்ற தூய மட்டத்திலிருந்து தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்த ஞானம் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஞானமாகும்.

உரையாடல், காட்சியளித்தல், அகப்பார்வை என்ற பெயரில் சிலருக்கு உதிக்கும் ஞானத்தில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. அதைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல்மிகு அளவுகோல் இறைத்தூதர் கொண்டு வந்த தூதுச் செய்தி தான்.

உமர் (ரலி) அவர்களுக்குத் தோன்றுகின்ற செய்தியை, தூதுச் செய்தியுடன் ஒப்பிட்டு உரசிப் பார்ப்பார்கள். ஒத்திருந்தால் ஏற்பார்கள். இல்லையெனில் தூற வீசியெறிவார்கள்.

அறிஞர்களின் அறிவுரைகள்

குர்ஆனும் ஹதீசும் கொண்டு வந்த கல்வியில் நமக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் உள்ளது. இந்த அகப்பார்வை ஞானத்திற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. மக்களிடமிருந்து புதிய தத்துவம், புரட்சிக் கருத்து என்று எந்தக் கருத்து வந்தாலும் அந்தக் கருத்தை குர்ஆன், ஹதீஸ் அதற்குச் சான்று வழங்கினாலே தவிர ஒருபோதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அபூபக்ர் சுலைமான் அத்தாரானி கூறுகின்றார்.

அல்லாஹ்வின் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் ஹதீசும் சான்றளிக்காத எந்தவொரு சுவைமிகு கருத்தாக இருந்தாலும், ஒரு துணுக்காக இருந்தாலும் ஆணித்தரமாக அது ஓர் அசத்தியம் தான் என்று அபூஅம்ர் இஸ்மாயீல் என்ற அறிஞர் கூறுகின்றார்.

நமக்கு வருகின்ற எந்தக் கல்வியும் குர்ஆன், ஹதீஸ் என்ற கடிவாளத்திற்குள் அடங்கியது தான். குர்ஆனைப் படிக்காத, ஹதீஸை எழுதாத எவருக்கும் நம்முடைய ஞானத்தைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் தகுதியும் அறவே கிடையாது என்று அறிஞர் ஜுனைத் பின் முஹம்மத் தெரிவிக்கின்றார்.

இறை விருப்பத்தில் நாட்டம் கொண்டோரே! குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறுகின்ற ஞானத்தை விட்டு விட்டு வெற்றுத் தத்துவங்களை நோக்கிச் செல்லாதீர்கள். அவ்வாறு செல்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார் என்று அறிஞர் ஸஹ்ல் கூறுகின்றார்.

இவை குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்க ஞானம் என்று கூறுகின்ற அறிஞர்களின் கருத்துக்களில் ஒரு சில எடுத்துக்காட்டுக்களாகும். இதுபோன்ற அறிஞர்களின் அற்புதக் கருத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. தவ்ஹீதின் உண்மை விளக்கம், ஞானம், உறுதிப்பாடு ஆகிய அனைத்துமே இறைத்தூதர்களைப் பின்பற்றுவதன் மூலமாக மட்டும் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் மேற்கண்ட அறிஞர்கள்.

இறை வேதத்திற்கு இசைந்த ஞானம்

அன்றாடம் நிகழ்கின்ற இயற்கை அற்புதங்களிலிருந்தும், அறிவுப்பூர்வமான சான்றுகளிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை உண்மைப்படுத்துகின்ற விளக்கங்கள் அறிஞர்களுக்குத் தோன்றுகின்றன.

உண்மையில் இது அல்லாஹ் தனது குர்ஆனில் சொல்வது போன்று அமைந்துள்ளது.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?

அல்குர்ஆன் 41:53

(முஹம்மதே!) "உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

அல்குர்ஆன் 34:6

உமது இறைவனிடமிருந்து அருளப்பட்டது உண்மையே என்று அறிந்திருப்பவர், குருடரைப் போல் ஆவாரா? அறிவுடையோரே படிப்பினை பெறுவார்கள்.

அல்குர்ஆன் 13:19

அகமிய ஞானம், அறிவு, சிந்தனை என்று ஞானப்பாட்டையில் செல்வோரிடம் குழப்பங்கள் மிகைத்து நிற்கின்றன. அவர்கள் வைக்கின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரண்படுகின்றன. வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானத்தின் மூலம் விளக்கங்கள் கிடைப்பதாகச் சொல்வது தான்.

அறிவும் செயல்பாடும்

கல்வி கற்க முயல்வோர் இரண்டு விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

முதலில் கற்பது, இரண்டாவது கற்றபடி செயல்படுவது. இந்த இரண்டும் கல்வி கற்பவரிடம் இருந்தாக வேண்டும். யார் கற்றபடி செயல்படுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அவர் அறியாத ஞானத்தை அளிக்கின்றான்.

அதே சமயம், கல்வி, செயல் ஆகிய இரண்டுமே குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் இசைந்ததாகவும், இணங்கியதாகவும் இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஞானம், அகமியம், ஆன்மீகக் காட்சி என குர்ஆன் ஹதீஸின் தடங்களை விட்டு மாறிச் சென்றால் அவர் வழிகேட்டில் வீழ்ந்து விடுகின்றார்.

தனக்கு ஞான ஊற்று உதித்து விட்டது; அகஞானம் துலங்கி விட்டது என்று சொன்னால் அது சுத்த பித்தலாட்டமும் பிதற்றலும் ஆகும்.

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

அல்குர்ஆன் 26:221, 222

இந்த வசனத்தின்படி இவை ஷைத்தானின் இட்டுக்கட்டுகள் தான். அவனது சித்து விளையாட்டுக்கள் தான்.


EGATHUVAM DEC 2014