குழந்தைகளைக் கொன்ற கொடிய பாவிகள்
பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா
மாநிலம், பெஷாவர் நகரில் வார்சாக் சாலையில் இயங்கி வரும் ராணுவப் பள்ளிக்கூடத்தில்
132 குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தெஹ்ரீக் தாலிபான் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த கொலை வெறியர்கள், ராணுவ உடையில் மதில் ஏறி இந்தப் பள்ளியின் பின்புறமாக நுழைந்தனர்.
அப்போது பள்ளியின் பெரிய வளாகத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளித்துக்
கொண்டிருந்தார். ஆனால் முதலுதவிக்கு வேலையே இல்லை எனுமளவுக்கு, உள்ளே நுழைந்த காட்டுமிராண்டிகள் குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக
சுட்டுக் கொன்றனர்.
இந்தக் காட்டுமிராண்டிகளைக் கண்டதும் பிஞ்சுகள் அலறியடித்துக்
கொண்டு நடுங்கி,
பெஞ்சுகளுக்கு அடியில் போய் படுத்துக் கொண்டனர். இவ்வாறு படுத்துக்
கிடந்து தப்பிய பதினாறு வயது ஷாரூக்கான் என்ற சிறுவன், தன்னை நோக்கி வந்த மரணத்தைப் பற்றி விவரிக்கின்றான்:
"கொல்லுங்கள்! இருக்கைகளுக்குக் கீழ் கிடக்கும் மாணவர்களைச் சுட்டுத்
தள்ளுங்கள்!'
என்று ஒருவன் கத்தினான். துப்பாக்கி சுடுவதற்கு முன்னர் அல்லாஹு
அக்பர் என்று முழங்கினான்.
என்னைச் சுட்டுத் தள்ளிவிடுவார்கள் என்று நான் பயந்து பெஞ்சுக்கு
அடியில் படுத்து பதுங்கிக் கொண்டேன். அப்போது ஒரு கருப்பு ஷூ, டக் டக்கென்று ஒவ்வொரு அடியாக எடுத்து என்னை நோக்கி வந்தது.
என் கருவிழிகள் அந்தக் கருப்பு ஷூவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. நெருங்கி
வர நெருங்கி வர,
நேரமாக நேரமாக எனக்கு மரணம் மிக அருகில் வந்து விட்டது என்று
எண்ணினேன். அலறிவிடக்கூடாது என்பதற்காகக் கழுத்தில் கட்டியிருந்த டையை வாய்க்குள் வைத்து
அழுத்திக் கொண்டேன்.
வந்தவன், குழந்தைகள் தப்பிவிடக் கூடாது
என்பதற்காக அவர்களின் முட்டுக்கால்களில் முதலில் சுட்டான். எனது இரு முட்டுக் கால்களும்
அந்தச் சூட்டிற்குப் பலியானதால் வேதனை தாங்க முடியாமல் தவித்தேன். நான் செத்து விட்டதைப்
போல் நடித்தேன்.
அப்போது நான் பார்த்த காட்சிகள் என் மனத்திரையை விட்டு அகல மறுக்கின்றன.
கீழே கிடந்த மாணவர்கள் உயிர் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் உடல் மீது
சகட்டுமேனிக்கு அந்த வேட்டைக்காரன் வெறித்தனமாக சுட்டுக் கொண்டிருந்தான். இறுதியில்
நான் ஒருவாறாக உயிர் தப்பினேன்.
இவ்வாறு அந்தச் சிறுவன் ஷாரூக்கான் கூறியுள்ளான்.
சுடப்பட்ட குழந்தைகள் நெற்றிப் பொட்டில், கண்களுக்கு இடையில் சுட்டுத் தள்ளப்பட்டனர். இருநூறுக்கு மேற்பட்ட
குழந்தைகள் காயமடைந்தனர். ஊழியர்கள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓர் ஆசிரியை,
நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு, அப்படியே உயிருடன் கொளுத்தப்பட்டார்.
இவ்வளவும் எதற்கு? வஜீரிஸ்தானில்
தங்கள் பெண்டு பிள்ளைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காகத்
தான் என்று தெஹ்ரீக் தாலிபான் அமைப்பினர் கூறுகின்றனர்.
ஜிஹாத் என்ற பெயரில் கொலைவெறியர்கள், குழந்தைகளைக் கொன்ற பாவத்திற்காக நாளை அல்லாஹ்விடம் விசாரணைக்குரியவர்கள்
தான்.
நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே!
அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான்.
அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 4:93)
இந்த வெறியர்கள் குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற விதம், இந்த மூர்க்கர்களுக்கு மார்க்க நெறி கடுகளவு கூட இல்லை என்பதையே
எடுத்துக் காட்டுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கலந்து கொண்ட புனிதப் போர் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 3015
நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தத் தடையை இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இவர்களுடன் போர் தொடுத்தவர்களை எதிர்த்து இவர்கள் போரிடாமல், இந்தக் கோழைகள் குழந்தைகள் மீது கொடூரத் தாக்குதல், கோரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதே ஹதீஸ் பெண்களைக் கொல்லக்கூடாது என்றும் தடுக்கின்றது. மற்றொரு
ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சித்ரவதை செய்யக்கூடாது என்று தடுக்கின்றார்கள்.
கொள்ளையடிப்பதையும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்)
ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),
நூல்: புகாரி 2474
மார்க்கம் கூறும் தடைகளையெல்லாம் இந்தக் காட்டுமிராண்டிகள் காற்றில்
பறக்கவிட்டு விட்டு, ஒரு பெண் ஆசிரியையைக் கட்டிப்
போட்டு கொளுத்தியிருக்கின்றார்கள். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக இஸ்லாம் கூறும் போர் நெறிகள்
அத்தனையையும் காலில் போட்டு மிதித்துள்ளனர்.
முந்தைய காலத்தில், உலகின் ஒரு
மூலையில் எங்காவது ஓர் அநியாயம் நடக்கும் போது அது அந்தப் பகுதியில் மட்டும் பெரும்
கொந்தளிப்பை ஏற்படுத்தும். அத்துடன் அது மறைந்துவிடும். ஆனால் இன்று உலகம் ஊடகத்தில்
அடக்கமாகிவிட்டது. அதனால் எங்காவது ஒரு கொலை நடந்துவிட்டால் ஒளி அலைவரிசைகளில் அப்படியே
உலகம் முழுவதும் தெரிந்துவிடுகின்றது.
அதிலும் குறிப்பாக, இஸ்லாம் -
முஸ்லிம்கள் என்றால் எதிரிகள் இதுபோன்ற செய்திகளைப் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இதனால் உலக அலவில் வாழும் முஸ்லிம்கள் தங்களால் இயன்ற அளவு எதிரிகளுக்கு இதுபோன்ற மகிழ்ச்சியைக்
கொடுக்காமல் இருக்க வேண்டும். இதற்கு அரபியில் ஷமாதத் அதவாத் (எதிரிகளின் மகிழ்ச்சி)
என்று பெயர். இந்த வார்த்தை, திருக்குர்ஆனில் ஹாரூன் நபியவர்கள்
கூறுவதாக இடம்பெற்றுள்ளது.
கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம்
திரும்பிய போது "எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின்
கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப்
போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது
சகோதரர்) "என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர்.
என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை
ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார்.
(அல்குர்ஆன் 7:150)
நபி (ஸல்) அவர்களும் எதிரிகளின் மகிழ்ச்சியிலிருந்து பாதுகாப்பு
தேடியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் விதியின் கேடு, அழிவில் வீழ்வது, எதிரிகள்
(கை கொட்டிச்) சிரிக்கும் நிலைக்கு ஆளாவது, தாங்க முடியாத
சோதனை ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 5246
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரிகள் உள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் இந்துத்துவா சக்திகளைப் போன்றவர்கள் இன்று இந்தச் செய்தியை இஸ்லாம்
மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றார்கள். இந்த எதிர்விளைவு
சிந்தனையெல்லாம் தெஹ்ரீக் தாலிபான் மரமண்டைகளுக்கு விளங்கப் போவதில்லை.
அடுத்து மிக முக்கியமான அம்சம், பிற மக்கள் இஸ்லாத்திற்கு வராமல் தடுக்கும் வேலையை இவர்கள் செய்துள்ளனர்.
பெஷாவர் படுகொலையின் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பள்ளிக்கூடங்களில், மழலைச் செல்வங்கள் தங்கள் மலர்க் கைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தி, தங்கள் மத வழக்கப்படி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த மழலை உள்ளங்களில்
இஸ்லாத்தின் பிம்பம் எப்படிப் பதிவாகும்?
இந்தக் கொடியவர்கள் சுடப்பட்ட குழந்தைகளின் மீது மீண்டும் மீண்டும்
சுட்டது, ஓட்டம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் முழங்கால்களுக்குக்
கீழ் சுட்டது,
நெற்றிப் பொட்டில் சுட்டது போன்ற கொடுமைகள், கொடூரங்கள் இந்த மழலைகளின் உள்ளங்களில் எப்படிப்பட்ட எண்ணத்தை
உருவாக்கும்?
அதிலும் குறிப்பாக, இரத்தத்தில்
தோய்க்கப்பட்ட ஒரு சிறுமியின் பொம்மை வடிவச் செருப்பை புகைப்படம் எடுத்து பத்திரிகைகள்
வெளியிட்டிருந்தன. கல் மனதையும் கரைத்துவிடும் இந்தப் புகைப்படம் இஸ்லாத்தைப் பற்றிய
ஒரு வன்ம, வக்கிரப் பரிமாணத்தைக் காலம் முழுவதும் அந்தக் குழந்தைகளின்
உள்ளத்தில் பதிய வைக்கும். இந்த மழலைகள் மட்டுமல்ல, பெரியவர்கள்
கூட இஸ்லாத்திற்கு எப்படி வருவார்கள்?
இந்த வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாத்தின் ஜென்ம
எதிரிகள். இவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்ற பாதகத்தைச் செய்துள்ளார்கள்.
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர்.
"அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல்
ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை
விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:217)
இப்படி அல்குர்ஆன், ஹதீஸ்களின்
கட்டளைக்கு நேர்மாற்றமாக, கோர கொலைவெறித் தாக்குதலைக்
குழந்தைகள் மீது நடத்தியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் முஸ்லிம்கள் அல்லர்
என்பது தான் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
இப்படிப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசக்கூடியவர்கள்
இஸ்லாத்தைப் பற்றிய அறியாமையில் இருக்கின்றார்கள் என்பதுடன் மட்டுமின்றி, எண்ண ஓட்டத்தில் அவர்களுடைய பாவத்தில் இவர்களும் பங்காளிகளாக
ஆகிவிடுகின்றார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
EGATHUVAM JAN 2015