இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 15 -அறிவிலிகள் கூறும் அகமிய ஞானம்
தொடர்: 15
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்கள், விஷயங்களின் ரகசியங்கள் அப்படியே காட்சியளிக்கும் போது தான்
செவிவழிச் செய்தியான ஹதீஸை ஏற்பார்கள். இல்லையென்றால் அதை ஏற்க மாட்டார்கள். இப்படி
ஒரு சாரார் இருப்பதாக கஸ்ஸாலி வாதிடுகின்றார். இந்த சாராரின் இத்தகைய சிந்தனை இறை மறுப்பாகும்
என ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்ற கருத்தின் சுருக்கத்தைக் கடந்த
இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
மனிதன் விளக்கமும் உழைப்பும் உள்ளவன். அவனது நோக்கமும் செயல்பாடும்
அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகின்ற விதத்தில் அமைந்திருந்தால் விளைவும் அவ்வாறே
அமையும். செயல்களுக்கு ஏற்பத் தான் நிகழ்வுகளும் அமையும்.
தியானம் என்ற பெயரில், திரை மறைவுக்குள்
முடங்கிக் கிடக்கின்ற இவர்களின் உள்ளங்களில் வெளியுலகில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்வதாக்
காட்சிகள் தோன்றும். உண்மையில் வெளி உலகம் எப்போதும் போல் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
ஒரு மாற்றமும் நடந்திருக்காது. நடந்ததெல்லாம் இவர்களின் மனப் பிரமைகளும் மாயத் தோற்றங்களும்
தான்.
இத்தகைய ஆசாமிகள், இவற்றை இறைவனிடமிருந்து
வந்த செய்திகளாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை ஷைத்தானிடமிருந்து வந்த
செய்திகள்,
ஊசலாட்டங்கள், உளறல்களாகும்.
இதில் வேதனைக் கூத்து என்னவென்றால் இந்த ஆசாமிகளில் சிலர் அல்லாஹ்வை நேரடியாகக் கண்டதாகக்
கருதுகின்றனர். மூஸா (அலை) அவர்களைப் போன்று அல்லாஹ்வின் பேச்சை நேரடியாகக் காதால்
கேட்டதாகக் கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் கண்டது, கேட்டது எல்லாம்
ஷைத்தானிடமிருந்து வந்தவையாகும். இதை அல்குர்ஆன் 26:221, 222 வசனம் தெளிவாக அடையாளம் காட்டி விடுகின்றது.
கனவுகளும் காட்சிகளும்
இந்தப் போலிகளின் பொய்ச் செய்திகளுக்குக் கருவூலமாகவும் களஞ்சியமாகவும்
அமைவது கனவுகள் தான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் வருகின்ற இந்த வாசல்களை
அடைத்து விட்டார்கள்.
ஒரு மனிதனுடைய உள்ளத்தில் சதாவும் ஆக்கிரமித்துள்ள சிந்தனைகள்
கனவில் பிரதிபலிக்கும். இவை தான் பிரம்மைகள். இந்த பிரம்மைகளைப் பார்த்து இறைவனின்
காட்சிகள் என்று இவர்கள் பிதற்றிக் கொள்கின்றனர். இதற்கு முகாஷாஃபா - இறைக்காட்சி என்று
பெயரும் வைத்துக் கொள்கின்றனர்.
முக்கடவுள் கொள்கையைக் கொண்ட ஒரு கிறித்தவர், தான் கொண்டிருக்கின்ற அந்தக் கொள்கைக்கேற்ப கனவு காண்கின்றார்.
அதைச் சரியென்று நம்புகின்றார். பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள் அதற்கேற்ப கனவு
காண்கின்றனர். அதைச் சரியென்றும், தெய்வ வாக்கு என்றும் நம்புகின்றனர்.
இது நமக்கு உணர்த்துகின்ற பாடம், இவை ஷைத்தானின் வழிகேடுகள் என்பதைத்
தான்.
தவறில் விழுவதை விட்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டவர்கள் நபிமார்கள்
தான். நபிமார்கள் அல்லாதவர்களுக்கு மறைவான விஷயங்களை அறிகின்ற ஞான ஒளி எப்படி ஏற்பட
முடியும்? விஷயங்களின் ரகசியங்கள் அவருக்கு எப்படி உதயமாகும்? அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தன்மைகளையும், அவனது மலக்குகளின் பண்புகளையும், அவனை நம்பியவர்களுக்கு அவன் ஏற்படுத்தி வைத்துள்ள சொர்க்கத்தையும், மறுப்பவர்களுக்கு அவன் ஏற்படுத்தியுள்ள நரகத்தையும் இந்தக் காட்சிகளால்
எப்படி அறிய முடியும்?
தத்துவ ஞானிகளின் தடம்புரண்ட கொள்கை
இந்த வாதம் ஃபல்ஸஃபா என்ற தத்துவவாதிகள், கராமிதா என்ற கூட்டத்தாரைச் சேர்ந்த கொள்கையாகும். இந்த வழிகெட்ட
கூட்டத்தினர் தான் நபித்துவம் என்ற இறைச் செய்தியைப் பத்து அறிவுகளில் ஒன்றான செயலாற்றும்
அறிவின் மூலம் அறிய முடியும் என்கின்றனர்.
இது இறைநேசர்களின் உள்ளங்களில் இறங்குகின்ற ஒரு ஞானஒளி; இறைநேசரின் உள்ளத்தில் தோன்றும் காட்சிகள் மலக்குகளாகும்; அவர்கள் செவியுறுகின்ற ஓசைகள் அல்லாஹ்வின் பேச்சுக்களாகும் என்றெல்லாம்
பிதற்றுகின்றனர்.
இந்த அடிப்படையில் இறைச் செய்தி என்பது, தான் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கு அல்லாஹ் அளிக்கக்கூடிய அருட்கொடை
அல்ல, அடியார்கள் தாங்களாகத் தேடிப் பெறுகின்ற தகுதியும் பதவியுமாகும்
என்று இவர்கள் வாதிடுகின்றனர். இந்த அபத்தத்தை முஸ்லிம்கள் மட்டுமல்லாது யூத, கிறித்தவர்களும் எதிர்க்கின்றனர்.
வினோதமான வாதம்
உங்களில் முழுமை பெற்ற ஒரு மகானுடைய இடத்தை, ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய பயிற்சி மற்றும் உழைப்பைக் கொண்டு
அடைய முடியுமா?
என்று கேட்டால் அவ்வாறு அடைய முடியாது என்று பதிலளிக்கின்றனர்.
அப்படியானால் ஒருவர் தவம் என்ற பெயரில் தலைகீழாக நின்றாலும், தியானம் என்ற பெயரில் தன்னையே மறந்து மூழ்கிக் கிடந்தாலும் நபிமார்களின்
தகுதியையும் தரத்தையும் அடைய முடியாது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். இந்த
வகையில் அசத்தியவாதிகளின் இந்த வாதம் வித்தியாசமான, வினோதமான
வாதமாகும்.
இறைச்செய்தி என்ற ஞானத்தை, அல்லாஹ்
தேர்வு செய்த தூதர் வழியைத் தவிர்த்து, வேறெந்த வழியிலும்
அடைய முடியாது. இறைச்செய்தியை அடைவதற்கு இப்படி ஒரு வழிமுறை இருந்தால் நபிமார்களே அதற்கு
மிகவும் தகுதியானவர்கள். ஆனால் அவர்களில் யாரும் இப்படி ஒரு குறுக்கு வழியில் அந்த
ஞானத்தை அடைந்துவிட்டோம் என்று வாதிடவில்லை. அவர்கள் அந்த வழியில் ஈடுபடவுமில்லை.
சிலரை விட சிலர் சிறப்பானவர்கள்
நபிமார்களில் ஒரு சிலரை மற்ற சிலரை விட அல்லாஹ் சிறப்பாக்கி
வைத்திருக்கின்றான். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.
இத்தூதர்களில், சிலரை விடச்
சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில்
சிலருக்கு,
பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.
அல்குர்ஆன் 2:253
வானங்களிலும், பூமியிலும்
உள்ளவர்களை உமது இறைவன் நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை விட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம்.
தாவூதுக்கு ஸபூரைக் கொடுத்தோம்.
அல்குர்ஆன் 17:55
மூஸா (அலை) அவர்களிடம் தான் பேசிய பேச்சை தனிச்சிறப்பாக அல்லாஹ்
குறிப்பிடுகின்றான்.
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேச்சை செவியுற்றது போன்று எல்லா
இறைத்தூதரும் செவியுற்று விட முடியாது என்பது தான் திருக்குர்ஆன் தெரிவிக்கின்ற தெளிவான
விளக்கமாகும்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் இரவிலும், ஏனைய இரவுகளிலும் அல்லாஹ் காண்பித்துக் கொடுத்த காட்சிகளை வேறு
யாரும் காண முடியாது.
ஒரு தூதருக்குக் கிடைத்த இந்தச் சிறப்பு மற்ற தூதர்களுக்குக்
கூட கிடையாது எனும் போது, இறைத்தூதர் அல்லாதவர்களுக்கு
இந்தச் சிறப்புகள் எப்படிக் கிடைக்கும்?
மூஸா நபியிடம் அல்லாஹ் பேசிய பேச்சுக்களை, தனிநபர்களுக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வுகள், உதிப்புகள் என்ற ரகத்தில் இந்த ஆசாமிகள் சேர்க்கின்றனர். இவர்களுக்கு
இப்படிப்பட்ட கேடுகெட்ட நம்பிக்கை இருப்பதால் தான் மூஸா நபியைப் போன்று மகான்களும்
அல்லாஹ்வின் பேச்சை செவியுறுவதாக வாதிடுகின்றனர்.
இந்தத் தவறான கொள்கையைக் கொண்ட தத்துவஞானிகளின் கருத்துக்களை
கஸ்ஸாலி தன்னுடைய மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலில் கொட்டியிருக்கின்றார். இந்தக் கருத்துக்களை
யூத, கிறித்தவர்கள் கூட திருப்தி கொள்ள மாட்டார்கள்.
கல்உன் நஃலைன் என்ற நூலின் ஆசிரியரும், அவரைப் போன்ற இறை மறுப்புக் கொள்கையாளர்களும் இப்படிப்பட்ட விஷக்கருத்துக்களை
தங்களுடைய நூல்களில் பக்கம் பக்கமாகப் பதிவு செய்திருக்கின்றார்கள்.
நூலாசிரியர் மக்ராவியின் விளக்கம்:
அன்புச் சகோதரர்களே! இஹ்யாவுக்குள் புதைந்து கிடக்கும் பொதி
மூட்டைகளைப் பாருங்கள். குர்ஆன், ஹதீஸ் கூறும் கருத்துக்களைக்
களைவது தான் அதன் மையக் கருவாக அமைந்திருக்கின்றது. முகாஷஃபா என்று இந்த ஆசாமிகள் கூறும்
அகமிய ஞானம் எந்தக் கட்டுக்குள்ளும் வரையறைக்குள்ளும் நிற்காது. குர்ஆன், ஹதீஸ் என்ற வரம்புக்குள் வராத படு மோசமான கல்வியாகும்.
இந்த லட்சணத்தில் இந்தக் கேடுகெட்ட கல்வியைக் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் உள்ளது என அவர்கள் வாதிடுகின்றனர். குர்ஆன் ஹதீஸ்
ஒளியில் இருக்கின்றது என்றால் அதற்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து
ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாவிட்டால் அதை அப்படியே தூக்கி எறிய வேண்டும்.
இது தான் சரியான கல்விக்குரிய அடையாளமாகும்.
அகமிய ஞானத்தின் அளவுகோல்
இப்போது இவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அகமிய ஞானத்தின்
இலக்கணம் என்ன?
அதன் அளவுகோல் என்ன? அகமிய ஞானம்
உள்ளவர்களில் நம்பகத்தன்மையுடையவர்கள் யார்? நம்பகத்தன்மை
இல்லாதவர்கள் யார்? முந்திச் சென்ற நல்லோர்களான
நபித்தோழர்கள் இத்தகைய ஞானத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றார்களா?
இந்த ஞானம் இறைவனிடமிருந்து வந்தது என்றால், குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரமில்லாத எத்தனையோ சட்டங்களில் இவர்கள்
ஏன் ஆட்டம் காண்கிறார்கள்? தட்டித் தடுமாறுகின்றார்கள்.
இதிலிருந்து இவர்களுடைய அடிப்படையே ஷைத்தானின் ஊசலாட்டங்களில் ஊன்றப்பட்டுள்ளது என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா கூறுகின்றார்கள்:
ஹதீஸ் துறையில் நல்ல ஹதீஸையும் கெட்ட ஹதீஸையும் பிரித்துக் காட்டுகின்ற
திறனாய்வாளர்களின் திறமையோ அனுபவமோ கஸ்ஸாலிக்குக் கிடையாது. இதன் காரணத்தால் தான் தனது
நூல்களில் பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக்
கொண்டு வந்திருக்கின்றார். இல்லையெனில் இவற்றைத் தவிர்த்திருப்பார்.
நூலாசிரியர் மக்ராவி கூறுகின்றார்:
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் மூட்டைகளையும், புனைச் சுருட்டுகளையும் அள்ளிக் கொட்டுகின்ற ஒரு நூலை இயற்ற
முன்வருவது இறையச்சமிக்க காரியமா? தகுதியில்லாத துறையில் ஒரு முஸ்லிம்
மூக்கை நுழைப்பது சரியான காரியமா?
ஷரீஅத் தொடர்பான விஷயங்கள் அனைத்துமே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்தவையாகும். ஹதீஸ் துறையில் உரிய அனுபவமும்
உறுதியான அறிவும் இல்லாதவருக்கு ஷரீஅத் சட்டங்களை இயற்ற அனுமதி கிடையாது.
உரிய அனுபவமும், உறுதியான அறிவும்
இல்லையென்றால் குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் தடை
செய்துள்ள பெரும்பாவங்களில் வீழ்ந்து விடுவார். அல்லாஹ்வின் மீது எந்த ஒரு ஞானமும்
இல்லாமல் பொய் சொல்வது அந்தப் பெரும்பாவமாகும்.
EGATHUVAM JAN 2015