May 22, 2017

அசத்தியத்தின் பதில் அசையாத மவுனமே! ஹதீஸ்களை மறுப்பது மத்ஹபுவாதிகளே! இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? :தொடர்: 16 அல்லாஹ்வை விட அபூயஸீத் சிறந்தவராம்? குடும்பவியல் தொடர்: 20 பெண்ணின் குணம் தொடர்: 3 ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு நலம் நாடுவோம் கள்ள வேடம் போடுபவர் யார்? கபட நாடகம் ஆடுபவர் யார்?

அசத்தியத்தின் பதில் அசையாத மவுனமே!

கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க மாநாடு என்ற பெயரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா சபை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட ஸைபுத்தீன் ரஷாதி பேசும்போது அவருக்கே உரிய பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

நமது ஜமாஅத்தில் கூடவே இருந்து குழிபறித்த ஹாமித் பக்ரீயும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தன்னைப் போன்ற ஒரு பொய்யர் கிடைத்த கொள்ளை மகிழ்ச்சியில் தலைகால் புரியாத சந்தோஷத்தில், "தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஆலிம்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆலிம்கள் வெளிவருவதற்குத் தக்க காரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று ஸைபுத்தீன் சரியான ரீல் விட்டார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த 11.01.2015 அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் "என்னைக் கவர்ந்த ஏகத்துவம்' என்ற தலைப்பில், சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து விலகி சத்தியத்தில் சங்கமித்த ஆலிம்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும், ஏகத்துவ எழுச்சிப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்டம் என்று தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கி எழுந்ததோ மாநாட்டிற்கான கூட்டம்.

ஆலிம்களுக்கான இந்நிகழ்ச்சிக்கு, அழைப்பு கொடுக்கப்பட்ட ஆலிம்கள் ஐம்பது பேர். கலந்து கொள்ள இயலாமல் போனவர்களைத் தவிர்த்து 37 பேர் இதில் பங்கேற்றனர்.

ஆலிம்களின் கோட்டையான, மன்பவுல் உலூம் கல்லூரியைத் தாயகமாகக் கொண்ட லால்பேட்டையிலுள்ள மன்பஈக்கள் பலர் தவ்ஹீதுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதுபோன்று பைஜிகள், பாகவிகள், மிஸ்பாஹிகள், உஸ்மானிகள், தாவூதிகள், காஸிமிகள், ரியாஜிகள், தேவ்பந்தி, ஜமாலி, ஹஸனி, இல்ஹாமி, சிராஜி, கைரி, ஸஆதி, குறிப்பாக மஹ்ழரிகள் என்று பல்வேறு மதரஸாக்களில் பயின்று பட்டம் பெற்ற ஆலிம் பெருமக்கள் தங்களை தவ்ஹீத் ஜமாஅத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டு அதன் அழைப்பாளர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஜமாஅத்தை விட்டு வெளியே சென்றவர்கள் ஒரு சில துரோகிகள் மட்டும் தான். ஆனால் சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து விலகி தவ்ஹீதில் இணைந்த ஆலிம்கள் ஏராளமானோர் என்ற உண்மை இந்தக் கூட்டத்தின் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே தெரிய வந்தது.

இப்படியோர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஸைபுத்தீன் ரஷாதிக்கு நாம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தாக வேண்டும். ஸைபுத்தீன் சொன்ன பொய்களுக்கு இந்தப் பொதுக்கூட்டம் வார்த்தை ரீதியிலான பதிலாக இல்லாமல் செயல்பூர்வமான பதிலடியாக அமைந்தது. ஆலிம்கள் காலியாவது தவ்ஹீதுக் கூடாரத்தில் இல்லை, உங்கள் கூடாரத்தில் தான் என்று ஸைபுத்தீன் வகையறாவுக்குத் தெரிவித்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்குப்பட்டி அப்துல் கபூர் உஸ்மானி என்ற ஆலிமிடம், உஸ்மானிய்யா மதரஸாவின் ஆசிரியர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நீங்களாக விரும்பி உங்கள் பெயரைக் கொடுத்தீர்களா? அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தினர் அவர்களாக உங்கள் பெயரைப் போட்டுக் கொண்டார்களா?'' என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர், "நான் தவ்ஹீத் ஜமாஅத்தில் பொறுப்பில் இருக்கிறேன். என் பெயரெல்லாம் தானாக வந்து விடும்'' என்று பொட்டில் அடித்தாற்போல் பதிலளித்துள்ளார். பதிலளித்தது போலவே இந்நிகழ்ச்சியில் வந்து பங்கு கொள்ளவும் செய்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் என்பது தேர்தல் நேரத்தில் வாசலைத் திறந்து வைத்து, கிரண்பேடி போன்ற சந்தர்ப்பவாதிகளை வாரிச் சுருட்டும் பிஜேபி போன்ற அரசியல் கட்சியல்ல! மறுமையை, தூய மார்க்கத்தை லட்சியமாகக் கொண்ட அமைப்பாகும். பெயருக்காகவோ, விளம்பரத்திற்காகவோ இங்கு யாருடைய பெயரையும் போட வேண்டிய அவசியமில்லை. உண்மை என்னவெனில், ஆலிம்கள் தாமாகத் தான் சத்தியத்தைத் தெரிந்து முன்வந்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட மவ்லவி அப்துல் காலிக் பைஜி அவர்கள் தவ்ஹீதுக்கு வந்ததற்குரிய காரணம் களியக்காவிளை விவாதம் தான்.

அப்துல் காலிக்கிற்கு களியக்காவிளை விவாதம் திருப்புமுனை என்றால் மவ்லவி அபூபக்கர் சித்தீக் ஸஆதிக்கு திருச்சி விவாதம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.இஜ்மாவுக்கு ஆதாரமாகக் குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை, சுன்னாவிலிருந்து ஒரு ஹதீஸைக் காட்டுங்கள் என்று பிஜே திரும்பத் திரும்ப கேட்டும், ஸைபுத்தீன் மவுனம் காத்தார். அதுதான் அபூபக்கர் சித்தீக் ஸஆதியை தவ்ஹீதிற்குக் கொண்டு வந்தது.

ஸைபுத்தீன் ரஷாதி அவர்களே! பிஜேயுடனான விவாதத்தில் நீங்கள் காத்த மவுனம் தான் என்னை தவ்ஹீதில் கொண்டு வந்து சேர்த்த காரணம் என்று ஸைபுத்தீன் ரஷாதிக்கு, அபூபக்கர் சித்தீக் ஸஆதி அளித்த பதில் சத்தியத்தின் நெத்தியடியாக அமைந்தது.

ஹாமித் பக்ரி என்பவர் சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கையைக் காதலித்து இங்கிருந்து வெளியேறவில்லை. மாறாக, ஜமாஅத்திற்கு எதிராகச் செய்த துரோகத்திற்காக, தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு அதனால் அங்கு போய் ஐக்கியமானவர். ஆனால் சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து விலகி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆலிம்களோ சத்தியத்தை ரசித்து, ருசித்து இங்கு வந்துள்ளனர் என்ற உண்மையையும் மக்களுக்கு அல்லாஹ் உணர்த்திக் காட்டினான்.

கேரள மாநிலம் காந்தபுரம் அபூபக்கர் முஸல்லியார் என்பவர் அசத்தியவாதிகளின் தலைவராக இருப்பவர். அவர் கோவையில் பிஜேயுடன் விவாதம் செய்ய வருகிறேன் என்று சொல்லிவிட்டு, பின்னர் வராமல் பின்வாங்கினார். இது தான் திருப்பூர் ரஹ்மத்துல்லாஹ் பாக்கவி அவர்கள் தவ்ஹீதுக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது என்பதை அவரது உரையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. பொதுவாக எந்த விவாதம் நடந்தாலும் அதில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைவது போன்று தான் இருக்கும். இரு தரப்புமே நாங்கள் தான் வென்றோம் என்று வாதிடுகின்றார்கள். ஆனால் அபூபக்கர் சித்தீக் ஸஆதி, அப்துல்காலிக் பைஜி போன்றோர் சத்தியத்திற்கு வந்து சேர்வதன் மூலம் விவாதங்களின் வெற்றியை நாம் முடிவு செய்யலாம்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று அசத்தியத்தின் பதிலே அதன் மவுனம் தான். ஆனால் சத்தியத்தின் அடியோ நெத்தியடியாக விழுகின்றது. இறுதியில் அசத்தியம் நொறுங்கிவிடுகின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)


"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)

EGATHUVAM FEB 2015