May 14, 2017

இணை கற்பித்தல் 16 - நபிகளாரின் பிரார்த்தனைகள்

இணை கற்பித்தல் 16 - நபிகளாரின் பிரார்த்தனைகள்

தொடர்: 16

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு மேலாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் என்ற செய்தியைப் பார்த்தோம்.

அதே போன்று ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு துஆவை அதிகமதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள். அந்த துஆவை நாம் பார்த்தால் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஓதத் தேவையே இல்லை என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு இறையச்சத்துடன் கூடிய ஒரு துஆவாக இருக்கும்.

என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.

இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

நூல்: புகாரி 6398, 6399

நாம் இன்றைக்கு அவ்லியாக்கள், மகான்கள் என்றால் அவர்கள் பாவம் செய்யமாட்டார்கள். அவர்களிடத்தில் பாவங்கள் நிகழுமா? அவர்கள் பாவங்கள் செய்வார்களா? அவர்களுக்கு மறதி வருமா? அவர்களுக்கு அறியாமை வருமா? அவர்கள் வேண்டுமென்றே ஏதேனும் பாவங்கள் செய்வார்களா? அவர்கள் அவற்றையெல்லாம் விட்டு விதிவிலக்கு பெற்றவர்களாயிற்றே! அந்த மாதிரி தன்மைகளெல்லாம் அவர்களுக்குக் கிடையாதே! என்று நினைத்து வைத்திருக்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறார்கள். அதுவும் இந்த முறையீட்டை மக்களுக்குக் கேட்கும் அளவுக்கு அத்தஹிய்யாத் அமர்வில் சப்தமாக கேட்கிறார்கள். நானும் மனிதன் தான் என்னிடமும் தவறுகள் நிகழும். மறதியாகவும் தவறு செய்து விடுவேன். வேண்டுமென்றும் தவறு செய்து விடுவேன். கேலியாகவும் தவறு செய்து விடுவேன். எல்லாவிதமான தவறுகளும் என்னிடம் நிகழும். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறுயாருமில்லை. எனவே நீ என்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அனைத்து நபிமார்களும் அனுப்பப்பட்டதன் நோக்கமே அனைவரும் அல்லாஹ்விடத்தில் சரணடைந்து விட வேண்டும். எல்லாக் காரியங்களையும் அவனிடத்தில் ஒப்படைத்து விட வேண்டும். எல்லாக் காரியங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் உதவி தேட வேண்டும் என்பதற்காகத் தான்.

இவ்வாறுதான் அல்லாஹ்வும் கட்டளையிட்டிருக்கின்றான்.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

ஆக நபிமார்களுக்கே இந்த நிலை என்றால் மகான்கள், அவ்லியாக்கள் எல்லாம் நபிமார்களை விட உயர்ந்த நிலையை அடைந்து விட முடியுமா? அவர்கள் பாவம் செய்வதை விட்டும் விதிவிலக்கு பெற்றவர்களாக முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளார் சந்தித்த சோதனைகள்

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது ஆரம்ப காலத்தில் பலவிதமான கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளானார்கள். அதில் ஒரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்து விட்டு கஅபத்துல்லாவிற்குச் சென்று தொழுகை நடத்துவார்கள். கஅபத்துல்லாஹ்வில் சிலைகள் இருந்தாலும் அது நமக்கு சொந்தமான பள்ளிவாசல் என்ற ஓர் உரிமையுடன் அதில் தொழுது வந்தார்கள்.

ஒருநாள் நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, இன்று முஹம்மதுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தது. நபியவர்கள் ஸஜ்தாவிற்குச் சென்றவுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஒட்டகக் குடலை நபியவர்களின் முதுகில் வைத்தனர். அந்தக் குடல் அதிக பாரமாக இருந்ததால் நபியவர்களால் எழ முடியவில்லை. நபியவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து எதிரிகள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் நபியவர்களுக்கு, இவர்கள் ஏற்கனவே திட்டம் தீட்டித் தான் இதனைச் செய்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.

இதைக் கேள்விப்பட்ட நபியவர்களுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தை சிரமப்படுவதைப் பார்த்து அந்தக் குடலை அப்புறப்படுத்துகிறார்கள். உடனே நபியவர்கள் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி ஒரு துஆச் செய்கிறார்கள். அந்தச் சம்பவம் பின்வருமாறு:

 நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து "இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி "யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், "அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள்  (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் "கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 240

இந்தச் சம்பவத்தில், எதிரிகள் இழைத்த இந்த மாதிரியான அவமானத்திற்கு நபியவர்களுக்கு மட்டும் அபார சக்தி இருந்தால், அதிகாரம் இருந்தால், ஏதேனும் மாய மந்திரம் தெரிந்திருந்தால் இந்தக் கஷ்டம் வந்திருக்குமா? அதுமட்டுமல்ல! அல்லாஹ் அவர்களுக்கு சக்தியை - பவரைக் கொடுத்திருந்தால் அத்தனை பேருக்கும் கை, கால்கள் விளங்காமல் போயிருக்குமே! ஆனால் அப்படி ஏதேனும் நடந்ததாஅவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை பார்த்து எதிரிகள் கைகொட்டி சிரித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

நபியவர்கள் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்த உடனேயே அவர்கள் அழிந்து போய்விட்டார்களா? துஆ செய்த பிறகு அவர்களுடைய (எதிரிகளுடைய) கை தான் ஓங்கியது. மேலும் மேலும் நபியவர்களுக்குத் துன்பங்களையும் தொல்லைகளையும் அதிகளவில் கட்டவிழ்த்துவிட்டனர்.

அதற்குப் பிறகு நபியவர்களை ஊரை விட்டு விரட்டுவதிலும் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். நபியவர்களால் அதனை வெல்ல முடியவில்லை. அத்தனை நபித்தோழர்களும் ஊரை விட்டு ஹிஜ்ரத் செய்து வேறு நாட்டிற்குத் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களுடைய சொத்து, செல்வங்களை சூறையாடினார்கள். அதிலும் எதிரிகளின் கை தான் ஓங்குகிறது.  ஊரை விட்டு நபிகளார் சென்ற பிறகும் அவர்களைக் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவ்வளவும் செய்த பிறகும் கூட நபிகளார் அவர்களுக்கு எதிராகச் செய்த பிரார்த்தனைக்கு எந்தவித விளைவும் ஏற்படவில்லை. அல்லாஹ் அவர்களை உடனே தண்டிக்கவுமில்லை.

நீ என்னிடம் பிரார்த்தித்தால் உடனே அவர்களை நான் தண்டிக்க வேண்டுமா? அவர்களைத் தண்டிப்பதும் தண்டிக்காமல் இருப்பதும் என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டது. அவர்களை உடனேயும் தண்டிப்பேன். அவர்களை சிறிது விட்டுப் பிடிக்கவும் செய்வேன் என்று அவர்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுகிறான்.

நபிமார்கள் அனைவரும் மனிதர்களாகத் தான் இருந்தார்கள். மனித சக்தி தான் அவர்களுக்கு இருந்தது. ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ அதற்கு மேற்கொண்ட ஆற்றல் அவர்களிடத்தில் இருந்ததில்லை. நபியவர்களும் கூட தன்மீது வைக்கப்பட்ட குடலை  தன்னுடைய  சக்தியைப் பயன்படுத்தி, தானே அப்புறப்படுத்துவதற்குக் கூட ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள்.


நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைக்காக அல்லாஹ் அவர்களை உடனே தண்டித்திருந்தால் அந்த மக்கள், அல்லாஹ்வை வணங்குவதற்குப் பதிலாக, அவனை பயப்படுவதற்குப் பதிலாக, "இம்முஹம்மதுக்கு ஏதோ சக்தி இருக்கிறது; அதனால் தான் இவரை நோவினை செய்ததற்காக உடனே அவர்களை அழித்து விட்டார்' என்று நபிமார்களை வணங்கும் மக்கள் உருவாகியிருப்பார்கள். நபிமார்களுக்கு எந்த அற்புதமும் செய்ய ஆற்றல் இல்லாத போதே பல சமுதாய மக்கள் நபிமார்களைக் கடவுள்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

EGATHUVAM NOV 2013