May 1, 2017

பொருளியல் தொடர் 19 - அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

பொருளியல் தொடர் 19 - அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

அமர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். "அல்லாஹ்வின் துதரே என்னிடத்தில் பிள்ளையும் செல்வமும் இருக்கின்றது ஆனால் என்னுடைய தந்தை என்னிடம் தேவையுடையவராக இருக்கின்றார்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), "நீயும் உன்னுடைய செல்வமும் உன் தந்தைக்குரியது; நீங்கள் சம்பாதித்ததில் துய்மையானது உங்களுடைய குழந்தைகளே'' என்று கூறினார்கள்.

(நுல் : அபூதாவுத் 3063)

ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் சம்பாத்தியத்தில் ஒரு அளவு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். அந்த அனுமதி என்னவென்றால் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் வீட்டிற்குச் சென்றால் யாரிடமும் அனுமதியில்லாமல் சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் போது பிள்ளை தடுக்கக்கூடாது. அந்த அனுமதி கூட சாப்பிடுவதற்கு மட்டும் தான். அதை எடுத்து வருவது கூடாது.

கணவன் அனுமதியின்றி பொருளை எடுத்தல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:  (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கடம் "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!'' என்று சொன்னார்கள்

(நூல் : புகாரி 5364, 2460, 5359, 5370, 2211, 7161, 7180)

கணவனிடம் மனைவி மற்றும் பிள்ளைகள் அனுமதி இல்லாமல்  எடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை இஸ்லாம் தருகின்றது. ஆனால் இது பொதுவான சட்டம் அல்ல. கேட்கும் போதெல்லாம் கொடுக்கும் கணவருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. ஏனென்றால் சுஃப்யான் கஞ்சனாக இருக்கின்றார் என்று அவரின் மனைவி கூறியபோது தான் இந்த அனுமதியை நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். ஆகவே இது பொதுவானதல்ல என்பதை நாம் விளங்க முடியும்.

வட்டிப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால்...

ஒருவர் வட்டியின் மூலம் சம்பாதிக்கின்றார். அதை அவர் நமக்குத் தந்தால் நாம் சாப்பிடலாமா? என்றால் அதை நாம் உண்ணலாம், அதை அவர் தவறான முறையில் சம்பாதித்தாலும் அதை நமக்கு அன்பளிப்பாகத் தருகின்றார் என்றால் அது நமக்கு ஹராம் இல்லை என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வருமானம் தான் ஹராமாகும். அவர் நமக்கு கொடுக்ககூடிய அன்பளிப்பு ஹராம் ஆகாது.

திருடிய பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால்...

வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருடன் திருடிய பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் சம்பாதித்தவன் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருதாலும் அது அவனின் பொருளாகும்.

ஆனால் திருடன், திருடிய பொருள் அவனுடைய பொருள் இல்லை என்பதை நாம்  விளங்கிக் கொள்ள வேண்டும். இந்திய நீதிமன்றத்தின் சட்டப்படியும் இன்னும் உலக சட்டப்படியும் இது சாத்தியமற்ற விஷயம் ஆகும். என்னுடைய பணத்தை வட்டியின் மூலம் அபகரித்துவிட்டான் என்று வழக்குப் போட முடியுமா? ஆனால் என்னுடைய பொருளை திருடிவிட்டான் என்று ஒருவன் வழக்குப் போட முடியும்.

இதை வைத்து நாம் விளங்குவது என்னவென்றால் திருடிய உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அது அவருடைய பொருள் அல்ல. பின்பு எப்படி அவர் அன்பளிப்பு கொடுக்க முடியும்?

கட்டடத்தை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?

வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும் பொருளை வாங்கலாம் என்றால், நம் இடத்தை அல்லது நம் கடையை வாடகைக்கு கொடுக்கலாம்; அதில் என்ன தவறு என்று கேட்கின்றனர். இதில் ஒரு வித்தியாசத்தை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். வட்டியின் மூலம் சம்பாதித்தவன் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருதாலும் அது அவனது பொருளாகும். ஆனால் அவன் சம்பாதிக்கும் முறை தவறானதாகும். அதற்குரிய பாவம் அவனுக்குக் கிடைக்கும். ஆனால் அவர் கொடுக்கும் பொருள் நமக்கு ஹராம் ஆகாது.

நீங்கள் உங்கள் இடத்தை அல்லது கடையை வாடகைக்குக் கொடுப்பது நீங்கள் அதற்கு உறுதுணையாக இருப்பதாகும். ஆகவே நமது இடத்தையோ அல்லது கடையையோ வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.

கணவன் அனுமதியில்லாமல் தர்மம் செய்யலாமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால், (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்பலன் அவளது கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 2065, 1441, 1437, 1425

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனது சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனது நற்பலனில் பாதி அவளுக்கு உண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2066, 5195, 5260

அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அத்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா?'' என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள், "தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேரித்து) வைத்துக் கொள்ளாதே.  அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2590

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து கணவன் அனுமதியின்றி அவனது பொருளை மனைவி தர்மம் செய்யலாம் என்பதை அறிய முடிகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக திர்மிதியில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  நபியவர்கள் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் தன்னுடைய உரையில் கூறினார்கள்: எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் அனுமதியைக் கொண்டே தவிர தன்னுடைய கணவனின்  வீட்டிலிருந்து எதையும் செலவு செய்யக்கூடாது. "அல்லாஹ்வின் தூதரே! உணவையும் வழங்கக் கூடாதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் அது தான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறப்பானதாகும் என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி (606)

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஷுரஹ்பீல் இப்னு முஸ்லிம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவராவார். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

உறவினர் வீட்டில் உணவு

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கை யாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன் 24:61)

அன்பளிப்பை திருப்பிக் கேட்கக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நுல் : புகாரி 2622

உமர் பின் கத்தாப் ரலி அவர்கள் கூறியதாவது: ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கி விட்டார். ஆகவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், "நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்'' என்று கூறினார்கள்.


(நுல் : புகாரி 1490, 2623, 2636, 3003)

EGATHUVAM JAN 2012