தவ்ஹீதுக்கு முன் தானம், தர்மம்
தவ்ஹீதுக்குப் பின் கஞ்சத்தனமா? தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலர் லோக்கல் (கிராம, நகர, மாவட்ட அளவிலான) தர்ஹாக்களுக்கு
விஜயம் செய்திருக்கின்றார்கள். தர்ஹாக்களுக்குச் சந்தனம் பூசுதல், விளக்கேற்றுதல், போர்வை போர்த்துதல், உண்டியல் காணிக்கை போன்ற வகைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தார்கள்.
ரீஜினல் அவ்லியா - அதாவது நாகூர், ஏர்வாடி போன்ற மாநில அளவிலான தர்ஹாக்களுக்குப் பயணம் செய்து
சென்று தங்கள் கைகளிலிருந்து காசு பணத்தைக் காலி செய்தனர்.
இந்திய அளவில் அஜ்மீர் போன்ற நேஷனல் அவ்லியா, இன்டர்நேஷனல் அளவில் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (பாக்தாத்)
போன்ற தர்ஹாக்களுக்குச் சென்று தங்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.
இதுபோக, வீடுகளில் மவ்லிது, கத்தம் பாத்திஹா என்ற அனாச்சாரங்களில் பணம் செலவழித்தனர்.
இந்தச் செலவினங்கள் அனைத்தும் அவ்லியாக்களின் பக்தியின் பெயரால்
நடைபெற்றவை.
மற்றொரு புறம் சினிமா, மது, பீடி, கிகரெட், டி.வி. டெக்குகள், ஆடியோ வீடியோ
கேஸட்டுகள் என்று தடபுடலாக ஆடம்பர, அனாச்சார வகைகளில்
செலவழித்துத் தள்ளினர்.
இவை அனைத்தும் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால்! தீய வழிகளில்
பணத்தைச் செலவிட்டு வந்தவர்கள் அந்தச் செலவுகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டதில்
வெற்றி பெற்று விட்டாலும் தீயவழியில் செலவிடும் போது இருந்த தாரளத்தன்மை நல்வழிக்கு
வந்த பின்னர் மாறிவிட்டது.
ஒரு சிலர் தவ்ஹீதுக்கு வந்த பின்னால் இனி மவ்லிது, பாத்திஹா, தர்ஹா செலவுகள் இல்லை. அப்பாடா!
ஒரு வகையில் மிச்சம் என்று இருக்கின்றனர்.
தவ்ஹீதுவாதிகள் ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் இந்தக் கொள்கையை
ஏற்ற பின்னர் தாராளமாகச் செய்ய வேண்டும்.
ஒரு காலத்தில் தமிழகத்தில், குறிப்பாக
பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் நில புலன்களை அரபி மதரஸாக்களுக்கும்
பள்ளிவாசல்களுக்கும் எழுதி வைத்தனர். ஆனால் இன்று தவ்ஹீதுவாதிகள் ஓர் ஐந்து சென்ட்
பள்ளிவாசல் இடம் வாங்குவதற்குத் தவியாய் தவிக்கின்றனர். தமிழகமெங்கும் அலையாய் அலைகின்றனர்.
தவ்ஹீது சிந்தனையாளர்கள் கொஞ்சம் மனது வைத்தால் தத்தமது ஊர்களிலேயே
தனி நபர்களாகவே பள்ளிக்கு இடம் வாங்கி விடலாம். அவ்வூர் மக்கள் வெளியூர்களில் போய்
வசூலிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தச் சகோதரர்கள் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் தங்கள்
செய்த செலவையெல்லாம் சற்று எண்ணிப் பார்த்தார்கள் என்றால் அவற்றை இப்போது செய்யக் கூடிய
தர்மத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிக மிகக் குறைவானதாகவே இருக்கும். அசத்தியத்திற்காகச்
செலவு செய்ததை விட அதிகமாகவே சத்தியக் கொள்கைக்காகச் செலவு செய்ய வேண்டும்.
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை
விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம்
செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய
போது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் (செய்து) நூறு அடிமைகளை
விடுதலை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கடம், "அல்லாஹ்வின்
தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தர்ம) காரியங்களைக்
குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு
முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்
நூல்: புகாரி 1436, 2538
ஹகீம் பின் ஹிஷாம் அறியாமைக் காலத்தில் செய்த அதே நன்மையை இப்போதும்
செய்கிறார். காரணம், ஒருவர் இஸ்லாத்திற்கு வரும்
போது அதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் செய்த நன்மையையும் சேர்த்தே கொண்டு வருகின்றார்
என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது தான்.
இதில் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். ஒருவர் இஸ்லாத்திற்கு
வரும் போது அதற்கு முன்பு செய்த நன்மைகளைக் கொண்டு வரும் அதே வேளை, அறியாமைக் காலத்தில் அவர் செய்த பாவங்களைக் கொண்டு வருவதில்லை.
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை
நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள்.
உடனே நான் எனது கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?'' என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட
வேண்டும்'' என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (-மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை
அழித்துவிடும்;
ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 173
அறியாமைக் காலத்தில் செய்த நன்மைகளைக் கொண்டு வரும் அதே நேரத்தில்
அவருடைய பாவங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன என்பது இறைவன் செய்த மிகப் பெரிய அருட்கொடையாகும்.
இன்று தவ்ஹீதுக்கு வந்தவர்களின் நிலைமை, புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களின் நிலையை ஒத்தது தான். அவர்கள்
இதனைக் கவனத்தில் கொண்டு தவ்ஹீதுக்காக அள்ளிக் கொடுக்க முன்வர வேண்டும். அல்லாஹ்வின்
அருள் வளத்தை அள்ளிச் செல்ல வேண்டும்.
EGATHUVAM JAN 2012