இணைவைப்பே தீமைகளின் தாய்! - 1
- எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்
ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். அவன் எந்தவொரு தேவையும்
அற்றவன்; எந்தப் பலவீனமும் இல்லாதவன். அவனே அனைத்து ஆற்றலும் அதிகாரமும்
கொண்டவன். அவனுக்கு ஒப்பாகவோ, இணையாகவோ எதுவுமில்லை; எவருமில்லை. இவை கடவுளுக்குரிய முக்கிய இலக்கணமாக இஸ்லாம் கூறுகிறது.
இத்தகைய ஏக இறைவனிடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இதன்
கொள்கை கோட்பாடுகளும், சட்ட திட்டங்களுமே மனித சமுதாயத்தின்
வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தவை.
இதற்கு மாறாக, ஒன்றுக்கு
மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பும் மக்களும் அல்லது ஏக இறைவனுக்கு இணையாக துணை யாக
ஏதேனும் ஒன்றைக் கருதும் மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் வாழ்வில் மனிதர்களின்
சொந்தக் கரங்களாலும் கற்பனை களாலும் உருவாக்கப்பட்ட சடங்கு களுக்கும் சம்பிரதாயங்களுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
எனவே, இந்த உலகில் வாழும் போது எண்ணற்ற
பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அல்லது எதிர்ப்படும் சிக்கல்களைச் சமாளிக்க
இயலாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் பாவமான காரியங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், இவர்களிடம் இருக்கும் இணை வைப்புக் கொள்கையே இவர்கள் செய்யும்
அனைத்து தீமைகளுக்கும் பாவங்களுக்கும் உண்மைக் காரணமாக, முக்கிய அடிப்படையாக உள்ளது. இது குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகக்
காண்போம்.
மக்களைத் துண்டாடும் தீண்டாமை
இனம், மொழி, நிறம் ரீதியாக மக்களைத் துண்டாடும் தீண்டாமைக் கொடுமை இன்னும்
இருக்கவே செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் பல நாடுகளிலும் நிறவெறி என்ற
பெயரில் தீண்டாமை பரவியுள்ளது. இதைக் கண்டித்து, பல
குரல்கள் ஒலித்துள்ளன. பல்வேறு விதமான போரட்டங்கள், புரட்சிகள்
நடந்துள்ளன. ஆனாலும், இதை ஒழிக்க முடியவில்லை.
காரணம், இதன் மூலம் பாதிக்கப் படும்
மக்கள் நினைப்பது போல, கல்வி, பொருளாதரம், அதிகாரம் போன்றவை
கிடைக்காமல் இருப்பது தீண்டாமைக்குக் காரணமல்ல. மனிதர் களிடம் இருக்கும் இணைவைப்பு
கலந்த ஆன்மீகக் கொள்கையே மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. தீண்டாமைக்கு எதிராகப்
போராடும் நபர்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலக அளவிலும், உள்ளூர் அளவிலும்
கவனித்துப் பாருங்கள். வெள்ளை நிறத்தவர்கள் அல்லது குறிப்பிட்ட இனத்தவர்கள், குலத் தவர்களின் கடவுள் கொள்கையை எடுத்துப் பார்த்தால், இறைவன் தங்களை மட்டுமே மேன்மையாகவும் மற்றவர்களை இழிவாகவும்
படைத்திருப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கவோ
சமரசம் செய்து கொள்ளவோ முன்வர மறுக்கிறார்கள்.
அதனால் தான், பல காலங்கள்
கடந்தாலும்,
சமூக நிலை மாறினாலும், வாழ்க்கை முன்னேற்றம்
அடைந் தாலும் இதுபோன்ற பாகுபாடுகள் மறையாமல் இருக்கின்றது.
இந்நிலையில், ஓரிறைக் கொள்கையான
இஸ்லாம் மட்டுமே இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கிறது. உலக ஒற்றுமைக்கான
காரணியை அழகாக அழுத்தமாக முன் வைக்கிறது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை
அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம்
மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத் திலும்
(அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
திருக்குர் ஆன் 4:1
இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆரம்பத்தில் ஒரு மனித ஜோடியை
மட்டுமே படைத்தான். அந்த ஒரு தாய் தந்தையரில் இருந்தே முழு மனித சமுதாயமும் தோன்றியது
என்று இஸ்லாம் கூறும் உண்மையை ஒவ்வொருவரும் உளமாற உணர்ந்து, அதற்கேற்ப வாழும்போது தீண்டா மைக்கு அறவே இடம் இருக்காது.
மனித குலத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும்
தழைத்தோங்க இஸ்லாம் மட்டுமே உரிய, உயரிய வழியாக இருக்கிறது. தீண்டமைக்குரிய
அடையாளங்களை அவலங்களைச் சுமந்திருக்கும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதுமே அவை அனைத்தும் காணாமல்
போய்விடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கும் மேலாக, ஏற்றத் தாழ்வுக்கு வித்திடும் அனைத்து வாதங்களையும் பின்வரும்
வகையில் கடுமையாகக் கண்டித்து வெறுப்பது இஸ்லாத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பு என்பதில்
ஐயமில்லை.
அரபி மொழியல்லாதவர்களை விட அரபி மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு
சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களை விட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும்
இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (22391)
அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப் பட்ட) கோபத்தினால்
போரிடுகின்றார். (மற்றொருவர்) இன மாச்சர்யத்தினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ்
வின் பாதையில் செய்யப்படும் போர் எது?'' என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, "எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே
போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான்
நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.
நூல்: புஹாரி (123)
இனத்திற்காகப் போரிடுபவர் இஸ்லாத்திற்காகப் போரிடுபவர் அல்ல
என்பதை இதன் மூலம் நபியவர்கள் விளக்குகின்றார்கள். தனது சாதியைச் சேர்ந்தவன், தனது மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு
ஒருவர் செய்த தவறுகளை நியாயப்படுத்துவதையும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிப் போராடுவதையும்
நாம் பார்க்கிறோம். ஆனால் இஸ்லாம் இதைக் கண்டிக்கின்றது.
இரக்கமற்ற பெண்சிசுக் கொலை
மகப்பேறு மருத்துவ மனைகளில், பரிசோதனை
மையங்களில் ஒரு பொது அறிவிப்பு வைக்கப்பட்டு இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தை
ஆணா? பெண்ணா? என பரிசோதிப்பது பெரும் குற்றம்; இந்தத் தடையை மீறுவோருக்குத் தண்டனை கிடைக்கும் என்று அதில்
இடம் பெற்றிருக்கும். இதற்குரிய காரணம் சொல்லாமலே அனைவருக்கும் புரிந்து விடும்.
பெண் பிள்ளை பிறந்தால் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்யும் கொடூரர்கள்
நிறைய இருக்கிறார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தை பிறப்பது
அவமானமாகவும்,
வாழ்க்கை சுமையாகவும் நினைக்கிறார்கள். இவ்வாறு கருதுவதற்கும்
இருப் பதற்கும்,
அவர்களின் வாழ்க்கை நெறியான இணை வைப்புக் கொள்கையே அடிதளமாக
இருக்கிறது.
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தை களைக் கொல்வதை
அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.
திருக்குர்ஆன் 6:137
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்
பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடு கிறான்.
அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து
கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில்
இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில்
கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 16:58,59
ஏக இறைவனே தான் நாடியோருக்கு குழந்தை பாக்கி யத்தைத் தருகிறான்.
இது அவனது மிகப்பெரும் கிருபை, அளப்பறிய அருள் என்கிறது இஸ்லாம்.
குழந்தை இல்லாமல் சோதனையில் துடிக்கும் தம்பதியர்களைப் பார்க்கும் போது இதைப் புரிந்து
கொள்ள முடிகிறது.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன்
நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான்
நாடியோருக்கு ஆண்(குழந்தை) களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை
மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
திருக்குர் ஆன் 42:49, 50
இன்னும் ஒருபடி மேலாக, பெண் குழந்தையைச்
சீராக வளர்க்கும் நபர்களுக்கு மறுமையில் நிறைவான நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் போதிக்கிறது.
எனவே தான்,
ஓரிறைக் கொள்கையை ஏற்று, பின்வரும்
செய்திகளை மனதில் கொண்டு வாழும் முஃமின்களிடம் பெண் சிசுக் கொலை எனும் கொடிய காரியத்தைக்
காண முடியவில்லை.
"இரு சிறுமிகளை பருவம் அடையும் வரை யார் பராமரிக் கிறார்களோ அவரும்
நானும் மறுமை நாளில் இவ்வாறு வருவோம்'' என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தம் கை விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (4765)
மூளையை மழுங்கடிக்கும் மூடநம்பிக்கைகள்
மனிதப் படைப்பின் முக்கியமான முதன்மையான அடையாளமே பகுத் தறிவு
தான். அதை அர்த்தமற்றதாக ஆக்கும் வகையில் ஏராளமான மூடநம்பிக்கைகள் மனிதர்களிடம் இருக்கின்றன.
வீட்டை விட்டு வெளியேறுவது முதல் வீடு கட்டுவது வரை அனைத்திலும் இதன் தாக்கத்தைக் காணலாம்.
பெரும்பாலான மக்கள் சகுனம், ஜோசியம், சூனியம், நரபலி என்று மூளையை மழுங்கடிக்கும்
சிந்தனை களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவற்றின் மூலம் செல்வத்தையும், நிம்மதியையும் இழந்து தவிக்கிறார்கள்.
நன்றாக இருக்கும் வீட்டை வாஸ்து சரியில்லை என்று இடித்துத் தள்ளுவார்கள்.
ஒழுங்காக நடக்கும் வியாபாரத்தை யாரோ செய்வினை வைத்து விட்டதாகக் கருதி இழுத்து மூடுவார்கள்.
நோய் ஏற்பட்டால் மருத்துவம் பார்க்காமல் பேய் பிடித்து விட்டதாகக் கூறி மந்திரவாதிகளிடம்
சென்று தங்கள் பொருளாதாரம், கற்பு, உயிர் போன்றவற்றை இழப்பார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது
அவர்களின் வாழ்க்கை முறையாக விளங்கும் இணைவைப்புக் கோட்பாடு தான்.
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் இருந்து ஒரு பாகத்தை தாங்கள்
அறியாதவைகளு(க்காக கற்பனைக் கடவுளு)க்காகப் படைக்கின்றனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக
நீங்கள் இட்டுக் கட்டியது பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
திருக்குர் ஆன் 16:56
அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்களிலும், கால்நடைகளிலும் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர்.
"இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது'' என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்
களுக்கு உரியது,
அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியது, அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு
மிகவும் கெட்டது. இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை
அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ்
நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு
அவர்களை விட்டு விடுவீராக!
"இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண
முடியாது'' என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில்
சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள்
மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக் கட்டிக் கூறுகின்றனர்.
அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.
"இக்கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்களில் ஆண்களுக்கு மட்டுமே
உரியவை. எங்களில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. அவை இறந்தே பிறந்தால் அதில் அனைவரும்
பங்காளிகள்''
எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றுக்காக அவர்களை
அவன் தண்டிப்பான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.
(திருக்குர்ஆன் 6: 136-139)
இவை மட்டுமல்ல, விளக்கேற்றிய
பிறகு செல்வத்தை யாருக்கும் தரக் கூடாது; மாதவிடாய்
பெண்கள் வீட்டுக்குள் வரக் கூடாது; கணவனை இழந்த
பெண்கள் எதிரே வந்தால் காரியம் விளங்காது; காகம் கரைந்தால்
விருந்தாளிகள் வருவார்கள்; கை அரித்தால் பணம் வரும்; கயிறு கட்டினால் நோய் குணம் ஆகும்; தகடு மாட்டி வைத்தால் துன்பம் வராது; ஜோசியம் மூலம் நாளை நடப்பதை அறியலாம் என்று ஆயிரக்கணக்கான மூட
நம்பிக்கைகள் இருக்கின்றன.
இதுபோன்ற பகுத்தறிவுக்குப் பங்கம் விளைவுக்கும் சிந்தனைகளை இஸ்லாம்
துடைத்து எறிகிறது. அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப் படியே நடக்கின்றன. அவனுடைய அனுமதி
இல்லாமல் எந்தவொரு இன்பமும், துன்பமும் வராது என்கிறது, இஸ்லாம்.
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும்
ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 9:51
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை
இறக்குகிறான். கருவறை களில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ்
நன்கறிந்தவன்;
நுட்பமானவன்.
திருக்குர்ஆன் 31:34
எல்லாம் அவன் செயல் என்று ஏக இறைவன் மீது நம்பிக்கை வைக்கும்
போது குருட்டுத் தனமான காரியங்கள் பக்கம் போக வேண்டிய அவசியமே இருக்காது. இந்த நேரம்
இதை செய்யக் கூடாது; அந்த இடத்தில் அதைச் செய்யக்
கூடாது என்றொல்லாம் சிந்தனையை குழப்பிக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்காது. ஒரு வரியில்
விளக்குவதாக இருந்தால், இணை வைப்பு கொள்கைக்கு மாற்றமாக
ஓரிறைக் கொள்கை சொல்லும் வகையில் நம்பிக்கை இருக்கும் போது மட்டுமே மூடநம்பிக்கைகள்
மண்மூடிப்போகும்.
ஏக இறைவனுக்கு இணை கற்பிப்பதால் ஏற்படும் இன்னும் சில சமூகத்
தீமைகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.
EGATHUVAM JAN 2016