May 23, 2017

அம்பேத்கார் கண்ட ஆலய மறுப்பு!

அம்பேத்கார் கண்ட ஆலய மறுப்பு!

இந்துத்துவ பாஜக ஆளுகின்ற  அரியானா மாநிலத்தில் அண்மையில் இரு தலித் குழந்தைகள் உயர் ஜாதிக்காரர்களால்  உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்தது.

பீகாரில் தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ, பாசிச பாஜகவுக்கு இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இதைப் பற்றி மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேசும் போது "யாராவது தெருவில் போகின்றவர் நாயின் மீது கல்லெறிந்தால் அதற்கு மத்திய அரசு பொறுப்பாகுமா?'' என்ற தலித்துகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார்.

அதே அரியானா மாநிலம் சோனேபட் மாவட்டத்தில் கோசுனா பகுதியைச் சேர்ந்த கோவிந்த் என்ற 15 வயதுடைய தாழ்த்தப்பட்ட சிறுவன் 22.10.2015 அன்று கொல்லப்பட்டுள்ளான்.

வீடு புகுந்து புறா ஒன்றைத் திருடினான் என்று பழி சுமத்தப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையிடம் சிறுவனின் தாயார் கண்ணீரோடு முறையிட, அவரிடம் ரூபாய் 10 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும் தாயாரிடம் அந்தச் சிறுவனை உயிரோடு ஒப்படைக்காமல் அவனது  பிணத்தையே ஒப்படைக்கின்றனர்.

அவன் கொலை செய்யப்படவில்லை மாறாக, தற்கொலை செய்து கொண்டான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறியது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது. இப்படி வளர்ச்சி நாயகன் (?) மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் மட்டும் தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளின் எண்ணிக்கை ஒரு புள்ளி விபரப்படி 43 ஆயிரத்தைத் தாண்டுகின்றது.

தலித்துகளுக்கு எதிராக வடக்கே தான் கொடுமைகள் நடக்கின்றன என்றால் தெற்கேயும் அது போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இதற்குச் சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

சாதியின் படிநிலைகள் பற்றி எழுதிய கன்னட தலித் எழுத்தாளர் ஹுச்சங்கி பிரசாத் தாக்கப்பட்டுள்ளார். இது கர்நாடகாவில் நடந்த கொடுமையாகும்.  தமிழகத்தில் நடக்கின்ற கொடுமைகளை இப்போது பட்டியலிடுவோம்.

ஆகஸ்ட் 29, 2015 அன்று தமிழ் இந்து பத்திரிக்கையில் "தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி'' என்ற தலைப்பில் எவிடென்ஸ் கதிர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் சேஷசமுத்திரத்தில் நடந்த சாதி வெறியாட்டத்தைப் படம் பிடித்திருந்தார்.

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்துகள் வழிபடும் மாரியம்மன் கோயிலின் திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். முதல் முறையாகக் கடந்த 2012-ல் இந்தக் கோயிலுக்காகத் தேர் ஒன்றை உருவாக்கி, வீதியுலாவுக்குச் சாமியை எடுத்து வர முயன்றபோது, பொதுப் பாதையில் தலித்துகள் தேர் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர் ஆதிக்கச் சாதியினர்.

அது தொடங்கி, மாரியம்மன் கோயில் திருவிழா சமயத்தில் இங்கு அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பிப்பது வழக்கமாகி விட்டது. இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், 14 ஆகஸ்ட் அன்று கோயில் திருவிழாவில் தேர் பவனி நடத்துவதற்கு அனுமதி அளித்தார். அரசு நம்முடைய உரிமையை மதித்திருக்கிறது என்று மகிழ்ந்திருந்தனர் தலித்துகள்.

ஆனால், 14 ஆகஸ்ட் அன்று சேஷசமுத்திரம் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் சங்கராபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று, தேர் பவனி நடந்தால் உயிர்ச் சேதம் எற்பட வாய்ப்பிருக்கிறது என்று புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, கலவரம் ஏற்படலாம் என்று அச்சமடைந்த வட்டாட்சியர் இரண்டு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, "நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட மாட்டோம்'' என்று வாக்களித்திருக்கிறார்கள் இரு தரப்பினரும். ஆனால், நடந்தது வேறு.

திருவிழா தினத்தன்று இரவு பெட்ரோல் குண்டு, கத்தி, அரிவாள், கடப்பாரை, உருட்டுக்கட்டை எனப் பயங்கர ஆயுதங்களுடன் பெருந்திரளான ஆதிக்க சாதியினர் தலித்துகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். குடியிருப்புகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கின்றனர்; இதில் 5 வீடுகள் தீக்கிரையாயின. தொடர்ந்து, தேரை எரித்ததுடன் இதைத் தடுக்க முற்பட்ட - அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த - போலீஸாரையும் தாக்கியிருக்கின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாரையும் ஊருக்குள் விடாமல் வழி மறித்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களில் 8 போலீஸார் உட்பட 11 அரசு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். 

இது தான் சாதியத்தைப் பற்றிய எவிடன்ஸ் கதிர் அவர்களின் படப்பிடிப்பாகும்.

இது எப்போது நடந்தது? இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்டு 15, 2015 அன்று தான்! இது எதை உணர்த்துகின்றது? ஆதிக்க ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து நாடு விடுதலை பெற்றிருக்கின்றது. ஆனால் ஆதிக்க சாதியத்திடமிருந்து தலித்துகள் இது வரை விடுதலையும், விமோசனமும் பெறவில்லை என்பதைத் தான்.

இந்தக் கலவரம் நடந்து முடிந்து அதன் காயம் கூட ஆறவில்லை. அதற்குள்ளாக  உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலில் அக்டோபர் 13 முதல் 23 தேதி வரை விழா நடைபெறும். அந்த விழாவின் போது தலித்கள் வழிபாட்டு உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. தலித் மக்கள் கோயில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் மாலை போட்டுள்ளனர். அதை சாதி இந்துக்கள் கழற்றி வீசி எறிந்துள்ளனர்.  இதனால் அங்கு கலவரம் உருவாகி ஊரே பதற்றமாக உள்ளது. இந்த மோதல் செய்தி அக்டோபர் 22ஆம் தேதி இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியானது.

இவ்விரண்டு நிகழ்வுகளும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். தலித் மக்கள் கோயிலில் போய் வழிபட உரிமை கோருகின்றார்.

இந்த மோதல்களுக்குக் காரணம் என்ன?

தலித்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லை என்பதை சாதி இந்துக்களா சொல்கின்றார்கள்? அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வேதங்கள் அவ்வாறு சொல்கின்றன!  உதாரணத்திற்கு இராமாயணத்திலிருந்து  சம்பூகன் வதை என்ற எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளையின் உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங்கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசை மொழிகளைப் பொழிந்து கதறினான்.

அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்பொழுது, "சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணுகிறான். அவனைக் கொல்லாமலிருந்த குற்றத்தால், இக்குழந்தையின் உயிர் நீங்கியது. அதனால் காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும்'' என்று அசரீரி வார்த்தை மொழிந்தது.

உடனே  இராமன் காட்டிற்குச் சென்று, அந்தத் துறவியைப் பார்த்து, "நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்?'' என வினவ, அதற்கு அவர், "இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்புகிறேன்'' என்று விடை பகர, ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, "சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனால் தானே பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லுவது பாவமாகாது. எதிர்மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்துபோன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால், பெரும் புண்ணியத்தை அடைவோமே!'' என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து, "ஓ! வலக் கையே, இறந்துபோன  பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்று அல்லவா?'' என்றான்.  இவ்வாறு இராமனால் சூத்திரன் சம்பூகன் வெட்டப்பட்டதும் செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்றது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

தலித்துகளின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதற்கு இந்த இதிகாசங்கள், புராணங்கள், பொய்யான வேதங்கள் தான் காரணம். இந்த இலட்சணத்தில் வேதங்களைப் படித்தால் தாழ்த்தப்பட்டவரின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று வேறு கூறுகின்றது.

இவர்களது  வேத இதிகாசங்கள் இவ்வாறு வேதம் கற்பதை மட்டும் மறுக்கவில்லை. வித்தை, கல்வி, கலை கற்பதையும் மறுக்கின்றது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டை மகாபாரதத்திலிருந்து பார்ப்போம்:

இதற்கு மகாபாரதத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுப்பது நமது கடமை.

ஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்து கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன். துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவன் யோசித்தபோது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான். உனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறான்.

"சுவாமி நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில் வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.

மனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிட வில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்'' என்றான் பவ்யமாக.

அப்படியானால் எனக்குக் குரு தட்சணை கொடுக்க வேண்டாமா? கொடுப்பாயா? என்று துரோணாச்சாரி கேட்டார்.

எது கேட்டாலும் கொடுப்பேன் என்றான் ஏகலைவன். உன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு! என்றான் இரக்கம் துளியும் இல்லாத அந்தக் குரூரனான துரோணாச்சாரி.

அக்கணமே வெட்டிய கட்டை விரலைக் காணிக்கையாகத் தந்தான் ஏகலைவன். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடியாதல்லவா? அதற்காக குரு தட்சணை என்ற பெயரில் இப்படி ஒரு சூழ்ச்சி!

சாதிய இந்துக்களின் இந்தச் சகிக்க முடியாத சாதி வெறிக்கும் சகோதரத்துவச் சிந்தனை மறுப்புக்கும் பின்னால் இருப்பது வேதங்களும், இதிகாசங்களும் எனபது தான் இது உணர்த்துகின்ற, உரக்கச் சொல்கின்ற உண்மையாகும்.

அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொன்னதன் மர்மமும் மறைமுக ரகசியமும் இது தான். இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண்களை திறக்கின்றதே! அதை உயர் சாதிக்காரர்கள் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்?

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல் செய்ய முயற்சி செய்த போது அதைத் திருப்புவதற்கு பாபர் மஸ்ஜித் விவகாரத்தைக் கையில் எடுத்தார்கள். கடைசியில் ஒருவாறாக பள்ளியையும் உடைத்துத் தள்ளினார்கள்.

அந்த அளவுக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் வெறுப்பு! கீழ்ச் சாதிக்காரன் மேலே வந்து விடக்கூடாது என்பதில் ஒரு முனைப்பு!

இப்படி ஒரு வெறி உள்ளவர்கள் எப்படித் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் தலித்துகளுக்கு இடம் அளிப்பார்கள்?

இப்போது தலித் மக்களுக்கு முன்னால் உள்ள ஒரே ஒரு வழி அவர்களைப் படைத்த உண்மையான ஒரே ஓர் இறைவனைக் கடவுளாக நம்பி ஏற்று இஸ்லாத்தில் இணைவது தான்.

தலித் சமுதாயம் குடியிருக்கின்ற ஓட்டையும் உடைசலுமான ஒழுக்குகள் நிறைந்த - வேதத்தைப் படிக்க அனுமதி மறுக்கின்ற - தீண்டாமையினால் ஒதுக்கி வைக்கின்ற - மனிதனை மனிதனாக மதிக்காத - வீட்டிலிருந்து வெளியேறி அமைதி வீட்டிற்கு வாருங்கள் என்று இதோ திருக்குர்ஆன் அழைக்கின்றது.

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.

அல்குர்ஆன் 10:25

பிரம்மனின் முகத்திலிருந்து பிராமணன் பிறந்தான்; தோள்களிலிருந்து சத்திரியன் பிறந்தான்; தொடைகளிலிருந்து வைசியன் பிறந்தான்; பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்ற வருணாசிரம அடிப்படையில் மனிதனைக் கூறு போடுவதை இஸ்லாம் தகர்த்தெறிந்து ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஓர் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்று திருக்குர்ஆன் முழக்கமிடுகின்றது.

மனிதர்களே!உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இன்று மாட்டிறைச்சி என்ற பெயரில் சங்கபரிவாரங்கள் கைகளில்  மாட்டிக் கொண்டிருப்பது இஸ்லாமியச் சமுதாயம் என்று தலித் மக்கள் நினைக்கலாம். மாட்டிறைச்சியைக் காரணம் காட்டி இன்று கண்டவரும் குலை நடுங்குகின்ற வகையில் சங்கப் பரிவாரங்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வதற்குப்  பின்னால் உள்ள காரணம் முஸ்லிம்கள் அதைச் சாப்பிடுகின்றார்கள் என்பது மட்டும் இல்லை.

அவர்களது கணக்குப்படி பார்த்தால் முஸ்லிம்கள் ஒரு 13 சதவிகிதம் தான். ஆனால்  90  சதவிகிதம் தலித்துகள் தான் அதைச் சாப்பிடுபவர்கள். இந்த வகையில் தலித்கள் உணவிலும் அடிப்பதற்கு இந்த இந்துத்துவா சக்திகள் ஆயத்தமாகவே உள்ளார்கள். எனவே தலித்துகள் தங்களுக்குரிய வழிபாட்டுரிமையை மட்டுமல்ல; வாழ்வுரிமையைப் பெறுவதற்கும் உலகளாவிய இந்த சகோதரத்துவ சமத்துவ மார்க்கத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொள்வது தான் அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே ஒரு வழியாகும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத்தின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பேச்சு பீகார் தேர்தலில் பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. இது பீகார் தேர்தலின் போக்கையே மாற்றி பிஜேபிக்கு எதிரான அலையை உருவாக்கி விட்டது. இதன் எதிரொலியாகப் பிரதமர் நரேந்திர மோடி, பாபாசாகிப் அம்பேத்கார் அவர்களால் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமைகள் தனது கட்சியால் பறிக்கப்படாது என்று பேசியிருக்கின்றார்.

அண்மைக் காலமாக  மோடிக்கும், சங்பரிவார் கும்பல்களுக்கும் தலித்துகள் மீது பாசம் பொங்கி வழிவதைப் பார்க்க முடிகின்றது. காயத்ரி மந்தரத்தை விட இப்போது அம்பேத்கார் மந்திரத்தை அதிகம் அதிகம் மந்திரிக்க ஆரம்பித்து விட்டனர்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் கோயேசன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிலையைத் திறந்து வைத்தார். மும்பை தாதர் இந்து மில்லில் அம்பேத்கார் நினைவாலயம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றார். லண்டனில் அம்பேத்கார் தங்கிப் படித்த வீட்டை 31 கோடி ரூபாய்க்கு வாங்கி அதை மியூசியமாக ஆக்கி பிரதமர் நரேந்திர மோடியை வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஓநாய்க்கு எப்படி  ஆட்டின் மீது பாசமும் பரிவும் ஏற்பட்டது என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். எல்லாம் தேர்தலை முன்னிட்டுத் தான்!

அம்பேத்கார் மீது மரியாதை காட்டும்  இவர்கள் வழிப்பாட்டுத் தலத்தில் இடம் அளித்தார்களா?

பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் மவுண்ட் பேட்டன் போனபோது தடுக்காத பார்ப்பனீயம். அண்ணல் அம்பேத்காரைத் தடுத்தது ஏன்?

இவ்வளவுக்கும் மவுண்ட்பேட்டன் இன்னொரு மதக்காரர்; அண்ணல் அம்பேத்காரோ இந்து மதத்தைச் சேர்ந்தவர்; அப்படி இருந்தாலும் இன்னொரு மதக்காரருக்கு கொடுக்கும் மரியாதை, சொந்த மதக்காரருக்கு அளிக்காதது ஏன்?

இப்போது இவர்கள் அம்பேத்காருக்கு இவ்வளவு மரியாதை அளிப்பதற்குக் காரணம் தலித்துகளின் வாக்குகளை வாங்கி ஆட்சியைப் பிடிப்பதற்காகத் தான். ஆட்சியைப் பிடித்த பின்பு ஒரேயடியாக தலித்துகளைத் தலைகீழாகக் கவிழ்ப்பதற்காகத் தான்.

நாடாளுமன்றத் தேர்தலில் மோடி போட்ட வேஷம் இப்போது ஒவ்வொன்றாகக் கலைந்து வருகின்றது. ஒவ்வொரு பசப்பு மொழியும், பாசாங்கு நடிப்பு என இப்போது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றது. எனவே தலித் சமுதாயமே! இந்துத்துவாவின் ஏமாற்று வேலைகளில் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் தன்மானத்தை இழந்து விடாதீர்கள். நாளைய தலைமுறைக்கு அவமானத்தையும் அசிங்கத்தையும் அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லாதீர்கள்.

அபிசீனிய நாட்டைச் சார்ந்த கன்னங்கருத்த அடிமையான பிலால், இஸ்லாத்தில் இணைந்த பிறகு குர்ஆன் எனும் வேதத்தைப் படிப்பது, மக்களைத் தொழுகைக்கு அழைப்பது போன்ற உயரிய பொறுப்பு வழங்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அவரது அந்தஸ்து ஆகாயத்திற்கு உயர்ந்தது.

முஸ்லிம்கள் இறந்த பிறகு நிரந்தரமாகத் தங்கப் போகின்ற சொர்க்கத்தில் பிலால் (ரலி) அவர்களின் செருப்போசையை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றதாகக் கூறுகின்றார்கள். (நூல்: புகாரி 1149) அந்த அளவுக்கு அவருடைய மரியாதையை இஸ்லாம் உயர்த்தியிருக்கின்றது.

இந்த உயர்வையும், அந்தஸ்தையும் தலித்துகள் அடையவும், அனுபவிக்கவும் தலித் என்ற அடையாளத்தைத் தடந்தெரியாமல் அழித்து முஸ்லிம் சகோதரர்களுடன் ஒரு சகோதரனாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்களை அரவணைத்துக் கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம் என்று அன்புடன் அழைக்கிறோம்.

இன்று தலித்துகள் பவுத்த மதத்தைத் தழுவுகின்றனர். பவுத்த மத்தைத் தழுவிய பின்னரும் தீண்டாமை அவர்களை விட்டும் நீங்கியபாடில்லை. அம்பேத்கார் பவுத்த மதத்தைத் தழுவினார். ஆனால் அது இன்றைக்கும் அவரது தாழ்த்தப்பட்ட அடையாளத்தைத் துடைத்திடவில்லை. ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்து விட்டால் தலித், தாழ்த்தப்பட்டவர் என்ற சாதியத் தடயமே அழிந்து விடுகின்றது. தலித் சமுதாயத்தினர் இதைத் தங்கள் சிந்தனையில் கொள்வார்களாக!

EGATHUVAM NOV 2015