பெரும்பான்மையை பின்பற்றும் ஜாக்
எம்.எஸ். சுலைமான்
கடந்த செப்டம்பர் 2015 அல்ஜன்னத்
இதழில் "சரியான நாளில் அரபாவும் பெருநாளும்' என்று
தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையின் சாராம்சமே உலகில் எங்கிருந்து பிறை பார்த்த
தகவல் வந்தாலும் அதை நாம் ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்பது தான்.
உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க வேண்டும்
என்று கூறும் இவர்கள் இக்கருத்தினை நிலைநாட்ட தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவில்லை.
ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் முன்வைத்தவற்றைப் பார்வையிடும்
யாரும் ஜாக் அமைப்பு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் அமைப்பு அல்ல. மாறாக மனோ இச்சைகளைப்
பின்பற்றும் அமைப்பு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.
ஆதாரம்: 1
உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்றுக்
கொள்ளலாம் என்பது உலக அளவில் பரவலாக முஸ்லிம்களிடம் உள்ள சரியான கருத்தாகும். பல இஸ்லாமிய
நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மை யினராக வாழும் இஸ்லாமிய நாடு அல்லாத ஏனைய நாடுகளிலும் இதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நமது பதில்
இது தான் அவர்களின் ஆதாரமாம். அதாவது உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும்
அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குக் குர்ஆனிலும் ஹதீஸிலும் நேரடியான ஆதாரம் இல்லை
என்பதால் "அதிகமானவர்கள் இதைப் பின்பற்று கிறார்கள்' என்பதை ஆதாரமாக முன்னிறுத்துகிறார்கள்.
இதெல்லாம் ஒரு ஆதாரமா?
உலகில் அதிகமான முஸ்லிம்கள் மத்ஹபைத் தான் பின்பற்றுகின்றனர்.
எனவே எங்கள் கொள்கை தான் சரி என்று மத்ஹபுவாதிகள் கூறுவ தற்கும் இவர்களுக்கும் என்ன
வித்தி யாசம்? ஒரு வித்தியாசமும்
இல்லை.
உலகம் முழுவதிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப் படையில்
பார்த்தால் முஸ்லிம்களை விட கிறித்தவர்களே பெரும் பான்மையாக உள்ளனர். எனவே கிறித்தவக்
கொள்கை தான் சரியானது என்று இவர்கள் கூறுவார்களா?
ஜாக் என்ற அமைப்பு குர்ஆன் ஹதீஸ் என்ற பாதையை விட்டு வெகுதூரம்
சென்று விட்டது என நாம் பலமுறை கூறி வருகிறோம்.
அதை உண்மைப்படுத்தும் விதமாக இவர்களது வாதம் அமைந்துள்ளது.
இவர்கள் குறிப்பிடும் ஆதாரத்திற்கு எதிராக அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால்
அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே
பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.
அல்குர்ஆன் 3:116
அதிகமானோர் தங்கள் கருத்தைத் தான் பின்பற்றுகின்றனர் என்ற இவர்களின் வறட்டு வாதத்திற்கு இந்த இறைவசனம்
ஒன்றே போதுமான பதிலாகும்.
ஆதாரம் 2
பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் எனும் ஹதீஸையும் உலகப் பிறை
ஆதரவாளர்கள் தங்கள் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
நமது பதில்
ஒரு ஹதீஸைத் தங்கள் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிடுபவர்கள்
அந்த ஹதீஸில் தாங்கள் குறிப்பிடும் கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று
பார்க்க வேண்டும்.
இந்த ஹதீஸில் இவர்களது வாதத்திற்கு ஆதாரம் உள்ளதா?
நபியின் காலத்தில் பல நாடுகள், பல ஊர்கள் இருந்தன. ஸஹாபாக்கள் சிரியா போன்ற நாடுகளுடன் வியாபாரத்
தொடர்புடன் தான் இருந்தார்கள்.
தங்கள் பகுதியில் பிறை தெரியாத போது இது போன்ற நாடுகளில் பிறை
தென்பட்டதா என அவர்கள் அறிய முற்பட்டார்களா? அப்படி ஒரு
பலவீனமான செய்தியையாவது குறிப்பிட இயலுமா?
உளவுத் துறையைக் கையில் வைத்திருந்த நபியவர்கள் பல தேவைகளுக்காகப்
பல நாடுகளுக்கு உளவுப்படையை அனுப்பிவைத்து செய்திகளை அறிந்து கொண்டார்கள்.
அது போன்று பிறை விஷயத்தில் பிற இடங்களில் உள்ள தகவல அறிய சிறு
முயற்சியாவது மேற்கொண்டார்களா?
இன்னும் சொல்லப் போனால் நபித்தோழர்களின் காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும்
பிறை வேறுபாடுகள் இருந்திருக்கிறது.
ஒரு இடத்தில் பார்க்கப்பட்ட பிறையை வைத்து இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட
அனைத்து பகுதி களிலும் அதைக் கடைப்பிடித்தார்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இக்கருத்தை பின்வரும் செய்தி யின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா
(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்
தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை
இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன்.
இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப்
பற்றி பேச்சை எடுத்தார்கள். "நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். "நாங்கள் வெள்ளிக்கிழமை
இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். "நீயே
பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். "ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள்.
முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்''என்று கூறினேன்.
அதற்கவர்கள் "ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே
நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை
நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள்.
"முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப்
போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள் ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம் 1983
இதன் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பிறைக் கணக்கு உள்ளது
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்கலாம்
என்று இவர்கள் கூறுவது மக்களை ஏமாற்றுவதற்குத் தானே தவிர அதைப் பின்பற்றுவதற்கு அல்ல.
கட்டுரையின் துவக்கத்தில் பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கிருந்து
வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
கட்டுரையின் முடிவில் அந்தர் பல்டியடித்து அதற்கு நேர்மாறான
கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.
நம்மை நோக்கி துல்ஹஜ் மாதம் வருகிறது. அதில் சிறப்பிற்குரிய அரஃபா, ஈதுல் அழ்ஹா, அய்யாமுல்
தஷ்ரீக் ஆகிய நாட்கள் உள்ளன.
அந்த நாட்களை நாம் சரியாக அடைந்து கொள்ள வேண்டும். முக்கியமாக
ஹாஜிகள் அரஃ.பாவில் ஒன்று கூடும் நாளில் நாம் அரஃபா நோன்பு நோற்க வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
உலகில் எங்கு பிறை பார்த்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது எங்கள்
கொள்கையல்ல. பிறை விஷயத்தில் சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் கொள்கை என்பதை
திட்டவட்டமாக அறிவிக்கின்றார்கள்.
உலகப் பிறை எனும் அவர்கள் முகமூடி அவர்களாலேயே கிழித்துத் தொங்க
விடப்பட்டிருக்கின்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!
ஹாஜிகள் அரபாவில் கூடும் நாளில் தான் நாம் அரபா நோன்பு வைக்க
வேண்டும் என்று அவர்கள் கூறுவதற்கு மனோ இச்சையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் அவர்களிடம்
இல்லை.
தங்களின் சுய கருத்தை மார்க்கத்தில் திணித்து மக்களின் இறை வழிபாடுகளில்
எப்படியெல்லாம் விளையாடுகிறார்கள்? அல்லாஹ்வின்
அச்சம் கடுகளவு இருந்தாலும் இப்படிச் செய்யத் துணிவார்களா?
இவர்கள் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக உலகப் பிறை என்று சொல்லிக்
கொண்டு சவூதியை மட்டுமே கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக சவூதி அல்லாத மற்ற இடங்களில் பிறை பார்க்கப்பட்டு
அந்தத் தகவலின் படி இவர்கள் செயல்பட்டதுண்டா? சவூதி அல்லாத
உலகின் மற்ற நாடுகளில் முதல் பிறை தென்படவே செய்யாதா?
இதிலிருந்து பிறைத்
தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அவர்கள் கூறுவது வெற்று வேஷமே
என்பது உறுதியாகிறது.
இப்போது அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸிற்கு வருவோம்.
பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள்
எனும் ஹதீஸைக் குறிப்பிட்டு எங்கிருந்து பிறை தகவல் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அது எந்த நாடாக இருந்தாலும் எந்த மாநிலமாக இருந்தாலும் பிரச்சனையில்லை
என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒரு ஹதீஸிலிருந்து வாதம் வைப்பவர்கள் அந்த ஹதீஸை முழுமையாகக்
குறிப்பிட்டு பிறகு தங்கள் வாதத்தை வைக்க வேண்டும்.
ஹதீஸின் ஒரு பகுதியைக் குறிப் பிட்டு மறு பகுதியைத் திட்டமிட்டு
மறைத்து மக்களை முட்டாளாக்க முயற்சிக்கக் கூடாது.
இவர்கள் குறிப்பிடும் ஹதீஸின் பிற்பகுதியை இவர்கள் கூறும் கருத்திற்கு
எதிராக இருப்பதால் வசமாக மறைத்து இருக்கிறார்கள்.
அந்த ஹதீஸை முழுமையாகப் போட்டிருந்தால் உலகப் பிறைக்கு எதிராகத்தான்
இந்த ஹதீஸ் உள்ளது என்பதை சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.
இது தான் அவர்கள் குறிப்பிடும் ஹதீஸின் முழுமையான பகுதி.
அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை
(மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான்
மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
உலகில் எங்காவது பிறை பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி
தேவையில்லை.
உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத
பகுதி இருக்கும் அங்கே பார்த்து உலகிற்கு அறிவிக்கலாம்.
உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும்
பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தைத் தான் தருகிறது.
தங்களின் கருத்திற்கு எதிராக ஹதீஸின் பிற்பகுதி இருப்பதால் தான்
அதை மறைக்கின்றார்கள். இதன் மூலம் இவர்கள் மார்க்கத்தை, சத்தியத்தை மறைக்கத் தயங்காதவர்கள் என்பது தெளிவு.
சவூதிப் பிறையைக் கடைபிடிக்கும் ஜாக் அமைப்பிற்கு பெரிய இடியாக
அமைந்த ஹதீஸ் குரைப் அறிவிக்கும் ஹதீஸாகும். இந்த ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "சிரியாவில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்க முடியாது எங்கள் பகுதியில்
பார்த்தால் தான் ஏற்றுக் கொள்வோம் நபியவர்கள் எங்களுக்கு இப்படித்தான் கட்டளை யிட்டார்கள்
என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள்.
ஆனால் இந்த சவூதி பிறைக் கூட்டம் ஆரம்பத்தில், "குரைப் சாட்சி சொல்ல வரவில்லை; எனவே இந்த ஹதீஸை ஏற்க முடியாது' என்றார்கள்.
அதற்கு நாம் பதிலடி கொடுத்த பின் இது ஹதீஸே இல்லை எனக்கூறி அடம்பிடித்தார்கள்.
அதற்கும் நாம் இது ஹதீஸ் தான் என்பதை நிரூபித்த பின் இப்போது குரைப் அவர்கள் சிரியாவில்
பார்க்கப் பட்ட பிறையை மாதத்தின் கடைசியில் தான் தெரிவிக்கிறார்கள். மாதத்தின் கடைசியில்
தகவல் வந்தால் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. அதனால் குழப்பம் வரும் என்று ஏதாவது
சொல்லி இந்த ஹதீஸை மறுப்பதற்கு பெரும்பாடு படுகிறார்கள்.
மாதத்தின் கடைசியில் தகவல் வந்தால் எதுவுமே செய்ய முடியாதா?
குரைப் கூறிய தகவலின் அடிப்படையில் பெருநாளைத் தீர்மானிக்கலாமே!
ஒரு நோன்பு விடுபட்டிருந்தால் அந்த நோன்பை களா செய்யலாமே?
இப்னு அப்பாஸ் அவர்கள் குரைப் பிறை பார்த்த தகவலை மறுக்கவில்லை.
எங்கள் பகுதியில் நீங்கள் பிறை பார்த்த தினத்தில் நாங்கள் பிறை
பார்க்கவில்லை. எனவே உங்கள் தகவலை ஏற்கம மாட்டோம் என்று தான் கூறுகிறார்கள்.
சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப்
வந்து நேரடியாகக் கூறுவது தொலை தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம்.
அதை இப்னு அப்பாஸ் மறுக்கின்றார் என்றால் தொலை தூரத்தில் பார்க்கப்பட்ட
பிறைத் தகவலை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
குர்ஆன், ஹதீஸைப் பெயரளவில் மட்டும் வைத்துக்
கொண்டு, நபித்தோழர்களின் கருத்தும் மார்க்கம் என்ற கொள்கையைப் பின்பற்றி
வந்த ஜாக் அமைப்பு தற்போது, பெரும்பான்மையைப் பின்பற்றலாம்
என்ற அளவுக்கு இறங்கியுள்ளது.
குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அடிப்படைகளை
விட்டு விலகி விட்டால் தங்கள் மனோ இச்சை எதையெல்லாம் மார்க்கம் என்று கூறுகின்றதோ அதையெல்லாம்
பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்கு ஜாக் உதாரணமாக அமைந்துள்ளது.
EGATHUVAM OCT 2015