May 23, 2017

அல்லாஹ்வின் ஆலயத்தில் அனைவரும் சமமே!

அல்லாஹ்வின் ஆலயத்தில் அனைவரும் சமமே!

சேஷ சமுத்திரம் கிராமத்தில் தேரிழுப்பது தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது விஜயபாரதம்  இதழில் பின்வருமாறு தலையங்கம் தீட்டியுள்ளது.

விழுப்புரம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோயில் தேர் செல்கின்ற பாதை பற்றி இரு பிரிவினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி தீக்கிரை யாக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்ன வென்றால் தேர் ஓட்டுகிறவர்களும் ஹிந்துக்கள், அதற்குத் தீ வைத்த வர்களும் ஹிந்துக்கள். இது மிகவும் வெட்ககரமானது. கேவலமானது. நமக்குள் இப்படிச் சண்டை போடுவதால் தானே வேற்று மதத்தவர்கள் இதைப் பயன்படுத்தி நம்மவர்களை மதம் மாற்றி வருகிறார்கள்? இப்படித்தான் பல கிராமங்களில் நமது சகோதரர்கள் முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறிப் போனார்கள். ஹிந்துக் களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது என்று அதிர்ச்சியான செய்திகள் வந்துள்ளன.

இது கடந்த 11.09.2015 அன்று விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். ஏடு வெளியிட்ட தலையங்கமாகும்.

பொதுவாக அசத்தியத்தில் உள்ள வர்கள், தங்கள் அறியாமைக்குரிய ஒப்புதல் வாக்குமூலத்தை எந்த    ஒரு வெட்கமும் இல்லாமல் எல்லோருக்கும் மத்தியில் போட்டு உடைப்பார்கள்.

சிலை வணக்கத்தில் மூழ்கிக் கிடந்த தனது சமுதாயத்தை நோக்கி, இப்ராஹீம் (அலை) அவர்கள் சிந்திக்கத் தூண்டுகின்ற, சிக்கலான சீர்மிகு கேள்விகளைக் கேட்கிறார்கள். அம்மக்கள் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல், சிக்குண்டு, உண்மையை ஒப்புக் கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

இதைப் போன்று தான்  ஆர்.எஸ்.எஸ். அசத்தியவாதிகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றார்கள்.

நமக்குள் இப்படிச் சண்டை போடுவதால் தானே வேற்று மதத்தவர்கள் இதைப் பயன்படுத்தி நம்மவர்களை மதம் மாற்றி வருகிறார்கள்? இப்படித்தான் பல கிராமங்களில் நமது சகோதரர்கள் முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறிப் போனார்கள்.

இதில், "மதம் மாறி வருகின்றார்கள்' என்ற வாசகத்திற்குப் பதிலாக, "மதம் மாற்றி வருகின்றார்கள்' என்ற வாசகத்தை வேண்டுமென்றே பயன்படுத்தி உள்ளார்கள்.

உண்மையில் இந்த வார்த்தைப் பயன்பாடு கிறித்தவ அழைப்பாளர் களுக்கு வேண்டுமானால் பொருத்திப் போகும். முஸ்லிம்கள் யாரும் அப்படிச் செய்வதில்லை. முஸ்லிம்கள் அப்படிச் செய்திருந்தால் முஸ்லிம் மக்கள் தொகை இமயத்தைத் தொட்டிருக்கும்.

உண்மையில் தீண்டாமை என்ற கொடுமையின் வேதனையை அனுபவித்து, அதிலிருந்து மாற்றுப் பரிகாரமும் மருந்தும் தேடித் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகின்றார்கள்.

முகடு உடைந்து, ஓட்டை விழுந்து, உருக்குலைந்து போன, பழுதடைந்த வீட்டைத்தான் இவர்கள் மார்க்கமாகக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் என்பது ஓர் எஃகுக் கோட்டையாகும். இவர்கள் தங்களது பாழடைந்த வீட்டைச் சரி செய்வதற்குப் பதிலாக இஸ்லாம் எனும் கோட்டையை அடித்து உடைக்க நினைக்கின்றனர்.

ஒரு பக்கம், இஸ்லாம் எனும் வீட்டில் தலித்துகளை ஒண்டவும் அண்டவும் விட மறுக்கிறார்கள். மறுபக்கம், தங்கள் வீட்டிலும் அவர்களைத் தங்கவிட மறுக்கிறார்கள். சேஷ சமுத்திரம் சம்பவம் இந்த அவலத்தைத் தான் படம்பிடித்துக் காட்டுகின்றது.

மேற்கண்ட விஜயபாரதம் தலையங்கத்தில், தீண்டாமை ஒரு பாவம் என்றும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தீண்டாமையை இவர்கள் பாவம் என்று சொல்வது வெறும் உதட்டளவில் தான். உண்மையில், உள்ளத்தளவில் பாவம் என்று சொன்னால் காஞ்சி சங்கராச்சாரியார் கோயிலில் ஒரு தாழ்த்தப்பட்டவரை, பூணூல் போடாத ஒருவரை அர்ச்சகராக நியமித்திருக்க வேண்டும். அது கூட வேண்டாம். ஒரு குமாஸ்தாவையாவது நியமிக்கட்டும் பார்க்கலாம்.

இதை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அவர்களால் செய்யவும் முடியாது. காரணம், சாதிய, சனாதன வர்ணாசிரம தர்மத்தை, தீண்டாமையை காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள், "ஷேமகரமானது' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சேஷ சமுத்திரங்கள் ஷேமகரமானது என்று குறிப்பிடுகின்றார். அதனால் தான் தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தேர் ஓட்டுவதா? என்று தேரையே எரித்துவிட்டார்கள். தேரை மட்டுமல்ல, ஆளையும் எரிப்பதற்கு ஆயத்த மாவார்கள். நல்லவேளையாக அவ்வாறு நடக்கவில்லை.

இங்காவது தேரை மட்டும் எரித்தார்கள். கடந்த காலத்தில் கீழ்வெண்மணியில் ஊரையே எரித்தார்கள். அந்த அளவுக்கு சாதி வெறி அவர்களது தலையில் ஏறியுள்ளது.

கடவுளை வணங்கும் ஆலயத்தில், வழிபாடுகளில் அனைவரும் சமம் என்ற வழிபாட்டு சமத்துவம் மறுக்கப் படுகின்ற அநியாயத்தை சேஷ சமுத்திரம் எடுத்துக் காட்டுகின்றது.

இஸ்லாமிய மார்க்கமோ பள்ளி வாசலுக்குள் வந்து வழிபடுகின்ற மக்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வைக் களைந்தெறிந்து விடுகின்றது. இதற்கு ஒவ்வோர் ஊரிலும் உள்ள பள்ளிவாசல்கள் எடுத்துக்காட்டாகும். உலக அளவில் மக்காவில் உள்ள புனித கஅபா எனும் ஆலயம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அந்த ஆலயத்தைப் பற்றித் திருக்குர்ஆன் கூறுகின்றது:

மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 22:25

சவூதி மன்னர் முதல் உலகின் எங்கோ ஒரு கடைக்கோடியில் உள்ள ஒரு சாமானியன் வரை அந்த ஆலயத்திற்குள் சரிநிகர் சமமாகி விடுகின்றார். இந்த சமத்துவ உரிமை உலகில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு தீர்வாகவும் திருப்பமாகவும் அமைந்துவிட்டது.

சேஷ சமுத்திரம் மக்களுக்கு மட்டுமல்ல! இந்த உலகம் முழுவதிலும் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையான ஷேமம் வேண்டும் என்றால் அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்.

என்னதான் கணக்கெடுப்பை எடுத்துப் போட்டு, "முஸ்லிம்கள் வளர்ந்துவிட்டார்கள்' என்று பிரச்சாரம் செய்து, இந்துத்துவாவைச் சாராத உண்மை இந்து சமுதாய மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பி விட்டாலும் அது ஒருபோதும் எடுபடப் போவதில்லை. அப்படியே அது ஒருக்கால் எடுபட்டாலும் இந்தியாவை விட்டும் இஸ்லாம் ஒருபோதும் விடுபடப் போவதில்லை.

"பவுத்த மதத்திற்குச் செல்லுங்கள். காரணம் அது இந்து மதத்தின் ஒரு பகுதி தான். ஆனால் ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கத்திற்குப் போகாதீர்கள்' என்று இந்துத்வா சக்திகள் கூறுகின்றனர்.

எங்களுடைய ஓட்டை வீட்டிலிருந்து இன்னொரு ஓட்டை வீட்டிற்கு வேண்டுமானால் செல்லுங் கள். ஆனால் எஃகுக் கோட்டையான இஸ்லாத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று இவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள்.

நடிப்பு மன்னன் மோடி, பவுத்த மதத்தின் கோயிலுக்குச் சென்று அதைப் பணிந்து வணங்குவதும், பாராட்டுவதும் இந்த அடிப்படையில் தான்.

இவ்வாறாக, இஸ்லாமியக் கோட்டையை எப்படியாவது உடைத்து விடவேண்டும் என்று பெரும் முயற்சி செய்கின்றனர்.

"இந்துக்களின் சாதிகளுக்கும் பிரிவுகளுக்கும் அடிப்படைக் காரணம் முஸ்லிம்கள் தான். இந்து மதத்தைக் காக்கும் போராளிகள் கீழ்சாதி மக்கள் என்பதால் அவர்களை, இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்கள் தண்டித்து விட்டனர். முஸ்லிம்களின் ஆட்சியால் தான் இந்துக்களிடம் சாதிகளும் பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன'' என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவன் அசோக் சின்ஹால் ஒரு நிகழ்ச்சியின் போது அவிழ்த்து விடுகின்றான். செப்டம்பர் 14ஆம் தேதியன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவன் மோகன் பகவத் முன்னிலையில் தான் இவ்வாறு புளுகித் தள்ளியுள்ளான்.

சங்பரிவாரங்களின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்குக் காரணம் இந்துக்கள் என்ற பெயரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இஸ்லாத்திற்கும் முஸ்லிம் களுக்கும் எதிராகத் திருப்பி விடுவதற்காகத் தான்.

இந்தியா முழுவதையும் ஆட் கொள்கின்ற அபார ஆற்றல், சக்தி இஸ்லாம் தான். இதைப் புரிந்து கொண்ட சங்பரிவார்கள் இஸ்லாத்தை அழித்துவிட வேண்டும் என்று முழு மூச்சாகச் செயல்படுகின்றனர்.

முஸ்லிம்களின் வாழ்வாதாரமாக அமைந்த மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது, முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல், கலாச்சார ரீதியிலான தாக்குதல், இன்னபிற இஸ்லாமிய எதிர்ப்பு வேலைகள் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முடக்கிவிட முடியாது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் இதற்குப் பதில் சொல்லும் என்பதை இந்தத் தீய சக்திகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்கள் என்னதான் இஸ்லாத் திற்கு எதிராக எரிமலையாகக் குமுறினாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை.

அண்மையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவின் தலைவர் வீரேந்திர பகோரிய்யா என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளர் வித்யா பூவின் ரவாத் என்பவர் நடத்திய நேர்காணலில், "இஸ்லாத்தில் இணைவதன் மூலமாக எங்களுக்குரிய இடஒதுக்கீட்டு உரிமையை இழந்தாலும் அதை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதப்போவதில்லை' என்று முழங்கியிருக்கிறார்.

இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாகும். அந்த வளர்ச்சியை இவர்களால் தடுக்க முடியவில்லை என்பதற்கு இது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு!

EGATHUVAM OCT 2015