May 23, 2017

எழுச்சி கண்ட வீழ்ச்சி - 2

எழுச்சி கண்ட வீழ்ச்சி - 2

எம். எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்மேலப்பாளையம்

சமுதாயப் பணி

இரத்த தான முகாம், ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், கல்வி கருத்தரங்குகள், வட்டியில்லாக் கடன் உதவி, ஜகாத் நிதியிலிருந்து ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத் திற்காக அறவழிப் போராட்டங்கள் இது போன்ற எண்ணற்ற அரும் பணிகளை தழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எவ்வித சுயநலமுமின்றி செய்து வருகின்றது. இது போன்றுள்ள சமுதாயப் பணிகளில் ஒன்று தான் திருமணத்தை நடத்தி வைப்பதும் ஆகும்.

திருமணம் என்பது ஒர் ஆண், பெண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மாறாக இது ஒரு சமுதாயப் பிரச்சனை. ஆணோ பெண்ணோ வழி தவறாமல் இருப்பதற்கும் சமுதாயம் ஒழுக்கக்கேட்டில் செல்லாமல் இருப்பதற்கும் திருமணம் தான் வடிகாலாகும். இதை உரிய முறையில் நடத்தி வைக்கவில்லையென்றால் சமுதாயம் சீர்குலைந்து விடும்.

இரத்தத் துளிகளால் வளர்ந்த ஏகத்துவம், குஃப்ரில் உள்ள பெண்களைக் கரம் பிடிப்பதால் அழிந்துவிடக் கூடாது. இதற்குக் காதல் என்ற சீர்கேடே காரணம். குடும்பச் சூழல் மற்றும் வறுமையின் காரணமாக மணமுடிக்கப்படாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத்தை நடத்தி வைக்குமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணை யற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்கு வான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:32

தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே "நலம் நாடுவது' தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனு டைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 95

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தமது வாழ்க்கையிலும், தனது குடும்பத்தினர் திருமண விஷயத்திலும் ஏகத்துவத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி  முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.  இது போன்ற விஷயங்களில் மக்களுக்கு செயல் முறைகள் தான் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங் களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக நபியவர்களது வளர்ப்பு மகன் ஸைத் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பிறகு ஸைனப் (ரலி) அவர்களை நபியவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறான்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவி யரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33:37

அன்றைய அரபிகளிடத்தில் வளர்ப்பு மகனின் மனைவியைத் திருமணம் முடிப்பது கேவலமாகப் பார்க்கப்பட்டது. போலியான உறவுகளுக்கு இஸ்லாத்தில் எந்த உரிமைகளும் கிடையாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத் தான் அல்லாஹ் இத்திருமணத்தை நடத்தி வைத்தான்.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், நமது ஜமாஅத்தின் நிர்வாகிகள் திருமண விஷயத்தில் உறுதியாகச் செயல்பட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தான்.

எழுச்சியும் வீழ்ச்சியும்

1. பொதுவாக, ஒரு பெண்ணால் தன் பெற்றோரிடம் தனது திருமணத்தைப் பற்றி கருத்துச் சொல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்து வதற்காக பெற்றோரை எதிர்த்து ஒரு ஏகத்துவவாதியைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் கூறுவது ஏகத்துவம் ஏற்படுத்திய எழுச்சியாகும்.

ஆனால் இதற்கு மாற்றமாக எந்த ஒரு  விஷயத்திலும் பெற்றோர் பேச்சைக் கேட்காத ஆண்களோ திருமணப் பொறுப்பை மட்டும் தாய், தந்தையரிடம் ஒப்படைக்கத் துடிப்பது எதனால்? தனது பெற்றோர் தனக்கு அழகான, அந்தஸ்தான பெண்ணை மணமுடித்துத் தருவாள் என்பதற்காகத் தானே? இது தவ்ஹீத் கண்ட வீழ்ச்சியாகும்.

2. தனது மகளுக்கு முஷ்ரிக்கை மணமுடித்து வைத்தால் அவனுடன் அவள் தொடர்ந்து வாழமாட்டாள் என்பதை அவளது பெற்றோர்கள் புரிந்து கொள்ளுமளவிற்கு ஒரு பெண் போராடுகிறாள். இறுதியில் தனது பெற்றோர்கள் முஷ்ரிக்கைத் திருமணம் முடித்து வைப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த உடன் தவ்ஹீத் மாப்பிள்ளையைப் பார்த்து தருமாறு மூன்றாவது நபரிடம் ஒரு பெண் கேட்கின்றாளே! இது பெண்களிடத்தில் ஏற்பட்ட எழுச்சி.

ஆனால் ஆண்களோ, இணை வைப்பவர்களின் வீட்டில் பெண் எடுக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 1. வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. 2. தவ்ஹீதை எதிர்ப்பவர்களுக்கே, அவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் தவ்ஹீத் மாப்பிள்ளை.

அப்படியானால் ஏகத்துவவாதியைத் தவிர வேறு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் என்ற உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தவ்ஹீத் பெண்கள் யாரைத் திருமணம் முடிப்பது? என்ற கேள்விக்கு பதிலளியுங்கள். ஏகத்துவ வாதியைத் தான் மணமுடிப்போம் என்பவர்களைக் கை கழுவி விட்டு முஷ்ரிக் வீட்டில் கை நனைக்கின்றீர்கள்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட இந்தப் பெண்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் காதலித்ததற்காகத் தான் இந்த சத்தியப் போராட்டமே தவிர சில கழிசடைகளை நேசித்ததற்காக அல்ல!

ஒரு சமயம் அந்தப் பெண் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு சோதனையில் சோர்வடைந்து ஒரு முஷ்ரிக்கை மணமுடித்துவிட்டால் அந்தப் பாவத்தை சுமப்பது யார்?

அதிகமான இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். போராட்டங்களில் மிகைத்துக் காணப்படும் இளை ஞர்களில் பலரை மணமகன் போட்டோக்களில் காண முடிவதில்லை.

எனவே ஒவ்வொரு இளைஞனும் மணமுடித்தால் கொள்கைவாதிப் பெண்ணை தான் மணமுடிப்பேன் என்று இத்தருணத்தில் உறுதி மொழி எடுக்க வேண்டும்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றொருவருக்கு முன்னோடியாக முன்மாதிரியாகத் திகழ்வதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவோமாக!

"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், சந்ததிகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன்25:74

EGATHUVAM SEP 2015