May 23, 2017

சிலை வழிபாடு! சீரழிக்கும் வழிகேடு!

சிலை வழிபாடு! சீரழிக்கும் வழிகேடு!

உலகம் முழுவதிலும் இருந்து மக்காவை நோக்கி ஹஜ் செய்வதற்காக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற ஹஜ் காலம் இது!

இந்த ஹஜ் காலம், உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய, குறிப்பாக ஹஜ் செய்கின்ற முஸ்லிம்களுடைய மனக்கண் முன்னால் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

சிலை வணக்கத்திற்கு எதிராக அந்தச் சிந்தனைவாதி நடத்திய யுத்தம், அதற்காக அவர்கள் சந்தித்த தீக்குண்டம், அதற்காக அவர்கள் செய்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் போன்ற அவர்களின் தியாகங்கள் மனக்குதிரைகளில் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருக்கின்றன.

தனியோன் அல்லாஹ்வுக்காக தனித்துக் களம் கண்ட தன்னிகரற்ற போராளி அவர். அந்தப் போராளியிடம் தான் அல்லாஹ், தனது ஏகத்துவக் கொள்கையை நிலைநிறுத்துவதற்காக புனித கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்யச் சொல்கின்றான்.

மணல் திட்டாகக் காட்சியளித்த அவனது முதல் ஆலயத்தை மாபெரும் ஆலயமாக மாற்றி யமைத்தார்கள். இணை வைப்பை வீழ்த்தி, ஏகத்துவ ஆலயத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி நிர்மாணிக்கின்றார்கள். இந்த வசனம் இதை எடுத்துரைக்கின்றது.

இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழு மிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம்.

அல்குர்ஆன் 2:125

சிந்தனையைச் செயலிழக்கச் செய்து சீரழிக்கும் சிலை வணக்கத்திற்கு எதிராக இறுதி வரை போராடிய அவர்கள் பின்வரும் பிரார்த்தனை யையும் செய்கின்றார்கள்.

"இறைவா! இவ்வூரை அபயமளிப் பதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!'' என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! இறைவா! இவை (சிலைகள்) மனிதர்களில் அதிகமா னோரை வழிகெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறுசெய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 14:35, 36

ஏகத்துவவாதிகளாகிய நாம் இந்த துஆவைக் கேட்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

காரணம், சிலை மீதுள்ள பிரியம் மக்களின் கண்களை மறைக்கச் செய்துவிடுகின்றது. இதற்குக் கீழ்க்காணும் நிகழ்வு நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.

"உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்! வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டுவிடாதீர்கள்!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.  "அதிகமானோரை அவர்கள் வழி கெடுத்து விட்டனர். எனவே அநீதி இழைத்தோருக்கு வழி கேட்டைத் தவிர வேறு எதையும் அதிகமாக் காதே!" (என்றும் பிரார்த்தித்தார்.)

அல்குர்ஆன் 71:23, 24

இந்த வசனம் பனூ இஸ்ர வேலர்கள் சிலை மீது கொண்டிருந்த வெறியை எடுத்துரைக்கின்றது.

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' என்று கேட்டனர்.

"நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின் றீர்கள்'' என்று அவர் கூறினார். அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது. "அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்'' என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:138-140

ஃபிர்அவ்னை விட்டு மக்களைக் காப்பாற்றி, அவர்களைக் கடலில் நடக்கச் செய்த காரியம் ஒரு சாதாரண விஷயம் அல்ல. அலையடிக்கும் கடல் மலை போல் எழுந்து அவர்களைக் காத்து, கரை சேர்த்த ஈரம் கூடக் காய்ந்திருக்காது. அதற்குள்ளாக பனூ இஸ்ரவேலர்கள் சிலைகளைக் கண்ட மாத்திரத்தில் நிலை தடுமாறியதை இந்த வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம். "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்; மாறுசெய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது. "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 2:93

இது பனூ இஸ்ரவேலர்களின் சிலை வெறிக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

நபித்தோழர்கள் சிலை வணக் கத்தில் சிக்கவில்லை. ஆனால் நினைவுச் சின்னங்கள் பக்கம் அவர்களுடைய சிந்தனைகள் நீளவும் நீந்தவும் துவங்கியதற்குக் கீழ்க்காணும் சம்பவம் ஆதாரமாக அமைந்துள்ளது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத் அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத் அன்வாத்' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்! இவையெல்லாம் (அறியாமைக் கால) முன்னோர்களின் செயல் ஆகும்'' என்று சொல்லி, "என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், "மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்' என்று கேட்டார்கள், (7:138) இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாஹித்அல்லைசி(ரலி)

நூல் : திர்மிதீ 2180

இந்த ஹதீஸ், சின்னங்கள் நபித்தோழர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றார்கள். சிலைகள், சின்னங்கள் என்று வருகின்ற போது அவற்றில் கப்ரு வழிபாடுகளும் உள்ளடங்கி விடுகின்றது. இன்று சமாதி வழிபாட்டுக்காரர்கள், தர்ஹாக்களை எழுப்பியிருப்பதெல்லாம் நினைவுச் சின்னங்கள் என்ற அடிப்படையில் தான்.

இவற்றையெல்லாம் பின்னணி யாகக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிலைகளையும், சமாதி களையும் அடித்துத் தகர்க்கவும் தரைமட்டமாக்கவும் உத்தரவிட்டுச் சென்றார்கள்.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பி னார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1609

ஷைத்தானுக்கு வழிபாடுகள் கிடைக்கின்ற அத்தனை வாசல் களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடைத்து விட்டார்கள்.

எனவே, சீரழிவைத் தருகின்ற சிலைகள், நினைவுச் சின்னங்கள், தர்ஹாக்கள் போன்றவற்றின் பாதிப்புகளை விட்டு நாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் போன்று பிரார்த்தனை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்ராஹீம் அவர்களின் நினைவு அலைகளைப் பரவச் செய்கின்ற இந்த ஹஜ் கால மாதங்களில் அவர்களின் இந்தப் பிரார்த்தனையையும், இன்னும் திருக்குர்ஆன் கற்றுத் தருகின்ற அவர்கள் செய்த பல்வேறு பிரார்த்தனைகளையும் நாம் நினைவு கூர்வோம். அவர்கள் கற்றுத் தந்த வழியில் ஏகத்துவத்தை நிலைநாட்டுவோம்.

EGATHUVAM SEP 2015