May 24, 2017

சத்தியத்தை உலகறியச் செய்த கோவை விவாதம் - 1

சத்தியத்தை உலகறியச் செய்த கோவை விவாதம் - 1

தொடர் 1

கடந்த 19.07.2016 மற்றும் 20.07.2016 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பரலேவிகளுக்கும் மத்தியில் விவாதம் நடைபெற்றது.

திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்!என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் எம்.ஐ.சுலைமான், அப்துந்நாசர், அப்துல் கரீம், தாவூத் கைசர், எம்.எஸ்.சையது இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரலேவிகள் தரப்பில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி, முஸ்தபா மஸ்லஹி உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர். விவாதத்தை பரலேவி தரப்பினர் துவங்கினர்.

மூன்றாவது அமர்விலேயே முடிவுக்கு வந்த விவாதம்:

விவாதம் தொடங்கியவுடன், திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது இறைநிராகரிப்பு என்றும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நாம் முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைப் புறக்கணிப்பதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை ஏற்றவர்கள் யூத சிந்தனையுடையவர்கள் என்றும், யூதர்கள் தான் இதுபோல திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செய்திகளை மறுத்தார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை எதிர்த்தரப்பினர் வைத்தனர்.

அதற்குப் பதிலளித்த எம்.ஐ.சுலைமான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகளை நாங்கள் மறுக்கவில்லை. நபிகளார் சொன்னதாக வரும் செய்தியை நபிகளார் தான் சொன்னார்கள் என்று உறுதி செய்யப்பட்டால் அதை எங்கள் உயிரைக் கொடுத்தேனும் நடைமுறைப்படுத்துவோம். ஆனால் வலிமையான ஆதாரமாக உள்ள திருக்குர்ஆன் வசனத்திற்கு எதிராக ஓரிரு நபர்கள் அறிவிக்கக்கூடிய செய்திகள் முரண்படுமேயானால் அத்தகைய முரண்பட்ட, பொய்யான, ஆபாசமான, அறுவருக்கத்தக்க வகையில் அமைந்த செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவே இல்லை; அது அவர்களது பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ளது என்றுதான் நாங்கள் சொல்கின்றோம் என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய வகையில் இருக்கும் அந்தச் செய்திகளை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதை நாங்களாக எங்கள் சுயகருத்தாகச் சொல்லவில்லை; அல்லாஹ் தனது திருமறையில் அவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.

இந்த திருக்குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருக்குமேயானால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படியானால் அல்லாஹ் கூறிய இறைவசனங்களும், அவன் தனது தூதர் மூலம் சொன்ன செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்படாது. அப்படி முரண்பட்டால் அதை நபி சொல்லவில்லை என்பதுதான் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் அடிப்படையில் சரியான கொள்கையாகும் என்பதை தெளிவுபடுத்தினார்.

தவ்ஹீத் ஜமாஅத் ஏதோ இப்போது வந்து இந்தச் செய்தியை புதிதாகச் சொல்லவில்லை; மாறாக இந்த நடைமுறை ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட காலத்திலிருந்தே தெள்ளத்தெளிவான ஹதீஸ் கலையின் உசூலாக (சட்டமாக) வரையறுக்கப்பட்டுள்ளது. ஹதீஸ்களைத் தொகுத்த அறிஞர்கள் மற்றும் இமாம்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று விதிகளை வகுத்துள்ளார்கள்; இது புதிய மதமோ, புதிய கொள்கையோ அல்ல என்று கூறி அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வைத்தார்.

அவர் எடுத்து வைத்த அனைத்து ஆதாரங்களையும் கவனமாகக் கேட்ட பரலேவிகள் அடுத்த அமர்வில் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினர். நீங்கள் சொல்லிக்காட்டிய விதிகள் எல்லாம் ஹதீஸ்கலையில் இருப்பது எங்களுக்குத் தெரியும். இந்த விதியை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற இந்த விதியைத்தான் எங்களது மத்ரஸாக்களில் பாடமாக நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னார்களே பாருங்கள். அல்ஹம்துலில்லாஹ். மூன்றாவது அமர்விலேயே விவாதம் முடிவுக்கு வந்தது.

தவ்ஹீத் ஜமாஅத் கொண்டுள்ள சத்தியக் கொள்கையை இது புதிய கொள்கை, புதிய மதம், இத்தனை நூற்றாண்டுகளாக இந்தக் கொள்கையை உலகத்தில் யாரும் சொல்லவில்லை என்று வம்பு செய்தார்களோ, வாதம் செய்தார்களோ அந்த சுன்னத் ஜமாஅத்தினர், தாங்கள் வைத்த அந்த வாதம் பொய்யானது; போலியானது; தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக மக்களை உசுப்பேற்றுவதற்காகவும், கொம்பு சீவி விடுவதற்காகவும் தான் இத்தகைய பொய்யான அவதூறுகளை தங்களது சுயநலனுக்காக பரப்பி வந்திருக்கின்றார்கள் என்பதை அல்லாஹ் அவர்களது வாயிலிருந்தே வரவழைத்து நிரூபித்தான்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவர்கள் என்றும் யூதர்கள் என்றும் புதிய மதத்தினர் என்றும் எங்கள் மீது அவதூறுகளை நாங்கள் இல்லாத நேரத்தில், இல்லாத சபைகளில் எங்கள் மீது சொன்னீர்களே! உங்களது இமாம்களே இத்தகைய திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள் என்று தற்போது நாங்கள் உங்களுக்கு நேருக்கு நேர் அமர்ந்து சொல்லிக்காட்டும் போது ஆமாம் என ஒப்புக்கொண்டு விட்டீர்களே! அப்படியானால் உங்கள் இமாம்கள் எல்லாம் யூதக்கைக்கூலிகளா? நீங்கள் யூதர்களா? யூதக் கொள்கையைத் தான் உங்களது மத்ரஸாக்களில் பாடமாக நடத்துகின்றீர்களா? யூதக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்களை வளர்த்தெடுக்கின்றீர்களா?” என நாம் கேள்வி எழுப்ப மௌனமே பதிலாக இருந்தது. இதன் வாயிலாக இரண்டு நாட்கள் நடைபெற ஒப்பந்தம் போடப்பட்ட விவாதம் முதல் நாளின் மூன்றாவது அமர்விலேயே முடிவுக்கு வந்தது. அல்ஹம்துலில்லாஹ்

இந்த விவாதத்தில் கீழ்க்கண்ட வரிசையில் தவ்ஹீத் ஜமாஅத் வாதங்களை எடுத்து வைத்தது. அவைகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பரலேவி மதத்தினர் தங்களது கொள்கை தவறுதான் என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சரியானதுதான் என்றும் ஒப்புக் கொண்டது சத்தியத்தை உலகறியச் செய்வதற்காக இறைவன் நமக்கு அளித்த மகத்தான வெற்றி என்றால் அது மிகையல்ல.

முதலாவதாக, திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை மறுக்க வேண்டும் என்று நாம் சொல்லும் கொள்கை புதிய கொள்கை அல்ல; இது தான் ஆரம்ப காலம் தொட்டு உள்ள கொள்கை என்பதற்கு ஹதீஸ் கலை வல்லுனர்கள், இமாம்கள் கூறிய அடிப்படையான செய்திகள் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.

இரண்டாவதாக, திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது; அவைகளை மறுக்க வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் எந்தெந்த இமாம்களெல்லாம் என்ன காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள் என்ற பட்டியல் போடப்பட்டது.

நபிகளார் சொன்னதாக வரக்கூடிய செய்திகளை ஸஹாபாக்கள் இந்த விதியை அடிப்படையாகக் கொண்டு மறுத்துள்ளார்கள் என்பதை விளக்கி அதற்கான ஆதாரங்கள் பட்டியல் போடப்பட்டது.

திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை மறுக்க வேண்டும் என்ற கொள்கையை நாங்கள் சொல்வதால் எங்களை காஃபிர்கள்; யூதர்கள் என்று சொல்லும் நீங்கள் இதே விதியை தங்களது நூல்களில் சட்டமாக இயற்றி வைத்து, அந்த விதியின் அடிப்படையில் பல ஹதீஸ்களை மறுத்த மத்ஹபு இமாம்களையும், சஹாபாக்களையும், இன்னபிற பல இமாம்களையும் காஃபிர்கள் என்றும் யூதர்கள் என்றும் ஃபத்வா கொடுக்கத் தயாரா என்று நாம் கேள்வி எழுப்பியதும் ஆட்டம் கண்ட பரலேவி மதத்தினர் பல்வேறு போலியான பொய்யான புரட்டுவாதங்களை வைத்தனர்.

திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை மறுக்க வேண்டும் என்ற விதியை இமாம்கள் வகுத்துள்ளார்கள் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்கள் என்னென்ன? எந்தெந்த இமாம்கள் என்னென்னவெல்லாம் காரணம் கூறி ஹதீஸ்களை மறுத்தார்கள்? சஹாபாக்கள் மறுத்த ஹதீஸ்கள் என்னென்ன? அதற்கு சஹாபாக்கள் கூறிய காரணங்கள் என்ன?

நாம் அள்ளி வைத்த அடுக்கடுக்கான ஆதாரங்களுக்கு பரலேவிகளின் பதில் என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

EGATHUVAM AUG 2016