சத்தியத்தை மறைக்கும் சமுதாய ஆலிம்கள்!
சாட்சி சொன்ன ஷவ்வால் பிறை
மார்க்கம் சொல்வது ஒன்று! மவ்லவிகள் சொல்வதும் செய்வது வேறொன்று!
அவர்கள் பின்பற்றுவது மார்க்கமல்ல; மனோ இச்சை
தான்! மவ்லவிகளின் முழுநேரத் தொழிலே மார்க்கத்தை மறைப்பது தான். மக்களிடம் இந்த மார்க்க
வியாபாரிகளை அடையாளங்காட்டி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக
மவ்லவிகளின் இறுக்கமான பிடியிலிருந்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வருகின்றது.
மக்களும் மவ்லவிகளின் மவ்ட்டீகப் பிடியிலிருந்து படிப்படியாக விலகி வருகின்றார்கள்.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் ஜூலை 6 அன்று கொண்டாடப்பட்ட
நோன்புப் பெருநாளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் பிறையை நீங்கள் காணும்வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக்
கணித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த ஹதீஸின் அடிப்படையில் உறுதியாகச்
செயல்பட்டு வருகிறது. இந்த நிலைப்பாட்டிற்கு எதிராகப் பிறை பார்க்காமல், கணிப்பின் அடிப்படையில் இரு நாட்கள் முந்திக் கொண்டாடுகின்ற
கணிப்புக் கோஷ்டியினரையும், சர்வதேசப் பிறை என்ற பெயரில்
ஒரு நாளைக்கு முந்திப் பெருநாள் கொண்டாடுகின்ற சவூதிப் பிறை கோஷ்டியினரையும் தமிழ்நாடு
தவ்ஹீது ஜமாஅத் தயவு தாட்சண்யமின்றி விமர்சித்து வருவதையும், அவர்களை விவாதக் களத்திற்கு இன்று வரை அழைத்துக் கொண்டிருப்பதையும்
மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர்.
தவ்ஹீது ஜமாஅத்தும் சுன்னத் வல்ஜமாஅத்தும் ஏகத்துவக் கொள்கை
விஷயத்தில் இரு வேறு நேர் எதிர்க்கோடுகளில் பயணம் செய்கின்ற ஜமாஅத்துகள் என்றாலும்
அவ்விரு ஜமாஅத்துகளும் பிறை விஷயத்தில் ஒரே கோட்டில் தான் பயணிக்கின்றன என்பது அனைவரும்
அறிந்ததே!
தவ்ஹீது ஜமாஅத்தினர் யாரும் பிறை பார்க்காத சந்தர்ப்பத்தில், சுன்னத் வல் ஜமாஅத்தினர் தமிழகத்தில் எங்காவது பிறை பார்த்து
தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் உறுதி செய்து விட்டு அதை ஏற்றுக் கொள்வது
என்ற நிலைப்பாட்டில் தான் தவ்ஹீது ஜமாஅத் உள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாற்றமாக தலைமை காஜி
செயல்படுகின்றார். குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் 5 தவ்ஹீது
ஜமாஅத் சகோதரர்களும் இரண்டு சுன்னத் ஜமாஅத் சகோதரர்களும் பிறை பார்த்ததாக தகவல் தெரிவித்த
பின்பும் தலைமை காஜி ஏற்க மறுத்து விட்டார்.
குமரி மாவட்டம் சுன்னத் வல் ஜமாஅத்தினர் கேரளா, இலங்கைப் பிறைகளை ஏற்றுச் செயல்படுவார்கள். அதன்படி சுன்னத்
வல் ஜமாஅத்தினருக்கு அன்றைய தினம் 30 நோன்பு முழுமையாகி
விட்டது. அதனால் அவர்கள் பெருநாள் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அங்குள்ள தவ்ஹீது ஜமாஅத்தினர் எப்போதும் தமிழகத்தின் பிறை
அடிப்படையிலேயே செயல்படக்கூடியவர்கள். அவர்களுக்கு நோன்பு 29 தான் முடிந்துள்ளது. அதனால் அவர்கள் 29 முடிந்ததும் மார்க்க அடிப்படையில் பிறை பார்த்துள்ளனர். பிறை
தென்பட்டதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைக்கு முறையாகத் தெரிவித்தனர். பிறை பார்த்த இந்தச்
செய்தி தலைமை காஜியின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால் தலைமை காஜியும், ஜமாஅத்துல் உலமாவும் இதை மறுத்து நோன்பு தடை செய்யப்பட்ட (ஹராம்
ஆன) நாளில் மக்களை நோன்பு நோற்கச் செய்தனர்.
தமிழகத்திற்கு உட்பட்ட குமரி மாவட்டப் பிறையை ஏற்க மறுத்த இவர்கள்
கடந்த 2010ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறை கண்டதாகச் சொல்லி அரஃபா மற்றும்
ஹஜ் பெருநாளை அறிவித்தனர். இது தலைமை காஜி மற்றும் ஜமாஅத்துல் உலமா பிறை விஷயத்தில்
கொண்டிருக்கக் கூடிய இரட்டை நிலையாகும்.
வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஒரு சகோதரர் திருநெல்வேலி
மாவட்டம் தாழையூத்தில் பிறை பார்த்திருக்கின்றார். பார்த்தவர் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்
அல்லர். அவர் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர். தான் பார்த்த அந்தப் பிறையை மேலப்பாளையத்தில்
காஜா முகைதீன் பரேலவி ஆலிமிடத்தில் போய் சொன்னார். அவரோ மார்க்கத்தை மறைக்கின்ற ஒரு
முழு நேர வியாபாரி! அப்போது அந்த மார்க்க வியாபாரி அவரை நோக்கி, நீ பார்த்தால் உனக்குப் பெருநாள் என்று ஒரு புத்திசாலித்தனமான
(?) மார்க்கத் தீர்ப்பை அளித்து அவருடைய சாட்சியத்தை தனது மனோ இச்சைக்குக்
கட்டுப்பட்டு புறக்கணித்தார்.
ஏற்கனவே தெங்கம்புதூரில் பிறை பார்த்த எழுவருடன் இவரையும் சேர்த்தால்
தமிழகத்தில் பிறை பார்த்தவர்களின் எண்ணிக்கை எட்டாகி விடுகின்றது. குமரி மாவட்டத்தில்
ஏற்கனவே முப்பது நாட்களைப் பூர்த்தி செய்து விட்டார்கள். அதனால் அவர்களின் பிறையை ஏற்க
வேண்டிய அவசியமில்லை என்ற இவர்களின் அர்த்தமற்ற வாதத்தை இது அம்பலப்படுத்தி விடுகின்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறை தென்பட்டும் இவர்கள் அதை ஏற்க மறுத்தது பிறை விஷயத்தில்
இவர்கள் கொண்டிருக்கக்கூடிய இரண்டாவது முரண்பாடாகும். உண்மையில், இவர்கள் பின்பற்றுவது மார்க்கமல்ல; மனோ இச்சையைத் தான் என்பதை இது தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இங்கு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது.
குமரி மாவட்டம் சுன்னத் வல்ஜமாஅத்தினர் பிறை விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக
இருக்க மாட்டார்கள். திடீரென்று, ஒரு கட்டத்தில் கடல் மார்க்கத்தில்
அருகில் உள்ள இலங்கைப் பிறையை எடுத்துக் கொள்வார்கள். இன்னொரு கட்டத்தில் தரை மார்க்கத்தில்
அருகில் உள்ள கேரளா பிறையை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மார்க்கத்தில் உள்ளபடி பிறையைப்
பார்த்து முடிவெடுக்க மாட்டார்கள். இது பிறையைப் பற்றிய அவர்களது வாடிக்கையான, வேடிக்கையான நடவடிக்கையாகும்.
ஆனால் குமரி மாவட்ட தவ்ஹீது ஜமாஅத் கொள்கை அடிப்படையில் மனோ
இச்சைக்கு அப்பாற்பட்டு மார்க்கம் சொல்கின்ற நிலைப்பாட்டில், கோணல் மாணல் இல்லாத ஒரு நேர்கோட்டில் நிற்கின்ற ஜமாஅத்தாகும்.
அதனால் தான் அவர்கள் கேரளா, இலங்கை என்று ஒரு வரையறையின்றிச்
செல்லாமல் தமிழகம் என்ற வரையில் நின்று, தமிழகப் பிறை
அடிப்படையில் ரமளான் நோன்பை நோற்றனர். சுன்னத் வல் ஜமாத்தினருக்கு 30 ஆகியிருந்தும் ஒட்டு மொத்த தமிழகத்தைப் போன்று அங்குள்ள தவ்ஹீது
ஜமாஅத்தினருக்கு 29 முடிந்த நிலையில் தெங்கம்புதூரில்
பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்கள் பெருநாள் கொண்டாடினர். அவர்களது சாட்சியத்தை
ஏற்று தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் பிறையை அறிவித்தது.
ஆனால் ஜமாஅத்துல் உலமாவோ, குமரி
மாவட்டத்தின் பிறை சாட்சியத்தையும், தாழையூத்தில்
பார்த்த சாட்சியத்தையும் மனோ இச்சையின் அடிப்படையில் மறுத்தது. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்
சொன்னால் ஏற்க மாட்டோம் என்ற ஓரம்சக் கொள்கையை மட்டும் குறியீடாகக் கொண்டு அது செயல்பட்டது.
மார்க்க ஆலிம்கள் என்ற பெயரில் மார்க்கத்தை மறைக்கின்ற இந்த
ஏமாற்றுப் பேர்வழிகளை நோக்கித் தான் திருக்குர்ஆன் தனது சாட்டையை சுழற்றுகின்றது.
அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி
இழைத்தவன் யார்?
நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
அல்குர்ஆன் 2:140
ஷவ்வால் பிறை சாட்சியத்தை மனமுரண்டாகத் தான் இவர்கள் மறுத்தார்கள்
என்பதை சமுதாயம் தெளிவாக அடையாளம் கண்டது. இதற்கு ஷவ்வால் பிறை சரியான சாட்சியானது.
இந்த ஆலிம்கள் மார்க்கத்தின் பெயரால் பித்தலாட்டம் செய்பவர்கள் என்று காலங்காலமாக தவ்ஹீது
ஜமாஅத் சொன்ன உண்மையை நிதர்சனமாகத் தெரிந்து கொண்டனர். அதனால் பெருநாளில் இவர்கள் போட்ட
தடுப்புச் சுவர்களை தகர்த்தெறிந்து விட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் திடல்களில் வந்து கடலாய்
சங்கமித்தினர். முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்ற மேலப்பாளையம், கடையநல்லூர் போன்ற ஊர்களில் போக்குவரத்தே ஸ்தம்பிக்கின்ற அளவுக்கு
சாரை சாரையாக அணி வகுத்தனர். இன்னும் சொல்லப் போனால் ஜமாஅத்துல் உலமாவினர் தங்களின்
செயலால் கணிசமான சுன்னத் வல்ஜமாஅத்தினரை தவ்ஹீது கொள்கையின் பக்கம் திருப்பி விட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
ஒரு சில ஊர்களில் தெரியாமல் நோன்பு வைத்து விட்டோம் என்று திடலுக்கு
வந்து மக்கள் நோன்பு துறந்தனர். அவர்களுக்காக இரண்டாவது தடவையாகவும் பெருநாள் தொழுகை
நடத்தப்பட்டது. ஊருடன் ஒத்துப் போக வேண்டும் என்று நினைத்தவர்கள், அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராம் என்று தெரிந்து, உறுத்தலுக்கு உள்ளானதால் நோன்பைத் துறந்து விட்டு, மறுநாள் பெருநாள் கொண்டாடினர். அவர்களும் இந்த முல்லாக்கள் மார்க்கத்தின்
பெயரால் பூண்டிருக்கும் போலி வேடத்தை நன்றாகவே புரிந்து கொண்டனர். இவர்களின் முகத்திரையைக்
கிழிக்கின்ற வகையில் ஷவ்வால் முதல் பிறையை சாட்சியாக்கிய அந்த சாட்சியாளனும் ஆட்சியாளனுமான
அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
EGATHUVAM AUG 2016