May 24, 2017

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 2

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 2

தொடர்: 2

எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள்.

இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள்.

இறைத்தூதர் என்று ஒருவர் வாதிட்டால் அவர் கொண்டு வந்த செய்தி இறைவன் கூறுவது போல் அமைந்திருக்க வேண்டும். அப்படித் தான் அவர்கள் கொண்டு வந்த செய்திகள் அமைந்து உள்ளன. அவர்களுக்கு எந்த ஆதாயத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத வகையிலும் இறைவனை மட்டும் பெருமைப்படுத்தும் வகையிலும் தான் அந்தச் செய்திகள் அமைந்துள்ளன.

எந்தக் கொள்கையைச் சொன்னால் இவ்வுலகில் பதவியையும், பெருமையையும் பெறமுடியாதோ அந்தக் கொள்கையைத் தான் அவர்கள் சொன்னார்கள். படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான். உலகத்தை அழித்த பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து எல்லா மனிதர்களையும் அல்லாஹ் எழுப்புவான். அந்த வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் என்பதுதான் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் முன்வைத்த செய்தி.

அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான்; அவன் கண்கானிக்கிறான் என்று கருதியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். என்று சொன்னவர் மற்றவர்களை விட அதற்கேற்ப வாழ்ந்தாக வேண்டும். இது கடைப்பிடிக்க மிகவும் கஷ்டமானதாகும். நிஜமாகவே அல்லாஹ்வின் தூதராக இருந்தால் மட்டுமே தனக்கு கடுகளவும் உலக ஆதாயத்தைப் பெற உதவாத இந்தக் கொள்கையை அவர் முன்வைத்திருக்க முடியும்.

நியாயத்தீர்ப்பு நாள் குறித்து அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்தது போல் அந்த நாளை அதிகம் பயந்து தன் மேல் அளவு கடந்த சிரமங்களைச் சுமத்திக் கொண்டார்கள்.

நான் ஒரு சபைக்கு வரும் போது நீங்கள் அமர்ந்து இருந்தால் என்னைக் கண்டதும் எழக் கூடாது என்று அவர்கள் கூறியதும், என் காலில் யாரும் விழக் கூடாது என்று அவர்கள் எச்சரித்ததும், இயேசுவை கிறித்தவர்கள் எல்லை மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்புமீறி புகழாதீர்கள்; நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதருமே என்று மட்டும் சொல்லுங்கள்  எனச் சொன்னதும் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இறைத்தூதர் என்று கூறவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளன. மெய்யாக இறைத்தூதராக அவர்கள் இருந்ததால் தான் இப்படிக் கூற முடிந்தது.

என் அடக்கத்தலத்தில் விழா நடத்தாதீர்கள். என் அடக்கத்தலத்தை வழிபாட்டுத்தலமாக ஆக்காதீர்கள் என்றும் சொன்னார்கள்.

ஆன்மிகத்தைச் சொல்லி மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களின் பின்னே திரண்ட பின்பும் என்னிடம் கடவுளின் எந்த சக்தியும் இல்லை. நான் நினைத்ததை எல்லாம் கடவுள் செய்து தருவான் என்பதும் இல்லை. நானே தவறு செய்தால் என் இறைவனிடம் நான் தப்பிக்க முடியாது என்று சொன்னார்கள்.

மற்றவர்களிடமிருந்து தம்மைத் தனித்துக் காட்டும் வகையில் வித்தியாசமான தோற்றங்களில் மதகுருக்கள் சீன் போடுவது போல் அவர்கள் சீன் போட்டதில்லை. ஒரு சபையில் அவர்கள் இருக்கும் போது வெளியூர்வாசி ஒருவர் வந்தால் உங்களில் முஹம்மது யார்? என்று கேட்டு அறிந்து கொள்ளும் வகையில் தான் அவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து இருந்தார்கள்.

பின்னர் மக்களின் பேராதரவு பெற்று மாபெரும் சக்கரவர்த்தியாக ஆன போதும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.

இறைவனுக்கும், மறுமை வாழ்க்கைக்கும் அதிகம் அஞ்சி அவர்கள் நடத்திய வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை உறுதி செய்தது.

அவர்கள் இறைத்தூதர் என்று வாதிட்ட பின்னர் வாழ்ந்த வாழ்க்கையைக் கவனித்தால் இந்த மனிதர் வாதிடுவது போல் இவர் இறைவனின் தூதராகத் தான் இருக்க முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓர் ஆட்சியை நிறுவிய பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்குத் திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.

* இந்த நிலையிலும் அவர்கள் தமக்காகச் செல்வம் திரட்டவில்லை.

* அரண்மனையில் வசிக்கவில்லை.

* கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.

* அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிட்டதில்லை.

* ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வதற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.

* வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.

* தமது கவச ஆடையைச் சிறிதளவு கோதுமைக்காக அடைமானம் வைத்து அதை மீட்காமலே மரணித்தார்கள்.

* நானும், எனது குடும்பத்தினரும் பொது நிதியிலிருந்து எதையும் பெறுவது ஹராம் - இறைவனால் தடுக்கப்பட்டது - என்று பிரகடனம் செய்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.

* ஒரு நிலப்பரப்பு, ஒரு குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்; தமது குடும்பத்தினர் அவற்றுக்கு வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

அதிக அதிகாரம் படைத்த மன்னர்கள் எப்படி ஆணவமாகவும் செருக்கொடும், சுக போகங்களில் திளைத்தும் நடப்பார்களோ அதில் கோடியில் ஒரு பங்கு கூட அவர்கள் நடக்கவில்லை. தன்னைத் தூதராக அனுப்பிய அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சியதால் தான் அவர்களால் இப்படி நடக்க முடிந்தது. இதுவும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை உறுதி செய்கிறது.

நாற்பது வயது வரை வெற்றிகரமான வியாபாரியாக இருந்து, அதன் மூலம் ஊரில் பெரிய செல்வந்தர் என்ற நிலையை அடைந்தவர் அதை மேலும் பெருக்கவே ஆசைப்படுவார். அல்லது இருக்கின்ற செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே போராடுவார். செல்வத்தை அனுபவித்தவர்கள் அவ்வளவு எளிதாக அதை விட்டுக் கீழே இறங்க மாட்டார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் இக்கொள்கையைச் சொன்னதற்காக சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத்தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.

அந்தச் சமுதாயம் இதைத்தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்ததற்கு அவர்கள் இறைத்தூதர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

அனைவருக்கும் சமநீதி, கொள்கை உறுதி, உலகே திரண்டு எதிர்த்த போதும் கொண்ட கொள்கையில் எள் முனையளவும் வளைந்து கொடுக்காத நெஞ்சுரம், பிறமத மக்களையும் மனிதர்களாக மதித்த மாண்பு, உயர் குலத்தில் பிறந்திருந்தும் குலத்தால் பெருமை இல்லை என்று அடித்துச் சொல்லி செயல்படுத்திக் காட்டியது, மன்னராக இருந்தும் தாமே தளபதியாகக் களத்தில் இறங்கிப் போராடிய வீரம் ஆகிய நற்பண்புகளின் சிகரமாக அவர்கள் திகழ்ந்தார்கள். வரலாற்றில் இவற்றில் ஒன்றிரண்டு பண்புகள் சிலருக்கு இருக்கலாம். அனைத்தும் ஒரு சேர முஹம்மது நபியிடம் அமைந்திருந்தது இறைவனின் தூதர் என்பதால் தான்.

தலைவர்களாகக் கருதப்படுவோர் ஏதோ சில துறைகளில் சில வழிகாட்டுதலை வழங்குவார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வழிகாட்டுகிறேன் எனக் கூறி அவ்வாறு வழிகாட்டிய ஒரு தலைவரையும் உலகில் காண முடியாது. ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இதிலும் விதிவிலக்காகத் திகழ்ந்தார்கள்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி அரசியல், பொருளாதாரம், குடும்பவியல், சிவில் கிரிமினல் சட்டங்கள், உண்ணுதல், பருகுதல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வு வழங்கினார்கள். அந்தத் தீர்வுகளும் இன்றும் பொருந்தக் கூடியவையாக உள்ளன.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM JUL 2016