May 24, 2017

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 1

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 1

தொடர்: 2

முஹம்மது நபி அகிலத்திற்கு முன்மாதிரி

இஸ்லாம் மார்க்கம் முக்கியமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற கொள்கையாகும். மற்றொன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் என்ற கொள்கையாகும். இவ்விரு கொள்கைகளையும் உள்ளத்தால் ஏற்று, வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் சேர முடியும்.

இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். அரைகுறையாகவே நம்புகின்றனர்.

இவ்விரு கொள்கைகளையும் அதன் முழுப்பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் கடமையை உணர்ந்து, லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் முதல் கொள்கையை மக்களுக்கு முழுமையாக விளக்கிட ஷிர்க் ஒழிப்பு  மாநாட்டை நடத்தினோம்.

ஷிர்க் என்றால் என்ன என்பதையும், எவையெல்லாம் ஷிர்க்கில் அடங்கும் என்பதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் ஆறுமாத காலம் மக்கள் மத்தியில் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதன் மூலம் அதிகமான மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினான்.

அடுத்த கட்டமாக, “முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற கொள்கையை அதன் முழுப்பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுத்துள்ளது.

முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதர் என்று குருட்டுத்தனமாக முஸ்லிம்கள் நம்புவதில்லை; அப்படி நம்பவும் கூடாது. பல வகையிலும் ஆய்வு செய்து அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை விளங்கியே நம்புகின்றனர்.

தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வாதிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்குத் தக்க சான்றுகளை முன்வைத்தே வாதிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் திருக்குர்ஆன் என்ற செய்தியை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அந்தக் குர்ஆனை நீங்கள் ஆய்வு செய்தால் அது மனிதனின் கூற்றாக இருக்க முடியாது என்பதையும், அல்லாஹ்விடமிருந்து தான் வந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்றால் அதைக் கொண்டு வந்த நான் அல்லாஹ்வின் தூதரே என்பது அவர்கள் எடுத்து வைத்த முதல் சான்றாகும்.

எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இதுபோல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று திருக்குர்ஆன் 2:23, 10:38, 11:13, 17:88, 52:34 ஆகிய வசனங்கள் அறைகூவல் விடுக்கின்றன.

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர்கொள்ள முடியாது எனவும் 2:23 வசனத்தில் திருக்குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கின்றது.

முஹம்மது நபியின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதைவிடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறைவேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த முஹம்மது நபி எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆனைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது. எந்தத் துறையைப் பற்றிப் பேசினாலும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் பேசுவது போல் அது அமையவில்லை. மாறாக இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களைத் திருக்குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒருசேரச் சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதில் கீழ்க்காணும் எட்டு அமசங்கள் அடங்கியுள்ளன.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதற்கு ஏற்ற வகையில் அமைந்த அவர்களின் தூய வாழ்க்கை.
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்குக் கடவுள் தன்மை இல்லை.
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் மார்க்கம் தொடர்பாகக் காட்டிய வழிகாட்டுதல் அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்தல்ல; அல்லாஹ்விடமிருந்து வந்தவையே!
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் காட்டாமல் அவர்களுக்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடாகும்.
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களின் வழிகாட்டுதல் திருக்குர்ஆனுக்கு அடுத்து ஏற்று நடக்கத்தக்கதாகும்
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் வழியாக  மட்டுமே இறைச்செய்தி நமக்குக் கிடைத்தது. அவர்களைத் தவிர யாராக இருந்தாலும், நபிதோழர்களாக இருந்தாலும் மாபெரும் இமாம்களானாலும், தவசீலர்களாக இருந்தாலும் வஹீ எனும் இறைச் செய்தி வராது. அவர்கள் கூறுவது மார்க்க ஆதாரம் அல்ல.
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் திருக்குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு செய்தியையும் சொல்ல  மாட்டார்கள். அப்படி அவர்கள் பெய்ரால் சொல்லப்படும் செய்திகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் இறைத்தூதர் என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கூறிய சொந்தக் கருத்துக்கள் மார்க்கமாகாது
இவற்றை மக்கள் மத்தியில் தக்க சான்றுகளுடன் விளக்கி, அகில உலகுக்கும் முன்மாதிரியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதுதான் இதன் நோக்கமாகும்.

துண்டுப்பிரசுரங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், சுவரொட்டிகள், பேனர்கள், உள்ளரங்கு நிகழ்ச்சிகள், தனி நபர்களைத் தேடிச் சென்று தெளிவுபடுத்துதல் எனப் பல வழிகளில் இந்த எட்டு அம்சங்களையும் மக்களுக்கு விளக்குவதே இதன் நோக்கமாகும்.

இம்மையிலும், மறுமையிலும் வெற்றியைப் பெற்றுத் தந்து மக்களை நேர்வழியில் அழைக்கும் இப்பணியில் நீங்களும் பங்கெடுத்து, உங்களால் இயன்றவரை ஒத்துழைத்து மறுமையில் இதற்கான பயனைப் பெற்றுக் கொள்ள அழைக்கிறோம்.


இதன் முடிவில்  நடக்கவுள்ள மண்டல அளவிலான மாநாட்டிலும் பங்கு பெற்று, மற்றவர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

EGATHUVAM JUN 2016