May 24, 2017

பள்ளிவாசலின் சிறப்புகள் - 2

பள்ளிவாசலின் சிறப்புகள் - 2
எம். முஹம்மது சலீம்எம்.ஐ.எஸ்.சி மங்கலம்


பள்ளிவாசலைக் கட்டுவதின் சிறப்பு

இம்மை வாழ்க்கை நிரந்தரமற்றது, அற்பமானது என்பதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இங்கு வாழும் போது சொந்தமாக ஒரு வீடாவது இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். அதிகமான மக்கள் தங்களது இந்த ஆசையை, கனவை நிறைவேற்றிக் கொள்ள அயராது பாடுபடுகிறார்கள்; தினந்தோறும் மெனக்கெட்டு சிரமப்படுகிறார்கள். இருப்பினும், பலருடைய வாழ்நாளில் இது வெறும் பகல் கனவாகவே இருகிறது. எட்டாக் கனியாகவே இருந்து விடுகிறது.

இப்படியிருக்க, நிரந்தரமான மறுமை வாழ்வின் போது சொர்க்கத்திலே வீட்டைப் பெறும் பாக்கியம் என்பது சாதாரணமானதா? இந்தப் பொன்னான பாக்கியத்தை, அரிய வாய்ப்பினை இங்கு பள்ளிவாசல் கட்டுவது மூலமாக அல்லாஹ் நமக்குத் தருகிறான்.

உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்' என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (926)

நிரந்தரமான மறுமை வாழ்விலே சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவிற்கு இடம் கிடைப்பதென்பது வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்தையும் விட சிறந்தது. இத்தைகைய உயரிய சொர்க்கத்திலே வீட்டைச் சொந்தமாக்கும் அற்புதமான வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அல்லாஹ்வின் ஆலயத்தை அமைப்பதற்காகப் பொருளாதாரம் கொடுப்பவர்கள், திரட்டுபவர்கள் மற்றும் அதற்காக உழைப்பவர்களுக்கு படைத்தவனின் தரமான பரிசு தயாராக இருக்கிறது.

நமக்காக வீடு கட்டும் போது இடமோ, பொருளோ, பணமோ வீண்விரையம் ஆகிவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து கவனத்தோடு கட்டுவோம். இதே அக்கறையும் ஆர்வமும் பள்ளிவாசல் அமைக்கும் போதும் நமக்கு இருக்க வேண்டும். எவ்வகையிலும் அதன் பணிகளில் கவனக்குறைவாக இல்லாமல் நல்ல முறையில் கட்டி எழுப்ப வேண்டும்.

பள்ளிவாசல் கட்டுவதன் நோக்கம்

பள்ளிவாசலைக் கட்டுவதன் அடிப்படை நோக்கமே ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவன் தனது தூதர் வாயிலாக வழிகாட்டிய வணக்க வழிபாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

(திருக்குர்ஆன் 72:18)

ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் "நிறுத்து! நிறுத்து!' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து "இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்'' என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (480)

அல்லாஹ் அருளிய வணக்கங்களை அவனுக்காக அவனிடம் நன்மை பெறுவதற்காகச் செய்வதற்குரிய இடமே பள்ளிவாசல்கள். இத்துடன், சமுதாயம் சார்ந்த நற்பணிகளைச் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. இதுகுறித்து வேறொரு இடத்தில் காண்போம்.

இதைவிடுத்து, இதற்கு நேர்மாற்றமான திசையில் இன்று பல பள்ளிவாசல்கள் இயங்கிக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. இறந்துபோன மனிதர்களிடம் உதவி தேடுவது உள்ளிட்ட எங்கும் எப்போதும் செய்யக் கூடாத, கேடுகெட்ட இணைவைப்பான காரியங்களை, அதுவும் படைத்தவனின் ஆலயத்திற்குள் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். மவ்லூது, இருட்டு திக்ர் என்று மார்க்கத்தின் அங்கீகாரமற்ற பித்அத்தான செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பள்ளிவாசலின் தகுதியை இழக்கச் செய்யும் காரியங்கள் பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.


EGATHUVAM AUG 2016