May 24, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 27 -பித்அத்துகளின் ஊற்றுக்கண் இஹ்யா

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 27 -பித்அத்துகளின் ஊற்றுக்கண் இஹ்யா

தொடர்: 27

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இதுவரை இஹ்யாவில் நீங்கள் பார்த்த பலவீனமான ஹதீஸ்கள் கடலிலிருந்து ஒரு துளியளவு தான். இஹ்யாவுக்குள் படித்து ஆய்வு செய்யும் நோக்கில்  அதில் இடம்பெற்றிருக்கின்ற பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட, எந்த ஓர் அடிப்படையும் இல்லாத ஹதீஸ்களைத் துல்லியமாகக் கணக்கெடுக்கவும் விரும்பி ஒருவர் களமிறங்கினால் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹதீஸ்களைக் காண நேரிடுவார். அந்த அளவுக்கு அப்படிப்பட்ட ஹதீஸ்கள் இஹ்யாவுக்குள் குவிந்து கிடக்கின்றன. அறிவுரைகள், அறவுரைகள், உள்ளங்களை நெகிழச் செய்கின்ற நெஞ்சுருக வைக்கின்ற சம்பவங்கள் போன்றவற்றை மேடைப் பேச்சாளர்கள் அடுக்கடுக்காக அள்ளி வீசுகின்ற பெரும்பான்மையான போலி ஹதீஸ்களுக்கு ஊற்றுக் கண்ணாக இருப்பது  இந்த இஹ்யா என்ற உருப்படாத நூல் தான்.

இவ்வாறு நாம் கூறினால் அது மிகைப்படுத்திக் கூறியதாக ஆகாது.  இந்தப் பொய்யான ஹதீஸ்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்படுத்தவிருக்கின்ற விபரீதத்தைப் புரிந்தவர்களால் மட்டும் தான் இதன் அபாயத்தைப் பற்றி மதிப்பீடு செய்ய முடியும். மற்றவர்களால் இதனை மதிப்பீடு செய்ய முடியாது.  நபி (ஸல்) அவர்கள் மீது இப்படி பலவீனமான ஹதீஸ்களை அடித்து விடுவது நியாயமாகுமாஇதற்கு கஸ்ஸாலியின் காதல் பக்தர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்?

கஸ்ஸாலியின் மீது பைத்தியம் பிடித்தவர்களைப் பற்றி இங்கு நாம் பேச வேண்டியதில்லை. காரணம் முந்தைய நூற்றாண்டுகளில் பொய்யான ஹதீஸ்களை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவ விடுவதின் மூலம் இஸ்லாத்திற்கு எதிராகத் தீட்டப்பட்ட தீய சதித் திட்டத்தைப் பற்றி இந்த ஆசாமிகளுக்குத் தெரியாது. தங்களது நல்ல அல்லது கெட்ட எண்ணத்தின் மூலம் சமுதாயத்தில் இந்தப் பொய்யான ஹதீஸ்களை பதிய வைப்பதின் மூலம் அந்த சதித் திட்டத்திற்கு இவர்கள் துணை போகின்றார்கள் என்ற விபரத்தை இவர்கள் உணரவும் மாட்டார்கள்.

இஹ்யாவில் இடம் பெற்றிருக்கின்ற போலியான, பொய்யான ஹதீஸ்களைப் படித்து ஆய்வு செய்பவர் இவை முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய பாதிப்புகளையும் பெரும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று நன்கு தெளிவாகப் புரிந்ததால் தான் முராபிதீன்கள் - மொரோக்கோவில் இஸ்லாமிய ஆட்சியை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடத்திய அமைப்பினர் இஹ்யாவை எரிப்பதைத் தங்கள் சமூகக் கடமையாகக் கொண்டு அதை ஏன் எரித்து சாம்பலாக்கினார்கள்   என்ற உண்மையை தெளிவாகப்  புரிந்து கொள்வார். அவர்கள் செய்த சமுதாயப் புரட்சிக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

இஹ்யா என்ற நூல் மக்களை விட்டும் அந்நியப் படுத்தப்பட வேண்டும் அப்புறப் படுத்தப்பட வேண்டும் என்பதற்கு  இம்மாபெரிய அளவில் பலவீனமான, பொய்யான, போலியான ஹதீஸ்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன என்பதே போதுமான சான்றாகும். இது இஹ்யாவின் முதல் தீய அடிப்படையாகும்.

பித்அத்துகள்

அடுத்து, பித்அத்கள் அதில் இடம் பெற்றிருக்கின்ற இரண்டாவது தீய அடிப்படையாகும். முதன் முதலில்  சூஃபிய்யாக்களிடம் பரவி விரவிக் கிடக்கின்ற பல பித்அத்துகளுக்கு ஆணிவேராக இருப்பது இந்த இஹ்யா தான். அடுத்து, இரண்டாவதாக பித்அத்துக்காரர்களிடம் பல்வேறு பரிமாணங்களில் தலைவிரித்தாடுகின்ற பித்அத்துகளுக்கு அஸ்திவாரமாக இருப்பதும் இந்த இஹ்யா தான்!  மொத்தத்தில் இஸ்லாமிய உலகில் பேயாட்டம் போடுகின்ற ஒட்டுமொத்த பித்அத்துகளுக்கும் ஊற்றுக்கண் இந்த இஹ்யா தான் என்றால் அது மிகையல்ல!

இஹ்யாஉ உலூமித்தீன் முதல் பாகத்தில்கிதாபுத் தர்த்தீபுல் அவ்ராத், வ தஃப்சீலு இஹ்யாயில் லைல் (வழமையாக ஓதுகின்ற துஆக்களை வரிசைப்படுத்தல், இரவுகளை உயிர்ப்பித்தல் என்ற அத்தியாயத்தில், இரவில் நின்று தொழுவதற்கு எளிமையாக்கப் படுவதற்குரிய காரணங்கள் என்ற பாடத்தில்)  சிறப்புக்குரிய இரவு பகல்களின் விளக்கம் என்ற தலைப்பில் கீழ் கஸ்ஸாலி கூறுவதாவது:

சில இரவுகளுக்கு தனிச் சிறப்புகள் உள்ளன. அந்த இரவுகளில் நின்று வணங்குவது அதிகமான  சிறப்பு என்று நபி வழியில் உறுதியாகி உள்ளது. அவை 15 இரவுகளாகும்.  நன்மையை நாடுகின்ற நல்லடியார் அந்த இரவுகளில் வணக்கம் புரிவதை விட்டும் அலட்சியம் கொள்ளலாகாது. ஏனென்றால் அவை நன்மைகளை விளைவிக்கின்ற வியாபாரம் அதிகமாகவும் அபரிமிதமாகவும் நடக்கின்ற பருவ காலங்களாகும்.  சீசன் (பருவக்கால) வியாபாரத்தைத் தவற விடுபவர் லாபம் ஈட்டமாட்டார்.   அது போல் சிறப்பான  நேரங்களில் கிடைக்கின்ற நன்மையை நாடுகின்ற நல்லடியார் கண்டு கொள்ளாமல் இருந்தால் அவர் லாபம் ஈட்ட மாட்டார்.

சிறப்பான 15 இரவுகளில் 6 இரவுகள் ரமளான் மாதத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றில் 5 இரவுகள் பிந்திய 10 ல் ஒற்றைப் படை இரவுகளில் உள்ளன. காரணம் இந்த இரவுகளில் தான் லைலத்துல் கத்ர் அடங்கியுள்ளது. அதனால் அவற்றில் அந்த இரவைத் தேடுவது அவசியமாகும். அடுத்து ரமளான் மாதத்தில் அமைந்திருக்கின்ற 17வது இரவாகும். அந்நாள் இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாள் மற்றும் சத்தியவாதிகளையும் அசத்திய வாதிகளையும் வேறுபடுத்திக் காட்டிய நாளாகும்.  அந்த நாளில் தான் பத்ர் போர் நடந்தது.  இப்னு சுபைர் (ரஹ்)  பத்ர் போர் நடந்த அந்த இரவு லைலத்துல் கத்ர் என்று குறிப்பிடுகின்றார்.

மீதமுள்ள 9 இரவுகள், 1) முஹர்ரம் மாதத்தின் முதல் இரவு  2) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) இரவு 3) ரஜப் மாதத்தின் முதல் இரவு 4)  அம்மாதத்தின் 15 ஆம் இரவு 5) அதே மாதத்தின் 27 ஆம் இரவு. அது தான் மிஃராஜ் இரவாகும். அந்த  இரவில் தொழுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

فقد قال صلى الله عليه وسلم للعامل في هذه الليلة حسنات مائة سنة، فمن صلى في هذه الليلة اثنتي عشر ركعة يقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة من القرآن، ويتشهد في كل ركعتين، ويسلم في آخرهن ثم يقول: "سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، مائة مرة، ثم يستغفر الله مائة مرة ويصلي على النبي صلى الله عليه وسلم مائة مرة، ويدعو لنفسه بما شاء من أمر دنياه وآخرته، ويصبح صائما، فإن الله يستجيب دعاءه كله إلا أن يدعو في معصية

இந்த இரவில் அமல் செய்யக்கூடியவருக்கு நூறு வருட நன்மைகள் கிடைக்கும்.

இவ்விரவில் பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொழ வேண்டும் ஒவ்வொரு ரக்கஅத்திலும் குர்ஆனிலிருந்து ஃபாதிஹா அத்தியாயத்தையும், வேறொரு அத்தியாயத்தையும் ஓதி, ஒவ்வொரு இரண்டு ரக்கஅத்துக்களுக்கிடையிலும் ஓர் (அத்தஹிய்யாத்) அமர்வு அமர்ந்து, இறுதி (அத்தஹிய்யாத்)  அமர்வில் அமர்ந்து  இவ்வாறாக   பன்னிரண்டாவது ரக்கஅத்தில் சலாம் கொடுக்க வேண்டும்.

பிறகு சுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்ல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று நூறு தடவை சொல்ல வேண்டும். பிறகு நூறு தடவை இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும். பிறகு நூறு தடவை நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும்.  பிறகு தனக்காக இம்மை, மறுமை தொடர்பான விஷயங்களில் தான் விரும்பியதைக் கேட்டு துஆச் செய்ய வேண்டும். பிறகு அன்று பகலில் நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு யார் செய்கின்றாரோ  அவர் செய்த அனைத்துப் பிரார்த்தனையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். பாவமான விஷயத்தில் அவர் பிரார்த்தனை செய்தாலே தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

وليلة النصف من شعبان- ففيها مائة ركعة يقرأ في كل ركعة بعد الفاتحة سورة الإخلاص عشرة مرات

ஷஃபான் பிறை 15 ஆம் இரவில் நூறு ரக்கஅத்துக்கள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்கஅத்திலும் ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு குல்ஹுவல்லாஹு என்று துவங்குகின்ற இக்லாஸ் அத்தியாயத்தை பத்து தடவைகள் ஓத வேண்டும்.

உபரியான தொழுகை, அரஃபா இரவு, இரு பெரு நாட்கள் இரவுகள் என்ற பாடத்தில் நாம் குறிப்பிட்டது போன்று  இந்த தொழுகைகளை அவர்கள் (முன்னோர்கள்) விட்டதே இல்லை.

قال صلى الله عليه وسلم : "من أحيا ليلتي العيدين، لم يمت قلبه يوم تموت القلوب"

யார் இரு பெருநாட்கள் இரவுகளை உயிர்ப்பிக்கின்றாரோ அவரது உள்ளம் உள்ளங்கள் மரணிக்கின்ற நாளில் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் சில சிறப்புக்குரிய நாட்கள் உள்ளன. அவை 19 நாட்களாகும். அந்நாட்களில் சில திக்ருகளைத் தொடர்வது  விரும்பத்தக்கதாகும். அவை:

அரஃபா நாள்.  2)ஆஷூரா நாள்.  3) ரஜப் 27 ஆம் நாள்.

இதற்கு மாபெரும் சிறப்பு இருக்கின்றது

روى أبو هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: "من صام يوم سبع وعشرين من رجب كتب الله له صيام ستين شهرا" )وهو اليوم الذي أهبط الله فيه جبرائيل عليه السلام على محمد صلى الله عليه وسلم بالرسالة(

ரஜப் 27ஆம் அன்று யார் நோன்பு நோற்கின்றாரோ  அவருக்கு அல்லாஹ் அறுபது மாதங்கள் நோன்பு நோற்ற நன்மைகளை பதிவு செய்கின்றான்.

அந்த நாளில் தான் அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை தூதுச் செய்தியைக் கொண்டு (பூமிக்கு) முஹம்மது (ஸல்) அவர்களிடம் இறக்கி வைத்தான் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

4) ரமளான் 17வது நாள் அந்நாளில் தான் பத்ர் போர் நடந்தது. 5) ஷஃபான் மாதம் 15ஆம் நாள். 6) வெள்ளிக் கிழமை. 7) இரு பெருநாட்கள். 8) துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள். 9) அய்யாமுத் தஷ்ரீக் என்று 11,12,13 ஆகிய நாட்கள்.

وقد روى أنس عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: "إذا سلم يوم الجمعة سلمت الأيام، وإذا سلم شهر رمضان سلمت السنة"

ஜும்ஆ நாள்  பாதுகாப்பாகி விட்டால் மற்ற நாட்களும் பாதுகாப்படைந்து விடும். ரமளான் மாதம் பாதுகாப்பு அடைந்து விட்டால்  அந்த  வருடம் பாதுகாப்படைந்து விடும் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

உலகத்தின் ஐந்து நாட்களில் எவர்  (வணங்காமல்) இன்பம் அனுபவிக்கின்றாரோ அவர் மறுமையில் இன்ப பானத்தை அனுபவிக்க மாட்டார் என்று ஓர் அறிஞர் கூறினார். இதன் மூலம் அவர் இரண்டு பெருநாட்கள், ஜும்ஆ, அரஃபா, ஆஷூரா ஆகிய நாட்களையே குறிப்பிடுகின்றார்.  வார நாட்களில் சிறந்த நாட்கள் வியாழக்கிழமையும்  திங்கட்கிழமையுமாகும். இவ்விரு நாட்களில் அல்லாஹ்விடம் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. நாம் நோன்பு பாடத்தில் நோன்பு நோற்பதற்குரிய மாதங்கள், நாட்களுடைய சிறப்புகளை கூறிவிட்டோம். அதை மீண்டும் இங்கு திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். உலகத்தார் அனைவரை விடவும் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு அடியார் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக!

இவை தான் இஹ்யாவில் கஸ்ஸாலி குறிப்பிடும் செய்திகளாகும்.

இப்போது இஹ்யாவின் அடிக்குறிப்பில் இடம் பெற்றிருக்கின்ற இந்த ஹதீஸ்களின் தரங்களைப் பார்ப்போம்:

1) பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொடர்பான இந்த ஹதீஸை இமாம் பைஹகீ தனது ஷுஃபில் ஈமானில் பதிவு செய்து விட்டு அதை பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிடுகின்றார். காரணம் இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அறிவித்ததாக அபான் வழியாக முஹம்மது பின் அல்ஃப்ள்ல் மூலம் அறிவிக்கப்படுகின்றது. இவ்விருவருமே பலவீனமானவர்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தப்யீனுல் அஜப் ஃபீ பயானி இப்தாலி மா வரத ஃபீ ரஜப் (ரஜப் மாதம் தொடர்பாக வந்திருக்கின்ற பொய்யான ஹதீஸ்களை முறியடிப்பது குறித்துள்ள ஆச்சரியத்தை விவரித்தல்) என்ற நூலில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் இருள் நிறைந்தது என்று குறிப்பிடுகின்றார்கள்.  (பைஹகீ கூறிய அதே விமர்சனத்தை ஹாபிழ் இராக்கி அவர்களும் தனது தக்ரீஜ் அஹாதீஸில் இஹ்யா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

2) ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் தொழுவது தொடர்பான ஹதீஸ்:

பைஹகியின் ஷுஃபில் ஈமானில் அலீ (ரலி) அறிவிப்பதாகப்       பதிவாகியுள்ளது. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) இது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸாகத் தான் தெரிகின்றது என்று குறிப்பிடுகின்றார்கள்.  சந்தேகமில்லாமல் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும் என்று இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுகின்றார்கள்.

3) பெருநாள் இரவில் தொழுவது தொடர்பான ஹதீஸ்: 

அபூ உமாமா காலித் பின் மிஃதான் சவ்ர் பின் யஜீத்- பகிய்யா பின் வலீத் என்ற தொடர் மூலம்  இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் 1772 ல் பதிவாகியுள்ளது. இந்த்த் தொடர் பலவீனமானது. காரணம் இதில் பகிய்யா இடம் பெறுகின்றார். இவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்வர்  என்று பூசரி ஜவாயித் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.  ஹாபிழ் இராக்கி அவர்கள் தனது தக்ரீஜ் அஹாதீஸ் இஹ்யாவில் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.

4) ரஜப் மாதம் 27ஆம் இரவில் தொழுவது தொடர்பான ஹதீஸ்:

இதை கதீப் தாரீக் என்ற நூலிலும்  ஜவ்ஸஜானீஅபாதீல் (அபத்தங்கள்) என்ற நூலிலும்  இப்னு அஸாகீர் தாரீக் திமிஷ்கிலும்  இப்னுல் ஜவ்ஸிய்யிஇலல் என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர். அனைவருமே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து தான் பதிவு செய்துள்ளனர்.  இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது என்று இப்னுல் ஜவ்ஸியும் இது ஒரு பொய்யான ஹதீஸ் என்று ஜவ்ஸகானிய்யும் கூறுகின்றார்கள்.

5)  இது வெறுக்கப்படக் கூடிய ஹதீஸாகும். இது  இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் போன்றது தான் என்று அபூ அஹ்மத் அல் ஹாகிம் தெரிவிக்கின்றார்கள். இந்த விமர்சனங்கள்  இஹ்யாவின் அடிக்குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இவை இந்த ஹதீஸ்களின் தரங்களைப் புரிந்துக் கொள்வதற்கு போதும் என்பதால் அதிகமான விமர்சனங்களை விட்டு விட்டோம்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM JUL 2016