கப்ர் வணங்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஸலபுக் கும்பல் - 2
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி
ஹஸன் பஸரீயை அநியாயமாக விமர்சனம் செய்வதாகவும் தனது கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கான விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.
கள்ள ஸலபுக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், நமது ஜமாஅத்தினரை முஃதஸிலாக்கள் என்று விமர்சனம் செய்து எழுதிய கட்டுரைக்கான மறுப்பைப் பார்த்து வருகிறோம்.
ஹஸன் பஸரீ
ஹஸன் பஸரீயை அநியாயமாக விமர்சனம் செய்வதாகவும் தனது கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன் சபையில் ஒரு மார்க்கத் தீர்ப்பு கேட்கப்பட்ட போது அதற்கு முந்திக் கொண்டு வாஸில் பின் அதா தவறான, கண்டிக்கத்தக்க தீர்ப்பு சொன்னதுமே “வாஸில் நம்மை விட்டு விலகி விட்டார்” என்ற வாசகத்தைக் கூறி அவனை தன் சபையிலிருந்து ஹஸன் பஸரீ விரட்டி விடுகிறார் என்று வரலாற்று நூல்கள் கூறுகிறது.
இந்தச் செயலை விமர்சிக்கக் கூடாதா? வாஸிலை விரட்டி அனுப்பியது பெருங்குற்றம் என்றெல்லாம் நாம் கூறவில்லை. எடுத்த எடுப்பில் இந்த வழிமுறையைக் கடைபிடித்திருக்க வேண்டியதில்லை என்கிற கருத்தையே பதிவு செய்திருந்தோம். அவருடன் இக்கருத்து பற்றி பேசியிருக்கலாம் என்று தான் தெரிவித்திருந்தோம். இது அநியாயமான விமர்சனமா?
ஹஸன் பஸரீ (ரஹ்) என்ன அல்லாஹ்வின் தூதரா? அவர்களுடைய செயலை விமர்சிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினால் பார்த்தீர்களா? ஹஸன் பஸரீயை அநியாயமாக விமர்சிக்கிறார்கள் என்கிறார்.
இது தர்காவாதிகளின் செயலைத்தான் நமக்கு ஞாபகப்படுத்துகின்றது.
இமாம்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்களும் நம்மை போன்ற மனிதர்களே என்று நாம் பிரச்சாரம் செய்த போது, “இமாம்களை அநியாயமாக ஏசுகிறார்கள்” என்றார்கள்.
இதற்கும், கட்டுரையாளர் கூறுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக நாம் கருதவில்லை.
மேலும் இந்தக் கட்டுரையில், “முஃதஸிலா என்றால் நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டும் விலகி தனியே சென்றவன் என்பது பொருள்” என்று இடையே தன் கருத்தை ஏதோ சமுதாயக் கருத்தைப் போன்று எழுதுகிறார்.
இதற்காகத்தான் அவர்கள் முஃதஸிலாக்கள் என்று துவக்கத்தில் அழைக்கப்பட்டார்களா? ஹஸன் பஸரீயை விட்டும் அவரது சபையை விட்டும் விலகியதாலேயே அவர் விலகியவர்கள் என்று அழைக்கப்படலானார்கள்.
ஹஸன் (ரஹ்) இது பற்றி சிந்திக்கலானார். அவர்கள் பதிலளிக்கும் முன்பே வாஸில், “பெரும்பாவம் செய்தவன் பொதுவாக முஃமின் என்றோ காஃபிர் என்றோ நான் கூற மாட்டேன். மாறாக அவன் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறான். அவன் முஃமினும் அல்ல காஃபிரும் அல்ல” என்று கூறி எழுந்து அப்பள்ளிவாசலின் தூண்களில் ஒரு தூணின் பக்கம் ஒதுங்கினார். ஹஸன் (ரஹ்) சகாக்களின் கூட்டத்தாருக்கு தாம் பதிலாக அளித்ததை உறுதிப்படுத்தினார்.
அப்போது ஹஸன் (ரஹ்), “நம்மை விட்டும் வாஸில் விலகி விட்டார்” என்று கூறினார். எனவே தான் அவரும் அவரது சகாக்களும் முஃதஸிலா என்று அழைக்கப்படலானார்கள்.
அல்மிலல் வந்நிஹல், பாகம் 1, பக்கம் 45
முதலில் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களோடு அமர்ந்திருந்த வாஸில், கருத்து மோதல் ஏற்பட்ட பின் அதே பள்ளிவாசலில் வேறு ஒரு தூணைத் தேர்வு செய்து அவரது சபையை விட்டு விலகி அமர்ந்து கொண்டார்.
தன்னோடு கருத்து வேறுபாடு கொண்டு தனது சபையை விட்டு விலகியதாலேயே வாஸிலை நம்மை விட்டும் விலகி விட்டார் என்று ஹஸன் (ரஹ்) கூறுகிறார்.
பிறகு முஸ்லிம்களின் கொள்கையிலிருந்தும் அவர்கள் விலகிச் செல்லும் அளவு வழிகெட்ட கொள்கைகளைத் தேர்வு செய்தார்கள். “விலகியவர்கள்” என்ற அப்பெயர் அவர்களுக்கு பொருத்தமாயிற்று.
இதற்கு மாற்றமாக முஃதஸிலா என்றால் நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டும் விலகி தனியே சென்றவன் என்பது பொருள் என்று புது விளக்கத்தை இந்தக் கள்ள ஸலபி அளிக்கின்றார்.
அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ்
அபூபக்கர் ஜஸ்ஸாஸ் பற்றி நாம் எழுதிய அக்கட்டுரையில் இப்படி கூறியிருந்தோம்.
குர்ஆனுக்கு முரண்படுவதாக சில ஹதீஸ்களை முஃதஸிலாக்கள் மறுத்திருக்கிறார்கள். அதே போன்று அந்த ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி மறுத்தால் அவர்களையும் முஃதஸிலாக்கள் என்று கூறுவது என சில அறிவிலிகள் அறிவற்ற செயலைச் செய்கிறார்கள்.
இந்த அடிப்படையிலேயே சூனியத்திற்கு சக்தி உண்டு என்பதை மறுத்த அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ் போன்ற முஃதஸிலா அல்லாத அறிஞர்களை முஃதஸிலாக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நமது இந்தக் கருத்துக்கு, ஸலபுக் கும்பலைச் சேர்ந்த இந்தக் கட்டுரையாளர், இமாம் தஹபீ, இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் முஃதஸிலாக்காரரான காழி அப்துல் ஜப்பார் ஆகியோர் ஜஸ்ஸாஸை முஃதஸிலா என்று கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறி பின்வருமாறு விமர்சனம் முன்வைக்கிறார்.
அபூபக்கர் ஜஸ்ஸாஸை முஃதஸிலா எனக் கூறுபவர்கள் அறிவிலிகள் என பி.ஜே கூறுகிறார். அப்படியானால் இவ்வாறு விமர்சனம் செய்த இமாம் தஹபீ அவர்களை அறிவிலி என்று இவர் கூறுகிறாரா? இமாம் இப்னு தைமிய்யா அவர்களை அறிவிலி எனக் கூறுகிறாரா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
என்று கண்ணீர் வடிக்கிறார்.
முஃதஸிலா அல்லாத அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸை முஃதஸிலாக்களின் பட்டியலில் இமாம் இப்னு தைமிய்யாவும், முஃதஸிலா சார்புள்ளவர் என்று இமாம் தஹபீ அவர்களும் குறிப்பிட்டுள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அது சரியா என்பது தான் இங்கே கேள்வி.
முஃதஸிலாக்கள் தங்களுக்கென்று ஐந்து அடிப்படைகளை வகுத்துக் கொண்டு அதை ஏற்பவர் மட்டுமே முஃதஸிலா என்று பலரும் சொல்லியிருக்க அந்த ஐந்து அடிப்படைகளையும் ஏற்காத ஒருவரை முஃதஸிலா என்று சொல்வது எப்படி சரியாகும்?
அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ் முஃதஸிலாக்களின் ஐந்து அடிப்படைகளையும் ஏற்றுக் கொண்டவரா? அந்த ஐந்து அடிப்படை கொள்கைகளையும் அல்ஜஸ்ஸாஸ் ஏற்றுக் கொள்ளாத வரை அவரை முஃதஸிலா என்று யார் சொன்னாலும் அது செல்லுபடியாகாது.
இப்னு தைமிய்யா ஒருவரை முஃதஸிலாவின் பட்டியலில் சேர்த்து விட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அதற்கு மறுபேச்சில்லை என்ற நிலைப்பாட்டில் இவர்கள் இருக்கலாம். நமக்கு அந்த நிலைப்பாடு கிடையாது.
இமாம் இப்னு தைமிய்யாவும் தவறிழைக்கலாம் என்ற அடிப்படையில் இதுவும் அவருடைய தவறுகளில் ஒன்று என்பதே நம் நிலைப்பாடு.
நபிகள் நாயகமே மனிதர் என்ற அடிப்படையில் தவறிழைப்பார்கள் என்று நம்பும் முஸ்லிமிற்கு இது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல.
ஆனால் நபித்தோழர்கள், இமாம்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஊறித் திளைத்தவர்களுக்கு உண்மையில் இது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியளிக்கக் கூடியதுமே!
இமாம் தஹபீ ஜஸ்ஸாஸை முஃதஸிலா சார்புள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் தங்களுக்கு ஆதாரமாக குறிப்பிடுகிறார்.
அல்லாஹ்வை பார்க்க முடியாது என்று முஃதஸிலாக்கள் சொன்ன கருத்தைப் போன்ற ஒன்றிரண்டு கருத்துக்களை இமாம் அல்ஜஸ்ஸாஸ் தனது விரிவுரை நூலில் கூறியமையால் இமாம் தஹபீ இவரை முஃதஸிலாக்களின் பக்கம் சாய்ந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
முழுவதுமான முஃதஸிலா என்று இமாம் தஹபி குறிப்பிடவில்லை.
அதுமட்டுமின்றி இமாம் தஹபீ அவர்களே அல்ஜஸ்ஸாஸை ஹனஃபீ மத்ஹபை சார்ந்தவர் என்றே அறிமுகப்படுத்துகிறார்.
அபூபக்கர் அஹ்மத் பின் அலி அர்ராஸி என்பவர் இமாம், பேரறிஞர், மார்க்க தீர்ப்பளிப்பவர், ஆய்வாளர், இராக்கின் அடையாளமாக திகழ்ந்தவர், ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர், பல நூல்களுக்குச் சொந்தக்காரர்.
ஸியரு அஃலாமிந் நுபலாஃ, பாகம் 16, பக்கம் 340
இத்துடன் தான் அல்லாஹ்வைப் பார்த்தல் உள்ளிட்ட சில விவகாரங்களில் முஃதஸிலாக்களின் கருத்தைக் கொண்டிருந்தார் என்று விமர்சிக்கின்றார்.
இதனால் அவர் முஃதஸிலா என்றாகி விடுவாரா? ஒரு போதும் ஆகிவிடமாட்டார்.
முஃதஸிலாக்கள் சொன்ன ஒன்றிரண்டு கருத்துக்களைச் சொல்வதால் ஒருவர் முழுவதுமான முஃதஸிலா ஆகிவிடமாட்டார் என்று ஏற்கனவே நாம் எழுதியிருப்பது இதற்கும் பொருந்தும்.
அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்ற கருத்தில் இன்றும் பலர் உள்ளனர். அவர்களை எல்லாம் இந்த ஒன்றுக்காக முஃதஸிலா என்று இவர்கள் சொல்வார்களா? ஜமாலி வகையறாக்களை இதற்காக முஃதஸிலா பாதையில் பயணிப்பவர்கள் என்று விமர்சித்து இந்த ஸலபுக்கும்பல் கட்டுரை எழுதியுள்ளார்களா? தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டுமே இவர்கள் விமர்சிப்பதிலிருந்து இவர்களது நோக்கம் மார்க்கத்தை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதல்ல – தவ்ஹீத் ஜமாஅத்தைக் குறைப்படுத்துவதே என்பதைத் தெளிவாக விளங்கலாம்.
மேலும் காழி அப்துல் ஜப்பார் அவர்கள் அல்ஜஸ்ஸாஸ் அவர்களை முஃதஸிலா பட்டியலில் இணைத்துள்ளதால் அவர் முஃதஸிலா என்ற வாதம் முற்றிலும் தவறானதாகும்.
ஏனெனில் காழி அப்துல் ஜப்பார் இவரை மட்டும் முஃதஸிலாக்களின் பட்டியலில் இணைக்கவில்லை. இன்னும் பலரையும் இணைத்துள்ளார்.
அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி) , இப்னு அப்பாஸ் (ரலி) , இப்னு உமர் (ரலி), ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) உள்ளிட்ட இன்னும் பல நல்லோர்களையும் முஃதஸிலாக்களின் முதல் மற்றும் இரண்டாம் தரப் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.
பார்க்க: காழி அப்துல் ஜப்பாரின் தப்காதுல் முஃதஸிலா, பக்கம் 214
முஃதஸிலாக்காரரான அப்துல் ஜப்பாரே சொல்லிவிட்டார் என்பதால் அல்ஜஸ்ஸாஸ் முஃதஸிலா என்று ஒப்புக் கொள்வதாக இருந்தால் அபூபக்கர், உமர் போன்ற பெரும் நபித்தோழர்களையும் முஃதஸிலா என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஸயீத் பின் முஸய்யப் போன்ற மூத்த தாபியிக்களையும் முஃதஸிலா என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஒருவாதத்திற்கு அல்ஜஸ்ஸாஸ் முஃதஸிலாவாகவே இருந்தாலும் எங்களுக்கு ஒரு பாதிப்புமில்லை.
எங்களைப் பொறுத்தவரை யாருமே நாங்கள் சொன்ன கருத்தைச் சொல்லியிருக்காவிட்டாலும் அதனால் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. நாங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சொல்லும் கருத்து யாருமே சொல்லாததால் அது அசத்தியம் என்றாகி விடாது.
அடுத்து அல்ஜஸ்ஸாஸை முஃதஸிலா என்ற தஹபீ அறிவிலியா? என்று கேட்கிறார். நாம் இவர்களை நோக்கி வர்ணிக்கும் வார்த்தைகளை இமாம்களை நோக்கி திருப்பி விடுகிறார்கள்.
இதையே நாம் திருப்பி இப்படி கேட்கிறோம்.
அறிவிப்பாளர் தொடர் சரியான, நபியின் பெயரால் வந்துள்ள செய்திகளை மறுத்தால் அது வழிகேடு, அசத்தியம் என்றெல்லாம் நரம்பு புடைக்க இந்த ஸலபுக் கும்பல் பேசுகிறார்கள்.
இதே வழிமுறையைக் கடைபிடித்த அன்னை ஆயிஷா வழிகேடரா?
உமர் (ரலி) வழிகேடரா? அபூஅய்யுப் (ரலி) வழிகேடரா? குர்துபி போன்ற இமாம்கள் வழிகேடர்களா என்று காலம் காலமாக கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். இதற்குக் கள்ள ஸலபுக் கூடாரத்தில் உள்ள யாரும் மூச்சுக்காற்றுக் கூட விடுவதில்லை. இவராவது மழுப்பாமல் பதில் சொல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தலைவர் மறுப்பதால் அதைச் சரிகாண்பதோ கண்டும் காணாமல் இருப்பதோ ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. ஈமான் உள்ள எந்த ஒரு முஃமினும் இந்த வழிகேட்டை நியாயப்படுத்த மாட்டான். இதைக் கண்டு ஊமையாக இருக்கவும் மாட்டான்.
என்று தான் தனக்கு எதிராகவே எழுதுகிறோம் என்பதை அறியாமல் ஏதோதோ எழுதுகிறார்.
சரி இவர் எழுதியது உண்மை என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது பல வருடங்களாக ஏன் இங்கிருந்து மாறிப்போகும் நாளுக்கு முன்புவரை இக்கொள்கையை ஆதரித்து, நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்தாரே, அப்போது இவர் முஃமின் இல்லை என்று தன் எழுத்துக்களாலேயே ஒப்புக் கொள்கிறார்.
இன்றைக்கு எந்த ஹதீசும் முரண்படவில்லை என்று பேசும் பல நபிமொழிகள் குறித்து அன்றைக்கு வாய்திறக்காமலேயே காலம் கழித்தாரே, விலகிச் செல்வதற்கு சமீபம் வரை எந்த விளக்கமும் அளிக்காமல் வாதம் செய்யாமல் ஊமையாக இருந்தாரே அப்போது இவர் முஃமினா? காஃபிரா என்பதற்குப் பதிலளிக்கட்டும்.
இவர் சொல்லும் படி தவ்ஹித் ஜமாஅத்தில் யாரும் தலைவர் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் மறுபேச்சில்லை என்ற மனநிலையில் இல்லை.
மாற்றுக் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கும் ஆரோக்கியமான நிலை அல்லாஹ்வின் அருளால் இந்த ஜமாஅத்தில் மட்டுமே உள்ளது.
ஆனால் இமாம்கள் ஒன்றைச் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் அதற்கு மேல் யோசிக்கக் கூடாது என்றும், சவூதியின் பெரிய உலமாக்கள் பத்வா கொடுத்து விட்டால் அதற்கு எதிராக வாய் திறக்க மறுக்கும் இவருக்கு இதைப் பற்றி பேசத் தகுதியில்லை.
வழிகேட்டின் வரையறை
ஒட்டுமொத்தமாக இந்தக் கள்ள சலபுக் கூட்டம் எப்படி வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்றால் ஒரு கருத்து வழிகேடு என்பதற்கான அளவு கோல் முஃதஸிலாக்கள் தான். முஃதஸிலாக்கள் எந்த கொள்கையைக் கொண்டிருந்தார்களோ அதுதான் வழிகேடு. முஃதஸிலாக்களின் கொள்கையல்லாத வேறு எதுவும் இவர்களின் பார்வையில் வழிகேடு அல்ல. இப்படித்தான் வழிகேட்டின் வரையறையை அறிந்து வைத்துள்ளார்கள்.
குர்ஆன் ஹதீஸ் படியே நடப்பதாகக் கூறிவிட்டு, இந்தக் கருத்தை இதற்கு முன்பு யார் யார்? எந்தெந்த அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்? என்று வெட்கமே இல்லாமல் கேள்வி கேட்கும் இவருக்கு வெட்கத்தைப் பற்றி பேச கிஞ்சிற்றும் தகுதியில்லை.
ஒருவர் சொன்ன கருத்தை குர்ஆன் ஹதீஸ் சரிகண்டால் அது சத்தியம், இல்லையென்றால் அது வழிகேடு என்ற சாதாரண தெளிவு கூட இவர்களிடத்தில் இல்லை. சத்தியத்தை வழிகேடர்கள் சொல்லியிருந்தாலும் அது சத்தியமே. சத்தியம் என்றைக்கும் அசத்தியமாகி விடாது.
EGATHUVAM JUL - 2016