May 15, 2017

இணை கற்பித்தல் 23 - அன்னையார் மீது அவதூறு

இணை கற்பித்தல் 23 - அன்னையார் மீது அவதூறு

தொடர்: 23

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம். ஐ. எஸ். சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களை உண்டாக்கி, மறைவான விஷயம் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது என்பதை அல்லாஹ் நிருபிக்கிறான்.

அதில் மிக முக்கியமான ஒரு சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறு சம்பவமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் அறவே கிடையாது என்பதற்கு மிகப் பெரிய சான்றாக அமைந்துள்ள அந்தச் சம்பவத்தை இப்போது காண்போம்,

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. ஆகவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள்.

படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர்நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன்.

ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், "இன்னாலில் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்'' என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன்.

பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக்கொள்ள நான் அதன் மீது ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்றுவிடும்போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, "நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது.

இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்துவிட, நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த "மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது.

நானும் அபூருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்றுகொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், "மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று கூறினார். நான், "மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்'' என்று கூறினேன். அதற்கு அவர், "அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?'' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது.

நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார்கள். நான் "என் தாய்தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்'' என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய்தந்தையரிடம் சென்றேன்.

என் தாயாரிடம், "மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?'' என்று கேட்டேன். என் தாயார், "என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகு மிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளது சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்'' என்று கூறினார்கள்.

நான், "சுப்ஹானல்லாஹ்...! (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?'' என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை(என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது "வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது.

உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்'' என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, "பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), "தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.

உடனே, அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி(தம் தோழர்களிடம்) கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை'' என்று கூறினார்கள்.

உடனே, சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனைத் தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகின்றேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்யவேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகின்றோம்'' என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்ல மாட்டீர். அது உம்மால் முடியாது'' என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குல மாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டி விட்டது. உடனே, உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, "நீர் தாம் பெய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால் தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமாகி விட்டார்கள்.

அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய்தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள், "லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)'' என்று கூறிவிட்டு, "ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக்  குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு.  ஏனெனில்அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்'' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள், தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், "அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், "அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன்.

ஆகவே, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். .....நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்..... நீங்கள் அதை நம்பப்போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையையே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன்; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (அல்குர்ஆன் 12:18)'' என்று கூறினேன்.

பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல; மிகச் சாதாரணமானவள்தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக்கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே - வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்' என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, "ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்'' என்று கூறினார்கள். என் தாயார், "அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்'' என்று கூறினார்கள். நான், "மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்'' என்றேன். அப்போது அல்லாஹ், "(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்'' என்று தொடங்கும் (24:11) வசனங்களை அருளியிருந்தான்.

என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிட மாட்டேன்'' என்று கூறினார்கள்... மிஸ்தஹ் பின் உஸாஸா  தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். உடனே அல்லாஹ், ""உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.'' என்னும்  (24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் என் விஷயத்தில் (தமது இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள். "ஸைனபே!  நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே!  என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று பதிலளித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் தாம் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.

நூல்: புகாரி 2661

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டு விட்டது. மறைவான செய்தி நபியவர்களுக்குத் தெரியும் என்றிருந்தால் தமது மனைவி சம்பந்தப்பட்ட மறைவான செய்திகள் முதலில் தெரிந்திருக்க வேண்டும். இது அவர்களுடைய நிம்மதியை குலைக்கக்கூடிய விஷயமாக இருக்கிறதா? இல்லையா? அவர்களுடைய மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா? இல்லையா? மறைவான விஷயத்தை நபியவர்கள் அறிபவர்களாக இருந்திருந்தால் அவர்களுடைய உள்ளத்தில் கடுகளவு கூட சந்தேகமே வந்திருக்காதே!

இந்தச் சம்பவத்தில் உஸாமா (ரலி)யிடமும், அலீ (ரலி)யிடமும் எதற்காக நபியவர்கள் ஆலோசனை கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஆயிஷா மீது அவதூறு சொல்லப்பட்ட செய்தி உண்மையா? பொய்யா என்பது தெரியவில்லை  என்பதுதான் காரணம்.

ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்; அதற்காக நீ ஏன் கண் கலங்குகிறாய்? ஏன் கவலையடைகின்றாய்? உன் மீது எந்த தப்பும் கிடையாது என்பது எனக்குத் தெரியும் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் மற்ற மனிதர்களுக்கும் வரக்கூடிய சந்தேகம் தான் அவர்களுக்கும் வருகிறது. ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு சலாம் மட்டும் சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் திரும்பி விடுகிறார்கள்.

தம்முடைய தோழர்களிடத்தில் இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார்கள். இந்த நிலை ஒரு மாதம் வரை நீடிக்கிறது. இதுகுறித்து அவர்களுக்கு வஹீயும் வரவில்லை. இந்த வதந்தி பரவ ஆரம்பித்து ஒரு மாத காலமாக மதீனாவில் இதுதான் முக்கியச் செய்தியாக - சூடான செய்தியாக மக்களிடத்தில் பேசப்பட்டு வந்தது.

நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, "நீ அந்தத் தவறைச் செய்யாமலிருந்தால் அல்லாஹ் உன்னைத் தூய்மையானவள் என்று காட்டுவான். ஒருவேளை இந்த மக்கள் எதை அவதூறாகப் பரப்புகின்றார்களோ அந்தத் தவறை நீ செய்பவளாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் நீ பாவமன்னிப்பு தேடிவிடு' என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது? நீ தவறு செய்யவில்லையென்றால் அல்லாஹ் உன்னைக் காப்பாற்றுவான். நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து கொள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்குக் காரணம் என்ன? இந்த அவதூறான வதந்தி அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பது தெரியவில்லையா? தமது மனைவி ஒரு அப்பழுக்கற்றவர் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனதா? இல்லையா?

இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பின்பு தான் அல்லாஹ் அவதூறு சம்பந்தமான  (அல்குர்ஆன் 24:11-24) வசனங்களை இறக்குகின்றான். இதற்கு பிறகு நபியவர்கள் ஆயிஷா மீது அவதூறு பரப்பியவர்களுக்குத் தண்டனை வழங்குகிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இறங்கிய பிறகுதான் மதீனாவில் பரப்பப்பட்ட இந்தப் பிரச்சினை ஓய்கிறது. இது பொய்யான அவதூறு என்று அனைவருக்கும் விளங்குகின்றது.

மேலும் இந்த சம்பவத்தில் நாம் முக்கியமான இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவம் நபியவர்களுக்கு ஒரு மானப் பிரச்சனை தானே! இந்த அவதூறு பரப்பப்பட்ட உடனேயே அல்லாஹ் இதைப் பொய் என்று நிருபித்திருக்க வேண்டும். அல்லது ஒரு மாத காலம் வரைக்கும் தாமதிக்காமல் அடுத்த நாளே ஜிப்ரயீலை அனுப்பி, அவதூறு சம்பந்தமான இந்த வசனங்களை இறக்கி, "நீர் கவலைப்பட வேண்டாம். இதெல்லாம் அவதூறு; பொய்' என்று அவர்களுடைய மனதை சமாதானப் படுத்தியிருக்கலாம்.

அப்படிச் செய்திருந்தால் மற்ற 29 நாட்கள் கவலைப்படுவதிலிருந்து அவர்களது உள்ளம் நிம்மதி அடைந்திருக்கும். ஆனால் இதை அல்லாஹ் இவ்வளவு பிற்படுத்துவதற்குக் காரணம் என்ன? முஹம்மது ஒரு மனிதர் தான்; அவருக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அதை அவரால் அறியவும் முடியாது என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்துவதற்காகத் தான்.

மற்ற மனிதர்களுக்கு எவ்வாறு மறைவான விஷயங்கள் தெரியாதோ அதே போலத் தான் இவருக்கும் மறைவான விஷயங்கள் தெரியாது. அதனால்தான் தன் மனைவி மீது கூறப்பட்ட அவதூறுக்காக மற்ற மனிதர்கள் கவலைப்படுவதைப் போன்று இவரும் கவலைப்படுகிறார். அவர் கடவுள் தன்மை - இறைத் தன்மை கொடுக்கப்பட்டு அனுப்பப்படவில்லை என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த அவதூறு செய்தியை ஊர் முழுக்கப் பரவ வைத்து ஒரு மாதத்திற்குப் பின்னால் இதைப் பொய் என்றும், ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர் என்றும் அல்லாஹ் நிருபிக்கிறான்.

ஆயிஷா (ரலி) அவர்கள் உயிரோடு இருந்து, தாம் வாழுகின்ற மதீனாவில் தமது கண் முன்னால் இருந்து, எப்போதும் அவர்களை நபியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இது அவதூறு என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இறைநேசர் என்று சொல்லப்படுபவர் எப்பொழுதோ மரணித்து, அடக்கம் செய்து, அவருடைய எலும்பு கூட மிஞ்சாத நிலையில் அவர் மண்ணறையில் இருந்து கொண்டே நம்மைப் பார்ப்பார் என்று நம்புகிறோம்.

நாகூரில் உள்ள கப்ரில் இருந்து கொண்டே இங்கு நாம் செய்யக்கூடிய செயல்களைப் பார்ப்பார். பக்தாதில் உள்ள கப்ரில் இருந்து கொண்டு இங்கிருந்து நாம் கேட்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றுவார். அஜ்மீரில் உள்ள தர்காவில் இருந்து கொண்டே இங்கிருந்து நாம் பேசுவதைச் செவியேற்பார் என்று சொல்கின்றோம்.

ஆனால் இறைத்தூதருக்கே தமது மனைவி மீது சொல்லப்பட்ட இந்த அவதூறு பொய் என்பது தெரியாமல் போய் விட்டதே! மனைவி மீது சந்தேகம் கொள்கிறார்கள். அதனால் கவலையடைகின்றார்கள். இதையெல்லாம் பார்த்தும் நபியவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று எப்படி நம்மால் சொல்ல முடிகிறது? இறந்து போனவருக்கு இத்தகைய ஆற்றல் இருக்கிறது என்று நாம் எப்படி சொல்ல முடியும்.

உயிரோடு இருப்பவருக்கே ஒரு இடத்தில் இருந்து கொண்டு வேறொரு இடத்தில் நடப்பதை அறிய முடியாது என்று சொன்னால் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட ஒருவரால் எவ்வாறு மறைவானதை அறிய முடியும். நாகூரில் அடக்கம் செய்யப்பட்ட மகான் உயிரோடு இல்லை என்பது தனி விஷயம். அவ்வாறு அவர் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவர் அங்கிருந்து மற்ற ஊர்களில் அல்லது மாவட்டங்களில் நடப்பதை அறிய முடியுமா? அந்த ஆற்றலை அல்லாஹ் அவருக்கு கொடுத்திருக்கிறானா?

இங்கிருந்து கொண்டு, நாகூர் ஆண்டவரே எனக்கு வயிற்று வலிக்கிறது என்று சொன்னால் அவர் அதனைச் செவியேற்று வயிற்று வலியை நீக்கி வைப்பாரா? அவரால் வலியை நீக்க முடியுமா? என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவரால் இதை அறிய முடியுமா? அவரால் உலகத்தில் நடக்ககூடிய அனைத்தையும் அறிய முடியும், நிறைவேற்ற முடியும் என்ற இந்த வாதம் அறிவுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா? நம்முடைய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இதை ஒப்புக் கொள்ளுமா?


ஆக, இந்த ஒரு சம்பவத்திலிருந்தே நபிகளாருக்கு மறைவான விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதும், அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்ததில்லை என்பதும், நபிகளார் மற்றும் வானவர்கள் உட்பட இறைவனால் படைக்கப்பட்ட உலகில் உள்ள எவருக்கும் எதற்கும் அல்லாஹ்வைத் தவிர மறைவான விஷயத்தை அறிய முடியாது என்பதும் நமக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.

EGATHUVAM JUN 2014