May 15, 2017

சுவனத்தின் நிழலும் நிழலில்லா நரகமும்

சுவனத்தின் நிழலும் நிழலில்லா நரகமும்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்


சென்ற இதழின் தொடர்ச்சி....


இந்தக் கோடை காலத்தில் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து வல்ல இறைவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் நிழலும் உள்ளடங்கும். இறைவனின் அருட்கொடையான இந்த நிழல் தொடர்பாக மார்க்கம் கூறும் செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழிலும் பார்ப்போம்.

சுவனத்தில் நிழல்

(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் விரும்புகிற கனிகளிலும் இருப்பார்கள். "நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!'' (எனக் கூறப்படும். இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.

(திருக்குர்ஆன் 77:41-44)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம்  நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும்விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, "உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்'' என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்'' என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா'' என்று கூறுவான். அதற்கு அவர், "இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்'' என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், "என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்'' என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா'' என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக் கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்'' என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?'' என்று கேட்பான். அதற்கு அவர், "ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்'' என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், "என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!'' என்பார். அதற்கு இறைவன், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?'' என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?'' என்று கேட்பார். அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். மேலும், "நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்'' என இறைவன் கூறுவான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),

நூல்: முஸ்லிம் (310, 311)

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி),

நூல்: புஹாரி (6552)

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)  நூல்: புஹாரி (6553)

நிழலே இல்லாத நரகம்

இறைமறுப்பிலும், இணைவைப்பிலும் வீழ்ந்து வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிக் கொள்வோர் மறுமையில் நரகில் வீழ்வார்கள் என்று அல்லாஹ் திருமறையில் எச்சரிக்கிறான். அத்துடன், அந்த நரகத்தின் கடுமையை எடுத்துச் சொல்லி, அதில் கொண்டு போய்ச் சேர்க்கும் காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான்.

குடிப்பதற்குக் கொதிநீர், சாப்பிடுவதற்குக் கற்றாழைச் செடி மற்றும் அணிவதற்கு நெருப்பு ஆடை என நரகில் இருக்கும் கொடுமையை விளக்கிப் பட்டியல் போடும்போது, அங்கு அடர்ந்த புகையே நிழலாக இருக்கும் என்று குறிப்பிடுகிறான். அது எந்த நிலையிலும் அங்கு இருப்பவர்களுக்கு அமைதியை அளிக்காது; அவர்களை எந்த வகையிலும் பாதுகாக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்.

அத்தகைய நிழலற்ற நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி நம்பிக்கையாளர்கள் ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். நரகில் விழச் செய்யும் காரியங்களை விட்டும் நீங்கிக் கொள்ள வேண்டும்.

(அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 56:41-43)

நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்! அது நிழல் தரக் கூடியது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

(திருக்குர்ஆன் 77:30-32)

நிழலும் நேர்ச்சையும்

இறைவன் நமக்காக கொடுத்திருக்கும் இன்பங்களை அவனது கட்டளைக்கு உட்பட்ட வகையில் அனுபவிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை. இன்னும் சொல்வதெனில், நமக்காகவே உலகிலுள்ள அனைத்தையும் படைத்திருப்பதாக வல்ல இறைவன் தமது அருள்மறையில் குறிப்பிடுகிறான். எனவே, இறைவன் நமக்கு அனுமதித்திருக்கும் அருட்கொடைகளுள் எந்தவொன்றையும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நமக்கு நாமே தடைசெய்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு, நமக்காக வழங்கப்பட்டிருக்கும் இன்பங்களை தடுக்கப்பட்டதாக சித்தரிக்கும் எந்தவொரு செயலையும் இறைவனின் பெயரால் செய்தாலும் அதுவும் வன்மையாகக் கண்டிப்பதற்குரிய ஒன்றே ஆகும். இத்தகைய வரம்பு மீறுதலை ஒருபோதும் இறைவன் விரும்பவும் மாட்டான்; அதற்குக் கூலி வழங்கவும் மாட்டான் என்பதே நிதர்சனம். அந்த வகையில் எனது இறைவனின் அருளைப் பெறுவதற்காக  எப்போதும் நிழலில் நிற்கவே மாட்டேன்; எனது அனைத்துக் காரியங்களும் வெயிலில்தான் இருக்கும் என்று ஒருவர் சொன்னால் அதற்கேற்ப செயல்பட்டால் அவரை பழுத்த பக்திப் பழமாக பார்க்கக் கூடாது. அவர் இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காதவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், "(இவர் பெயர்) அபூஇஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் எனவும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) எனவும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் எனவும் நேர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புஹாரி (6704)

நிழல்களை நாசப்படுத்தாதீர்

இஸலாமிய மார்க்கம் மக்கள் நலம் நாடும் வாழ்க்கைத் திட்டம் என்பதை நாம் அறிவோம். இந்த மார்க்கம் மட்டுமே மக்களுக்கு நன்மை தரும் காரியங்கள் எதுவாக இருப்பினும் அவற்றைச் செய்வதற்கு ஆர்வத்தை அளிக்கிறது. அதே வேளையில் மக்களுக்குத் தொல்லைகளை, இடையூறுகளைக் கொடுக்கும் காரியங்கள் எதுவாயினும் அவற்றைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்கிறது.

எந்தளவிற்கெனில், பொதுநலத்தைப் போதிப்பதன் பிரதிபலிப்பாக சில தீமையான காரியங்களைப் பற்றிச் சொல்லும் போது, இந்தக் காரியத்தைச் செய்தால் இறைவனின் சாபம் கிடைக்கிறது என்று இஸ்லாம் வன்மையாக எச்சரிக்கிறது. அத்ததைய காôரியங்களில் ஒன்று மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கும் நிழல்களில் அசுத்தம் செய்வதாகும். இந்த இழிச்செயல் பாமர மக்கள் பெருகியிருக்கும் கிராமம் முதல் படித்தவர்கள் நிறைந்திருக்கும் நகரம் வரை அனைத்துத் தரப்பு மக்கள் வாழும் இடங்களிலும் சர்வசாதாரணமாக அரங்கேறுகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலைவிட்டும் அனைவரும் அதிலும் குறிப்பாக நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக விலகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு, "மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (448)

நிழல்களைத் தடுக்காதீர்

இறைவன் கொடுத்திருக்கும் இன்பங்களை சுயநலத்தோடு தம்மோடு தடுத்து கொள்ளும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, எந்த விஷயங்களில் கண்டிப்பாக  பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டுமோ அவற்றில் கருமித்தனத்தை கடைபிடிக்கும் மக்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்டு கூறுவதெனில், தங்களது இடத்தில் இருக்கும் நிழல்களில் தொல்லை தராத வகையில் பிற ஜீவராசிகள் வெயிலுக்காக ஒதுங்குவதற்குக்கூட இடமளிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை.

இத்தகையவர்கள் தங்களது வீட்டின் அல்லது தோட்டத்தின் நிழலில் பாதைசாரிகள் சிறிது நேரம் நின்று ஒய்வு எடுத்தாலும் அவர்களை விரட்டிவிடுகிறார்கள். இவ்வாறு நிழல்கள் விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டும் நபர்கள் பின்வரும் செய்திகளிலிருந்து படிப்பினை பெற்றுத் திருந்த வேண்டும். மேலும், பிறருக்கு நிழல் அளிப்பதும், அதற்கேற்ப மரம் நடுதல் போன்ற காரியங்களைச் செய்வதும் மறுமையில் நமக்கு நன்மை தரும் என்பதையும் விளங்கி கொள்ளலாம்.

ஒரு மனிதர் என்னிடம் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்'' என்று கூறி (அனுமதி கோரி)னார். நான் "உங்களுக்கு அனுமதி அளித்தால் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அதை மறுப்பார். எனவே, (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் (வீட்டில்) இருக்கும்போது நீங்கள் வந்து (இது போன்று) அனுமதி கேளுங்கள்'' என்று கூறினேன்.

அவ்வாறே அம்மனிதர் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்'' என்று கேட்டார். உடனே நான் (அவருக்கு மறுப்புத் தெரிவிப்பது போல்) மதீனாவில் உமக்கு என் வீட்டைத் தவிர வேறிடம் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டேன்.

அப்போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம், "உனக்கு என்ன ஆயிற்று? ஓர் ஏழை வியாபாரி (நமது வீட்டு நிழலில்) வியாபாரம் செய்வதை நீ ஏன் தடுக்கிறாய்?'' என்று கேட்டார். பிறகு அவர் வியாபாரம் செய்து (நல்ல) வருமானத்தைத் தேடிக் கொண்டார்.

அவருக்கே (எனது) அடிமைப் பெண்ணை நான் விற்றேன். அந்தக் காசை நான் எனது மடியில் வைத்துக்கொண்டிருந்த போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, "அதை எனக்கு அன்பளிப்பாக வழங்கு'' என்று கேட்டார். நான் "இதை ஏற்கெனவே தர்மமாக அளி(க்கத் தீர்மானி)த்து விட்டேன்'' என்று கூறினேன்.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி)

நூல்: முஸ்லிம் (4398)

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3159)

நிலையற்ற நிழல் உலகம்

மறுமையில் வெற்றி பெறுவோர் யார்? தோல்வியை அடைவோர் யார்? என்று நம்மைச் சோதிப்பதற்காகவே இந்த உலக வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரமான வாழ்க்கை மறுமை வாழ்க்கையே தவிர இந்த உலக வாழ்க்கையல்ல. இந்த உண்மையை உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏராளமான செய்திகள் பல்வேறு கோணத்தில் குர்ஆன் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமான உதாரணத்தின் மூலம் இந்த உணர்வை நமக்குள் பதியச் செய்கிறார்கள்.

தொலை தூரமாக செல்லும் பயணி ஒருவர், ஒரு மரத்தின் நிழலில் கொஞ்சம் நேரம் ஒய்வு எடுத்த பிறகு, அதை விட்டும் பிரிந்து சென்று விடுவதைப் போன்றே இந்த உலக வாழ்க்கை ஆகும். அனைவருமே இந்த உலகில் சில காலம் இருந்த பின்னர் இதை விட்டும் சென்றுவிடுவோம். எனவே, இந்த உலகமும் உலக வாழ்வும் நிரந்தரமற்றது என்பதை விளங்கி, நாம்  மறுமை வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். உலக வாழ்வை விட மறுமை வாழ்வுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடினமான பாயின் மீது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அது அவர்களுடைய தோள்பட்டையின் ஓரத்தில் தாரையை ஏற்படுத்தியிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்விழித்த போது அவரது தோள்பட்டையை தடவிக் கொடுத்த நிலையில், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்டிருக்கக் கூடாதா? நாங்கள் இந்தக் கடினமான பாயின் மீது ஏதேனுமொன்றை (விரிப்பாக) விரித்திருப்போமே?'' என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு? எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள உதாரணம் ஒரு பயணி ஆவார். அவர் ஒரு மரத்தின் அடியில் நிழல் பெறுகிறார். பிறகு (அதிலே) ஓய்வு எடுக்கிறார். பிறகு அதை விட்டுச் சென்று விடுகிறார். இதுவே எனக்கும் இந்த உலகத்திற்குமுள்ள தொடர்பு'' என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),

நூல்: அஹ்மத் (3525)

அகிலத்திலுள்ள எந்தவொன்றையும் அல்லாஹ் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ படைக்கவில்லை. மாறாக, ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சரியான மறுக்க முடியாத காரணம் மறைந்திருக்கிறது. அந்த வகையில் அகிலத்தின் இறைவனை அறியவும் அவனது ஆற்றலை விளங்கவும் நிழலும் ஒரு வழியாக, வாய்ப்பாக இருக்கிறது. இத்தகைய நிழல் சம்பந்தமாக மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை அறிந்து கொண்டோம். மேலும் நிழல் விஷயத்தில் நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தகவல்களையும் தெரிந்து கொண்டோம். நாமறிந்த செய்திகள் நமக்குப் பயனளிக்கும் வகையில் வாழ்ந்து இரு உலகிலும் வெற்றி பெறுவோமாக! அதற்கு ஏக இறைவன் நமக்குத் துணை புரிவானாக!


EGATHUVAM JUN 2014