அல்குர்ஆனை மனனம் செய்ய ஆயத்தமாவோம்
நிகழ்ந்து கொண்டிருப்பது புனிதமிகு ரமளான் மாதமாகும். இதில்
நினைவில் நிற்பது புனிதக் குர்ஆன் வேதமாகும். ஒவ்வொரு ரமளான் வருகின்ற போதும் நம்முடைய
ஜமாஅத்தில் உள்ள ஒரு வெறுமையை, வறுமையை அது உணர்த்தவே செய்யும்.
அதுபோன்ற உணர்த்துதலை இந்த ரமளானும் மறுபதிவு செய்கின்றது என்றால் மிகையல்ல. அல்குர்ஆனை
அதிகம் மனனம் செய்தவர்கள் நம்மிடம் இல்லையே என்ற வெறுமையைப் பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம்.
அல்லாஹ்வின் மகத்தான அருளால் தவ்ஹீத் ஜமாஅத் எனும் ஏகத்துவப்
பெருமரத்தின் கிளைகள் தமிழகம் தாண்டி புதுவை, கேரளா, கர்நாடகம், மும்பை போன்ற மாநிலங்களிலும், கடல் தாண்டி இலங்கை போன்ற நாடுகளிலும் விரிந்து கிடக்கின்றன.
அங்குள்ள மக்களைக் கவர்கின்ற வகையில் வாடகை அல்லது சொந்தக் கட்டடங்களில் தொழுகை மற்றும்
பிரச்சாரப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒருசில பகுதிகளைத்
தவிர மற்ற பகுதிகளில் இமாம், குர்ஆனை மனனம் செய்தவர்கள், ஆலிம்கள் பற்றாக்குறையாகவும் பஞ்சமாகவும் இருக்கின்றது.
கொள்கை விஷயத்தில் யாரும் கடுகளவு கூட தடம் புரண்டுவிடக் கூடாது
என்பதற்காக நம்முடைய ஜமாஅத் கடுமையான விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் வகுத்து வைத்திருக்கின்றது. அதனால் நமது ஜமாஅத்திற்கு
அப்பாற்பட்ட முகாம்களிலிருந்து ரமளானிலோ அல்லது இதர மாதங்களிலோ தாயீக்களை இரவலாகப்
பெறமுடியாது.
அத்தகைய இமாம்களை நம்முடைய ஜமாஅத்திலிருந்து தான் பெற்றாக வேண்டும்.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் கொஞ்சம் கொஞ்சம் குர்ஆன் ஓதத்
தெரிந்த சகோதரர்களை வைத்து இமாமத் பணி தொடர்ந்து வந்தாலும், நன்கு குர்ஆன் ஓதத் தெரிந்தவர் தொழுவிப்பது தான் மிகவும் சிறந்ததாகும்.
ஏனெனில் தொழுவிப்பதற்குத் தகுதியாக நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் மனனத்தையே குறிப்பிடுகின்றார்கள்.
முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிர்கள் – குபா பகுதியில் உள்ள – அல்உஸ்பா எனும்
இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்கüன் அடிமையாக இருந்த சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தலைமை
தாங்கித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு)
வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: புகாரி 692
இமாமத் செய்த ஸாலிம் (ரலி) அவர்கள் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்
என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
மக்கா வெற்றி சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து
வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை
ஏற்றார். நபி (ஸல்) அவர்கüடமிருந்து என் தந்தை திரும்பி
வந்த போது,
“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே
நபி (ஸல்) அவர்கüடமிருந்து உங்கüடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித்
தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்கüல் ஒருவர்
பாங்கு சொல்லட்டும்; உங்கüல் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத்
தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலிமா (ரலி),
நூல்: புகாரி 4302
இந்த ஹதீசும் அதே கருத்தை வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக
நபி (ஸல்) அவர்களின் உத்தரவையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை
தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால்
அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள்
சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர்
(தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின்
அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு
மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க
வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி
அமர வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி),
நூல்: முஸ்லிம் 672, 673
முன்னுரிமை, முதலுரிமை
அனைத்தும் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்க்குத் தான் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.
இமாமத் செய்வதற்கு மட்டும் குர்ஆன் மனனம் அவசியம் என்பதல்ல.
மார்க்கப் பிரச்சாரத்திற்கும் குர்ஆன் மனனம் மிகவும் அவசியமாகும். என்ன தான் குர்ஆன்
வசனத்தின் தமிழாக்கத்தைச் சொன்னாலும் அந்த வசனத்தை அரபியில் சொல்கின்ற போது அது மக்களின்
கவனத்தை வெகுவாக ஈர்க்கின்து என்பதை ஒவ்வொரு பேச்சாளரும் நன்கு விளங்கி வைத்திருக்கின்றனர்.
பேச்சாளர்கள் வைத்திருக்கும் குறிப்பில் அவசியமான வசனங்களை எழுதி
வைத்திருந்தாலும் உரையின் போங்கு, சூழல் போன்றவற்றுக்குத் தக்க
பொருத்தமான வசனத்தைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில்
குர்ஆன் மனனம் இல்லாததால் அந்த வசனங்களைச் சொல்லாமல் கருத்தை மட்டும் சொல்லிவிட்டு
நகர்கின்ற நெருக்கடி ஏற்படுவதைப் பேச்சாளர்கள் யாரும் மறுக்க முடியாது. இதுபோன்ற கட்டங்களில்
நம்முடைய மனக்கிடங்கில் மேற்கண்ட வசனங்கள் பதிவில்லாமல் போனதே இந்த நழுவலுக்குக் காரணமாக
அமைந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தொழுகைக்குத்
திருக்குர்ஆன் மனனம் மிகவும் இன்றியமையாதது. அதிலும் குறிப்பாக ரமளான் மாதத்தில் நம்முடைய
ஜமாஅத் மக்கள் மட்டுமல்லாமல் மற்ற ஜமாஅத்தினரும் நின்று தொழ வேண்டும் என்பதற்காக ஏக்கத்துடனும்
எதிர்பார்ப்புடனும் நம்முடைய பள்ளிகளுக்கு வருகின்றனர். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பைப்
பூர்த்தி செய்யும் விதமாக நம்முடைய ஜமாஅத்தில் குர்ஆன் மனனம் செய்தவர்கள் போதிய அளவில்
இல்லாதது பெரிய கவலையாக உள்ளது.
குர்ஆனை மனனம் செய்த, அத்துடன் அதன்
விளக்கத்தையும் பெற்றவர்கள் இந்த ஜமாஅத்தின் மூலதனமும் முக்கியமான சொத்தும் ஆவார்கள்.
அத்தகையவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ரமளான் வரும் போது
இதன் வேகம் அதிகரிக்கின்றது. அதன் பின்னர் அது அப்படியே ஆடி, அடங்கிப் போய்விடுகின்றது.
கடந்த காலத்தில் சுன்னத் ஜமாஅத்தில் குர்ஆனை மனனம் செய்தவர்களில்
மிக சொற்மானவர்களைத் தவிர மற்றவர்கள் வருவாயின் அடிப்படையில் உருவானார்கள். ரமளான்
மாதத்தில் இரவுத் தொழுகை தொழுவிப்பவர்களுக்கு பணமுடிப்புகள், கைலிகள், சட்டைகள், அன்பளிப்புகள் அணிவகுத்து வரும். இந்த உலகாதாயத்தில் நாட்டம்
கொண்டு ஒரு கூட்டம் இந்தத் துறையை நோக்கிப் படையெடுத்தது. அதிலும் குறிப்பாக சிங்கப்பூர், மலேஷியா, புருனை என்று வாய்ப்பு கிடைத்துப்
பறந்துவிட்டால் போதும். பல லட்சம் பார்த்து விடுவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு எல்லோருக்கும்
கிடைப்பதில்லை.
ரமளான் மாதம் வந்ததும் விழுப்புரம், சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி என்று குர்ஆனை மனனம்
செய்தவர்கள் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் நாலா திசைகளிலும் படையெடுத்துப் பயணிப்பார்கள்.
இந்த முன்பதிவு ரமளான் வருவதற்கு முன்னரே தமிழக மதரஸாக்களில் செய்யப்பட்டுவிடும்.
இப்போது இந்த வியாபாரமும் வினியோகமும் நடைபெற்றாலும் கடந்த காலத்தைப்
போல் இல்லை. காரணம் ஏற்கனவே உள்ள கணிசமான ஆலிம்கள் அரபு நாட்டுக்குப் பயணமானதால், அதில் வருமானம் பார்த்து இதை விட்டு விட்டார்கள். பெருமளவு பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை உலகக் கல்வியை நோக்கிப் பாதை திருப்பி விட்டுவிட்டார்கள். இதனால்
குர்ஆனை மனனம் செய்தவர்கள் உருவாக்கம் அடைபட்டது; தடைபட்டது.
சுன்னத் ஜமாஅத்திலும் அருகி விட்டனர்.
அதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் ரமளானில் குர்ஆன்
ஓதுவதற்கென்று காணிக்கையோ, கை மடக்குகளோ கொடுப்பதில்லை.
இங்கு இம்மைப் பார்வையைப் பார்க்க முடியாது. மறுமைப் பார்வை மட்டும் தான் என்பதால்
வருவாயை எதிர்பார்த்து குர்ஆனை மனனம் செய்பவர்களை இங்கு பார்க்க முடியாது. நமது ஜமாஅத்தில்
குர்ஆன் மனனம் செய்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் உள்ளனர்.
இந்த நிலை மாற வேண்டும். மறுமைக்காகக் குர்ஆனை அதிகம் மனனம்
செய்யும் ஒரு தூய திருக்கூட்டம் உருவாகியாக வேண்டும். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால்
திருக்குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்கள் தவ்ஹீது கொள்கையைத் தங்கள் வாழ்க்கை நெறியாக
ஏற்றுக் கொண்ட பின்னர் மறுமைப் பணியாற்றுவதை ஒரேயடியாக விட்டு விட்டு, தொழில், வியாபாரம் என்று இறங்கி அதிலேயே
முடங்கிக் கிடக்கின்றனர். அத்தகையோர் நமது ஜமாஅத்தில் இந்த மறுமைப் பணியை மேற்கொள்ள
முன்வந்தார்கள் என்றால் அவர்களுக்கு இம்மை, மறுமையின்
பாக்கியங்கள் கிடைப்பதற்கு அது வழிவகுக்கும்.
நாம் செய்ய வேண்டிய முதல் கடமை, நாமும் குர்ஆனை மனனம் செய்து, நமது
சந்ததிகளையும் இந்தப் புண்ணியப் பாதையில் செலுத்த ஆயத்தமாக்குவோம். அதே சமயம் உலக வாழ்க்கையையும்
அடைவதற்கு ஏற்ப அவர்களது கல்விப் பயணத்தை அமைப்போம்.
EGATHUVAM JUL 2014