May 16, 2017

முதலாளிகளின் கவனத்திற்கு…

முதலாளிகளின் கவனத்திற்கு

பின்த் ஜமீலா

அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம், மேலப்பாளையம்

கடந்த மே 1ஆம் தேதி உழைப்பாளிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறையும் மக்களுக்கு வழங்கப்பட்டது. சில முதலாளிகள் தங்களது தொழிலாளிகளுக்கு ஆடைகள் வழங்கி அந்நாளை சிறப்புப்படுத்தினர்.

இத்தினத்தை தொழிலாளர்களோடு கொண்டாடி, இத்தினத்தில் மட்டும் தொழிலாளர்களை சந்தோஷப்படுத்தும் முதலாளிகள் வருடம் முழுவதும் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களது கண்ணியத்தை சீர்குலைக்காமல், அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை, அவர்களது குடும்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைகளில் சலுகைகளும், தங்களால் முடிந்த அளவு பொருளாதார உதவியையும் செய்யலாம். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் மத்தியில் உள்ள உறவு எவ்வகையில் அமைய வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ரபதா எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள் மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:

எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த போது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர் என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர் என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3417

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு உணவு சமைத்துக் கொண்டுவந்தால், அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர் உண்ணட்டும். உணவு குறைவானதாக இருந்தால் அதில் ஓரிரு கவளங்களையாவது அவரது கையில் வைக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 3421

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) ச்சீ என்றோ இதை ஏன் செய்தாய்?” என்றோ, “நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.

நூல்: முஸ்லிம் 4623

ஒரு பணியாளரிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள். தங்களது குழந்தைகளிடம் கூட பெற்றோர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை. ஆனால் நபியவர்கள் தனது பணியாளரிடத்தில் சிறந்த முறையில் நடந்து முதலாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

முதலாளிகள் பெறவேண்டிய படிப்பினைகள்

1. வாடிக்கையாளர்கள் முன் தொழிலாளிகளை இழிவுபடுத்துவதை முதலாளிகள் தவிர்க்கவேண்டும்

2. அவர்களது வயதிற்கு மரியாதையளிக்காமல் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதை, கோபத்தில் அடிப்பது போன்ற செயல்களைக் கட்டாயம் செய்யக்கூடாது.

3. அவர்களைத் திட்டுவது மட்டுமில்லாமல் தேவையில்லாமல் அவர்களது பெற்றோர்களையும் , குடும்பத்தினரையும் திட்டுவதைக் கைவிடவேண்டும்.

4. பெண்களிடத்தில் சலனப்புத்தியுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. அவர்களிடத்தில் வேலை வாங்குவதற்கேற்ப கூலிகளை உரிய முறையில் கொடுக்கவேண்டும்.

6. அவர்களது பண்டிகை தினங்களில் அவர்களுக்கு ஆடைகளை வழங்கி உரிய விடுமுறைகளும் வழங்கவேண்டும்.

7. அவர்களது தகுதிக்கேற்ப சம்பளங்களை உயர்த்த வேண்டும்.

8. உரிய முறையில் அவர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.

9. அவர்களுடன் கனிவாகப் பழகுதல், தம் வீட்டு விருந்துகளில் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்குதல்.

10. வேலை பார்த்துக்கொண்டே படித்துக் கொண்டிருக்கின்ற பகுதி நேர தொழிலாளர்கள் இருப்பார்கள். தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வரும் அவர்களது தேர்வு போன்ற கட்டங்களில் அவர்களுக்குரிய பணிச்சுமைகளை குறைத்து உதவ வேண்டும்.

இது சம்பந்தமாக மார்க்கம் கூறும் உபதேசங்களைப் பார்ப்போம்.

சம்பளம் கொடுக்காமல் அநீதியிழைக்கக்கூடாது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கிக்கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.

நூல்: முஸ்லிம் 5034

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அநீதியிழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ர-) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

நூல்: புகாரி 2448

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் பணமோ, பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5037

ஊழியர்கள் செய்த தவறின் காரணமாக கோபத்தில் அவர்களை அடிக்கக்கூடாது; அவர்களிடத்தில் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்ததில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: முஸ்லிம் 4651

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 5054

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5055

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: முஸ்லிம் 5056

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 6013

(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களது தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர் என்று சொல்லப்பட்டது. அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், “அறிக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர்,

நூல்: முஸ்லிம் 5095

தொழிலாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குகள்

1. தன்னிடம் முதலாளி நம்பி ஒப்படைத்த கடைகளில் உள்ள பொருட்கள் மற்றும் பணத்தைத் திருடக்கூடாது.

2. வேலைகளை முகம் சுழிக்காமல் செய்ய வேண்டும்.

3. முதலாளிக்கு எவ்வகையிலும் மோசடி செய்யாமல் இருக்க வேண்டும்.

4. சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறக்கூடாது.

5. ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் முதலாளிக்கு துரோகமிழைக்காமல் அவரது குடும்ப பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் உபதேசங்களைக் காண்போம்.

நம்பியவரை மோசடி செய்யக்கூடாது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

நூல்: முஸ்லிம் 164

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 164

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை (நான்கும்).

நூல்: புகாரி 34

ஒருவன் செய்கின்ற தொழிலினால் அவனை உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ மக்கள் பார்க்கின்றனர். ஒரு கூலித்தொழிலாளியின் மனைவி கூட, தன் கணவன் கூலி வேலை செய்வதால் அவனை மதிப்பதில்லை. அவனது தொழிலை மற்றவர்களிடம் கூறுவதற்கு வெட்கப்படுகிறாள். இதனால் பல்வேறு இடங்களில் அவர்களை தனது தோழிகளிடமும், உறவினர்களிடமும் அறிமுகப்படுத்த மறுக்கின்றாள், வெறுக்கின்றாள். இது போன்றே அவனது பிள்ளைகளும் நினைக்கின்றனர்.

தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லை

அனைத்து இறைதூதர்களுமே ஆடு மேய்த்துள்ளார்கள். பெரும் சாம்ராஜ்யங்களுக்குத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட ஆடு மேய்த்துள்ளார்கள். அதனை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. ஒரு தையல்காரர் நபியவர்களை விருந்துக்கு அழைக்க அதை நபியவகள் ஏற்றுக்கொண்டு அந்த விருந்தில் கலந்து கொள்கின்றார்கள். எனவே தொழிலை காரணம் காட்டி ஏற்றத்தாழ்வு பார்ப்பது நல்ல பண்பு அல்ல. இதுகுறித்து மார்க்கம் கூறும் செய்திகளைக் காண்போம்.

அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்தததில்லை!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், நீங்களுமா? என்று கேட்டார்கள். ஆம். மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 226

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறரிடம் யாசகம் கேட்பதைவிட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2074

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி)

நூல்: புகாரி 2072

நபித்தோழர்களில் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2071

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்த இறைச்சித் துண்டுகளும் சுரைக்காயும் போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்: நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகிவிட்டேன்.

நூல்: புகாரி 2092

ஆகவே, வியர்வை சொட்ட வெயிலிலும், மழையிலும், பனியிலும் உழைக்கின்ற உழைப்பாளிகளை தொழிலைக் காரணமாக வைத்து இழிவாகக் கருதாமல் அவர்களுடன் இயல்பாகப் பழகுவோம் என்று இத்தருணத்தில் நாம் உறுதிமொழியெடுப்போம்.


இந்த சந்தோஷம் மே 1 என்ற குறுகிய வட்டத்தில் இல்லாமல் எந்நாளும் தொடர முதலாளிகள் உறுதி கொண்டு, தங்களது தொழிலாளிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடின்றி அனைத்து நாட்களும் சகோதர உணர்வுடன் இருவரும் நடந்து கொள்ளவேண்டும். எந்நிறுவனத்தில் தொழிலாளர்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், பணிபுரிகின்றார்களோ அந்நிறுவனம் தான் உயரும். நிறுவனம் நன்றாக இருந்தால் தான் முதலாளிக்கும் நல்லது, தொழிலாளிக்கும் நல்லது என்பதை இரு தரப்பும் உணர்ந்து செயல்படவேண்டும்.

EGATHUVAM JUL 2014