May 23, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 24 - இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 24 - இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்
     

தொடர்: 24

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

பொய்யான ஹதீஸ்: 6

"அல்லாஹ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மக்களிடம் கோபம் கொள்கின்ற வரையிலும், குர்ஆன் வசனங்களுக்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் இருக்கின்றன என்று புரிகின்ற வரையிலும் ஒர் அடியான் மார்க்கத்தை முழுமையாக விளங்கிய வனாக ஆவதில்லை'' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை "கல்வியின் சிறப்பு' என்ற பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வந்துள்ளார்.  "மக்கள் அனைவரிடமும் கோபம் கொள்கின்ற வரை'' என்ற  கூடுதல் வார்த்தையுடன் இதே செய்தி பதிவாகியுள்ளது.

"அவரிடத்தில் அவரை விடவும் வேறு எவரும் மிக கோபத்திற்குரியவர் கிடையாது என்ற நிலையை அடைகின்ற வரை'' என்ற கூடுதல்  வாசகத்துடனும் இந்தச் செய்தி வந்துள்ளது.

விமர்சனம்:

இந்த ஹதீஸை இப்னு அப்துல் பர், ஷத்தாத் பின் அவ்ஸ் அறிவிப்பதாகப் பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மர்ஃபூஃ ஆக, அதாவது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பது சரியல்ல! அபுத் தர்தா (ரலி) கூறியதாக அறிவிப்பது தான் சரியாகும் என்று  இப்னு அப்துல் பர் அவர்களே தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறு ஹாஃபிழ் இராக்கி அவர்கள், இஹ்யா ஹதீஸ்களின் இலட்சணங்களைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே எழுதிய "அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார்' என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள். அபுத் தர்தா சொன்ன கருத்தை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு கோளாறு நடந்துள்ளது. அதை நபி (ஸல்)  அவர்களுடன் இணைக்கின்ற பாதகத்தையும் பாவத்தையும் கண்டுக் கொள்ளாமல் கஸ்ஸாலி இந்த ஹதீஸை இஹ்யாவில் அடித்து விட்டுள்ளார். இது மட்டுமின்றி இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமானதாகும்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில்  அலீ பின் ஆமிர் மற்றும் அவரது ஆசிரியான அப்துல் மலிக் பின் யஹ்யா ஆகிய இருவரையும் நம்மால் அறிய முடியவில்லை. மேலும், இந்தத் தொடரில் அல்ஹகம் பின் அப்தா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். இவர் இப்னு மாஜாவின் அறிவிப்பாளர். இவரிட மிருந்து பலர் அறிவித்தாலும் அவர்கள் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிடவில்லை. இவர் பலவீனமானவர் என்று அஸ்தி கூறுவதாக மீஸானுல் இஃதிதாலில் ஹாபிழ் தஹபீ கூறுகின்றார். ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இவர் மறைக்கப்பட்டவர் என்று தக்ரீபில் தெரிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் போலியான ஹதீஸாக இருப்பதுடன் கருத்து அடிப்படையிலும் போலியாகவே உள்ளது.  பொதுவாக மக்களிடம் கோபம் கொண்டு பகைக்க வேண்டுமென்றால் அவர்கள் இணைவைப்பில்  இருக்க வேண்டும்.

"உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 60:4) என்ற வசனம் இதை நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

ஒட்டுமொத்த மக்களும் அப்படி இணைவைப்பில் இருக்க மாட்டார்கள். ஒரு சாரார் ஏகத்துவவாதிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்டவரை நேசிக்க வேண்டும். அவர்களைப் பகைத்து விடக்கூடாது.

இந்த ஹதீஸோ மக்கள் அனைவரையும் பாகுபாடு காட்டாமல் பகைக்கச் சொல்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்படி  முஃமின்களையும் சேர்த்து ஒரு போதும் கூறமாட்டார்கள். எனவே இது கருத்தின் அடிப்படையில் ஒரு போலியான செய்தியாகி விடுகின்றது.

பொய்யான ஹதீஸ்: 7

(அல்குரபா) அரிதானவர்கள் யார் என்று (தோழர்கள் வினவும் போது அவர்களை நோக்கி) இன்றைய தினம் எதில் இருக்கின்றீர்களோ அதைப் பற்றிப் பிடிப்பவர்கள் என்று (நபியவர்கள் பதிலளித்தார்கள்) உள்ளது.

இப்படி ஒரு ஹதீஸை கஸ்ஸாலி இஹ்யாவில் அதே கல்வியின் சிறப்பு என்ற பாடத்தில் கொண்டு வருகின்றார்.

"இந்த ஹதீஸிற்கு நான் எந்த ஓர் அடிப்படையையும் காணவில்லை' என்று ஹாஃபிழ் இராக்கி அவர்கள் அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள்,

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மதஹபைச் சார்ந்த இமாம் சுபுக்கீ அவர்கள் தபகாத்துஷ் ஷாஃபி என்ற நூலில் இஹ்யாவில் இஸ்னாத் இல்லாத ஹதீஸ்கள் என்ற தலைப்பில் ஒரு சிறிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில் மேற்கண்ட ஹதீஸையும் பதிவு செய்திருக்கின்றார். இப்படி அறிவிப்பாளர் தொடர் இல்லாத பொய்யான ஹதீஸை    எந்த வித உறுத்தலுமில்லாமல் கஸ்ஸாலி இஹ்யாவில்  கொண்டு வந்திருக்கின்றார்.

பொய்யான ஹதீஸ்: 8

அமலை (வணக்கம் செயவதை) உள்ளுணர்வாக அளிக்கப்பட்ட காலத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். வாதம் புரிவதையே உள்ளுணர்வாக அளிக்கப்பட்ட ஒரு கூட்டம் பின்னால் வரும் என்று (நபி (ஸல்) கூறியதாக சில ஹதீஸ்களில் உள்ளது)

இஹ்யாவில், இந்த ஹதீஸை கஸ்ஸாலி, பயானுல் கத்ரில் மஹ்மூத் மினல் உலூமில் மஹ்மூதா என்ற பாடத்தில் கொண்டு வருகின்றார்.

இந்த ஹதீஸை நான் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கி அவர்கள் கூறுகின்றார்கள். தபகாத்துஷ் ஷாஃபி என்ற நூலில் இமாம்    சுபுக்கி அவர்களும் இவ்வாறே குறிப்பிடுகின்றார்கள்

விவாதமும் விதண்டா வாதமும்

ஒரு பேச்சுக்கு இந்த  ஹதீஸை சரி என்று வைத்துக் கொண்டாலும், இது பொத்தாம் பொதுவாக விவாதத்தை மறுக்கின்றது. அந்த அடிப்படையில்இது மார்க்கத்திற்கு எதிரான நிலைபாடாகும். இதற்கு  எடுத்துக்காட்டு கூறுவதற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை. தமிழ்நாட்டில் அசத்தியம் மரண அடி வாங்கி, மண்ணைக் கவ்வியதிற்கு அடிப்படைக் காரணமே தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்ப காலகட்டங்களில் கண்ட விவாதக் களங்கள் தான்.

இன்று கண்ட கண்ட அநாமதேயங்கள், அடையாளம் தெரியாத அரை வேக்காட்டு ஆசாமிகள், பி.ஜே.வுடன் விவாதம் நடத்தி விட்டால் தனக்கு ஒரு பெயர் கிடைக்கும் என்று கிளம்பி வருகின்றன. தலைவிதியே என்று இந்தத் தகுதியற்றவர்களுடன், தரங்கெட்டவர்களுடன் விவாதமும் தவ்ஹீது ஜமாஅத் நடத்துகிறது. இதற்குக் காரணம், தவ்ஹீது ஜமாஅத் விவாதத்திலிருந்து பின்வாங்கி விட்டது என்ற பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.

ஆனால் அன்று ஒரு பத்ருத்தீன் என்ற பரேலவியைத் தவிர்த்து வேறு யாரும் விவாதக் களத்தை சந்திக்க முன் வரவில்லை. அந்த அளவுக்கு விவாதம் அச்சத்தையும், ஆட்டத் தையும் எதிரிகளுக்குக் கொடுத்தது.   அதனால் சத்தியம் மேலோங்குவதற்கும் மென்மேலும் வளர்வதற்கும் விவாதம் ஓர் அற்புத ஆயுதமாக அமைந்தது. அது தான் நபிமார்களின் வலுவான ஆயுதமாகத் திகழ்ந்தது.

ஆரம்ப இறைத்தூதர் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிடத்தில் அதிகமான அழகிய வாதங்களை எடுத்து வைத்தார்கள். அந்த அற்புதமான அறிவு ரீதியிலான வாதங்களுக்குப் பதிலளிக்கத் தெரியாத வீம்பு பிடித்த ஏகத்துவ எதிரிகள் கூறிய வார்த்தைகள் இதோ:

"நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! நீர் உண்மை யாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:32

பகுத்தறிவுப் பகலவன் வீரமிகு ஏகத்துவப் பரப்புரையாளர் இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிலைகளை நொறுக்கித் தள்ளிய பின், ஊர் பஞ்சாயத்துக்காரர்களால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட வேளையில் அவர்கள் வைத்த  வாதங்கள் சிலை பற்றிய எதிரிகளின் சிந்தனைகளை சுக்குநூறாகச் சிதற வைத்தது.

"இப்ராஹீமே! எங்கள் கடவுள் களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே விழிப் படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர்.  "அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:62-67

அது போன்று அரசனிடம் அவர்கள் வைத்த வாதம் அசைக்க முடியாத அழுத்தமான வாதமாகும். இதைப் பின்வரும் வசனம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறியபோது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

அசத்தியவாதியை வாய்ப் பொத்தி மவுனம் மட்டுமல்ல! மரணமும் அடையச் செய்யக்கூடிய அற்புத ஆற்றல் வாதத்திற்கு இருக்கின்றது. அதனால் தான் நபிமார்களின் இந்த வழிமுறையை நபி (ஸல்) அவர்களையும் கடைப்பிடிக்கவும் கைக்கொள்ளவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

அழகிய விவாதம் என்பது மார்க் கத்தில் புகழப்படக்கூடிய அருமையான விவாதமாகும். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்பதுடன் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

விவாதத்தில் இகழத்தக்க விவாதமும் இருக்கின்றது. அது விதண்டாவாதம் ஆகும். அதற்கும் உதாரணத்தை நம்முடைய சமீபகால வரலாற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்கு அனைத்தும் ஆற்றல்களும் இருக்கின்றன என்பதை இந்த அப்துல்லாஹ் ஜமாலி என்ற பரேலவிக் கூட்டத்திற்கும் பகிரங்கமாகத் தெரியும்.

இவர்களில் யாராவது ஒருவருக்கு முதலமைச்சரை அல்லது பிரதம அமைச்சரை நன்கு தெரியும் என்று வைத்துக் கொள்வோம். அது மாதிரியான கட்டங்களில் அவர்கள் நேரடியாகவே முதலமைச்சரையோ அல்லது பிரதம அமைச்சரையோ போய்ச் சந்தித்து விடுவார்கள். கட்சியின் எம்.எல்.ஏ.வையோ அல்லது எம்பியையோ அவர்கள் துணைக்கு அழைப்பது கிடையாது. அதிலும் இறந்து போன எம்.எல்.ஏ.வையோ அல்லது எம்.பி.யையோ துணைக்கு அழைத்தால் இவர்களை என்னவென்போம்? இதே அளவுகோலை இவர்கள் அல்லாஹ்வுடைய விஷயத்தில் பொருத்திப் பார்ப்பது கிடையாது.

அல்லாஹ் அனைத்து ஆற்றல் களையும் பெற்றவன். அப்படிப்பட்ட அந்த அல்லாஹ்வை தொழுகை மூலம் நெருங்குவதற்கும் நேரடியாக உதவி தேடுவதற்கும் வாய்ப்பும் வசதியும் இருக்கும் போது அவ்லியாக்களை துணைக்கு வைத்துஅதிலும் குறிப்பாக இறந்து போன அவ்லியாக்களைத் துணைக்கு அழைத்து உதவி தேட வேண்டும் என்றும் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் கூறுகின்றனர்.  இது உண்மையில் விதண்டாவாதமகும்.

இதையே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

தங்களுக்குச் சான்று கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரின் உள்ளங்களில் பெருமை தவிர வேறில்லை. அதற்கு அவர்கள் தகுதி படைத்தோர் இல்லை. அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்

அல்குர்ஆன் 40:56

இந்த விதண்டாவாதம் மார்க்கத்தில் வெறுக்கப்பட்டதாகும். அதே சமயம் அழகிய விவாதம் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஆனால் கஸ்ஸாலி குறிப்பிடும் இந்தப் போலி ஹதீஸ் பொதுவாக விவாதத்தையே தடை செய்வது போல் அமைந்துள்ளது. எனவே அறிவிப்பாளர் தொடர் அடிப்படையிலும் கருத்து அடிப்படையிலும் இந்தச் செய்தி தவறானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

EGATHUVAM MAR 2016