எத்தி வைக்கும் யுக்தி 4 - செல்லும் வழியெங்கும் ஏகத்துவப் பிரச்சாரம்
எம்.எஸ். ஜீனத் நிஸா
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக்
கல்வியகம்
நமது பிரச்சாரங்களுக்குத் தடையாக இருக்கின்ற பயிற்சின்மையைப்
பற்றி கடந்த இதழில் கண்டோம். மேலும் பேச்சாளர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற
சந்தர்ப்ப சூழ்நிலைகள் மார்க்கத்தை எத்திவைப்பதற்கு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதைப்
பற்றி இவ்விதழில் நாம் காண்போம்.
இன்பத்திலும், துன்பத்திலும்
நம்மால் இயன்றளவு எத்திவைப்போம் என்ற உறுதிப்பாட்டை நாம் எடுக்க வேண்டும் என்பதற்கு
கீழ்க் கண்ட ஹதீஸ்கள் சிறந்த முன்னுதாரணங்களாகும்.
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் வின்
தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அல்லாஹ்வின் தூதருடைய புதல்வர்
இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது "சூரியனும் சந்திரனும்
அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்
காகவும் கிரகணங்கள் ஏற்படுவ தில்லை. அவற்றை நீங்கள் கண்டால் கிரகணம் விலகும்வரை அல்லாஹ்விடம்
பிரார்த்தியுங்கள்; தொழுங்கள் என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1671
உசாமா பின் ஸைத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகள்
(ஜைனப்-ரலி) தம் மகன் மரணத் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார்.
நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, "எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும்
அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!'' என்றும் கூறி அனுப்பினர்கள். அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்
வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக்
கூறியனுப் பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும்
மற்றும் பலரும் எழுந்தனர்.
(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக்
காட்டினார்கள். இற்றுப் போன பழைய தோற்துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது.
நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. "அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?'' என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் விதைத்த இரக்க உணர்வாகும்.
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடைய வர்க்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.
நூல்: புகாரி 1284
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேரனின் மரணத் தறுவாயில்
கூட, பொறுமை குறித்துப் போதிக்கிறார்கள். நபியவர்களது மகன் இறந்த
செய்தியையும் கிரகணத்தையும் முடிச்சுப் போட்டு மக்கள் பேசிக் கொள்ளும் போது, அதைக் கண்டிக்கிறார்கள். மக்களிடம் ஏற்பட்ட அந்த மூட நம்பிக்கையைத்
தகர்த்து எறிகின்றார்கள்.
இதுபோன்று செல்லும் வழி எங்கும் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொள்ள
வேண்டும் என்பதற்கு மேலும் பல செய்திகள் ஆதாரமாக அமைந்துள்ளன.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் யூசுப் நபியவர்கள் சக கைதிகளிடம்
ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
என் சிறைத்தோழர்களே!ஏராளமான கடவுள்கள் இருப்பது சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா? (என்று யூசுஃப் நபி அவர்களிடம் கேட்டார்)
அல்குர்ஆன்:12:39
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபதக் நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட
கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப்பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ்
பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை
நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர்
அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்கüன்
தலைவர்) "அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்'' இருந்தார்.
-அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது.- அந்த அவையில்
முஸ்லிம்கள்,
சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு
பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும்
இருந்தார்கள். (எங்கள்) வாகனப்பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது
(நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார்.
பிறகு, "எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்'' என்று சொன்னார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு
சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபி (ஸல்) அவர்கüடம் "மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மை யாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத்
தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை)
எடுத்துச் சொல்லுங்கள்'' என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ்
பின் ரவாஹா (ரலி) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் தூதரே!
அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்'' என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர் களும் யூதர்களும்
(ஒருவரை யொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் அளவிற்குச் சென்று விட்டனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌன மாகும் வரை அவர்களை
அமைதிப் படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
நூல்: புகாரி 4566
நபியவர்கள் அப்துல்லா இப்னு உபை இப்னு சலூலுக்கு மார்க்கத்தை
எத்தி வைப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறவில்லை. மாறாக உடல் நலமில்லாத சஅதை நலம் விசாரிக்கவே
செல்கின்றார்கள். செல்லும் வழியில் உபை இருக்கின்ற ஒரு அவையைக் கடக்கின்றார்கள். அப்போது
மார்க்கத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுக்கு
மத்தியில் ஏற்பட்ட சலசலப்பையே எத்தி வைப்பதற்கு ஒரு பொன்னான வாய்ப்பாக பயன்படுத்திக்
கொள்கிறார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிகின்றோம்.
மேலும் ஒரு தவறை நாம் கண்டால் அதை அந்த நிமிடமே தடுக்க வேண்டுமே
தவிர அதை நான் மேடையில் தான் சுட்டிக் காட்டுவேன் என்ற மெத்தனப் போக்கை நாம் தவிர்க்க
வேண்டும்.
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முதன் முதலில்
பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின்
ஹகம் ஆவார். (அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.) அப்போது அவரை நோக்கி
ஒருவர் எழுந்து நின்று, "சொற்பொழிவுக்கு முன்பே
(பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்'' என்று கூறினார். அதற்கு மர்வான்
"முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டு விட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை)'' என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
அவர்கள், "இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றி விட்டார். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க்
கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித்
தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்).
இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும். (நூல்: முஸ்லிம் 78)
நுஃமான் பின் பஷீர் (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவருக்கும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள்
ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக்
கப்பலின் கீழ்த்தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின்
கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக்
கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந் தார்கள்.
ஆகவே, கீழ்த்தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த்தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள்
அவனிடம் வந்து,
"உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அவன், "நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர்
அவசியம் தேவைப்படுகின்றது. (அதனால், கப்பலின் கீழ்த்
தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வேன்)'' என்று கூறினான். (துளையிட விடாமல்) அவனது இரு கைகளையும் அவர்கள்
பிடித்துக் கொண்டால் அவர்கள் அவனையும் காப்பாற்று வார்கள்; தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில்
துளையிட) விட்டு விட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள் வார்கள். (நூல்: புகாரி 2686)
நன்மையை ஏவி, சமூகச் சீர்கேடுகளைத்
தடுத்த உடனே "நீ தான் சிறந்த மனிதன்' என்று நம்மை
யாரும் வாரி அணைத்துக் கொள்வதில்லை. மாறாக, கோமாளி, பைத்தியக்காரன், பிழைக்கத்
தெரியாதவன் என்பதில் ஆரம்பித்து அடி, உதை, ஊர் நீக்கம் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் இதை அறிய முடியும்.
உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக!
இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
அல்குர்ஆன் 15:94
"ஷுஐபே! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரிய வில்லை.
எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக்
கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களை மிகைப்பவராக இல்லை'' என்று அவர்கள் கூறினார்கள். "என் சமுதாயமே! என் குலத்தவர்
அல்லாஹ்வை விட உங்களுக்கு மதிப்புமிக்கவர்களா? அவனை உங்களுடைய
முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டீர்களே! என் இறைவன் நீங்கள் செய்பவற்றை முழுமையாக
அறிபவன்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11:91, 92
உம்மையும், உம்முடன் இருப் போரையும் கெட்ட
சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது.
மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார். அந்நகரத்தில்
ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்து
வோராக இல்லை. "அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில்
அழித்து விடுவோம். பின்னர் "அவரது குடும்பத்தினர் அழிக்கப் பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம் என்று அவரது உறவினரிடம் தெரிவித்து
விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக் கொருவர் சத்தியம் செய்து கூறினர்.
அல்குர்ஆன் 27:47-49
ஸமூது சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர். நம்மைச்
சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால்
வழிகேட்டிலும்,
சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம். நம்மிடையே இவருக்கு மட்டும்
அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும்
பொய்யர். (என்றனர்)
அல்குர்ஆன் 54:23-25
இது போன்ற பிரச்சனைகளுக்குப் பயந்து, நமக்கு ஏண்டா வம்பு என்று நினைத்து எல்லோரும் ஒதுங்கினால் இவ்வுலகில்
சமூக சீர்கேடுகளே அதிகரிக்கும். சீர்திருத்தத்தை நம்மால் காண இயலாது.
ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெற முடியும். இழப்பது அல்லாஹ்விற்காக, அவன் மார்க்கத் திற்காக என்று நினைக்கும் போது நமது துன்பங்கள்
கூட இன்பங்களாகத் தான் இருக்கும். எனவே இதற்காக எதையும் தியாகம் செய்வதற்கு முன் வர
வேண்டும்.
தைரியமாக ஏகத்துவத்தை எடுத்துச் சொல்கின்ற ஆற்றலை இறைவனிடம்
வேண்ட வேண்டும்
"என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! எனது பணியை
எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது
சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்'' என்று (மூஸா)
கூறினார்.
(அல்குர்ஆன் 20:25-28)
EGATHUVAM APR 2016