May 23, 2017

குடும்பவியல் 31 - பெண்களின் பொறுப்புகள்

குடும்பவியல் 31 - பெண்களின் பொறுப்புகள்

தொடர்: 31


உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி

குடும்பத்திற்கு செலவு செய்வது ஆண்களுக்குத் தான் கடமை என்று ஆதாரங்களைப் படித்தவுடன் பெண்கள், கணவன் சம்பாதிக்கிற அனைத்தையும் கேட்டுவிடக் கூடாது. கேட்கவும் முடியாது. அதனை மார்க்கம் அனுமதிக்கவுமில்லை. குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றால் என்ன? என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கித்தான் சென்றுள்ளார்கள்.

முஆவியா அல்குரைஷி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டியது என்ன?'' என்று கேட்கும் போது, "நீ உண்ணும் போது அவளுக்கும் உண்ணக் கொடு, நீ ஆடையணியும் போது அவளுக்கும் ஆடையணிக் கொடு, அவளை முகத்தில் அடித்து விடாதே, அவளை ஒரேயடியாக வெறுக்காதே, அவளை வீட்டில் வைத்தே தவிர மற்ற இடங்களில் கண்டிக்காதே'' என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா அல் குஷைரிய்யி(ரலி), நூல்: அபூதாவூத் 1830

நீங்கள் உண்ணும் போது அவளுக்கும் உண்ணக் கொடுங்கள் என்றால், கணவன் எந்த ரகத்தில் சாப்பிடுகிறானோ அந்த ரகத்தில் மனைவிக்கும் உணவளிப்பது என்று பொருள்.

கணவனுக்கு ரேஷன் அரிசி என்றால் மனைவிக்கு கைக்குத்தல் அரிசி கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் எந்தக் கணவனையும் சிரமப்படுத்திடவில்லை. அதே போன்று நீங்கள் உடையணியும் போது மனைவிக்கும் உடையணியக் கொடுங்கள் என்றால், தராதரத்திற்குத் தகுந்தவாறு மனைவிக்குச் செலவு செய்வது தான் கணவன் மீது கடமை என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.

எனவே மனைவிமார்கள், தங்களது கணவன்மார்களின் வருவாய்க்குத் தகுந்த மாதிரி தான் கணவனிடம் எதையும் கேட்க வேண்டும். வருவாயை விட அதிகமானதைக் கணவனிடத்தில் கேட்டு, கணவன் அதை மனைவிக்குக் கொடுக்க வில்லையெனில் எந்தக் கணவனும் இறைவனால் குற்றம் பிடிக்கப்பட மாட்டான். அதே போன்று கணவனின் வருமானம் மனைவியாக இருக்கிற நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைக்கக் கூடாது.

ஒரு கணவனின் வருமானத்தில் அவனது தாய் தந்தையருக்குப் பங்கு இருக்கிறது. அவனது உறவினர்களில் மிகவும் நெருங்கியவர்கள் ஏழையாக இருந்தால் அவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. கணவனுடன் பிறந்தவர்களில் சிரமப்படுகிறவர்கள் இருந்தால் அவர்களுக்கும் கணவனின் வருமானத்தில் பங்கு இருக்கும். இப்படிப் பல காரணங்களுக்காகத்தான் கணவனின் சம்பாத்தியம் என்பதைப் பெண்கள் முதலில் சரியாகப் புரிய வேண்டும்.

தாய் தந்தையர்களைக் கவனிக் காமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, குடும்பத்தில் மற்ற உறவினர்களையும் கவனிக்காமல் மனைவியை மட்டும் காப்பாற்றிய கணவன் அல்லாஹ்விடத்தில் தப்பித்து விடுவாரா? மறுமை விசாரணையில் தப்பித்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் தப்பிக்க முடியாது

எனவே, நமது கணவன்மார்களை நரகத்திற்குத் தள்ளிவிடும் அளவுக்கு அவர்களுக்கு பொருளாதாரச் சுமைகளை வைத்துவிடவே கூடாது. எனவே ஒரு கணவர் சொர்க்கம் போகிற அளவுக்கு மனைவி அவனது பொருளாதாரக் கொள்கையை அமைத்துக் கொள்வதற்கு உதவ வேண்டும். இதை இறைவன் திருமறையிலும் சொல்கிறான்.

வசதியுள்ளவர்கள் அதற்குத் தகுந்த மாதிரியும், வசதி குறைவான வர்கள் அவர்களுக்குத் தகுந்த மாதிரியும் ஜீவனாம்சத் தொகையினை பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறான்.

அவர்களைத் தீண்டாத நிலை யிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

அல்குர்ஆன் 2:236

தலாக் விடப்பட்ட பெண்ணைப் பற்றி சொல்லப்படும் சட்டம்தான் என்றாலும் தலாக் விடாமல் சேர்ந்து வாழ்கிற பெண்ணுக்கும் இது பொருந்தும்.

எனவே ஒவ்வொரு மனிதரும் தனது வசதிக்குத் தகுந்தவாறு நடந்துகொள்ள வேண்டும்.

எப்படியாவது, யாரிடமாவது கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ எனது விருப்பத்தை நிறைவேற்று என்றெல்லாம் கேட்கும் சில பெண்கள் இருக்கிறார்கள்.

பெண்கள் பிற வீட்டிலுள்ள சொகுசு வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படவே கூடாது. நமது வீட்டில் நம் கணவருக்கு எவ்வளவு வருமானமோ அதற்குத் தகுந்த மாதிரி தான் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் உள்ள கணவன் 20 ஆயிரத்திற்கு பட்டுப் புடவையை தனது மனைவிக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று எல்லாப் பெண்களும் தனது கணவனிடம் கேட்டுவிட முடியாது. அதற்குண்டான சக்தி தமது கணவரிடம் இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டுதான் கேட்க வேண்டும்.

ஆக, கணவனிடம் நாம் எதிர்பார்க்கும் சக்தியில்லை எனில் நமது எதிர்பார்ப்பை ஒரு புறம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, உங்களுக்கு எது முடியுமோ அதை எனக்குத் தாருங்கள் என்று கேளுங்கள். நீங்கள் எனக்கு நல்லதைத் தான் செய்வீர்கள் என்கிற வகையில், கணவனுக்கு கஷ்டம் கொடுக்காத வகையில் தான் மனைவியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

சக்திக்கு மீறி மனைவி அவனிடம் தேவையற்ற ஆடம்பர எதிர்பார்ப்பு களை ஏற்படுத்துவதால், பல கணவன்மார்கள் வட்டிக்கு வாங்குவதையும், சுயமரியாதை இழந்து கடன் வாங்குவதையும் பார்க்கிறோம். இன்னும் பலர் முக்கியமான தனது சொத்துக்களை விற்று மனைவியின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவான். கணவனுக்குப் பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். அதனால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே பெண்கள் கணவன்மார்களுக்கு அவர்களின் சக்திக்கு மேலாக சிரமத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்று புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

இதுபோக, சிலருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தை பரக்கத்தாக அபிவிருத்தி செய்து கொடுத்திருப்பான். ஆனால் வீட்டுக்காக குடும்பச் செலவுக்குக் கொடுக்கும் போது மட்டும் நுணுக்கிப் பார்த்து, கணக்குப் பார்த்து கொடுப்பார்கள். அது போதுமானதாக இருக்காது. நபியவர்கள் தனது குடும்பத்திற்கு வருடம் ஒருமுறை கொடுத்து விடுவார்கள். அதிலிருந்து நபியவர் களின் மனைவிமார்கள் குடும்பத் திற்காக செலவழித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் அன்றாடத் தேவைக்காக நபியவர்களிடம் வந்து நிற்க மாட்டார்கள்.

நபியவர்களுக்கு ஃபதக் என்ற தோட்டத்திலிருந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் மகசூலிலிருந்துதான் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார்கள். இப்படி மாதம் ஒரு முறையோ, அல்லது இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ பொருளாதாரத்தைக் கொடுத்து விட்டு அதில் பெண்கள் குடும்பத்தின் தேவையை நிறை வேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

இதிலும் சிலர் தினமும் அன்றாடக் கணக்கையே நிர்வகிப்பார்கள். ஒரு கிலோ அரிசியைக் கொடுத்துவிட்டு, மறுநாள் அதில் கால்கிலோ மீதம் இருக்கிறதா? என்று கணக்குப் பார்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இது குடும்பத்திற்குச் சரியாகாது. இல்லாதவர் என்றால் இந்த முறை சரிதான். அதாவது ஒருவரின் தகுதி அதுதான் என்றால் மார்க்கம் அதைக் குற்றமாகக் கருதாது.

ஒருவரிடம் வசதி, தகுதி நன்றாக இருந்தால், அவர்களிடம் ஒரு மாதத்திற்குண்டானதையோ அல்லது வருடத்திற்கானதையோ கொடுத்து விட வேண்டியது தான். மனைவி அதில் மிச்சம் பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டால் நல்லது தானே! மாதம் மூவாயிரம் செலவுக்கு எனில் ஐந்தாயிரமாக கொடுக்க வேண்டும். அதில் மீதத்தைப் பெண்கள் சேர்த்து வைத்தால் நாளைக்கு நமக்கும், நமது பிள்ளை குட்டிகளுக்கும் தான் உதவும் என்ற வகையில் குடும்பச் செலவீனங்களை கணவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை கணவன்மார்கள் வீட்டுத் தேவைகளுக்கே கூட சரியாக கவனிக்கத் தவறினால் பெண்களுக்கு இஸ்லாம் கணவனது பொருளாதாரத் தில் எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியிருக்கிறது. கணவருக்கு அல்லாஹ் நன்றாகத் தருவது நம் கண்முன்னே தெரிகிறது. வீட்டுச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் தேவையென்றிருக்கும் போது, ஐநூறைத் தந்து சிரமத்தைக் கொடுத்தால் கணவருக்குத் தெரியாமல் மனைவி இன்னொரு ஐநூறை எடுத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. இப்படி நியாயமாக எடுத்துக் கொள்வது திருட்டுக் குற்றத்தில் சேராது என்று தீர்ப்பு வழங்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! இதுபற்றி அல்லாஹ்வும் கேள்வி கேட்க மாட்டான். இஸ்லாமிய ஆட்சி நடந்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தாலும் இஸ்லாமிய அரசும் இதற்கு எந்தத் தண்டனையும் வழங்காது. இதற்குரிய ஆதாரம் இதோ பாருங்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா? எனக் கேட்டார்கள். அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

நூல்: புகாரி 2211

இந்தச் செய்தியில் புகாரியில் 2460, 5359, 5364, 5370, 7161, 7170 ஆகிய பல்வேறு அறிவிப்புக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே வீட்டுக்குத் தேவையான பொருளாதாரத்தை கணவன் தரவில்லையெனில் கணவனுக்குத் தெரியாமல் தேவைக்குரியதை எடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை வழங்கும் போது பெண்கள் எதற்காக வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும்?

அதே நேரத்தில் அமானிதமாக உள்ளதைத் தொட்டுவிடக் கூடாது. தொழில் முறையில் பிறரது ரூபாயை எடுத்துவிட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பர்சில் இருக்கிற மொத்த ரூபாயையும் எடுத்துவிட்டால் அவன் பர்சில் ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஹோட்டலுக் குள் செல்வான். கடைசியில் ஒன்றுமில்லாமல் கணவனுக்கு கேவலத்தை உருவாக்கிவிடக் கூடாது. பர்சில் எடுப்பதினால் கணவருக்குப் பாதிப்பு வராது என்கிற நிலையில் எடுத்தால் தான் மனைவி மீது குற்றமாகாது. அதைத்தான் நபியவர்கள் நியாயமான முறையில் என்ற சொல் மூலம் விளக்குகிறார்கள்.

அதேபோன்று உணவுப் பொருட்கள் விஷயத்தில், சொந்த பந்தங்களுக்குக் கொடுப்பது, தான தர்மம் செய்வது போன்றவற்றிலும் கணவனிடம் அனுமதி பெறாமலேயே ஒரு மனைவி கொடுக்கலாம். மனைவி தனது அக்கா வீட்டிற்கு, தங்கை வீட்டிற்கு ஏதேனும் பொருட்களைக் கொடுத்துவிடலாம். இவற்றையெல்லாம் கேட்காமல் செய்தால் அந்தப் பெண்ணிற்கு இதுபோன்ற காரியங்கள் தர்மத்திற்கான கூலியைப் பெற்றுத் தருவதாக நபியவர்கள் கூறுகிறார்கள்.

அதற்காக நம் வீட்டிலுள்ள நகை நட்டுக்களையும் பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிடக்கூடாது. அந்தச் சட்டம் உணவுப் பொருளுக்கு குறிப்பாக உள்ள சட்டமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை - வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோலவே கருவூலக் காப்பாளருக் கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1425

இந்தச் செய்தி புகாரியில் 1437, 1440, 1441, 2065 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் உணவுப் பொருட் களுக்குக் கணக்குப் பார்க்க முடியாது. தர்மம் கேட்டு யாராவது வீட்டு வாசலுக்குக் வரும்போது கணவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோறு கொடுக்கவா? வேண்டாமா? என்று கேட்க முடியாது. எப்போதுமே அப்படித் தான். வீட்டில் பெண்கள் சமைப்பார்கள். வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஐந்தாறு நபர்களுக்கு சமைப்பார்கள். ஏழு பேர் இருந்தால் பத்து பேருக்குத் தான் சமைப்பார்கள். யாராவது வந்துவிடலாம் என்று எண்ணித் தான் சமைக்க முடியும்.

எனவே மிகச் சரியாகக் கணக்குப் பார்த்து யாரும் செய்வது கிடையாது. செய்யவும் மாட்டார்கள். இவற்றைத் தர்மமாகவோ அன்பளிப்பாகவோ மனைவி கணவரிடம் அனுமதி கேட்காமலேயே கொடுக்கலாம். இப்படிக் கொடுக்கும் போது கணவனும் எதற்காகக் கொடுத்தாய் என்றெல்லாம் கேட்க முடியாது. அப்போது இந்த ஹதீஸை ஆதார மாகக் காட்டிக் கொண்டு செயல்பட வேண்டியது தான். இப்படியெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் கணவனின் சொத்துக்களில் பொருளாதாரத்தில் பெண்களுக்குப் பல்வேறு உரிமை களை வழங்குகிறது.

EGATHUVAM APR 2016