May 23, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 25 - இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 25 - இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

தொடர்: 25

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

"(அடுத்தவர் பேச்சை) செவியுறு வதை விட (தான்) பேசுவதையே அதிகம் விரும்புவது ஆலிமின் குழப்பமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

இந்தச் செய்தியை முஆத் (ரலி)யே சொன்னதாகவும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் கஸ்ஸாலி தெரிவிக்கின்றார்.

இது இஹ்யாவில், கல்வியின் ஆபத்துகள், மறுமை, ஆலிம்கள் மற்றும் கெட்ட ஆலிம்களை விளக்குதல் என்ற ஆறாவது பாடத்தில் இடம் பெறுகின்றது.

அபூ நயீம், இப்னுல் ஜவ்ஸி ஆகியோர் இந்த ஹதீஸை தங்களது மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட செய்திகளின் தொகுப்பு) என்ற நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என ஹாஃபிழ் இராக்கி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

விமர்சனம்:

இதன் அறிவிப்பாளரான ஜப்பாரா என்பவர் இட்டுக்கட்டக் கூடியவராவார்.

என்னுடைய தந்தை அஹ்மத் பின் ஹன்பலிடம் ஜப்பாராவின் ஹதீஸ்கள் காண்பிக்கப்பட்டன. "நின்று தொழுபவரின் தொழுகையில் பாதி (நன்மை தான்) உட்கார்ந்து தொழுபவரின் தொழுகை(க்கு கிடைக்கும்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பது அதில் உள்ள ஒரு ஹதீஸாகும். அது பொய்யான அல்லது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ் என்று சொன்னார்கள். இவ்வாறு அப்துல்லாஹ் (அஹ்மத் பின் ஹன்பல் மகன்) தெரிவிக்கின்றார். இதன் மூலம் ஜப்பாரா என்ற அறிவிப்பாளர் ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் தெரிவிப்பதாக ஹுசைன் பின் ஹுசைன் தெரிவிக்கின்றார். இவருடைய ஹதீஸ் முரண்பாடு கொண்டதாகும் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு அல்ஜர்ஹ் வத் தஃதீல் என்ற நூலில் இடம் பெறுகின்றது.

இதில் இடம் பெறுகின்ற மற்றோர் அறிவிப்பாளரான மிந்தல் பின் அலீயைப் பற்றி தன் தந்தை அஹ்மத் பின் ஹன்பலிடம் கேட்கப்பட்டது. அவர் பலவீனமானவர் என்று பதிலளித்தார் என்று அப்துல்லாஹ் (அஹ்மத் பின் ஹன்பல் மகன்) தெரிவிக்கின்றார். இவ்வாறு தஹ்தீபுல் கமால் என்ற நூலில் இடம் பெறுகின்றது.

ஓர் அறிஞர் கண்டிப்பாக மற்றவர்களின் கருத்தையும் கேட்கின்ற மனப்பக்குவத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை இந்தச் செய்தி தெரிவித்தாலும் இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று சொல்வது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு நேர் மாற்றமான செயல்பாடாகும்

ஐந்து தீமைகளிலிருந்து ஐந்து நன்மைகளை நோக்கி..

"சந்தேகத்திலிருந்து உறுதிப்பாடு, முகஸ்துதியிலிருந்து தூய எண்ணம், உலக ஆசையிலிருந்து துறவு, பெருமையிலிருந்து பணிவு, விரோத எண்ணத்திலிருந்து நலன் நாடல் என்று உங்களை அழைக்கின்ற ஆலிமிடமே தவிர வேறெந்த ஆலிமிடமும் நீ அமராதே'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியை ஜாபிர் (ரலி) சொன்னதாகவும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் கஸ்ஸாலி தெரிவிக்கின்றார்.

இது இஹ்யாவில், கல்வியின் ஆபத்துகள், மறுமை ஆலிம்கள் மற்றும் கெட்ட ஆலிம்களை விளக்குதல் என்ற ஆறாவது பாடத்தில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸை அபூ நயீம் ஹுல்யாவிலும், இப்னுல் ஜவ்ஸி மவ்லூஆத் (இட்டுக்கட்டப் பட்டவைகளின் தொகுப்பு) என்ற நூலிலும் பதிவு செய்திருக்கின்றார்கள் என ஹாஃபிழ் இராக்கி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

விமர்சனம்:

ஹாஃபிழ் கதீபுல் பக்தாதி அவர்கள் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறுகின்ற ஷகீக் பின் இப்ராகீம் நம்பகமானவராக இல்லை என்று தனது தாரீக் பக்தாதில் குறிப்பிடுகின்றார்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "(அல்லாஹ்வின் தூதரே) கல்வியின் விநோதங்களை எனக்குக் கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். "முக்கியமான கல்வியைத் தெரிந்து நீ என்ன அமல் செய்திருக்கின்றாய்?'' என்று நபி  (ஸல்) அவர்கள் திரும்பக் கேட்டார்கள். "முக்கியமான கல்வி என்றால் என்ன?' அம்மனிதர் வினவி னார். "நீ உன்னுடைய இறைவனை நீ அறிந்து கொண்டாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

"அவர் ஆம் என்றதும் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமையில் என்ன செய்திருக்கிறாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு என்று அவர் பதில் சொன்னார். "நீ மரணத்தை அறிந்திருக்கின்றாயா?' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு ஆம் என்றதும், "அதற்காக நீ தயார் செய்திருக்கின்றாய்?' என்று கேட்டதும் அல்லாஹ் நாடிய அளவுக்கு என்று பதில் சொன்னார். "நீ சென்று அதை உறுதி செய்து விட்டு வா! அப்புறம் உனக்கு கல்வியின் விநோதங்களைக் கற்றுத் தருகின்றேன்'' என்று சொன்னார்கள். இது, இஹ்யாவில் மேற்கண்ட அதே பாடத்திலேயே இடம் பெறுகின்றது

இப்னு சனிய்யீ, அபுநயீம் ஆகிய இமாம்கள் தங்களது ரியாளிய்யா என்ற நூல்களில் பதிவு செய்துள்ளனர். இப்னு அப்துல் பர்ர் அவர்கள் அப்துல்லாஹ் பின் மிஸ்வர் வழியில் முர்ஸலாக அறிவிக்கின்றார்கள் என ஹாபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

விமர்சனம்:

அப்துல்லாஹ் பின் மிஸ்வரைப் பற்றி என் தன் தந்தை அபூ ஹாதமிடம் கேட்ட போது, "அவர் பலவீனமானவர்; முர்ஸலான ஹதீஸ்களை அறிவிப்பார். நம்பகமான அறிவிப்பாளர்களிடம் இதற்குரிய அடிப்படையான செய்தியைக் காணமுடியாது' என்று பதிலளித்ததாக இப்னு அபீ ஹாதம் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அவருடைய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவை. இவர் ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவராகவும் பொய் சொல்பவராகவும் இருந்தார் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு ஹாபிழ் இராக்கி அவர்கள் தன்னுடைய அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற இஹ்யாவுக்கான விமர்சன நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

"கற்றபடி அமல் செய்பவருக்கு அல்லாஹ் அவர் அறியாத கல்விக்கு வாரிசாக்கி விடுகின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இந்த ஹதீஸை அபூ நயீம் ஹுல்யாவில் அனஸ் (ரலி) வழியாக அறிவிக்கின்றார். இது பலவீனமான ஹதீஸ் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இது, அதே பாடத்தில் இடம் பெறுகின்றது.

விமர்சனம்:

ஹாபிழ் இராக்கி அவர்கள் இஹ்யாவுக்கான தன்னுடைய அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற நூலில் இதைப் பற்றி விளக்கமாகக் குறிப்பிடுகின்றார்.

அல் கூத் என்ற நூலாசிரியர் இந்த ஹதீஸை எவ்வித அறிவிப்பாளர் தொடருமில்லாமல் கொண்டு வருகின்றார். ஆனால் வார்த்தையில் சிறிய வித்தியாசத்துடன் கொண்டு வந்துள்ளார். இந்தச் செய்தியை ஈஸா பின் மர்யம் வழியாக தாபியீன்கள் ஒருவர் கூறியதாக அஹ்மத் பின் ஹன்பல் தெரிவித்திருந்தார். அறிவிப்பாளர்களில் சிலர், அஹ்மத் பின் ஹன்பல் இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக, தவறாக விளங்கி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவே அறிவித்து விட்டார் என அபூ நயீம் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் இதற்கு எந்த ஓர் அறிவிப்பாளர் தொடரையும் நான் காணவில்லை என்று இமாம் இப்னு சுப்கீ அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இது அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற நூலில் இடம் பெறுகினற மேலதிகமான விளக்க விமர்சனமாகும்.

ஒருவர் நல்ல உறுதியானவர்; பாவம் அதிகம் செய்தவர். மற்றவர் வணக்கத்தில் திளைத்திருப்பவர். ஆனால் உறுதி குறைவானவர் (இவ்விருவரில் யார் சிறந்தவர்) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதனாக உள்ள எவரும் பாவம் செய்யாமல் இருக்க மாட்டார். ஆனால் எவர் அறிவு வளமிக்க வராகவும், உறுதியே குணமாக கொண்டவராகவும் இருக்கின்றாரோ அவருக்குப் பாவங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், அவர் பாவம் செய்யும் போதெல்லாம் திருந்தி பாவமன்னிப்புத் தேடி வருந்தி விடுகின்றார். அதனால் அவருடைய பாவங்கள் அழிக்கப் பட்டு விடுகின்றன. இதன் மூலம் சுவனத்திற்குச் செல்கின்ற ஒரு சிறப்பு அவருக்கு எஞ்சி நிற்கின்றது என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். இது, இஹ்யாவில் மேலே உள்ள அதே பாடத்தில் பதிவாகி உள்ளது.

அனஸ் (ரலி) வழியாக ஓர் இருட்டுத் தொடர் மூலம் ஹகீம் திர்மிதி என்பவர் இந்த ஹதீஸை நவாதிர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார் என்று ஹாபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

விமர்சனம்:

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் பலவீனமாகி விடுகின்றது. அடுத்து கருத்து அடிப்படையிலும் இது பலவீனடைகின்றது. இந்தச் செய்தியை நபி (ஸல்) ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதற்கு அந்தச் செய்தியில் இடம் பெறும் தவறான கருத்துக்களே போதுமான ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன.

1. விபரம் உள்ளவன் விபரமில்லாதவனை விட அதிகம் தப்பு செய்வான். ஆனால் அவன் பாவமன்னிப்புக் கேட்டு தப்பித்துக் கொள்வான் என்று சொல்வதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் விபரம் உள்ளவனுக்கு அதிகம் பாவம் செய்வதற்கு தந்திரத்தைச் சொல்லிக் கொடுப்பது போல் உள்ளது.

2. எல்லாம் வல்ல அல்லாஹ் தனது குர்ஆனில் சொல்கின்றான்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே

அல்குர்ஆன் 35:28

மார்க்கம் ஞானம் உள்ளவர்களுக்கு இறையச்சம் கூடும். அவர்களுக்கும் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் ஏற்படும் என்றாலும் மார்க்க விளக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறையச்சம் கூடக்கூட தவறுகள் குறையும். இதுதான் அல்லாஹ் கூறுகின்ற அழகான இலக்கணமாகும். ஆனால் மேற்கண்ட அந்த போலியான ஹதீஸோ இதற்கு மாற்றமாக விளக்கம் உள்ளவர்கள் அடிக்கடி தவறு செய்து விட்டு அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிக் கொள்வார்கள் என்று சொல்கின்றது. இந்த அடிப்படையிலும் இது ஒரு பொய்யான ஹதீஸாகும்.

"உறுதிப்பாடும், பொறுமையுடன் கூடிய வைராக்கியமும் உங்களுக்கு மிக மிகக் குறைவாகவே வழங்கப் பட்டிருக்கின்றது. யார் இவ்விரண்டின் பாக்கியம் வழங்கப்படுகின்றாரோ அவர் தனக்கு தப்பிப் போன இரவுத் தொழுகை, பகல் நோன்பு பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஹ்யாவின் மேலுள்ள அதே பாடத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெறுகின்றது. ஹாஃபிழ் இராக்கி அவர்கள் இதற்கு நான் எந்த அடிப்படையையும் நான் காணவில்லை என்று தெரிவிக்கின்றார்கள்.

விமர்சனம்:

சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லாத காரணத்தாலேயே இந்த ஹதீஸ் ஆதாரமற்ற ஹதீஸாக ஆகி விடுகின்றது. கருத்து அடிப்படை யிலும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.

வரலாற்றில் அபூபக்கர் (ரலி) அவர்களைப் போன்று ஈமானில் உறுதி மிக்க ஒருவரைப் பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் அமல்கள் விஷயத்தில் பின்தங்கி விடவில்லை.

"உங்களில் இன்றைய தினம் நோன்பு நோற்றவர் யார்?'' என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது நான் என்று அபூபக்ர் (ரலி) பதிலளித்தார்கள். "உங்களில் இன்றைய தினம் ஜனாஸாவை பின் தொடர்ந்தவர் யார்?'' என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது அபூபக்ர் (ரலி) நான் என்று பதிலளித்தார்கள். "உங்களில் இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்'' என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது நான் என்று அபூபக்ர் (ரலி) பதிலளித்தார்கள். "உங்களில் இன்றைய தினம் ஒரு நோயாளியை நலம் விசாரித்தவர் யார்'' என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது நான் என்று அபூபக்ர் ( ரலி) பதிலளித் தார்கள். "எந்த ஒரு மனிதரிடம் இவை அனைத்தும் ஒரு சேர அமைகின் றதோ அவர் சுவனம் செல்லாமல் இருக்க மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் எண்: 4400


உபரியான நோன்பு நோற்பதில் அபூபக்ர் (ரலி) பின்தங்கி விடவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. கொள்கை உறுதி மிக்க எத்தனையோ நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்த நபித்தோழர்கள் இரவுத் தொழுகை விஷயத்தில் பின்தங்கி விடவில்லை என்று பல்வேறு ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஹதீஸோ இது போன்ற அமல்களில அலட்சியமாக இருந்துக் கொள்ளலாம் என்று தெரிவிப்பதன் மூலம் இது ஒரு பொய்யான ஹதீஸ் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

EGATHUVAM APR 2016