ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 9
- அஹ்லு பைத்தின் பொருட்டால் அனைத்தும் நடந்து விடுமா?
தொடர்: 9
எம். ஷம்சுல்லுஹா
"வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத்
(என்ற இந்தக் கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது' என்ற இந்தக் கவிஞனின் உளறல்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்
சென்ற இதழில் வெளுத்துக் காட்டினோம்.
இந்த இதழில், இந்தக் கவிஞன்
எடுத்திருக்கின்ற வஸீலா என்ற அஸ்திரத்தைத் தோலுரித்துக் காட்டுவோம். தங்களுக்கு ஒரு
காரியம் நிறைவேற வேண்டும் என்றால் "இறைவா! இன்ன நல்லடியார் பொருட்டால் எனக்கு
இன்ன தேவையை நிறைவேற்று' என்று இவர்கள் பிரார்த்தனை செய்வதை
வணக்கமாகவும்,
வழக்கமாகவும் கொண்டிருக்கின்றனர். இதைத் தான் இந்த அசத்தியவாதிகள்
வஸீலா என்றழைக்கின்றனர். இந்தக் கவிஞனும் வஸீலா என்ற கற்பனை மற்றும் கனவுப் பாதையில்
தனது ஹுசைன் மவ்லிதில் அதிகமாக உலா வருகின்றார்.
அதை இப்போது பார்ப்போம்:
ஹுசைன் மவ்லிதில் ஏழாவது ஹிகாயத் என்ற உரைநடைப் பகுதியில் இந்த
மவ்லிதை இயற்றுவதற்குரிய காரணத்தைச் சொல்கின்றார்.
"நான் சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது நான் உடனே, இந்த வேதனைகளிலிருந்து என்னுடைய தலைவர் ஷஹீத் ஹுசைன் (ரலி)யின் பரக்கத்தால் (பொருட்டால்) எனக்கு அல்லாஹ் குணமளித்தால் இயன்ற அளவுக்கு உரை
மற்றும் கவிதை நடையில் அவருக்குப் புகழ் மாலை சூட்டுவேன் என்று அல்லாஹ்வுக்காக நேர்ச்சை
செய்தேன். அது போலவே அல்லாஹ் எனக்கு சுகமளித்தான். அதற்கு நன்றிக் கடனாக நான் இந்தப்
புகழ் மாலையை இயற்றினேன்''
இது தான் ஹுசைன் மவ்லிதை இயற்றியதற்கு அவர் கூறும் காரணம் மற்றும் விளக்கமாகும்.
இரண்டாவது ஹிகாயத்தில்,
"இயலாதவனே! ஹுசைனின் புகழ் பாட எழுந்திடு!' என்று என் உள் மனதில் வானவரிடமிருந்து வருகின்ற ஓர் உதிப்பு தோன்றியது. உடனே அஹ்லு பைத்துகளை புகழ் பாடுவதற்கு வழி காட்டினானே அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் என்று புனித குடும்பத்தைப்
புகழ் பாடும் பணியில் களமிறங்கினேன்
என்று கதையளந்து விட்டு
கவிதை நடையில் வஸீலாவை மய்யப்படுத்தி
ஒரு பிரார்த்தனையும் செய்கின்றார்.
இதன் பொருள்: உள்ளத்தில் உண்மையாகவே ஹுசைன் குடும்பத்தாரை நான் நேசிக்கின்றேன். இதன்
மூலம் சுவனத்தில் உல்லாசமாய் உலா வருவதை ஆதரவு வைக்கின்றேன்.
அவர்களின் பொருட்டால் இரக்க முள்ள நாயனே! என் புகழாரத்தை ஏற்றுக்
கொள்வாயாக! இப்போதே விரைவாக எனது நோயை நீக்கி நிவாரணம் அளிப்பாயாக!
கடைத்தேற இடைத்தரகு தேவையா?
இந்த வழி கெட்ட கவிஞர் தனது உரை மற்றும் கவிதையில், அனைத்திற்கும் விமோசனமும் விடுதலையும் அஹ்லு பைத்துகளை நேசிப்பதில்
தான் அடங்கி யிருக்கின்றது. அவர்களை இடைத்தரகர்களாகக் கொண்டு அல்லது அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்டால் தான் தருவான். இன்னும் சொல்லப்
போனால், அல்லாஹ் தர முடியாது என்று முடிவெடுத்திருந்தாலும் இவர்களை ஊடகமாக்கி
அல்லது இடைத் தரகர்களாக்கி அல்லது இவர்களது பொருட்டால் அல்லது பரக்கத்தால் என்று கேட்டால்
அல்லாஹ் தந்து விடுவான் என்று சொல்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் துஆவின் ஒழுங்கு முறை பற்றி கற்றுக் கொடுத்துள்ளதைப்
பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் "இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா!
நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக'' என்று பிரார்த்திக்க
வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள்.
(இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6339
உலகத்தில் ஒரு மனிதன், சக மனிதனிடத்தில்
"நீ கொடுத்தால் கொடு இல்லையென்றால் விட்டு விடு' என்று சொல்வான். உணமையில், இது
ஒரு மறைமுக நிர்ப்பந்தமும் மிரட்டலும் ஆகும். "நீ தரவில்லை
என்றால் எனக்குப் பிரச்சனையில்லை. எனக்குத் தருவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்; நீ தராவிட்டால் உனக்குத் தான் நஷ்டம்' என்ற பல பொருளை உள்ளடக்கியது இந்த வாசகம்.
இப்படி நிர்ப்பந்தத்தையும், மிரட்டலையும்
அல்லாஹ்வுக்கு யாரும் விடுக்க முடியாது என்பதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட இந்த ஹதீஸில் கற்றுத் தருகின்றார்கள்.
இந்த அடிப்படையில், "இன்னார்
பெயரை நான் சொல்கின்றேன் எனவே, இறைவா! இன்னார் பொருட்டால் எனக்கு நீ தர வேண்டும்' என்ற அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்வது அவனுக்கு விடுகின்ற மறைமுக நிர்ப்பந்தமும், மிரட்டலும் ஆகும் என்பதை இந்தக் கவிஞரும், அவரது கேடு கெட்ட கொள்கையைச்
சேர்ந்தவர்களும் உணரவில்லை.
இந்தக் கவிஞரின் இந்த நிலைப்பாடு, அல்லாஹ்வை
எடுப்பார் கைப்பிள்ளையாக ஆக்கி விடுகின்றது. அல்குர்ஆன் 85:16 வசனம் கூறுகின்ற "நினைத்ததைச் செய்து முடிப்பவன்'' என்ற அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றலை அடித்து நொறுக்கி அவனை யார்
யார் எல்லாம் ஆட்டுவிக்கின்றாரோ அவருக்குத் தக்க ஆடக் கூடியவன் என்ற கேடு கெட்ட நிலைக்கு
இறக்கி விடுகின்றது.
இந்தப் பலவீனத்தை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். ரப்புல் ஆலமீனாகிய அவன் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை மாற்றக் கூடியவன்
எவனும் இல்லை. இதை அல்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன்
யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது.
தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 10:107
தொழுத பின்னால் ஓதக்கூடிய சில வழமையான துஆக்களில் அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப் படுத்துகின்ற ஆழமான அர்த்தம்
பொருந்திய இத்தகைய துஆவையும் கற்றுத் தருகின்றார்கள்.
"நபி (ஸல்) அவர்கள் கடமை யான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும்
"லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி
ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ லிமா அஉதைத்த, வலா
முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல்
ஜத்' (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன். அவனுக்கு
நிகர் எவருமில்லை (எதுவுல்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே
உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை.
நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எச்செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம்
எந்தப் பயனுமளிக்க முடியாது.) -
நூல்: புகாரி 844
இப்படிப்பட்ட அல்லாஹ்வின் ஆற்றலுக்கெல்லாம் உலை வைக்கக் கூடிய
படுமோசமான பாதகமான சிந்தனையைத் தான் இந்தக் கவிஞர் கொள்கையாகக் கொண்டிருக்கின்றார். இது இவருக்குரிய தனிப்பட்ட கொள்கை கிடையாது. சுன்னத்
வல் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படக் கூடிய அத்தனை ஷியாக் கூட்டத்தின் கொள்கையாகும்.
ஆபத்திற்குக் கை கொடுக்கும் தொழுகையும் துஆவும்
பொதுவாக ஒரு மனிதனுக்குச் சோதனை ஏற்பட்டு விட்டால் அதற்கு என்ன
செய்ய வேண்டும் என்று அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் தெள்ளத் தெளிவாக வழி காட்டி விட்டான்.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)
நபி (ஸல்) அவர்களும் இதற்காகப் பல்வேறு வழிமுறைகளை காட்டித்
தந்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது "லா இலாஹ இல்லல்லாஹுல்
அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப் பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும், பொறுமைமிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.
வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், மாபெரும் அரியாசனத்தின்
அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
நூல்: புகாரி 6345
இதையெல்லாம் விட்டு விட்டு ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தைப் புகழ்ந்தால்
பிரச்சனை தீரும் என்று சொல்வது இவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றாமல் தங்களது
மன இச்சையைப் பின்பற்றுகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. இந்த வகையில் இவர்கள் ஷியா
மதத்தையே பின்பற்றுகின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடுகின்றது.
வஸீலா தேடுவதின் வழிமுறை என்ன?
அஹ்லு பைத்துகளை அல்லது வேறு அவ்லியாக்களை வைத்து தேடப்படும்
போலி வஸீலாவை நாம் கண்டிக்கும் போது, "பாருங்கள்!
இந்த வஹ்ஹாபிளுக்கு நாம் அல்லாஹ் விடம் வஸீலா தேடுவது கூடப் பிடிக்கவில்லை; ஆனால் நாமோ 5:35 என்ற வசனத்தின்
அடிப்படையில் அல்லாஹ்விடம் வஸீலா தேடுகிறோம்' என்று தங்கள் தவறான நிலைப்பாட்டிற்குத் தக்க இந்த வசனத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவனை நோக்கி
ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 5:35
உண்மையில் இவர்கள் சொல்கின்ற இந்த வஸீலாவையா கூறுகின்றது என்று
இப்போது விரிவாகப் பார்ப்போம். இவ்வசனத்தில்
"இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று கூறப்படுகிறது.
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக
- சாதனமாக உள்ளது என்பர்.
அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.
ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா
என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.
அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனது கட்டளைகளை
நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி
விட்டு அவனிடம் கேட்க வேண்டும். அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது
தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளில் போய்க் கேளுங்கள் என்பது
இதன் பொருள் அல்ல.
இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே சான்று
உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.
நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மற்றும் யுக
முடிவு நாள் வரை வரக்கூடிய எல்லா முஸ்லிம்களும் அடங்குவர்.
முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ்
பிறப்பிக்கிறான்.
முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக்
கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இக்கட்டளையின்படி இறைவனை
அஞ்சியாக வேண்டும். அவ்வாறு அஞ்சினார்கள்.
இரண்டாவது கட்டளை அல்லாஹ் வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும்.
இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.
வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள்
செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விடச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால்
பொருந்திப் போகிறது.
வஸீலா என்பதற்கு நல்லடியார் களைப் பிடித்துக் கொள்வது என்று
பொருள் கொண்டால் இந்தக் கட்டளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.
"முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள்'' அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்.
இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான் களுக்குக்
கூட இந்தக் கட்டளை உள்ளது. அந்த மகான்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் அவர்கள் வஸீலாவாக ஆக்கவில்லை யென்றால் இந்தக் கட்டளையை
அவர்கள் மீறிவிட்டார்களா?
எனவே வஸீலாவுக்கு இடைத் தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே
தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.
நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். "நான் உங்களின்
கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றேனே! எனக்காக நீங்கள் உதவக் கூடாதா?' என்று அவரிடம் உதவி கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.
"இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள்'' என்று கேட்டால் நம்மைப் பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார்.
"இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக
இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும்?'' என்று கேட்பார்.
"இன்னார் பொருட்டால் இதைத் தா'' என்று
இறைவனிடம் இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாக உள்ளது.
"நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா'' என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்குக் கோபம் வராதா? "நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்?'' என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று
இவர்கள் நினைக்கின்றனர்.
ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக்காட்டி இன்னொருவர் உதவி
கேட்பதை விட மடமை எதுவும் இருக்க முடியாது. ஒரு மனிதரிடம் அப்படி யாரேனும் கேட்டால்
அவருக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கேட்டால் அவனுக்குக் கோபம்
வராதா? இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க
முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.
எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையைச் சரியான முறையில்
விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும்
செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை
இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.
மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (17:57) தெளிவாகவே கூறுகிறது. வஸீலா என்பது நல்லறம் தான் என்ற கருத்தை
இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது.
அல்குர்ஆன் கூறுகின்ற இந்த உண்மையான நல்லமல்கள், நல்லறங்கள் வாயிலாக
வஸீலா தேடுவதை விட்டு விட்டு இது கூறுக்
கெட்ட ஷியாக் கூட்டம் நல்லடியார்களை வைத்து வஸீலா தேடுகின்றது. அப்படிப்பட்ட வஸீலாவைத்
தான் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இந்த மவ்லிது கிதாப் வளைத்து வளைத்துக் கூறி மக்களை
வழி கெடுக்கின்றது.
EGATHUVAM MAY 2016