மலையின்றி மழையில்லை
செப்டம்பர் இதழின் தொடர்ச்சி...
தென்மேற்கு, வடகிழக்குப்
பருவமழைகளின் பயன்களையும் அதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ற மதில் சுவர்கள் போன்ற
பாதுகாப்புகளையும் கடந்த தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மலைகளின் இன்னபிற பயன்களைப்
பார்ப்போம். இந்த மலைகள் உண்மையில் வானிலிருந்து பொழிகின்ற மழைக்கு மட்டுமல்ல! பனிப்பொழிவின்
வங்கிகளாகவும் திகழ்கின்றன.
தென்மேற்குப் பருவமழை, நிலப்பகுதிகளில்
இடைவிடாத அடைமழையை அள்ளிப் பொழியும் அதேவேளையில் மலைகளின் உச்சிகளில் பனிமழையைப் பொழிகின்றது.
அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப்
புகட்டினோம்.
(அல்குர்ஆன்
77:27)
மலையையும் மழைநீரையும் இணைத்துக் கூறும் இந்த இறைவசனம் எவ்வளவு
பொருத்தமாக,
பொருள் பொதிந்ததாக அமைந்திருக்கின்றது என்பதை நினைத்து நம்முடைய
நாவுகள் ஆச்சரிய மேலீட்டால் சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என்ற திக்ரு மழையில் நனைகின்றன.
உலகிலேயே உயரமான மலைத்தொடரான இமயமலை, மியான்மரில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை 2000 கி.மீ. வரை பரந்து விரிந்திருக்கின்றது. இதன் பெரும்பகுதி தெற்காசிய
நாடுகளில் தான் உள்ளது.
இவ்வளவு பெரிய மலைப் பரப்பில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இமயத்தின் மத்திய, கிழக்கு மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஆரம்பித்து, அவை பனிப்பாறைகளாகப் பாதுகாக்கப்படுகின்றன.
புவியின் இரு துருவத்தின் பனிமலைகளுக்கு அடுத்த பெரிய பனிமலைகளாக
இந்த மலைப்பரப்பு அமைந்திருக்கின்றது.
கங்கை, பிரம்மபுத்திரா, இண்டஸ், சல்வீன், மேகாங், யாங்டெஸ், ஹுவான் ஹோ ஆகிய ஏழு நதிகள் வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டிருக்கக்
காரணம் இந்த மலைத் தொடர் தான். இந்த ஆறுகள் தான் தெற்காசியாவில் வாழும் கோடிக்கணக்கான
மக்களின் குடிநீர், வேளாண்மைக்கான விளைநீர், மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவைத் தருகின்ற உயிர் நீர்.
இந்த மலையில் 33,000 சதுர
கிலோ மீட்டர் பரப்பில் படர்ந்திருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் தான் இந்த நதிகளுக்குத்
தண்ணீர் கிடைக்கிறது.
இதற்கு இப்போது ஒரு பெரிய ஆபத்து, மனிதர்கள் ஏற்படுத்தும் புவி வெப்பத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதை இப்போது பார்ப்போம்.
இந்தப் பனிப்பாறைகள் அளவுக்கு அதிகமாக உருகுவதால் வற்றாத ஜீவநதிகள்
எல்லாம் இன்னும் 30 ஆண்டுகளில் வற்றிப் போய் விடும்
என்று எச்சரிக்கின்றார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.
பனிப்பொழிவு பனிப்பாறையாக மாறி அது உருகி ஆறாக ஓடி வந்தால் அது
இயற்கை. அந்த இயற்கையான நியதி மாறி, பனிப்பாறைகள்
வழக்கத்துக்கு மாறாக, படுவேகமாக உருக ஆரம்பித்திருப்பது
தான் பேரழிவைத் தரும் என்று சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படிப் பனிப்பாறைகள்
வேகமாக உருகக் காரணம் புவியின் வெப்பநிலை அதிகரிப்பு. இதை குளோபல் வார்மிங் என்கிறார்கள்.
வழக்கமாக இந்த மலைப்பகுதியில் ஆண்டுக்கு 0.06 டிகிரி செல்சியஸ் தான் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் பனிப்பாறைகள்
உருகுவது அதிகரித்தாலும், மலைத் தொடரிலேயே உள்ள பனிப்பாறை
ஏரிகள் நிரம்பி,
பிறகு தான் தண்ணீர் வழிந்தோடும். அதனால் பெரிய அளவில் ஆபத்தில்லை.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இமயமலைப் பகுதியின் வெப்பநிலை
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது.
இந்த வெப்பநிலையின் அளவு, கடந்த
சில மாதங்களில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக
உருக ஆரம்பித்திருப்பதால் அங்கு உருவாகியிருக்கும் ஏரிகள் உடைந்து தண்ணீர் பெருக்கெடுக்கும்.
அந்தத் தண்ணீரின் சீற்றத்தைத் தடுக்க எந்தத் தடுப்பும் உதவாது. வெள்ளப் பெருக்கையும்
கட்டுப்படுத்த முடியாது.
இதற்கு உதாரணம், 1985ஆம்
ஆண்டு நேபாளத்தின் கும்பு பகுதியில் உள்ள பனிப்பாறைகள் ஏரிகள் உடைந்தது. அப்போது மக்கள்
பலர் உயிரிழக்க நேரிட்டது. மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள், வீடுகள் என ஏகப்பட்ட இழப்புகள்.
அதற்குப் பிறகு தெற்காசிய நாடுகள் தனித்தனியாக புவியின் வெப்பநிலையையும்
சுற்றுச்சூழல் மாறுபாட்டையும் கண்காணிக்க இமயமலைத் தொடரில் ஆய்வு நிலையங்களை அமைப்பதில்
தீவிரம் காட்டத் தொடங்கின.
பனிப்பாறை ஏரிகள் எந்தப் பகுதியில் உடையும், எந்தப் பகுதியை நோக்கித் தண்ணீர் சீறிப் பாயும் என்பதைக் கணிக்கவே
முடியாது. பல உடைப்புகள் ஏற்படலாம். ஒரே நேரத்தில் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால்
அதன் பாதிப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, வீணாகக்
கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயரும். இதனால் 50 கிலோ மீட்டர்
சுற்றளவுக்குக் கடற்கரைப் பகுதிகள் காணாமல் போய்விடும் அபாயமும் இருக்கின்றது. அதன்
பின், இமயமலைத் தொடரில் பனிப்பாறைகளே இல்லாமல், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படலாம். அப்படி நடந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கற்பனை செய்து கூடப் பார்க்க
முடியாது.
வெப்பநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் உருகும் போது பனிப்பொழிவு
பனிப்பாறையாக மாறுவதும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் காரணம், புவியின் வெப்பநிலை உயர்வு மற்றும் பருவ மாற்றம் என்பதைத் திரும்பத்
திரும்பச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த வெப்பநிலை உயர்வுக்கு, காற்றில்
கலக்கும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற நச்சுப்
புகை தான் பெருமளவில் காரணம். இந்த அளவு, கடந்த சில
ஆண்டுகளில் அதிகரித்திருப்பதை எச்சரித்தும் யாரும் அதில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கக்கூடிய சக்தியைப்
பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும். நிலக்கரி மூலம் இயங்கும் ரயில் போக்குவரத்தைத்
தவிர்த்து,
சாலை வழிப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். அதைப் போலவே, தேவைகளுக்கு ஏற்ப மின்சக்தி, எரிசக்தியைப்
பயன்படுத்த வேண்டும்.
முடிந்த அளவு, சுற்றுச்சூழலுக்குப்
பாதிப்பை ஏற்படுத்துகின்ற ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, புவியின் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம்.
குறைந்த அளவில் அதிகரித்து வந்த புவியின் வெப்பநிலை திடீரென
அதிகரிக்க இன்னொரு காரணத்தையும் இமயமலையில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஜப்பானிய சுற்றுச்சூழல்
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலின்போது
பயன்படுத்திய வெடிமருந்துகள் வீரியமிக்கவை. இவை ஏற்படுத்திய தாக்கம் தான், இமயமலையின் வடகுதிகளில் பனிப்பொழிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அங்கு வழக்கமான பனிப்பொழிவு இல்லாததால் தான் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகின்றது
என்ற அதிர்ச்சியை ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
புவியின் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான அறிவுரைகளை
சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வழங்கினாலும், அதை யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆலோசனை
மட்டும் நடத்தி விட்டு, ஆபத்து என்றவுடன் இப்போது கையைப்
பிசைந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. காரணம், 1985ல் இதற்கான எச்சரிக்கையை ஜப்பானிய ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இனியாவது ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டால் இமயமலையைக் காப்பாற்றலாம்.
அதன் மூலம் வற்றாத நதிகளை வருங்கால தலைமுறைக்கு விட்டுச் செல்லலாம்.
EGATHUVAM NOV 2012