நபிவழிக்கு முரணான மத்ஹபுகள் தொடர்: 8 - தாம்பத்தியத்திற்குத் தடை?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
மாநபி வழி
கணவன், மனைவி இருவரும் இல்லற வாழ்க்கையில்
கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு ஒழுங்குகளை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதில் மனைவியுடன்
உறவு கொள்ளக்கூடாத நாட்கள் எவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் வரும் நாட்களில் மட்டும் தாம்பத்தியத்தில் ஈடுபடக்
கூடாது, இதை தவிர வேறு எந்த நாளிலும் உறவு கொள்ளலாம் என்பது இஸ்லாத்தின்
அறிவுரை ஆகும். இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை.
எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!
அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ்
உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ்
விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:222)
மாதவிலக்கு ஏற்பட்ட நாட்களை தவிர ஒருவர் தம் மனைவியுடன் தாம்
விரும்பிய எந்த நாளிலும் எந்த நேரத்திலும் உறவு கொள்ளலாம். இஹ்ராம் அணிந்த நிலையிலும், நோன்புக் காலங்களில் பகலிலும் உறவு கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர உறவு கொள்ளத்தகாத நாட்கள் என்று இஸ்லாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
மத்ஹபு வழி
மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது
என்று இஸ்லாத்திற்கு எதிராக மத்ஹபு போதிக்கின்றது.
மாதத்தில் முதல் நாள் இரவிலும் கடைசி இரவிலும் மாதத்தின் நடு
இரவிலும் உடலுறவு கொள்வது வெறுப்பிற்குரியதாகும். காரணம் இந்த இரவுகளில் உடலுறவு கொள்ளும்
போது ஷைத்தான் விஜயம் செய்கின்றான் என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூலில் பதிவாகியுள்ளது.
நூல்: இஆனா, பாகம் 3, பக்கம் 273
பொதுவாக, மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத்
தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்று இறைவன் கூறியிருக்கும்
போது இந்த நூலாசிரியர் தனக்கு ஏதோ வஹீ வந்தது போன்று தன் இஷ்டத்திற்கு சில நாட்களைக்
குறிப்பிட்டு அதில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்கின்றார்.
அது மட்டுமின்றி அந்த நேரத்தில் ஷைத்தான் விஜயம் செய்வதாகக்
காரணம் வேறு.
இந்த நாட்களில் உறவு கொள்ளக்கூடாது என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் உள்ளதா? அல்லது இச்சட்டத்தை இறைவன் இயற்றினானா? இச்சட்டத்திற்கு குர்ஆனையோ, நபிவழியையோ
குறிப்பிடாமல் அந்த நூலில் உள்ளது, இதில் உள்ளது
என்று குறிப்பிடுவதிலிருந்தே இது இறைச்சட்டம் அல்ல என்பது தெளிவாகிறது.
இறைவன் நேரடியாகவோ, தன் தூதர்
மூலமாகவோ இயற்றாத சட்டம் ஒரு போதும் செல்லாது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
"அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு
என்ன நேர்ந்தது?
யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கின்றார்களோ
அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது, (செல்லாது)
அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனை தான் நிறைவேற்றத்
தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2155
அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ தடுக்காத ஒன்றை, கூடாது என்று சொல்லும் இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
இதை இறைவன் வன்மையாகக் கண்டிக்கின்றான்.
"இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது'' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்
கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:116)
"அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக்
கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக)
சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப்
பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோ இச்சைகளைப்
பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.
(அல்குர்ஆன் 6:150)
இறைவன் தடுக்காததை தம் அளவில் தடுத்த நபிகள் நாயகத்தையே இறைவன்
கண்டித்துள்ளான்.
நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின்
திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (66:1)
ஆனால் மத்ஹபோ இன்னின்ன நாட்களில் உறவு கொள்ளக்கூடாது என்று அர்த்தமற்ற, ஆதாரமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கின்றது. எனவே குறிப்பிட்ட
நாட்களில் உறவு கொள்ளக்கூடாது என்று இறைவன் தடுக்காததைத் தடை செய்து நபிவழியுடன் மோதுகின்ற
மத்ஹபைப் புறக்கணிப்போம். குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவோம்.
ஆலிம்களுக்காக எழுந்து நிற்பது
மத்ஹபு வழி
ஆலிம்களுக்காக எழுந்து நிற்பதைப் போன்று குர்ஆனிற்காக எழுந்து
நிற்பது சுன்னத்தானது. மாறாக ஏற்றமானது.
(ஃபத்ஹுல் முயீன் பாகம்: 1 பக்கம்:
69)
குர்ஆனிற்காகவும், ஆலிம்களுக்காவும்
எழுந்து நிற்க வேண்டும், அது சுன்னத் என்று ஷாஃபி மத்ஹபின்
சட்டவிளக்க நூலில் கூறப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாக வைத்தே சுன்னத் ஜமாஅத் மத்ரஸாக்களில் ஆசிரியர்களுக்காக
மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக வைத்திருக்கிறார்கள்.
மார்க்கத்தை (?)
போதிக்கும் அந்த ஆசான்களும் அதைப் பெருமையோடு ஏற்றுக் கொள்பவர்களாக
இருக்கிறார்கள். இவ்வாறு மனிதர்களுக்காக எழுந்து நிற்பதை மாநபி வழி அனுமதிக்கின்றதா?
மாநபி வழி
முஆவியா (ரலி) அவர்கள் வெளியே செல்வதற்காகப் புறப்பட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களும், இப்னு ஸஃப்வான்
(ரலி) அவர்களும் அவரைக் கண்ட போது எழுந்து நின்றார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "நீங்கள் இருவரும் உட்காருங்கள். "மனிதர்கள் தனக்காக எழுந்து
நிற்பது யாருக்கு மகிழ்ச்சியளிக்குமோ அவர்கள் தங்களது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்' என்று நபியவர்கள் கூறியதை நான் கேட்டேன்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ்,
நூல்: திர்மிதி 2679
நபியவர்களை விடவும் நபித்தோழர்களுக்கு மிகவும் நேசத்திற்குரியவர்
யாரும் இருக்கவில்லை. தமக்காக எழுந்து நிற்பதை நபியவர்கள் வெறுத்த காரணத்தினால் நபித்தோழர்கள்
யாரும் நபியவர்களை காணும் போது எழுந்து நிற்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
திர்மிதி 2678
பிறர் தனக்காக எழுந்து நிற்பதை நபியவர்கள் விரும்பமாட்டார்கள்
என்றும், அவ்வாறு விரும்புவன் நரகத்திற்குரியவன் என்றும் மேற்கண்ட ஹதீஸ்கள்
எடுத்துரைக்கின்றன. நபிகள் நாயகத்திற்காகவே எழுந்து நிற்கக் கூடாது என்றால் ஏனைய மனிதர்களைப்
பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறிருக்கும் போது ஆலிம்களுக்காக எழுந்து நிற்பது சுன்னத்
என்று மத்ஹபு போதிக்கின்றதே? இது நபிவழியைப் பிரதிபலிக்கும்
போதனையா? இது சரிதானா?
நபிகளார் எதை விரும்ப மாட்டார்கள் என்று ஹதீஸில் வந்துள்ளதோ
அதையே சுன்னத் என்று சட்டம் சொல்வதிலிருந்து மத்ஹபு நபிவழிக்கு முரணானதே என்பது தெள்ளிய
நீரோடையைப் போன்று தெளிவாகிறது.
இதில் குர்ஆனிற்காக எழுந்து நிற்பதையும் சுன்னத் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நமது காலத்தில் உள்ளதைப் போன்று குர்ஆன் தொகுக்கப்பட்ட புத்தமாக நபிகள் நாயகத்தின்
காலத்தில் இல்லை என்பதை அறிந்தாலே இச்சட்டத்திற்கும் நபிவழிக்கும் சம்பந்தமில்லை என்பதை
அறியலாம். மேலும் நபிகளார் காலத்தில் குர்ஆனுடைய வசனங்களை தோலிலும், எலும்பிலும் ஸஹாபாக்கள் எழுதி வைத்திருந்தார்கள். இதற்காக எழுந்து
நிற்க வேண்டும் என நபிகளார் கூறியதுமில்லை. யாரும் இவற்றிக்காக எழுந்து நிற்கவும் இல்லை.
எனவே இவர்கள் கூறிய சட்டம் யாவும் நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும்
மாபாதகச் செயலே அன்றி துளியும் உண்மையில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் கூறாத ஒன்றை, நான் கூறியதாக
யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி),
நூல்: புகாரி 109
கத்னா விருந்து
மத்ஹபு வழி
கத்னாவிற்கு செய்யப்படுவதைப் போன்று ஏனைய விருந்துகளுக்குப்
பதிலளிப்பது சுன்னத்தாகும்
(ஃபத்ஹுல் முயீன் பாகம்: 3 பக்கம்:
363)
கத்னா விருந்துக்கு யாரேனும் அழைத்தால் அவ்வழைப்பை ஏற்று, விருந்தில் கலந்து கொள்வது நபிவழி என்று மத்ஹபு கூறுகின்றது.
மாநபி வழி
ஆண்கள் கத்னா செய்வது இயற்கை மரபு என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின்
முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை
அகற்றுவது,
நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக்
கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகüல் அடங்கும்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5889
கத்னா செய்வது இயற்கை மரபு என்று கூறியுள்ளார்களே தவிர இதற்கு
விருந்தளிக்க வேண்டும் என்றோ, அந்த விருந்தில் கலந்து கொள்ள
வேண்டும் என்றோ நபிகள் நாயகம் எங்கும் கூறவில்லை.
மேலும் கத்னா செய்வதென்பது நகம் வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற சாதாரண செயலே. இவைகளுக்கு எப்படி
விருந்தளிப்பது அவசியமற்றதோ அது போன்று கத்னாவிற்கு விருந்தளிப்பது அவசியமற்றது என்பதை
நபிகள் நாயகம் இந்த செய்தியின் வாயிலாக உணர்த்துகின்றார்கள்.
கத்னாவிற்கு விருந்தளித்தல் என்ற நடைமுறை நபியவர்களின் காலத்தில்
அறவே இல்லை. நபிகளாரின் காலத்தில் இல்லாததை மத்ஹபு சுன்னத் என்கிறதே? இது தான் நபிவழியைப் பின்பற்றி சட்டம் இயற்றுவதா?
மத்ஹபைப் பின்பற்றும் பல முஸ்லிம்கள் கத்னா விருந்தை ஏதோ மார்க்கக்
கடமை போன்று எண்ணி தங்கள் பொருளாதாரங்களை விரையம் செய்வதற்கு மத்ஹபின் இந்தச் சட்டமே
தூண்டுதலாக உள்ளது.
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர்.
ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 17: 27
நம்மை ஷைத்தானின் நண்பர்களாக மாற்றும் வீண் விரையத்தை செய்யத்
தூண்டும் மத்ஹபு சட்டங்கள் நபிவழி அடிப்படையில் நம்மை அழைத்துச் செல்லுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இந்த விருந்தழைப்புக்குப் பதிலளிப்பது சுன்னத் என்று சொல்லி
நம்மை இறைவனின் கோபத்திற்குரியவர்களாக மாற்றும் வேலையைத் தான் மத்ஹபு செய்கின்றது.
எனவே இதிலிருந்து தப்பிக்க மத்ஹப் என்ற மாயையிலிருந்து விலகுவோமாக.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில்
ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப்
போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
(அல்குர்ஆன்
4:140)
பிறையை சுட்டிக்காட்டுதல்
மத்ஹபு வழி
பிறையைப் பார்த்தால் அதன் பக்கம் சுட்டிக் காட்டுவது வெறுக்கத்தக்கதாகும்.
ஏனென்றால் இது அறியாமைக்கால பழக்கவழக்கங்களில் உள்ளதாகும்
(துர்ருல் முஹ்தார் பாகம்: 2 பக்கம்:
433)
பிறையை சுட்டிக்காட்டுவது அறியாமைக்கால பழக்கம் என்பதால் அது
கூடாது என்று இதில் சொல்லப்பட்டுள்ளது.
மாநபி வழி
இஸ்லாத்தில் உள்ள சில வணக்க வழிபாடுகளுக்கும் பிறைக்கும் நெருங்கிய
தொடர்பு உண்டு.
ரமலான் மாத நோன்பு, பெருநாள் ஆகியவைகளை
பிறையைப் பார்த்து தீர்மானிக்க வேண்டும் என்று நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம்
தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1909
மினாவில் தங்குதல், ஸயீ, கல்லெறிதல் போன்ற ஹஜ்ஜின் கிரியைகள் அனைத்தும் பிறையை அடிப்படையாகக்
கொண்டே செய்யப்படுகின்றது. மேலும் அரஃபா மற்றும் ஆஷுரா நோன்பு, மாதத்தில் 13, 14, 15 நோன்பு போன்ற சில நஃபிலான நோன்புகளை நோற்பதற்குப் பிறை பார்க்கப்பட்டு
கணக்கிடப்படுவது அவசியமாகிறது.
இவ்வாறு இஸ்லாத்தின் பல காரியங்களுக்கும் பிறை பார்க்கப்படுவது
அவசியம் எனில் பிறையைப் பார்த்த ஒருவர் மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக அதை சுட்டிக்காட்டுவது
எப்படி தவறாகும்? பிறை அதோ அங்கு உள்ளது என்று
சுட்டிக் காட்டினால் தானே மற்றவர்கள் பார்க்க முடியும்?
இதை அறியாமைக் கால பழக்கம் என்றால் நபியவர்கள் இவ்வாறு கூறினார்களா?
நாங்கள் "ஒரு போரில்' அல்லது
"ஒரு படையில்' இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்கüல் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார்.
அப்போது (அடி வாங்கிய) அன்சாரி "அன்சாரிகளே! (உதவுங்கள்.)'' என்று கூறினார். அந்த முஹாஜிர் "முஹாஜிர்களே! உதவுங்கள்!'' என்று கூறினார். இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
செவியேற்று,
"இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்கüல் ஒருவர் அன்சாரிகüல் ஒருவரைப்
பிட்டத்தில் அடித்து விட்டார்'' என்று கூறினர். அப்போது நபி
(ஸல்) அவர்கள்,
"இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குல
மோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை'' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 4905
தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையில் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்துள்ள
குலத்தைக் குறிப்பிட்டு உதவிக்கு அழைப்பது அறியாமைக்கால பழக்கம் என்று நபிகளார் இதில்
கூறியுள்ளார்கள். இவ்வாறு பிறையை சுட்டிக் காட்டுவதைப் பற்றி நபிகளார் எங்காவது கூறியிருக்கின்றார்களா? பிறையை சுட்டிக்காட்டுவது கூடாது என்று மத்ஹபு சொல்வதற்கு நபிவழியில்
எவ்வித ஆதாரமும் இல்லை. இது அடிப்படை ஆதாரமற்ற, அர்த்தமற்ற
சட்டம்.
நபிவழிக்கு துளியும் சம்பந்தமில்லாத, அர்த்தமற்ற சட்டங்களை மத்ஹபு மக்களுக்குப் போதிப்பது இது ஒன்றும்
புதிதல்ல. மாறாக எத்தனையோ மூடத்தனமான சட்டங்களைப் போதித்துள்ளது என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.
இதற்கு இன்னும் ஒரு உதாரணமாக பின்வரும் சட்டத்தை சொல்லலாம்.
மனிதன் அல்லது ஒரு நாய் சோப்பு பாத்திரத்தில் விழுந்து சோப்பாக
மாறிவிட்டால் அது தூய்மையானதாகும். (மனிதன் மற்றும் நாயின்) தன்மை மாறிவிட்டதின் காரணத்தினால்
(ரத்துல் முஹ்தார் பாகம்: 2 பக்கம்:
465)
இதைப் பற்றி விரிவாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை. படிக்கும்
போதே இது எவ்வளவு முட்டாள்தனமான சட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
எப்படித்தான் இவர்களுக்கு இப்படியெல்லாம் கற்பனை வருகின்றதோ
தெரியவில்லை. இது தான் மத்ஹபு சட்டங்களின் நிலை என்பதைப் புரிந்து கொண்டால் சரி.
EGATHUVAM NOV 2012