May 9, 2017

கால் நூற்றாண்டு கடத்திய ஸைபுத்தீன் - 2

கால் நூற்றாண்டு கடத்திய ஸைபுத்தீன் - 2

தொடர்: 2                 
களமும் காரணமும்

கால் நூற்றாண்டுகளாக எந்த வலையிலும் சிக்காமல் நழுவிக் கொண்டிருந்த ஸைபுத்தீன் ரஷாதியை விவாதக் களத்திற்குக் கொண்டு வர நாம் செய்த முயற்சிகளைக் கடந்த இதழில் கண்டோம். தொடர்ந்து கடிதப் போக்குவரத்திலேயே காலம் கழித்த ஸைபுத்தீன் ரஷாதி, ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின்னர் கடிதத் தொடர்பையும் நிறுத்தி விட்டார். சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் நாம் மீண்டும் கடிதம் அனுப்பினோம்.

முனாழரா பற்றிய பி.ஜே.யின் 30.01.89 தேதியிட்ட கடிதத்திற்கும் 01.02.89 அன்று சென்னையிலிருந்து எழுதிய கடிதத்திற்கும், 04.02.89 அன்று தங்கள் ஊரான பெரியகுளத்திலிருந்து போஸ்ட் செய்த கடிதத்திற்கும் தங்களிடமிருந்து பதிலே வரவில்லை.

எதிர்பாராதவிதமாக 29.01.89 அன்று நாகர்கோவிலில் பி.ஜே. அவர்களைச் சந்தித்துச் சென்ற தாங்கள் 08.02.89 அன்று பெங்களூரிலிருந்து பி.ஜே.க்கு எழுதிய கடிதத்தில், "நாகர்கோவிலில் தற்செயலாக உங்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் உபசரிப்பு மனதைக் கவர்ந்தது. ஜஸாக்குமுல்லாஹ். ஓரிரு நாட்களில் விவாதம் பற்றிய முடிவை எழுதுகிறேன்'' என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் ஐந்து மாதங்கள் கழிந்தும் மேற்படி கடிதத்திற்குப் பிறகு தங்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

14.01.89ல் தாங்கள் எழுதிய கடிதப்படி முனாழரா ஏற்பாட்டில் கலந்து கொள்ளுமாறு மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா சபைக்கு அழைப்புக் கடிதம் பதிவுத் தபால் மூலம் அனுப்பினோம். அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்பதையும் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இவ்வாறு விவாத ஏற்பாட்டுக் குழுவினரால் 27.07.89 அன்று எழுதப்பட்ட கடிதத்திற்கு 18.08.89 அன்று ஸைபுத்தீன் ரஷாதியிடமிருந்து பதில் வந்தது. அதில் விவாத்திலிருந்து பின்வாங்குவதை சூசகமாகக் குறிப்பிட்டார். இதற்கிடையே பெங்களூருக்கு நேரடியாகச் சென்று ஸைபுத்தீன் ரஷாதியை நமது சகோதரர்கள் சந்தித்து விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். 18.08.89 தேதியிட்ட கடிதத்தில் அதையும் அவர் குறிப்பிடுகின்றார்.

உங்களின் 27.07.89 தேதியிட்ட அஞ்சல் கிடைத்தது. அதற்கு முன்னால் எழுதப்பட்ட அனைத்துத் தபால்களும் கிடைக்கப் பெற்றேன். நான் அவைகளுக்குப் பதில் எழுதாமல் இருந்ததற்குக் காரணங்கள் உண்டு.

ஜமாஅத்துல் உலமா நண்பர்களின் ஆலோசனை. அதாவது இப்புதிய முஜ்தஹித்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் பொய்யையும் புரட்டையும் மூலதனமாகக் கொண்டிருக்கும் இவர்களுடன் விவாதம் என்ன வேண்டிக் கிடக்கின்றது? (இதுவும் ஒருவகையில் முழுக்க முழுக்க உண்மையே)....

.....குறிப்பு: இதுபற்றி இரண்டு பேர் விசாரிக்க வந்தார்கள். அவர்களும் டேப் செய்து வந்து உங்களிடம் விஷயத்தை விளக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

பிரசுரம் கொடுத்த பீதியும் பிரச்சனையும்

இதன் பிறகு நீண்ட திரை விழுந்தது. அவ்வளவு தான். அடுத்து மூன்றாண்டுகள் கழித்து சென்னை மக்கா மஸ்ஜிதில் இந்தப் பிரச்சனை மீண்டும் வெடிக்கின்றது.

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற பிரசுரம் அல்ஜன்னத் மாத இதழில் வெளியாகியிருந்தது. அந்தப் பிரசுரத்தைப் பிரதி எடுத்து மக்கா மஸ்ஜிதில் கூடிய உலமாக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட 15 பேரிடம் கைருல்லாஹ் பாக்கவி என்ற சகோதரர் கொடுத்தார்.

அதன் விளைவு எப்படியிருந்தது என்பதை கைருல்லாஹ் பாக்கவி 07.03.92 அன்று எழுதிய கடிதத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

அல்ஜன்னத் பிப்ரவரி இதழில் இலவச இணைப்பாக, இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் கண்டேன்.

கடந்த 29.02.92 மற்றும் 01.03.92 ஆகிய நாட்களில் சென்னையில் வரலாறு காணாத விதத்தில் ஆலிம்களின் பொதுக்குழுவும் அதையொட்டி உளறுவாயர்கள் பங்கேற்ற ஷரீஅத் மாநாடும் நடந்தேறியது.

அம்மாநாட்டில் பங்கேற்க கதாநாயகன் ஸைபுத்தீன் ரஷாதி வந்திருந்தார். அவ்வமயம் நான் அல்ஜன்னத்தில் வந்திருந்த அந்தப் பிரசுரத்தை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து மிக முக்கியமான 15 ஆலிம்களின் கையில் கொடுத்து, இதில் உள்ள செய்திகளில் எந்த அளவுக்கு உண்மை என்று கேட்டுச் சொல்லுமாறு கூறியிருந்தேன்.

மேற்படி பிரசுரத்தின் ஜெராக்ஸ் காப்பியை கையில் வைத்துக் கொண்டு அம்மாநாட்டில் பேசிய ஸைபுத்தீன் பெரிதும் ஆத்திரப்பட்டார். ஆவேசப்பட்டார். ஆனால் உளறல்களை மட்டும் நிறுத்தவில்லை. மேலும் அதனை அவர் அல்ஜன்னத்தின் ஜெராக்ஸ் காப்பி என்பது கூடப் புரியாமல், "என்னைப் பற்றி அவதூறு செய்வதற்கென்றே நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள்' என்று அதில் குறிப்பிடாத செய்திகளையெல்லாம் பொய்யாக அவிழ்த்து விட்டார்.

பிறகு மக்ரிப் தொழுதவுடன் அந்தக் காப்பியை வெளியிட்ட என்னுடன் பேச வேண்டும் என்று அழைத்தார். தன்னந்தனியாகச் சென்ற என் மீது பெரிதும் ஆவேசப்பட்டு சில நிமிஷ வாக்குவாதத்தில் தோற்று, வாய்க்கு வந்தபடி ஏசிப் பேசி, அவரது கூட்டாளிகள் 30 பேர் உட்பட என் மீது கொலை வெறியுடன் நெருங்கினர். அவர்களது பிடியிலிருந்து நான் தப்பிச் சென்று கூட்டம் நடந்த மேடை மீது அவ்வமயம் மைக்கில் உரையாற்றிக் கொண்டிருந்த மக்கா மஸ்ஜித் செக்ரட்டரி அப்துல் கரீம் என்பவரிடம் விபரத்தைக் கூறினேன். உடனே அவர், மஸ்ஜிதின் கண்ணியத்தைக் காப்பாற்றுமாறும் அதனைப் பாழ்படுத்திவிட வேண்டாம் என்றும், நபியுல்லாஹ்வின் வாரிசுகளை (?) மீண்டும் மீண்டும் மைக்கில் வேண்டுகோள் விடுத்து பெரும் கலவரமாக உருவாகி கொலை விழும் சூழலைத் தடுத்து நிறுத்தினார். நான் பிழைத்துக் கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

தயவு செய்து அவர் பற்றி மற்ற ஜெராக்ஸ் காப்பிகளை உடனே எனக்கு அனுப்புங்கள். அதனை நோட்டீஸாகவும் வெளியிட முயற்சிக்கிறேன்.

ஏ. கைருல்லாஹ், சென்னை

இதன் பின்னர் மீண்டும் ஒரு நீண்ட திரை விழுகின்றது. அதன் பின்னர் 1996ல் விவாதம் தொடர்பாக ஷம்சுல்லுஹா மீண்டும் பி.ஜே.யிடம் தொடர்பு கொள்கின்றார். அதற்கு பி.ஜே. 07.10.1996 அன்று எழுதிய பதில் கடிதம் இதோ:

ஸைபுத்தீனுடன் விவாதம் நடத்துவது சம்பந்தமாக தாங்கள் வெளியிட்டுள்ள பிரசுரமும் கடிதமும் கண்டேன். ஸைபுத்தீனுடன் விவாதம் நடத்த நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

மத்ஹபுகள், தர்கா வழிபாடுகள் பற்றியோ வேறு மஸாயில்கள் பற்றியோ அவருடன் விவாதிக்கத் தயார். அவற்றுடன் அவர் விரும்புவது போல் பி.ஜே. பொய்யனா என்ற தலைப்பையும், ஸைபுத்தீன் பொய்யனா என்ற தலைப்பையும் விவாதிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

நான் எழுத்து மூலமாக ஒப்புதல் அளித்திருப்பது போல் அவரிடமும் எழுத்து மூலமாக ஒப்புதல் பெற்று அதன் நகலை எனக்கு அனுப்புங்கள். பின்னர் நானும் ஸைபுத்தீனும் மேலப்பாளையத்தில் சந்தித்து எங்கே, எப்போது விவாதத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று பேசி ஒப்பந்தம் செய்வோம்.

மத்ஹபுகள், தரீக்காக்கள், தர்கா வழிபாடுகள் பற்றி அவர் விவாதிக்க முன் வராமல் பி.ஜே. பொய்யனா என்பது பற்றி மட்டும் விவாதிக்கலாம் என்று திசை திருப்ப முயன்றால் அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். அதைப் பற்றியும் விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதற்கு முன்னதாக நான் குறிப்பிடும் தலைப்புகள் விவாதிக்கப்பட வேண்டும். இதை முடித்து விட்டு, நான் பொய்யனா? அவர் பொய்யனா என்பதையும் விவாதிக்கலாம்.

பி.ஜே.யின் இக்கடிதத்தை ஷம்சுல்லுஹா 26.10.96 அன்று கூரியர் மூலம் ஸைபுத்தீனுக்கு அனுப்பி வைக்கின்றார். இதற்கு எந்தப் பதிலும் இல்லை.

அதன் பின்னர் 1997ல் பி.ஜே. மேலப்பாளையத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க, "நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்'' என்ற தலைப்பில் உரையாற்றி மத்ஹபு மாயைக்கு மரண அடி கொடுத்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக கலீல் அஹ்மத் கீரனூரி, ஸைபுத்தீன் ரஷாதி ஆகியோர் இணைந்து மேலப்பாளையத்தில் பேசினார்கள்.

அந்தக் கூட்டத்தின் போது நமது ஜமாஅத் சார்பில், "விவாதத்திற்குத் தயாரா?'' என்ற தலைப்பில் "ஸைபுத்தீன் ராஷாதியை விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்' என்று சுவரொட்டிகள் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டன.

கலீல் அஹ்மத் கீரனூரி, ஸைபுத்தீன் ரஷாதி கூட்டத்திற்கு நமது ஜமாஅத் சார்பில் பதில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்களது கூட்டம் முடிந்த ஓரிரு நாட்களில் மேலப்பாளையத்தில் மூன்று கொலைகள் நடக்கின்றன. அதன் பின்னர் இரு வாரங்களில் நான்காவது கொலையும் நடந்து, ஊரில் கலவர சூழல் ஏற்பட்டது.

ஷம்சுல்லுஹா, ஸய்யது இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்படி கொலை வழக்கில் கைது செய்யப்படுகின்றனர். மேலப்பாளையத்தில் ஒரு குட்டி அவசர நிலை பிரகடனப்பட்டிருந்தது. இக்கால கட்டத்திற்குப் பிறகு, இந்தக் கொலையுதிர் காலத்திற்குப் பிறகு ஸைபுத்தீன் மேலப்பாளையத்திற்கு எட்டியே பார்க்கவில்லை.


இதன் பின்னர், மேலப்பாளையத்தில் 2012ஆம் ஆண்டு பி.ஜே. அவர்கள், "இறுதி நபித்துவம்'' என்ற தலைப்பில் ஆற்றிய உரைக்குப் பதில் தெரிவிக்கும் நோக்கில் மஜ்லிசுல் உலமா ஏற்பாடு செய்த கூட்டத்திற்குத் தான் ஸைபுத்தீன் ரஷாதி வந்தார். அதாவது, கிட்டத்தட்ட 15 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு மேலப்பாளையத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

EGATHUVAM APR 2013