May 9, 2017

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை - 4

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை - 4

தொடர்: 4


அப்துந் நாசிர், கடையநல்லூர்

முந்தைய  இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம்.

இந்த இதழில் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் நபியவர்கள் கூறிய பொன்மொழிகளைப் பார்க்கவிருக்கின்றோம்.

ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகள்

நாம் சென்ற இதழ்களில் தொழுகைக்காகக் காத்திருத்தல், பள்ளிக்கு முன்கூட்டியே வருதல், பள்ளிக்கு நடந்து வருதல் போன்ற நற்காரியங்களின் சிறப்புக்களைப் பற்றிப் பார்த்தோம். அவை அனைத்துமே ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புக்களில் உள்ளடங்கியவை தான். ஏனெனில்  நாம் பள்ளிவாசலுக்குச் செல்லும் நோக்கமே தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றுவதற்காகத் தான். நாம் பள்ளிவாசலுக்கு முன்கூட்டியே வருவதும், நடந்து வருவதும், தொழுகைக்காகக் காத்திருப்பதும் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.

நபி (ஸல்) அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை மிகவும் வலியுறுத்தி உள்ளார்கள். அவற்றின் முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் காண்போம்.

கூட்டுத் தொழுகை நேரிய வழிகளில் ஒன்று

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி வரட்டும். ஏனெனில், அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுது கொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுது வருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.

யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.

நூல்:  முஸ்லிம் (1159)

இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகர் என்பது தெளிவாகின்றது. நாம் இந்த நயவஞ்சகத் தன்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையானவர்களாக இருந்துள்ளார்கள்.

பாங்கைக் கேட்பவர் பள்ளிக்கு வருவது அவசியம்

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை'' என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்புச் சப்தம் உமக்குக் கேட்கிறதா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!'' (கூட்டுத் தொழுகையில் வந்து கலந்து கொள்வீராக!) என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:  முஸ்லிம் (1157)

கண் தெரியாத நபித்தோழருக்கே நபி (ஸல்) அவர்கள் வீட்டில் தொழுவதற்கு அனுமதிக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பாங்கு சப்தம் கேட்டு விட்டால் பள்ளிக்கு வந்தாக வேண்டும் என்ற கட்டளையை நாம் தெளிவாக உணர முடிகின்றது. இந்தக் கட்டளையைத் தெரிந்த பின்பும் நாம் பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றோம் என்று தான் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுவது கூடாது

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்தார். உடனே (அங்கிருந்த) ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அந்த மனிதர் பள்ளிவாசலை விட்டு வெளியேறும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, "கவனியுங்கள்: இவர், அபுல்காசிம் (முஹம்மத் நபி) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்), நூல்: முஸ்லிம் (1160)

ஷைத்தானின் ஆதிக்கம்

"ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் பாங்கு கூறப்பட்டு தொழுகை நிலை நாட்டப்படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி)நூல்: அஹ்மத் (27554)

தீயிட நாடும் திருத்தூதர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: விறகுக் கட்டுகளைத் திரட்டும்படி எனது இளைஞர்களுக்கு உத்தரவிட்டு எவ்விதக் காரணமும் இல்லாமல் வீடுகளில் தொழுகின்ற கூட்டத்தினரிடம் சென்று அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தி விட நான் எண்ணியதுண்டு.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அபூதாவுத் (462)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 644, 7224

ஜமாஅத் தொழுகை விஷயத்தில் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

நோயுற்ற நிலையிலும் ஜமாஅத்தை பேணுதல்

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்கüடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் கூறக் கூடாதா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம் (கூறுகிறேன்). நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது, "மக்கள் தொழுதுவிட்டனரா?'' என்று கேட்டார்கள். நாங்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குüத்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள்.

பின்னர் அவர்கüன் மயக்கம் தெüந்தபோது, "மக்கள் தொழுதுவிட்டனரா?'' என்று கேட்டார்கள். நாங்கள், "இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னோம். அப்போது "தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்தபோது) அவர்கள் உட்கார்ந்து குüத்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள்.

பின்னர் மயக்கம் தெüந்தபோது, "மக்கள் தொழுதுவிட்டனரா?'' என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் "இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்'' என்று கூறினோம். அப்போது "தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்'' என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத்தோம்.) அவர்கள் உட்கார்ந்து குüத்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் மயக்கம் தெüந்தபோது (அப்போதும்,) "மக்கள் தொழுதுவிட்டனரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!'' என்றோம். அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்üவாசலில் வீற்றிருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்கüடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்'' என்று கூறினர்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் - அன்னார் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர் - "உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று (உமர் அவர்கüடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இதற்கு நீங்கள்தாம் என்னைவிட தகுதியுடையவர்'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கüடம் கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர்

(ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்கüல் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சுற்றுக் குறைந்திருக்கக் கண்டபோது இரண்டு பேரிடையே (அவர்களைக் கைத்தாங்கலாக்கிக் கொண்டு) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள்.- அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பின் வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) "என்னை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழத் துவங்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.

நூல்: புகாரி (687)

அதிக நன்மையைத் தரும் ஜமாஅத் தொழுகை

"யார் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி (651)

நயவஞ்சகரின் அடையாளம்

"சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி (657)

அல்லாஹ்வை மகிழ்விக்கும் ஜமாஅத் தொழுகை

"வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய குடும்பத்தார்கள் சந்தோஷப்படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச் சென்றால் அவர் (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம் அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (8332)

அல்லாஹ்வின் விருந்தாளி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின்  விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப் படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்.

அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி), நூல்: அல்முஃஜமுல் கபீர் (6016)

ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்பவரை அல்லாஹ்வின் விருந்தாளி என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்வை விட மிகச் சிறப்பாக யாராவது விருந்தாளியை உபசரிக்க இயலுமா? ஜமாஅத்துடன் தொழுபவர்கள் எப்பெரும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள் என்பதற்கு மேற்கண்ட நபிமொழி அற்புதமான சான்றாகும்.

வீட்டில் தொழுவதை விட ஜமாஅத் தொழுகை சிறந்தது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி (477)

27 மடங்கு நன்மைகள்

"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி (645)

ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இஷா, ஃபஜ்ரை ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் (1162)

பின்வரும் நபிமொழி இஷாவையும், ஃபஜ்ரையும் ஜமாஅத்தாகத் தொழுதில் எவ்வளவு பெரிய நன்மை மறைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (615)

குளிர்ச்சியான தொழுகைகளும் குளுகுளு சொர்க்கமும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பகலின் இரு ஓரங்களிலுள்ள ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ச்சியான இருநேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புகாரி (574)

சுபுஹ் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹு தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டு கொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்:  முஸ்லிம் (1163)

வானவர்கள் ஒன்று கூடும் ஃபஜ்ர் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.

இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் "அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும்'' எனும் (17:78) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

நூல்: புகாரி (648)

வானவர்கள் சாட்சி கூறும் ஃபஜ்ரும் அஸ்ரும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், "என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?'' என்று -அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே- கேட்பான். அதற்கு வானவர்கள், "அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்'' என்று பதிலளிப்பார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (7486)

நரகத்திலிருந்து காக்கும் ஃபஜ்ரும் அஸ்ரும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் -அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர் - எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்'' என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள்  கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?'' என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் "ஆம்' என்றார்கள். அந்த மனிதர் "நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக் கொண்டது'' என்று கூறினார்.

அறிவிப்பவர்:  அபூபக்ர் பின்  உமாரா பின் ருஐபா

நூல்: முஸ்லிம் (1115)

இறைவனைக் காணும் பாக்கியம்

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, "இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு, "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்'' எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்:  ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (554)

நன்மையைத் தரும் நடுத்தொழுகை

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும்  பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!

அல்குர்ஆன் 2:238

இவ்வசனத்தில் (2:238) நடுத் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல்: புகாரி 6396)

அஸரை இழந்தவர் அனைத்தையும் இழந்து விட்டார்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்டவரைப் போன்றவரே ஆவார்.

அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (552)

அஸரைப் பேணியவருக்கு இருமடங்கு கூலி

(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முகம்மஸ்' எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு "இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத்தொழுகையைப் பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸ்ருக்குப் பின்னாலிருந்து (சூரியன் மறைந்து) நட்சத்திரம் தோன்றும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.

அறிவிப்பவர்:  அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (1510)

தொழுகையை ஜமாஅத்தாகப் பேணித் தொழுபவர்களுக்கு எத்தகைய பாக்கியங்களை நம்முடைய மார்க்கம் வழங்கியுள்ளது என்பதைப் பற்றி மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் அறிந்து கொண்டோம்.


ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்கு அந்தத் தொழுகையின் மூலம் இன்னும் அதிகமான பாக்கியங்கள் கிடைக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை வரக்கூடிய இதழ்களில் விரிவாகக் காண்போம்.

EGATHUVAM APR 2013