இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 30 - கல்விக் கடலின் கலங்கிய பார்வை புறாக் கவிதை இனிக்கின்றது புனித குர்ஆன் புளிக்கின்றது
தொடர்: 30
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
குர்ஆனை விட இசைப் பாடல்கள் இதயங்களை ஈர்க்கக் கூடியவை என்பதற்கு கஸ்ஸாலி ஏழு வகை காரணங்களை கூறுகின்றார்.
அவற்றில் முதல் வகையில் குர்ஆனுடைய அனைத்து வசனங்களும் கேட்பவனுடைய
சூழ்நிலைக்கேற்ப அமையாது. ஆனால் கவிதைகள் கேட்பவனின் சூழ்நிலைக்கேற்ப அமையும் என்று
தனது வாதத்தை நிறுவியிருந்தார். அந்த வாதத்தின் அபத்தங்களை, அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற விமர்சனத்தில் தக்க ஆதாரங்களுடன்
விளக்கியிருந்தோம்.
கஸ்ஸாலியின் இரண்டாவது வாதத்தை இப்போது பார்ப்போம்:
குர்ஆனை அதிகமானோர் மனனம் செய்திருக்கின்றனர். திருக்குர்ஆனின்
வசனங்கள் காதுகளிலும் உள்ளங்களிலும் திரும்ப
திரும்ப வந்து விழுந்துக் கொண்டிருக்கின்றன. முதல் தடவை ஒருவன் கேட்கும் போது உள்ளங்களில் குர்ஆனின் தாக்கம் மிகப் பிரம்மாண்டமாக
இருக்கும். இரண்டாவது தடவை கேட்கும் போது அது பலவீனமடையும். மூன்று தடவை அதன் தாக்கம்
அப்படியே விழுந்து தகர்ந்து விடும். கவிதைகளில் அதிகமாக உள்ளம் உருகக் கூடிய ஒருவர்
ஒரு நாள் அல்லது ஒரு வாரம் என்று அடிக்கடி அண்மைக் காலமாகத் தொடர்ந்து பாடக்கூடிய ஒரு
கவிதையில் தனது மனதை நிலை நிறுத்த வேண்டும்
என்றால் அது அவரால் முடியாது. அதே சமயம் ஒரே கருத்தைத் தரக்கூடிய கவிதையாக இருப்பினும்
அதற்குப் பதிலாக வேறொரு கவிதை அமைகின்ற போது அது அவரது உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனினும், முந்தைய கவிதையுடன் ஒப்பிடுகையில், ஒரே கருத்தில் அமைந்திருந்தாலும், அந்தக் கவிதை
வரிகளும் வார்த்தைகளும் முற்றிலும் புதிதாக இருந்தால் அது நிச்சயமாக உள்ளத்தைத் தொட்டு உருக வைத்து விடும்.
உணர்ச்சியைப் பெருக வைத்து விடும். இது கவிதையின் நிலை.
இப்போது குர்ஆனுக்கு
வருவோம். குர்ஆனை ஓதக் கூடிய ஒருவர் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு துஆவின் போதும் புதுப்புது வார்த்தைகளில் குர்ஆனை ஓத முடியாது.
குர்ஆன் இன்னது தான் வரையறுக்கப்பட்டதாகும். இருக்கின்ற அந்த வார்த்தைகளை விட எதையும்
ஏற்றிச் சொல்ல முடியாது. கூட்டிச் சொல்ல முடியாது. திருக்குர்ஆன் திரும்ப திரும்ப ஓதப்
படக்கூடியதாகும்.
கிராமப் புற அரபிகள் (மதீனாவிற்கு) வந்து குர்ஆன் ஓதுவதைச் செவியுறுவார்கள்.
அவ்வாறு செவியுறும் போது அவர்கள் அழுவார்கள். அவர்களை நோக்கி அபூபக்கர் (ரலி) அவர்கள், ‘உங்களைப் போன்று
தான் குர்ஆனை செவியுற்று அழுபவர்களாக இருந்தோம். ஆனால் இப்போது எங்கள் இதயங்கள் இறுகி
விட்டன. (அதனால் இப்போது எங்களுக்கு அழுகை வருவதில்லை)’ என்று அபூபக்கர் (ரலி) கூறிய இந்தச் சம்பவம் நாம் கூறக்
கூடிய இந்த கருத்தைத் தான் சுட்டிக் காட்டுகின்றது.
இவ்வாறு நாம் கூறும் போது, அபூபக்கர்
(ரலி) அவர்கள் உள்ளம் அறிவிலிகளான அந்தக் கிராமத்துப்புறத்து
மக்களின் உள்ளங்களை விட மிகவும் இறுகிப் போய்
விட்டது. அந்த அரபிகளின் உள்ளங்களை விடவும் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும்
நேசிப்பதில் அபூபக்கர் (ரலி) வெகு தூரம் விலகி போய் விட்டார்கள் என்று தப்பாக எண்ணி
விடாதீர்கள். இருப்பினும் திரும்பத் திரும்ப குர்ஆன் அவர்கள் காதில் விழுவதால் அல்லது
அதை ஓதுவதால் அது அவர்களுடைய உள்ளத்தில் ஓர் இறுக்கத்தன்மையை ஏற்படுத்துகின்றது.
இதற்குக் காரணம் ஒரு செய்தியைக் கேட்டு கேட்டு புளித்து போய்
விடும் போது அதில் எந்தத் தாக்கமும் இருக்காது. ஒருவன் இதுவரை செவியுறாத ஒரு வசனத்தைச் செவியுற்றவுடன்
அழுவான். இது இயல்பாகும். ஆனால் இருபதாண்டுகளாக
அதே வசனத்தை கேட்டுக் கொண்டு அழுவது என்பதும் திரும்பவும் அதை கேட்டு அழுவது என்பதும்
வழக்கத்தில் அசாத்தியம் தான்!
ஒரு செய்தி, இன்னொரு செய்திக்கு
வித்தியாசமாக இருக்க வேஎண்டுமென்றால் பின்னால் வருகின்ற செய்தி புத்தம் புது செய்தியாக
இருக்க வேண்டும். இல்லையென்றால் அதில் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியாது. ஒவ்வொரு
புது செய்திக்கும் சுவையுண்டு. ஒவ்வொரு புது வரவுக்கும் ஒரு தாக்கம் ஏற்படும். ஒவ்வொரு
பழகிப் போன பழைய செய்தியும் செயல்பாடும் மக்களுக்குப் புளித்து போய் விடும். அது எந்தத்
தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இதன் காரணமாகத் தான் உமர் (ரலி) அவர்கள், மக்கள் அதிகம் அதிகம்
தவாஃப் செய்வதைத் தடுக்க நினைத்தார்கள். மக்கள் இந்த ஆலயத்தில் திரும்ப திரும்ப தவாஃப் செய்வதை வழக்கமாகக் கொள்ளும்
போது அவர்கள் அந்த ஆலயத்தின் கொண்டிருக்கும் மரியாதையை எடுபடச் செய்து விடுமோ என்று
நான் அஞ்சுகின்றேன் என்று அவர்கள் கூறினார்கள்.
முதன் முதலில் ஹஜ் செய்ய வருபவன் அந்த கஃபத்துல்லாஹ்வைக் கண்டவுடன்
கதறி அழுகின்றான். சில கட்டங்களில் அதன் மீது அவன் கண் பார்வை பட்டதும் மயக்கமடித்து
விழுந்து விடுகின்றான். அதே சமயம் ஒரு மாதம் அங்கேயே தங்கி விட்டான் என்றால் அந்த மரியாதை அவனிடமிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக அகன்று விடுகின்றது. இதுபோலத் தான் குர்ஆனும்.
மொத்தத்தில், ஓர் இசைப்
பாடகன் ஒவ்வொரு நேரத்திலும் புதுப் புது பாடலை பாடுவதற்கு முடிகின்றது. ஆனால் குர்ஆனை
ஓதக் கூடியவன் ஒவ்வொரு நேரத்திலும் புதுப் புது வசனங்களை ஓத முடிவதில்லை.
விமர்சனம்:
என்ன சொல்கிறார் தெரிகிறதா?
குர்ஆனில் ஓதியதையே திரும்பத் திரும்ப ஓதுவதால் அது கேட்டுக்
கேட்டு புளித்துப் போய் விடுகின்றதாம்.
ஆனால் பாடல்கள் ஒவ்வொரு தடவையும் புதுப் புதுப் பாடலாக இறங்குவதால்
அது இனிமையாக இருக்கின்றதாம்.
கஸ்ஸாலியின் இந்த வாதம் அபத்தமான வாதமாகும். இந்த அபத்தமிகு
வாதத்தை குர்ஆனுடைய வசனங்கள் அப்பட்டமாக மறுக்கின்றன. கஸ்ஸாலியின் வாதத்தை நாம் மறுக்கத்
தேவையில்லை. வார்த்தைக்கு வார்த்தை பின்வரும் திருக்குர்ஆன் வசனமே மறுக்கின்றது.
சிலிர்க்க வைக்கும் சிந்தனைக் குர்ஆன்
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக்
கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும்
உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின்
தோல்களும்,
உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே
அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி
காட்டுகிறான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை.
அல்குர்ஆன் 39:23
இந்த வசனத்தை திரும்பத்
திரும்பப் படியுங்கள். இந்த வேதச் செய்தியே திரும்பத் திரும்ப படிக்கக் கூடிய செய்தி
என்று குறிப்பிடுகின்றான். இது இறைவனை அஞ்சுவோரின் தோல்களைச் சிலிர்க்க வைத்து விடுகின்றன.
அவர்களின் தோல்களும், உள்ளங்களும் மென்மையடைகின்றன
என்று கஸ்ஸாலிக்கு மறுப்பாகவே அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த வசனம், கஸ்ஸாலியின்
மறுப்புக்காக இறங்கியது போல் இருக்கின்றது எனும் போது நமது மேனி சிலிர்த்து விடுகின்றது.
இவ்வசனத்தில் ‘திரும்ப திரும்ப
வரக்கூடியச் செய்தி’ என்று சொல்வதன் மூலம் திரும்பத் திரும்ப ஓதப்படுவது தான் திருக்குர்ஆனின்
தனிச் சிறப்பு என்று திருக்குர்ஆன் சிறப்பித்து கூறி விடுகின்றது. திருக்குர்ஆனின்
ஆண்மையும்,
ஆளுமையையும் அதில் அற்புதமாகப் பளிச்சிடுகின்றது.
குர்ஆன் ஓர் அற்புதம் என்பதை கஸ்ஸாலி மறந்து விட்டார் போலும்.
அற்புதம் என்பது எதிரிகள் அதைப் போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வரமுடியாது என்பதில் மட்டும்
அடங்கியிருக்கவில்லை. திரும்பத் திரும்ப ஓதப் பட்டாலும் அந்த வேதம் சலிப்பதுமில்லை, புளிப்பதுமில்லை என்பதிலும் அந்த அற்புதம் அடங்கியிருக்கின்றது
உலகில் மக்கள் இசைக் கச்சேரிகள், கூத்துகள், கும்மாளங்கள் நடக்கின்ற பகுதிகளில்
இலட்சக் கணக்கில் கூடுவதைப் பார்க்கின்றோம். அதில் வியப்பேதுமில்லை. ஆனால் புனித மிக்க
ரமளான் மாதம் வந்து விட்டால் போதும் புனித மக்காவில் பல இலட்ச மக்கள் கூடுகின்றார்கள்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இசைக் கச்சேரிகள் எதுவும் நடை பெறுவதில்லை. வேறென்ன நடக்கின்றது? உலக மக்களின்
இதயங்களை ஈர்க்கின்ற திருக்குர்ஆன் இரவு வேளைகளில் தொழுகையில் ஓதப்படுகின்றது. இதில்
இலட்சக் கணக்கான மக்கள் லயித்துப் போய் நிற்கின்றனர்.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ரமளானிலும் ரமளான் அல்லாத
காலங்களிலும் தொழுகையிலும் தொழுகை அல்லாத வேளைகளிலும்
இந்தக் குர்ஆன் தான் ஓதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திரும்ப திரும்ப ஓதப்படுகின்ற
அதே குர்ஆனைத் தான் அங்குள்ள இமாம்கள் ஓதுகின்றனர்.
மக்காவிலும் உலகெங்கிலும் பகுதிகளிலும் புதுக் குர்ஆன் எதையும் அவர்கள் ஓதவில்லை.
இது எதைக் காட்டுகின்றது?
குர்ஆனுக்கென்று இருக்கக் கூடிய ஈர்ப்பு விசையைத் தான் காட்டுகின்றது. இது யாருடைய காதுக்கும் வெறுப்பாகவில்லை. இன்னும்
சொல்லப் போனால் தோற்றுவாய் என்ற முதல் அத்தியாயம் அதிகமதிகம் திரும்பத் திரும்ப ஓதப்படுகின்றது. மடக்கி மடக்கி
ஓதப்படுகின்ற அந்த வசனங்கள் மக்களின் காதுகளில் விழுகின்றன. யாருக்கும் இது சலிக்கவுமில்லை; புளிக்கவுமில்லை. தோற்றுவாய்
அத்தியாயத்திற்குப் பிறகு குர்ஆனில் பிந்திய பகுதிகளில் இடம் பெறுகின்ற சிறு சிறு அத்தியாயங்கள்
அதிகமதிகம் அடிக்கடி ஓதப் படுகின்றன. இந்த
அத்தியாயங்கள் யாருக்கும் சலிப்புத் தட்டவில்லை; புளித்து
போகவுமில்லை.
குர்ஆன் ஓதுபவரின் குரல் வளம் கேட்போரை ஈர்க்கும் வண்ணமிருந்து
விட்டால் போதும். இந்த சூரா இவ்வளவு சிறியதாக முடிந்து விட்டதே! இன்னும் கேட்க முடியாமல்
ஆகி விட்டதே! என்று அவர்கள் வேதனைப் படக்கூடிய அளவில் தான் அது அமைந்து விடுகின்றது.
குரல் வளமிக்கவர் ஓதினால் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கலாமே
என்ற எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் அந்தக் குர்ஆன் மக்களிடத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. இது தான்
எதார்த்தம். இப்படி திரும்பத் திரும்ப ஓதப்பட்டும் மக்கள் அதை திரும்பத் திரும்பக்
கேட்கின்றார்கள். குர்ஆனுக்கென்று இருக்கின்ற இந்த அற்புதத்தை கஸ்ஸாலி மறந்து விட்டார்; அல்லது மறைக்கின்றார்.
உருக வைக்கும் உன்னதக் குர்ஆன்
சூழ்நிலைக்குத் தக்க மனிதனுக்குப் பொருத்தமாக அமைவது குர்ஆனை
விட கவிதை தான் என்று இதற்கு முந்திய முதல் பகுதியில் கஸ்ஸாலி வாதம் வைத்த போது ஒரு புறாக் கவிதையை உதாரணமாக
காட்டியிருந்தார். அந்தக் கவிதை வரிகளில் எந்த ஓர் உப்பு சப்புமும் இல்லை. உணர்ச்சியூட்டுகின்ற
உந்து சக்தியுமில்லை. அதைத் தான் கஸ்ஸாலி தூக்கிப் பிடித்திருந்தார்.
“இதை நம்புங்கள்!
அல்லது இதை நம்பாமல் இருங்கள்!’’ என்று கூறுவீராக! இதற்கு முன்
(வேத) அறிவு கொடுக்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால் அவர்கள் முகம் குப்புற ஸஜ்தாவில்
விழுவார்கள். எங்கள் இறைவன் தூயவன். எங்கள்
இறைவனின் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக உள்ளது எனக் கூறுவர். அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது
அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது”
அல்குர்ஆன் 17:107,108,109
இந்த வசனங்கள் மேற்கண்ட அந்த வசனத்தின் கருத்தை உறுதி செய்கின்றன. ஓதப்படுகின்ற இந்த குர்ஆன் வசனங்கள் உள்ளத்தைத்
தொடுகின்றன;
உருக வைக்கின்றன; கண்களில் கண்ணீரை
அருவியாகப் பெருக வைக்கின்றன; மேனியை சிலிர்க்க வைக்கின்றன; அவர்களது மேனிகளில் மின் அதிர்வுகளைப் பாய்ச்சி, பரவ விடுகின்றன; இறுதியில்
அவர்களது சிரங்களையும் பணிய வைக்கின்றன.
திரும்ப திரும்ப ஓதப் படக்கூடிய வசனங்கள் அவர்களை புரட்டிப் போடக் கூடிய அளவில்
ஒரு புத்துணர்வையும் ஒரு புது தாக்கத்தையும்
கொடுக்கின்றன. பொருத்தமில்லாத புறாப் பாடலுக்கு புளகாங்கிதம் அடைகின்ற கஸ்ஸாலி புனித
குர்ஆனின் புல்லரிக்கும் இந்தக் கருத்தின் பக்கம் தனது சிந்தனைப் புலன்களை செலுத்தத்
தவறுகின்றார்.
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால்
அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின்
நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்குர்ஆன் 8:2
இந்த வசனம் குர்ஆன் வசனங்களைச் செவியுற்றால் அவை அவர்களது நம்பிக்கையை
அதிகரிக்கச் செய்வதுடன் அவர்களது உள்ளங்களை நடுநடுங்க வைக்கின்றன என்றும் கூறுகின்றன. இந்த உண்மையை இந்த வசனங்களிலிருந்து நாம் சாதாரணமாக விளங்க முடிகின்றது.
ஆனால் கல்விக் கடல் (?) கஸ்ஸாலிக்கு இது விளங்கவில்லை.
புனித குர்ஆன் புளிக்கின்றது; கவிதை
இனிக்கின்றது என்று கஸ்ஸாலி வாதிடுவதின் மூலம் அவரிடம் சூஃபிஸ, ஷியாக் கொள்கை மண்டிக் கிடக்கின்றது என்பதை தான் இது எடுத்துக்
காட்டுகின்றது.
அடுத்து நாம் பார்க்க வேண்டிய விஷயம், தனது வாதத்திற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் அபூபக்கர் (ரலி)
அவர்கள் தொடர்பான செய்தியாகும். இந்தச் செய்தியின்
தரத்தையும் தகுதியையும் முதலில் பார்ப்போம்:
இந்தச் செய்தி முஸன்னஃப் இப்னு அபீஷைபா என்ற ஹதீஸ் நூலில் 35524 எண்ணாக இடம் பெறுகின்றது.
இந்தச் செய்தியில் அறிவிப்பு ரீதியிலான குறை உள்ளது.
அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் நடைபெறுவதாக அமைந்த இச்சம்பவத்தை
அபூஸாலிஹ் என்பார் அறிவிக்கின்றார்.
இந்த அபூஸாலிஹ் நம்பகமானவராக இருந்தாலும் உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில்
தான் இவர் பிறந்தார் என்று தஹபீ குறிப்பிட்டுள்ளார்.
நூல்: சியரு அஃலாமின்
நுபலா
அதனால், உமர் (ரலி) அவர்களின் காலத்தில்
பிறந்த ஒருவர் அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிவிப்பது சாத்தியமாகாது.
அவருக்கும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வேண்டும்.
அவர் யார்? அவரது நம்பகத்தன்மை என்ன என்பது
அறியப்படாததால் இச்செய்தி பலவீனம் அடைகிறது. அதனால் இதை ஆதாரமாகக் கொண்டு கஸ்ஸாலி சொல்லக்
கூடிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
அபூபக்கர் (ரலி) அவர்கள் தொடர்பான இந்தச் செய்தி அறிவிப்பாளர்
தொடர் அடிப்படையில் அடி வாங்கி விட்டது. அத்துடன் கருத்து அடிப்படையிலும் இது அடி வாங்குகின்றது.
காரணம் அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதும் போதெல்லாம் அழக் கூடியவர்கள் என்பதை
ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
தொழுகின்ற வேளையில் அழுகின்ற அபூபக்கர்
அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ (யோசனை) தோன்றியது. தமது வீட்டு
முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுதுகொண்டும் குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.
அப்போது இனை வைப்பாளர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு
அவர்களைச் சூழ்ந்து (வேடிக்கை பார்த்துக்கொண்டு) நிற்பர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன்
ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக
அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை எங்கே தங்களது மனைவி
மக்களை மதம் மாறச் செய்துவிடுமோ என்ற அச்சம் இணைவைப்பாளர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி எண்: 476
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போய்விட்டார்களோ அந்த
நோயின்போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற் காக வந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்)
தொழுவிக்கச் சொல்லுங்கள்’’ என்று சொன்னார்கள். அதற்கு நான், “(என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனம் உடையவர்கள்; நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் அழுவார்கள். அவர்களால்
ஓத முடியாது’’ என்று கூறினேன்.
“அபூபக்ர் அவர்களிடம் தொழுவிக்கச் சொல்லுங்கள்’’ என்று சொன்னார்கள். நான் முன்பு
சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில்
அவர்கள் “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று
உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச்
சொல்லுங்கள்’’ என்று கூறினார்கள்.
அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி எண்: 712
மேற்கண்ட இந்த ஹதீஸ்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுகையில்
தொடர்ந்து அழக்கூடியவர்கள் என்பதைத் தெளிவுபட உணர்த்துகின்றது. அதனால் அபூபக்ர் (ரலி)
அவர்கள் கஸ்ஸாலி எடுத்துக்காட்டிய பலவீனமான ஹதீஸில் உள்ளது போன்று இவ்வளவு பார தூரமான
வார்த்தையைச் சொல்வதற்குரிய வாய்ப்பே இல்லை.
காரணம் அல்லாஹ் இந்த வார்த்தையை, திருந்தாத, அழிக்கப்பட்ட சமுதாயத்திற்குத் தான் பயன் படுத்துகின்றான்.
அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம்.
அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள்
மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்.
அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே
இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ்
விரும்புகிறான்
அல்குர்ஆன் 5:13
அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை
ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.
அல்குர்ஆன் 6:43
இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்ற பாடம், யார் அழிக்கப்பட்டார்களோ அவர்களுக்குத் தான் அல்லாஹ் கஸ்வத்
- அதாவது உள்ளம் இறுகுதல் என்ற வார்த்தையைப்
பயன்படுத்துகின்றான். அதனால் முஸ்லிம்கள் அது போன்று ஆகிவிடக் கூடாது என்றும் எச்சரிக்கின்றான்.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு
வரவில்லையா?
(அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப்
போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில்
அதிமானோர் குற்றவாளிகள்.
அல்குர்ஆன் 57:13
இப்படிப்பட்ட கடுமையான, கொடுமையான
ஒரு வார்த்தையை அபூபக்கர் (ரலி) அவர்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதையே இதிலிருந்து நாம் புரிந்து
கொள்ள முடிகின்றது. அதனால் அபூபக்கர் (ரலி) உருகிய மனம் படைத்தவர் தானே தவிர இறுகிய
மனம் படைத்தவர் அல்லர் என்பதையே இது மேலும்
உறுதிப்படுத்துகின்றது.
அபூபக்கர் (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விமர்சனத்தைப் பார்த்த
பிறகு இப்போது கஸ்ஸாலி கூறுகின்ற உமர் (ரலி) அவர்கள் தொடர்பான தவாஃப் பற்றிய செய்தியின்
விமர்சனத்தைப் பார்ப்போம்:
உமர் (ரலி) செய்தியைப் பொறுத்த வரை அதற்கு முறையான அறிவிப்பாளர்
ஏதுமில்லை.
ஹதீஸ் நூல்களிலோ வரலாற்று நூல்களிலோ அவ்விதம் பதிவு செய்யப்படவில்லை.
மாறாக கஸ்ஸாலி தனது இஹ்யாவில் கொண்டு வருவது தவிர்த்து ஹிஜ்ரி
966ல் மரணித்த அறிஞர் தியார் பக்ரி என்பவர் தனது தாரீகுல் கமீஸ்
எனும் நூலில் இச்செய்தியினைக் கொண்டுவருகிறார்.
அதுவும் முறையான, அறிவிப்பாளர்
ரீதியிலான சங்கிலித் தொடர் எதுவுமில்லாமல் ருவிய - அறிவிக்கப்படுகிறது - என்று ஒற்றை
வார்த்தையில் இச்செய்தி பதிவு செய்யப்படுகிறது.
யாரோ சொல்கிறார்கள் என்பது தான் இதன் பொருள். யார் இத்தகவலைச்
சொன்னார்கள் என்பது தெரியவில்லை என்று அர்த்தம். இந்த விதத்தில், அறிவிக்கப்படும் செய்தி ஆதாரமாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதை
நாம் விளங்கிக் கொள்ளலாம்.
அத்துடன் ஒரு பேச்சுக்கு இது சரியென்று வைத்துக் கொண்டாலும்
இது குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதுகின்ற, முரண்படுகின்ற
செய்தியாகும். காரணம் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா,
“பின்னர் அவர்கள்
தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான
அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.”
அல்குர்ஆன் 22:29
என்று சொல்கின்றான்.
அபது மனாஃபின் பிள்ளைகளே! இரவிலும் பகலிலும் விரும்பிய எந்த
நேரத்தில் இந்த ஆலயத்தில் தவாஃப் செய்கின்ற, தொழுகின்ற
எவரையும் தடுக்காதீர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல்கள் : திர்மிதி 795
அபூதாவூத் 1618, நஸயீ
2875
எனவே, அல்லாஹ்வும் அவனது தூதரும் இடுகின்ற
இந்தக் கட்டளையைத் தடுப்பதற்கு உமர் (ரலி)க்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த
அடிப்படையில் கஸ்ஸாலி கொண்டு வந்த உமர் (ரலி)யின் செய்தியும் ஆதாரமற்ற, அர்த்தமற்ற செய்தியாகும்.
இதன் மூலம் கஸ்ஸாலி சொல்ல வருவது பழகப் பழக பாலும் புளித்து
விடும் என்பது தான். அது போன்று குர்ஆனை அதிகம் அதிகம் கேட்பதால் அது புளித்துப் போய்
விடுகின்றது. அதே சமயம் பாடல் ஒன்றைக் கேட்டால் அது புளிக்காது என்று தான்.
தான் யார்? என்று இங்குதான் கஸ்ஸாலி தெளிவாக
அடையாளப்படுத்துகின்றார். அதாவது தன்னை ஒரு பகிரங்க ஷியா என்று பிரகடனப் படுத்துகின்றார்.
இனியும் இந்த கஸ்ஸாலிக் காதலர்கள் அவர் மீது
காதல் கொள்ளலாமா? அவர்கள் நிதானமாக சிந்திக்க
வேண்டும். சிந்திப்பார்கள், சீர்திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்போமாக!
EGATHUVAM JAN 2017