May 31, 2017

நல்லறங்களில் நிலைத்திருப்போம்

நல்லறங்களில் நிலைத்திருப்போம்

எம். முஹம்மது சலீம், M.I.Sc..

மங்கலம்

நாம் செய்யும் ஒரு நல்ல அமலுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் வழங்கப்படுவதாக நபிகளார் நற்செய்தி கூறியுள்ளார்கள். நமது நல்லறங்கள் படைத்தவனிடம் நற்கூலி பெற்றுத் தந்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடாமல், அவனது விருப்பத்தையும் பெற்றுத் தர வேண்டுமென நாம் ஆர்வம் கொள்ள வேண்டும். அதற்குரிய வழிகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரையைப் பாருங்கள்.

...நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, “மக்களே! உங்களால் இயன்ற (நற்)செயல்களையே செய்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (5861)

எந்தவொரு நற்காரியத்தையும் தொடர்ந்து செய்யும் போது நன்மைகள் கிடைப்பதோடு, அவை அல்லாஹ்வின் விருப்பத்தைப் பெற்றுத் தருமளவுக்கு உயர்ந்துவிடும். இந்தப் போதனையை வழங்கிய நபிகளார், தாமே அதற்கு முன்மாதிரியாக விளங்கியதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படைத்தவனை மறவாதீர்!

ஏக இறைவனைப் பற்றிய எண்ணம் என்றும் நம்மிடம் பசுமையாக இருக்கும் வன்ணம், பல்வேறு பிரார்த்தனைகள், திக்ருகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அடிக்கடி அல்லாஹ்விடம் ஆதரவு தேடுவதில் நீடித்திருக்க வேண்டும்.

மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.  ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5235)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும் போதெல்லாம் இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல்கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’’ என்று அதிகமாகப்  பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (5425)

பெரும்பாடுபட்டு மனனம் செய்த துஆக்கள், பலருக்கும் நாளடைவில் மறந்துவிடுவதற்குக் காரணம், தினமும் சொல்லாமல் இருப்பதே ஆகும். ஆகையால், பிரார்த்தனைகளை ஒருசில நாட்கள் மட்டும் உச்சரிக்காமல், தினந்தோறும் நினைவுகூர வேண்டும். இதுபோன்று, எப்போதாவது தவ்பா தேடிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இல்லாமல் வல்ல நாயனிடம் அதிகமாக கையேந்தி மன்றாட வேண்டும்.

வழிபாடுகளைக் கடைபிடிப்போம்!

நாம் கடமையான வணக்கங்களை சரிவரக் கடைபிடிக்க விட்டால், மறுமையில் குற்றவளியாக நிற்கும் நிலை ஏற்பட்டுவிடும். அதேசமயம், கடமைகளைத் தவறவிடாமல் முறையாக நிறைவேற்றும் போது குற்றமற்ற நிலைக்கு வருவதுடன், அல்லாஹ்வின் பேரன்பும் அருளும் கிடைக்கும்.

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (6502)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர் ‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புஹாரி (1152)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் (செலுத்துவதற்குத் தயாராக) தமது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் இருப்பதும் மனித வாழ்வின் நலமான அம்சமேயாகும். அவர் எதிரியின் ஆர்ப்பரிப்பையோ ஆவேசக் குரலையோ செவியுறும் போதெல்லாம், வீரமரணமும் இறப்பும் உள்ள இடங்களைத் தேடி அந்தக் குதிரையில் அமர்ந்து பறப்பார். அல்லது ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும்வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (3838)

சில நாட்கள் மட்டும் மார்க்கம் கூறும் எல்லா வகையான தொழுகைகளையும் தொழுதுவிட்டு, பின்வரும் நாட்களில் அவற்றை அடியோடு மறந்து விடும் நபர்கள் இருக்கிறார்கள். நாளடைவில், கடமையான தொழுகைகளிலும் அலட்சிய குணம் நுழைந்து விடுகிறது. இதிலிருந்து மீளவும், தப்பிக்கவும் வேண்டுமெனில் வழிபாடுகளில் நிலைத்திருப்பது பற்றிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கற்போம்! கற்பிப்போம்!

மார்க்கத்தை அறிந்து கொள்வதிலும், அடுத்தவர்களிடம் பரிமாறிக் கொள்வதிலும் அக்கறை செலுத்துவது சாதாரண செயல் அல்ல. வாழ்நாள் முழுவதும் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டிய பண்பாகும். இதன் மூலம் நமது மறுமை வெற்றிக்கான வழி எளிதாகும்.

இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்’’ என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், ‘மறக்க வைக்கப்பட்டு விட்டது என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு மஸ்ஊத்  (ரலி)

நூல்: புஹாரி (5032)

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5231)

தொடர வேண்டிய தர்மங்கள்

நமது பொருளாதாரத்தை இறைவழியில் செலவழிப்பதற்கு நன்மைகள் உண்டு. ஒருமுறை இருமுறை என்று எப்போது செலவழித்தாலும் நன்மை கிடைக்கும் என்றாலும், அதற்கான வாய்ப்புக்களை தவறவிடாமலும், தட்டிக்கழிக்காமலும் தொடர்ந்து வழங்கும்போது அளப்பறிய நன்மைகள் கிடைக்கும்.

...இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ - அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்‘’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புஹாரி (1465)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் என்னை விட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்’’ என்று சொல்வேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1888)

சொல்வதெல்லாம் உண்மை

மார்க்கம் கூறும் நற்பண்புகளுள் முக்கிய ஒன்று உண்மை பேசுவதாகும். அத்திப் பூத்தாற்போல அரிதாக அல்லாமல், அதனை வாழ்வில் வழமையாக்கிக் கொள்ளும்போது அல்லாஹ்விடம் நற்சான்றும் பாராட்டும் கிடைக்கும்.

உண்மை, நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் (5081)

உதவிக்கரம் நீட்டுவோம்!

சமூக சேவையைப் போற்றும் சத்திய கொள்கையில் இருக்கிறோம். நமது ஒட்டுமொத்த ஆயுளில், வெறும் ஓரிரு தருணங்களில் மட்டும் பிறருக்கு உதவிவிட்டு முடங்கி விடக்கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சகமனிதர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யும்போது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5231

அநீதிக்கு எதிராகத் தொடர் பயணம்

மார்க்கம் அனுமதித்த அடிப்படையில், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணம் முஃமின்களிடம் நீங்கா இடம்பிடித்திருக்க வேண்டும். வரம்பு மீறுவோரைத் தடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதில் தொடர் முனைப்பு அவசியம். இதைப் புரிந்து கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு தொடர் ஒத்துழைப்பை கொடுப்போமாக!

இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதிவான்களை நேசிக்கின்றான்.

(திருக்குர்ஆன் 49:9)

நல்லறங்களில் நீடிப்போம்

நம்பிக்கையின் அம்சமாக ஏராளமான நற்காரியங்கள், நற்பண்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மனித குலத்தின் நன்மைக்காக வழங்கப்பட்டவை. அவற்றுள் நமக்கு இயன்ற காரியங்களை இறைத்திருப்தியை இலக்காகக் கொண்டு இடைவிடாது செய்தல் வேண்டும்.

விடைபெறும் ஹஜ்ஜின் போது (நான் மக்காவிலிருந்த சமயம் எனக்கு ஏற்பட்ட ஒரு நோய்க்காக என்னை உடல்நலம் விசாரிக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர் நோக்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்கள் அனைவரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) என் தோழர்களை விட்டுப் பின்தங்கியவனாக ஆகிவிடுவேனா?’’ என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இங்கு இருந்த போதிலும் அல்லாஹ்வின் உவப்பை நாடி நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்’’ எனக் கூறிவிட்டு, “உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்க வைக்கப்படலாம்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3349)

முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ்தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகுகளின் மீது மண் எடுத்துச்சென்ற வண்ணம் நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்தில் நீடித்திருப்போம் என முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம்’’ என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவுமில்லை. எனவே, (மறுமையின் நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ அருள்வளம் புரிவாயாக!’’ என்று (பாடலிலேயே) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (4100)

மற்றொரு அறிவிப்பில் (புஹாரி 2834), ‘‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம்’’  என்று (பாடியபடி) கூறியதாக உள்ளது.


மறுமையில் மகத்தான வெற்றியை விரும்பும் மக்கள் தங்களது கடமைகளைத் தவறாது கடைப்பிடிப்பதற்கும் மேலாக, தங்களால் முடிந்த சுன்னத்தான உபரியான காரியங்களையும் செய்துவர வேண்டும். அவை கூடுதல் குறைவாக இருப்பினும் அவ்வப்போது சுணக்கம் வந்தாலும் ஒரேயடியாக விட்டுவிடாமல் பக்குவமாகப் பின்பற்றி வருவது மிகவும் நல்லது; படைத்தவனுக்கு விருப்பமானது. இவ்வாறு தூய முறையில் செயல்புரிய வல்ல இறைவன் நமக்கு நல்லுதவி புரிவானாக!

EGATHUVAM JAN 2017