குடும்பவியல் 35 - பணம் மட்டும் தான் வரதட்சணையா?
தொடர்:
35
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
வரதட்சணைக் கொடுமையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கடந்த
இதழ்களில் கண்டோம். வரதட்சணையால் பெண்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும்
பாதிப்பு ஏற்படுகின்றது.
வரதட்சணையின் காரணத்தால் ஆண்களின் திருமணம் தாமதமாகிறது. ஒரு
குடும்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால், தங்கைக்குத்
திருமணம் முடித்த பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் என்பதை மார்க்கக் கடமை போல் செய்வதைப்
பார்க்கிறோம்.
பெண்ணுக்குத் திருமணம் முடிப்பதாக இருந்தால் அண்ணன் தம்பிகள்தான்
வெளிநாடு சென்று உழைத்து அதில் வரும் காசு பணத்தை வைத்து தங்கை அல்லது அக்காவின் திருமணத்தை
நடத்திட வேண்டும். இப்படி வரதட்சணைக் கொடுமையால் ஆணின் திருமண வயது 30 என்றும் 35 என்றும் தேவையற்ற காரணங்களால்
தாமதமாகிறது. ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிய நேரத்தில் திருமணம் ஆகவில்லையெனில் உரிய நேரத்தில்
வாரிசு உருவாவதில் தாமதம் ஏற்பட்டு அதுவே அவனது வாழ்வில் பெருந்துயரத்தைக் கொணர்ந்துவிடும்.
எனவே ஆண்கள் திடகாத்திரமான வயதில் இளமை மாறுவதற்கு முன்னாலேயே
திருமணத்தை முடித்து விடுவதே ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
உரிய வயதில் ஆண்கள் திருமணம் முடித்தால் தான் பிள்ளைகளின் கல்விக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பொருள் திரட்ட வாய்ப்பு இருக்கும். அதன்
பிறகு பிள்ளைகள் பெரிதாக வளர்ந்து அவர்கள் பொருள் தேடும் நிலைக்கு விரைவாக வந்தால்தான்
நாம் வயதாகும் நிலையில் ஓய்வு எடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். தாமதமாகத் திருமணம்
முடித்தால் இவை சரியாக அமையாது.
வரதட்சணையின் மற்றொரு தீய விளைவு பெண்ணைப் பெற்றவர்கள் பிச்சை
எடுப்பதாகும். தங்களால் வரதட்சணை கொடுக்க முடியாவிட்டாலும் பிச்சை எடுத்துக் கொடுக்க
முடியும் என்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது.
ஜமாஅத்துகளில் பரிந்துரைக் கடிதம் வாங்கிக் கொண்டு, தொலைதூர ஊர்களுக்குச் சென்று பிச்சை எடுக்கின்றனர். சுயமரியாதை
இழந்து, கூனிக்குறுகி நின்று கொண்டு, ஒவ்வொரு
ஜும்ஆக்களிலும் ஐவேளைத் தொழுகைகளிலும் பொதுமக்கள் முன்னிலையில் ஸலாம் சொல்லி பிச்சை
கேட்டு நிற்கும் அவலம் நமது நெஞ்சை உலுக்குகிறது.
இப்படி ஒரு முஸ்லிம் சுயமரியாதை இழந்து மக்களிடம் பிச்சை எடுத்த
காசை வாங்குகிற மருமகன்தான் உண்மையில் மானங்கெட்டவன். ஏனெனில் வருங்கால மாமனாரை ஊர்
ஊராகப் பிச்சை எடுக்க வைத்தவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியுமா? இது நமக்கு எவ்வளவு பெரிய கேவலம் என்று வரதட்சணை வாங்குபவன்
சிந்திக்க வேண்டாமா?
பிச்சை எடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமா? பிச்சை எடுப்பவர்கள் மறுமையில் முகங்களில் சதையில்லாமல் எலும்புக்
கூடாக அல்லாஹ்வின் சன்னிதானத்தில் வருவார்கள் என்று கடுமையாகக் கண்டிக்கும் மார்க்கத்தில்
இதுபோன்ற செயல்பாடுகள் சரியா? என்று சிந்தித்துப் பார்க்க
வேண்டும்.
பெண்ணைப் பெற்றதினால் இப்படியொரு இழிநிலை இந்தச் சமூகத்தில்
பெற்றவர்களுக்குத் தேவைதானா? இதுபோன்று எந்த மதத்தின் வழிபாட்டுத்தலங்களிலாவது
பெண் பிள்ளைக்காகப் பிச்சை கேட்கும் நிலை உள்ளதா? இல்லை.
பரிந்துரைக் கடிதம் கொடுக்கும் ஜமாஅத்துக்கள், தங்களது மஹல்லாக்களில் வரதட்சணை வாங்கும் திருமணத்தைப் பதிவு
செய்ய மாட்டோம் என்று சட்டம் போட்டால் ஆண்கள் வரதட்சணை கேட்க முன்வர மாட்டார்கள். அதுவே
ஆண்களுக்கும்,
அவர்களைப் பெற்றவர்களுக்கும் கேவலமாகத் தெரியும்.
வரதட்சணை கேட்பதில் கூட பல ரகம் உள்ளது. பெண்வீட்டில் என்ன தருவீர்கள்
என்றுதான் ஆரம்பிப்பார்கள். பெண்ணின் படிப்பு என்ன? குணம்
என்ன? மார்க்கப் பற்று என்ன? எதையும் கேட்கமாட்டார்கள்.
என்ன போடுவீர்கள்? என்று தான் கேட்பார்கள்.
பணமாக, ரொக்கத் தொகையாக வாங்குவது ஒருவகை.
நாங்களெல்லாம் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, கல்யாணத்திற்கு என்ன போடுவீர்கள் என்று பெண்வீட்டாரிடம் கேட்பார்கள்.
அப்படியெனில் நகைநட்டுகள் என்று பொருள். அதாவது காசு பணமாக, ரொக்கமாக வாங்கினால் தான் வரதட்சணை; நகைநட்டுகளாக, பண்டபாத்திரமாக
வாங்குவது வரதட்சணையாகாது என்று இவர்களாக ஒரு
அளவுகோலை வைத்து வாங்குகின்றனர்.
நகை நட்டுகளும், பண்ட பாத்திரங்களும்
இலவசமாகவா கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.
இன்னும் சில ஊர்களில் நடக்கும் கொடுமை, அதுவும் அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை, நாகூர் போன்ற ஊர்களில் ஒரு பெண்ணைப்
பெற்றால் திருமணத்தின் போது வீடு கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். இந்த ஊர்களிலெல்லாம்
ஆண்கள், மனைவியரின் வீட்டில்தான் இருப்பார்கள். விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆனால் அதிகமானவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள்.
அதாவது ஆண்கள் திருமணம் வரைக்கும் பெற்றோருடன் இருந்துவிட்டு, திருமணம் முடித்ததும் மற்ற ஊரில் பெண்கள் செல்வது போன்று காயல்பட்டினம்
போன்ற ஊர்களில் மாப்பிள்ளைகள் புகுந்த வீட்டுக்குச் சென்று விடுவார்கள். மாப்பிள்ளையைக்
கண்ணீர் விட்டு அழுது பெண் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.
அதேபோன்று, எல்லா வீடுகளும் பெண்கள் பெயரில்தான்
பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆண்களுக்குச் சொத்து எதுவும் கிடையாது. சிலர் மட்டும்
விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்நிலையில்தான் உள்ளனர்.
அதாவது ஒருவர் தனது மனைவி வீட்டில் இருப்பார். அவர்களுக்குப்
பெண் பிள்ளை இருந்தால் தங்களது பெண்ணின் திருமணத்திற்காக அதைக் கொடுத்துவிட வேண்டியதுதான்.
வீடு இல்லையெனில் எந்தப் பெண்ணுக்கும் கல்யாணம் செய்யவே முடியாது. ஒரு வீடு அம்மா பெயரில்
இருந்து, 4 பெண் பிள்ளைகளைப் பெற்றால் என்ன ஆவது? இருக்கிற வீட்டை 1 பெண்ணுக்குக்
கொடுத்து விட்டு மீதமுள்ள 3 பெண்ணுக்கும் வீடு வாங்குகின்ற
வரைக்கும் திருமணம் முடிக்காமல் காத்துக் கொண்டிருப்பார்கள்?
இவ்வளவு பெரிய கொடுமையை ஒரு சமூகமே சேர்ந்து நன்மை போல் சித்தரித்து
வாழ்ந்து வருகின்றனர். இவைகளெல்லாம் பெரிய அநியாயம்? மனதால்
சிந்தித்தால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போகிறது. ஆனால் இந்தக் கொடுமைக்கான தீர்வையும்
அதிலிருந்து விடுபட்டு சரியாக வாழ வழிமுறையையும் மார்க்கம் எப்படிச் சொல்கிறது என்று
பாருங்கள்.
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில்
குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்!
...
(அல்குர்ஆன் 65:6)
மனைவியை விவாகரத்துச் செய்த பிறகு கூட அவளை கணவன் வீட்டில் வைத்துப்
பராமரிக்க வேண்டும் என்று இந்த வசனத்தில் சொல்கிறான். அப்படியெனில் கணவன், மனைவி சேர்ந்து வாழ்கிற போது கணவன் வீட்டில்தான் மனைவி இருக்க
வேண்டும் என்பது உறுதியிலும் உறுதியான விஷயம்.
எனவே மனைவி வீட்டில் கணவன் வாழ்வதும் வரதட்சணை தான். சொல்லப்
போனால் இது வரதட்சணையிலேயே மிகப் பெரிய கொடுமையான வரதட்சணையாகும்.
பெண்ணுக்கு வீடு கொடுத்தால் தான் திருமணம் முடிக்க முடியும்
என்றால் எல்லோராலும் இது முடியுமா? இரண்டு அல்லது
மூன்று பெண்கள் இருந்தால் இதை எப்படி செயல்படுத்திட முடியும்? இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன? இப்படி இந்தத் தீமையினால் பாதிக்கப்படும் நமது சமூகத்தின் நிலை
பற்றிப் பிற சமூக மக்கள் என்ன நினைப்பார்கள்? இதற்கெல்லாம்
மறுமையில் இறைவன் தரப்போகும் தீர்ப்பு எப்படி இருக்கும்? என்பதையெல்லாம் இந்தச் சமூகம் யோசிக்க வேண்டும்.
வரதட்சணையாகப் பெண் வீட்டாரிடம் பிச்சைக்காரன் போல் சோறு கேட்கும்
நிலையைப் பார்க்கிறோம். கல்யாணத்திற்கு விருந்து கேட்பது அது ஒரு கூத்து. அதிலும் சிலர்
கல்யாணத்திற்கு முன்கூட்டியே பெண் பார்க்கிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோருக்கு
சோறு போடச் சொல்வார்கள். சோறு போடுவது ஒரு நபருக்கு குறைந்தது முன்னூறு ரூபாய் செலவு
செய்தால்தான் திருப்தியாக விருந்து என்கிற முறையில் பரிமாற முடியும்.
அதுபோகப் பெண் வீட்டில் இருந்து கொண்டு பெண் வீட்டார் செலவில்
மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு விருந்து நடத்துவார்கள். ஏன் இவர் வீட்டில் வைத்தால்
நண்பர்கள் வந்து சாப்பிட மாட்டார்களோ? இதுபோக சம்பந்தி
கலப்பு அல்லது கலப்புப் பெருநாள் என்ற பெயரில் பெரிய தடபுடலான விருந்தை பெண்வீட்டுப்
பணத்தில் மூக்குமுட்ட தின்னுகின்றனர்.
ஏன் சம்பந்தி கலப்பு பெண்வீட்டில் கலந்தால் தான் நடக்குமா? மாப்பிள்ளை வீட்டில் அப்படியொரு கலப்பை நடத்தினால் என்ன? இப்படியெல்லாம் பெண்ணிடமிருந்து பிச்சை எடுக்கும் அவல நிலை இந்தச்
சமூகத்தில் தலைவிரித்தாடுகிறது. இதுவெல்லாம் வரதட்சணையின் தொடர்தான்.
அதற்கடுத்து முஸ்லிமல்லாத மக்கள் ஆடி சீர், அமாவாசை சீர், தலைப்பிள்ளை
சீர், தீபாவளி சீர், பொங்கல் சீர்
என்றெல்லாம் ஏராளமான பெயர்களில் வைத்திருப்பார்கள். அதை அப்படியே காப்பியடித்து இங்கேயும்
நோன்புப் பெருநாள் சீர், ஹஜ் பெருநாள் சீர் என்று வைத்திருக்கிறார்கள்.
தலை நோன்புப் பெருநாள் என்ற பெயரில் அதாவது திருமணம் முடித்த பிறகு கணவன் அடைகிற நோன்பு
சீருக்கு அப்படி தலைநோன்பு பெருநாள் சீர் என்றும், மிஃராஜ்
சீர், பராஅத் சீர், தலைப்பிரசவச்
சீர் என்றெல்லாம் பிறமதக் கலாச்சாரத்தைக் காப்பியடித்து பெண்வீட்டாரை மொட்டையடிப்பதைப்
பார்க்கிறோம்.
ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி சுயமரியாதை இழந்து பெண்வீட்டாரிடம்
அடித்துப் பிடித்துத் தின்கிறது இந்த சமூகத்தின் மாப்பிள்ளை வம்சம். இதுவெல்லாம் பெண்களுக்கு
இழைக்கப்படும் அநீதம், கொடூரம்தான். இப்படி வாழ்வது
இஸ்லாமியக் குடும்பமே கிடையாது.
நமது சமூகத்தில் உண்டாக்கப்படும் இதுபோன்ற திருமணங்களின் அஸ்திவாரமே
அக்கிரமமாகும். ஆரம்பமே அநியாயத்தில் ஆரம்பிக்கிறது.
குழந்தை பெற்றால் ஓரிரு மாதங்களில் மனைவியை கணவன் தனது வீட்டிற்கு
அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் அப்படி யாரும் உடனே அழைத்துச் செல்ல மாட்டார்கள்.
ஏன்? பெண் பிள்ளை பிறந்திருக்கிறது, குறைந்தது 5 பவுனாவது
போட்டால்தான் மனைவியை அழைத்துச் செல்வார்கள். பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்குப் பெண்களை
அனுப்புவதில் தவறொன்றுமில்லை. ஆனால் அதில் ஏற்படும் அத்தனை செலவிற்கும் பொறுப்பாளர்
கணவர்தான்.
மாமியார் வீட்டில் இருப்பதை விடத் தாய் வீட்டில் குழந்தை பெற்றவள்
இருப்பது மிகவும் நல்லதுதான். ஏனெனில் தேவையான அளவுக்கு நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் அப்படியே பெண்ணின் தாய் வீட்டிலேயே தொடர்ச்சியாக வைப்பதற்கு
முயற்சிக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள். ஏனெனில், அவர்கள் எனது பிள்ளைக்கு நகை போடவில்லை அதனால்தான் என்பார்கள்.
கொலுசு போடவில்லை, மோதிரம் போடவில்லை, வெள்ளியில் அர்ணக் கொடி போடவில்லை என்றெல்லாம் தாமதத்திற்கான
காரணத்தைக் கூறுகிறார்கள். இதுவெல்லாம் குழந்தைகளின் பெயரைப் பயன்படுத்தி பெண்வீட்டில்
சுரண்டப்படும் சுரண்டல்களாகும்.
இப்படி ஏராளமான கொடுமைகள் பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படுகிறது.
ஆனால் பெண்களுக்கு இஸ்லாத்தை விடவும் சொத்துரிமைகளையும் சுய உரிமைகளையும் வேறு எந்த
ஆன்மிக நெறிகளும் வழங்கிடவில்லை என்பதே உண்மை. இவற்றையெல்லாம் முஸ்லிம்கள் சீர்தூக்கிப்
பார்க்க வேண்டும்.
EGATHUVAM OCT 2016