May 29, 2017

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்

அப்துந் நாஸிர்

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரீ 631

நாம் தொழுகின்ற எந்தத் தொழுகையாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படிதான் அமைய வேண்டும் என்பதை மேற்கண்ட நபி மொழி எடுத்துரைக்கின்றது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக தொழுகையின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் செய்கின்ற ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைகளையும் எவ்வாறு தொழுதார்கள் என்பதை ஆதாரங்களுடன் தொகுத்து நபிவழியில் தொழுகை என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. அது போன்று ஆன்லைன் பிஜே இணயதளத்தின் வாயிலாகவும், ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி போன்ற மாத இதழ்களின் வாயிலாகவும் கட்டுரைகள் வடிவிலும், கேள்வி பதில் வடிவிலும் தொழுகை தொடர்பான ஏராளமான சட்டதிட்டங்கள் சான்றுகளுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வரிசையில் கடமையாக்கப்பட்ட ஐங்காலத் தொழுகைகளில் எந்தெந்த ரக்அத்துகளில் நபியவர்கள் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள்? எந்தெந்த ரக்அத்துகளில் சப்தமின்றி ஓதியுள்ளார்கள்? என்பது தொடர்பான விளக்கங்கள் இதற்கு முன்னர்  தெளிவுபடுத்தப்பட்டிருந்தாலும் அவை ஒரே தொகுப்பாக இல்லாத காரணத்தினால் இது தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடமிருந்தும், மதரஸா மாணவ, மாணவியரிடத்திலிருந்தும் எழுகின்றன. எனவே அவர்களது சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.

சப்தமாகவும் ஓதியுள்ளார்கள்  மெதுவாகவும் ஓதியுள்ளார்கள்

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம்.

நூல்: புகாரி (772), முஸ்லிம் (659, 660, 661)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதுமாறு கட்டளையிடப்பட்ட இடத்தில் சப்தமாகவும், மெதுவாக ஓதுமாறு கட்டளையிடப்பட்ட இடத்தில் மெதுவாகவும் ஓதினார்கள். (ஏனெனில்,) உம் இறைவன் மறப்பவன் அல்லன் (19:64) என்றும் அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு (33:21) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

நூல்: புகாரி 774

மேற்கண்ட செய்திகளில் இருந்து நபியவர்கள் சில ரக்அத்துகளில் சப்தமாகவும் ஓதியுள்ளார்கள். சில ரக்அத்துகளில் சப்தமின்றி மெதுவாகவும் ஓதியுள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நபியவர்கள் எந்தெந்த ரக்அத்துகளில் சப்தமாக ஓதியுள்ளார்கள் என்று தெளிவான ஆதாரங்கள் வந்துள்ளதோ அதைத் தவிர மற்ற அனைத்து ரக்அத்துகளிலும் மெதுவாக ஓதியுள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும், மஃக்ரிப் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்துகளிலும், இஷா தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமாக ஓதியுள்ளார்கள். அது போன்று லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளில் நான்கு ரக்அத்துகளிலும் சப்தமின்றி ஓதியுள்ளார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

சுபுஹ் தொழுகையில் சப்தமாக ஓதுதல்

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (‘அஸ்ஸஜ்தா எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூரா எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1594, 1595, 1596)

நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘இதா ஸுல்சிலத்தில் அர்ளு ஸில்சாலஹா என்ற (அத்தியாயத்தை) ஓத தாம் செவியேற்றதாக ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார். நபியவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது வேண்டுமென்றே (அவ்வாறு ஓதினார்களா?) என்பதை நான் அறியமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அறிவிப்பவர்: முஆத் இப்னு அப்தில்லாஹ்

நூல்: அபூதாவூத் (816)

அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(ஒரு நாள்) நபி (ஸல்)  அவர்கள் மக்காவில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அல்முஃமினூன் (எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதலானார்கள். அதில் மூசா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிய (23:45ஆவது) வசனம் அல்லது ஈசா (அலை) அவர்களைப் பற்றிய (23:50ஆவது) வசனம் வந்ததும்  நபி (ஸல்) அவர்களுக்கு  இருமல் ஏற்பட்டுவிட்டது. உடனே (அவர்களால் தொடர்ந்து ஓத முடியாமல்) ருகூஉச் செய்து விட்டார்கள். அந்தத் தொழுகையில் நானும் கலந்து கொண்டேன்.

நூல்: முஸ்லிம் (780)

அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் பின்வாங்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக எனும் (81:17ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.

நூல்: முஸ்லிம் (781)

குத்பா பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் வந்நக்ல பாசிகா(த்)தின் லஹா தல்வுன் நலீத் எனும் (50:10ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள காஃப் அத்தியாய)த்தை ஓதுவதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம் (782, 781,783, 784,785, 786)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமிட்டு ஒதியுள்ளார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

லுஹர், அஸர் தொழுகைகளில் சப்தமின்றி மெதுவாக ஓதுதல்

நபி (ஸல்) அவர்கள் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளின் அனைத்து ரக்அத்துகளிலும் சப்தமின்றி மெதுவாகவே ஓதியுள்ளார்கள். இதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன.

அபூ மஃமர் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும், அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். அ(வர்கள் மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, அவர்களது தாடி அசைவதை வைத்து (நாங்கள் அறிந்து கொண்டோம்.) என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (746)

நபியவர்கள் ஓதியதை தாடி அசைவதின் மூலம் தான் நபித்தோழர்கள் அறிந்து கொண்டனர். இதிலிருந்தே அவர்கள் சப்தமிட்டு ஓதவில்லை என்பது தெளிவாகிறது.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் (அல் ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாயத்தையும் (அவ்விரு ரக்அத்கள் ஒவ்வொன்றிலும்) மற்றோர் அத்தியாத்தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள்.

நூல் : புகாரி (762)

‘‘சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள் என்பதிலிருந்து சில சமயங்கள் தவிர அனைத்து நேரங்களிலும் சப்தமின்றி மெதுவாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

மஃக்ரிபின் முதல் இரண்டு ரக்அத்துகளில் சப்தமாக ஓதுதல்

மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நீங்கள் என் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியேற்றுள்ளேன்   என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (764)

நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப் அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: அஹ்மத் (22442)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ‘‘சூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை பிரித்து மஃக்ரிப் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளில் ஓதினார்கள்.

நூல்: நஸாயீ (981)

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்கையில் நான் செவியேற்றேன்.

நூல்கள்: புகாரி (765, 3050, 4023, 4854) முஸ்லிம் (791)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் வல்முர்சலாத்தி உர்ஃபன் எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், ‘‘என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இந்த அத்தியாயத்தை ஓதி எனக்கு (ஒன்றை) நினைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் இறுதியாக அவர்களிடமிருந்து செவியேற்றதாகும்’’ என்று கூறினார்கள்.

நூல்கள்: புகாரி (763, 4429), முஸ்லிம் (790)

நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் எங்களுக்கு ‘‘அல்லதீன கஃபரூ வஸத்தூ அன் ஸபீலில்லாஹி எனத் துவங்கும் (47வது அத்தியாயத்தை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் (1835)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளில் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள் என்பது  தெளிவாகிறது. மேலும் முதலிரண்டு ரக்அத்துகளில் சப்தமாக ஓதினார்கள் என்பதிலிருந்து மூன்றாவது ரக்அத்தில் சப்தமில்லாமல் மெதுவாக ஓதியுள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

இஷாவின் முதலிரண்டு ரக்அத்துகளில் சப்தமாக ஓதுதல்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷா தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கடுமையாக ஏசினார். நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, நீர் குழப்பவாதியா? குழப்பவாதியா? குழப்பவாதியா? என்று (முஆத் அவர்களிடம்) மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.

நூல்: புகாரி (701)

இஷா தொழுகையில் நடுத்தர அத்தியாயங் களிலிருந்து இரண்டை ஓதித் தொழுவிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே முதல் இரண்டு ரக்அத்துகள் மட்டும்தான் சப்தமாக ஓதித் தொழ வேண்டிய ரக்அத்துகள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (98ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனியை ஓதினார்கள்.

நூல்: புகாரி (767)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனியை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட அழகிய குரலில் அல்லது அழகிய ஓதல் முறையில் வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை.

நூல்: புகாரி (769)

சுலைமான் பின் யஸார் அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்த ஒரு இமாமைக் குறித்து கூறும் போது  ‘‘நபி (ஸல்) அவர்களின் தொழுகைக்கு மிகவும் ஒப்பான தொழுகையை இன்னாரை விட வேறு யார் பின்னாலும் நான் தொழுததில்லை என்று கூறினார்கள்.

சுலைமான் பின் யஸார் கூறுகிறார்: நான் அந்த மனிதருக்குப் பின்னால் தொழுதேன். அவரை லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டுபவராகவும், இறுதி இரண்டை சுருக்குபவராகவும் கண்டேன். மேலும் அவர் அஸரை சுருக்கமாகத் தொழுதார். மஃக்ரிபில் முதலிரண்டு ரக்அத்துகளில்  சுருக்கமான (கிஸாருல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும், இஷாவில் முதலிரண்டு ரக்அத்துகளில் நடுத்தர (வஸ்தில் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும்  சுப்ஹிலே நீளமான (திவாலுல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும் கண்டேன்.

நூல்: அஹ்மத் (7650)

மேற்கண்ட செய்தியில் சுபுஹில் இரண்டு ரக்அத்துகளிலும், மஃக்ரிபில் முதலிரண்டு ரக்அத்துகளிலும், இஷாவில் முதல் இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமிட்டு ஓதித் தொழுவித்த இமாமைப் பற்றி அபூஹூரைரா (ரலி) தொழுதுவிட்டுநபி (ஸல்) அவர்களின் தொழுகைக்கு ஒப்பான தொழுகை என்று குறிப்பிடுகிறார்கள்.

இதிலிருந்து மஃக்ரிபின் மூன்றாவது ரக்அத்திலும், இஷாவின் இறுதி இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமின்றி மெதுவாக ஓதவேண்டும் என்பதையும் அறியமுடிகிறது.


மேலும் லுஹரிலும், அஸரிலும் சப்தமின்றி மெதுவாக ஓதித் தொழுதுள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது. 

EGATHUVAM OCT 2016