May 29, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 28 - இதயத்தை ஈர்ப்பது இறை வேதமல்ல! இசை நாதமே! குருநாதர் (?) கஸ்ஸாலியின் குர்ஆனிய வெறுப்பு

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 28 - இதயத்தை ஈர்ப்பது இறை வேதமல்ல! இசை நாதமே! குருநாதர் (?) கஸ்ஸாலியின் குர்ஆனிய வெறுப்பு

தொடர்: 28

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

குர்ஆனைக் கேட்பதை விட இசையைக் கேட்பதே இதயத்தை ஈர்க்கும் என்று இஹ்யாவில், கிதாபு ஆதாபுஸ் ஸிமா வல் விஜ்த் (செவியுறுதல் மற்றும் மனம் உருகுதலின் ஒழுங்குகள்) என்ற பாடத்தில் கஸ்ஸாலி குறிப்பிடும் நச்சுக் கருத்துக்களைப் பாருங்கள்:

குர்ஆனைக் கேட்பது இதயத்திற்குப் பயன் அளிக்கும் என்றால், காரிகள் ஓதுகின்ற குர்ஆன் கிராஅத்தைக் கேட்பதை விட்டு விட்டு மக்கள் இசைப் பாடல்களில் லயிப்பதும் ரசிப்பதும் ஏன்குர்ஆன் ஓதப்படும் சபைகளில் தானே இவர்கள் சங்கமம் ஆக வேண்டும்? இவர்களின் இதயங்கள் சஞ்சரிக்க வேண்டும்? ஆனால் இதற்கு மாறாக, இவர்களோ பாடகர்கள் பாடுகின்ற சங்கீத சபாக்களில் சங்கமம் ஆகின்றார்களே?

இவர்களின் இதயங்கள் கவ்வாலி, கானா பாடல்களில் கலந்தும் கவிழ்ந்தும் கிடப்பதும் ஏன்ஒரு காரியின் அழைப்பின் பேரில் கூடுகின்ற ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பல்வேறு விதமான  கருத்துக்களைக் கற்பது கடமை தானே என்று நீ கேட்டால், இன்னிசைப் பாடல் தான் குர்ஆனை விட இதயத்தை இயக்கவும் ஈர்க்கவும் வல்லது என்று  உனக்கு நான் ஏழு விதமான வகைகளில்  விளக்கம் அளிக்க உள்ளேன். அவற்றை இப்போது பார்ப்போம்:

முதல் வகை: குர்ஆனுடைய அனைத்து வசனங்களும் கேட்பவனுடைய  நிலைக்குப் பொருத்தமாக அமையாது. அவன் விளக்கத்திற்கும் அவன் என்ன இக்கட்டில் மாட்டியிருக்கின்றானோ அதற்கு ஏற்றாற் போல் குர்ஆன் வசனங்கள்  இறங்கி வராது. இசைவாக ஆகாது. கவலையின் பிடியில் சிக்குண்ட, கைசேதத்திற்குள்ளான, ஆசையில் ஆட்பட்ட ஒருவனுக்கு கீழ்க்காணும் வசனங்கள் எப்படிப் பொருந்தும்?

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும்  (அல்குர்ஆன்4:11)

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:4)

வாரிசுரிமைச் சட்டம், விவாகரத்து, குற்றவியல் தண்டனைகள் மற்றும் இன்ன பிற சட்டங்கள் இடம் பெறுகின்ற வசனங்களும் இவ்வாறு  பொருத்தமாக அமையாது.

உள்ளத்தை உருக்குகின்ற ஒரே ஆயுதம் அதற்கு பொருத்தமாக அமைகின்ற இசைப் பாடல்கள் தான். கவிஞர்கள் வடிக்கின்ற கவிதைகள் அனைத்தும் வெறும் கவிதைகள் அல்ல! அவன் உள்ளத்தின் நிலைகளைத் தான் வார்த்தைகளின்  வாயிலாக வெளியே கொண்டு வருகின்றான். இந்த அடிப்படையில் அவனது கவிதைகள் உள்ளத்தின் வெளிப்பாடுகளாகும்.

அதனால் சோகத்தில் உள்ளவன் அதை விளங்குவதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. எளிதில் அதை அவன் புரிந்து கொள்கின்றான். சில வார்த்தைகள் கருத்துக்களை விட்டும் வெகு தூரம் விலகி நிற்கும். படிப்பவர், அந்த  வார்த்தைகளை விளங்குவதற்கும் புரிவதற்கும் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு  தனது மூளையைப் போட்டு கசக்க வேண்டும். அதன் பின் தான் கருத்தை விளங்க முடியும்.

ஆனால் ஒரு சிலர்  அவற்றை எளிதில் விளங்கக் கூடிய புத்தி சாதுரியமும் சாமர்த்தியமும் கொண்டவர்களாக இருப்பார். இப்படிப்பட்டவர் எதையும்  எதிர்கொள்கின்ற மனப் பக்குவத்தைக் கொண்டிருப்பார். இத்தகையவரின் உள்ளத்தில் இன்னிசை பாடல் போன்ற ஒரு மாற்று வழி அறவே நுழைய முடியாது.

இத்தகையவர்களின் காதுகளில் விழுகின்ற அனைத்துச் செய்திகளிலும் அவரது கவனம் தொடரும். இவரின் காதில் பாகப் பிரிவினைக்குரிய அந்த வசனம் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இந்த வசனம் அவரது காதில் விழுந்த மாத்திரத்தில், மரணத்தின் காட்சி அவரது கண் முன்னால் அகல விரிய ஆரம்பிக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் தான் மரணிக்கின்ற போது தனக்குப் பின்னால் காசு பணத்தையும் சந்ததியையும் விட்டுச் செல்கின்றான்.  இரண்டும் அவனுக்குப் பிரியமானவை. ஒன்றை (அதாவது சொத்தை) மற்றொன்றிற்காக (அதாவது சந்ததிகளுக்காக) விட்டு விட்டு செல்கின்றான். அவ்விரண்டையும் தனது கடைசிக் கட்டத்தில் துறந்து விடுகின்றான். இந்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக தனது சந்ததிகளுக்கு வஸிய்யத் - என்ற மரண சாசன அறிவுரை- செய்கின்றான். .

1) இப்போது அவனிடம் அச்சமும் ஆட்டமும் திகிலும் திடுக்கமும் அவனிடம் மேலோங்கலாம்.

2) அல்லது  வசனத்தைச் செவியுறுகின்ற போது அதில் இடம் பெறுகின்ற அல்லாஹ் என்ற வார்த்தை கடந்த போன அவனது இவ்வுல வாழ்க்கையைப்  பற்றியும் எதிர் வரக்கூடிய மறு உலக வாழ்க்கையைப் பற்றியும் திடுக்கிட வைக்கலாம்.

3) அல்லது எல்லாம் வல்ல அல்லாஹ் மக்களின் வாழ்க்கை, மரணத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மரணிப்பவரின் சொத்திலிருந்து அவனது சந்ததிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று  தானே பொறுப்பேற்று பங்கீடும் பகிர்மானமும் செய்கின்ற அன்பும்  அடியார்கள் மீது அவன் கொண்டிருகின்ற அவனது அளவற்ற கருணையும் இவன் கண் முன்னால் பளிச்சென்று தோன்றி, நம்முடைய சந்ததிகளுக்கு நம்முடைய மரணத்திற்குப் பின்னால் அல்லாஹ் இவ்வளவு கவனம் எடுக்கின்றான்; கரிசனம் கொள்கின்றான் என்றால் நிச்சயமாக தன்னை எப்படி கவனிக்காமல் கை விடுவான்? என்று அல்லாஹ்வின் அருளில் நெகிழ்கின்ற வேளையில் அது அவனிடம்   அல்லாஹ்வுடைய  ஓர் ஆதரவையும் அரவணைப்பையும் தோற்றுவிக்கலாம். அத்துடன் இது அவனிடம் அல்லாஹ்வுடைய  நன்மாராயத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி விடுகின்றது.

4) அல்லது  ‘‘இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு  என்ற அல்லாஹ்வின் வார்த்தை, ஓர் ஆண் பெண்ணை விட சிறந்தவன் என்பதால் இந்த சிறப்பை அல்லாஹ்  இந்த உலகத்தில் அல்லாஹ் அளித்திருக்கின்றான்; மறுமையில் ஆண்களுக்கு சிறப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அவர்களை  அல்லாஹ்வின் நினைவிலிருந்து வர்த்தகமோ, வணிகமோ திசை திருப்பாதது தான். அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் திசை திருப்பிய  ஒரு பொருள், அல்லாஹ் அல்லாத ஒரு சக்தி உலகத்தில் இருக்குமானால் அது  நிச்சயமாக இந்த பெண்கள் தான்! அது ஆண்கள் அல்ல என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை, இப்படி உலகப் பொருளாதாரத்தில் பெண்கள் பின்னுக்கு தள்ளப் பட்டது போன்று தான் மறுமையின் அருள்கொடையிலிருந்து பின்னுக்கு தள்ளப் படலாம் அல்லது அருளிலிருந்து தடுக்கப் படலாம் என்ற அவர் பயப்பட நேரிடலாம்.

குர்ஆன் கூறுகின்ற பாகப்பிரிவினை வசனம் இந்த எடுத்துக்காட்டுகளில் கண்ட  தாக்கங்களை ஒருவரிடத்தில் ஏற்படுத்தலாம். ஆனால் அவர் இரண்டு அம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒன்று, எதையும் எதிர்க்கொள்ளக் கூடிய மனப் பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்

மற்றொன்று, கருத்துகளை விட்டும் தூர விலகி நிற்கும் வார்த்தைகளை விளங்கிக் கொள்ளக் கூடிய விளக்கத் தன்மையும் விபரமும் இருக்க வேண்டும்.

இத்தகையவர்கள் மிக அரிதிலும் அரிது. இதன் காரணமாகத் தான்     கவலைப்பட்டு காயப்பட்டு கிடக்கின்ற மக்கள் தங்களது  சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்ற இன்னிசைப் பாடல்களின் பக்கம் விரைகின்றனர். ஏனெனில், அந்தப் பாடல் வார்த்தைகளில் பட்டுத் தெறிக்கின்ற தீ அவர்களுடைய உள்ளங்களைப்  பற்றி எரியச் செய்கின்றது. கவிதை வரிகளின் தாக்கம் முடங்கிக் கிடந்த உள்ளத்தை மறு ஆக்கம் அடையச் செய்கின்றது.

இதற்கு ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம்: அபுல் ஹசன் நூரிய்யி என்பவர் தஃவா - அழைப்புப் பணி - தொடர்பான ஒரு ஜமாஅத்துடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு மத்தியில் மார்க்கக் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு சட்ட ஆய்வு நடந்து கொண்டிருந்தது. அபுல் ஹசன் மவ்னமாகவே உட்கார்ந்து கொண்டிருந்தார். பிறகு தலையை உயர்த்தி  பின் வரும் கவிதை வரிகளைப் பாடத் துவங்கினார்.

رب ورقاء هتوف في الضحى ذات شجو صدحت في فنن

 ذكرت إلفا ودهرا صالحا وبكت حزنا فهاجت حزني

 فبكائي ربما أرقها       وبكاها ربما أرقني

 ولقد أشكو فما أفهمها ولقد تشكو فما تفهمني

 غير أني بالجوى أعرفها وهي أيضا بالجوى تعرفني

இந்தக் கவிதை வரிகளைப் பாடிய மாத்திரத்தில், அங்கிருந்த  மக்களை அவை  கைது செய்து சிறை பிடித்தன, அவை அவர்களின் உள்ளங்களை நெகிழச் செய்து விட்டன. அதன் ஈர்ப்பு விசையின் பிடியிலிருந்து யாரும் தப்பவில்லை  எனுமளவுக்கு அதன் வீச்சும் வேகமும் இருந்தது.

கல்வி சம்பந்தப்பட்ட விவாதத்தில் அவர்கள் மூழ்கியிருந்த போது அவர்களுக்கு இந்த ஈர்ப்பும், இழுப்பும் ஏற்படவில்லை. அவர்களின் உள்ளங்கள் நெகிழவில்லை.

இதயங்களை இழுத்து ஈர்த்த அந்த கவிதை வரிகளின் அர்த்தம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

இளங்காலை நேரத்தில் கவலை நிறைந்த புறாக்கள் கிளைகளில் இசை ஒலி எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

நட்பையும், நல்ல காலத்தையும் அவை நினைவு கூர்ந்தன. அவை கவலையில் அழுதன.  அவை எனது கவலையையும் கிளப்பி விட்டன. சில கட்டத்தில் எனது அழுகை, புறாக்களை உருக வைத்தது. அந்தப் புறாக்களின் அழுகை என்னை உருக வைத்தது. நான் முறையிடுகின்றேன். என் முறையீட்டை அந்தப் புறாக்களுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. அந்தப் புறாக்கள்  முறையிடுகின்றன. அவற்றால்  அதை எனக்குப்  புரியவைக்க முடியவில்லை. எனினும், ஆகாய  வீதியில் அந்தப் புறாக்களை நான் அறிவேன். அதே ஆகாயத்தில் அவை என்னை அறிந்திருக்கின்றன.

இது தான் இவர்களின் இதயங்களை ஈர்த்த கவிதைகளாம்! இதில்தான் இவர்களின் உள்ளங்கள் நெகிழ்ந்தனவாம்.

நமது விமர்சனம்:

சூஃபிஸப் பேர்வழிகள் ஆன்மீகம் என்ற போர்வையில் இசையுடன் அல்லது இசையில்லாத பாடல் ரசனையில் விழுந்து கிடப்பவர்கள். இவர்களின் இந்த ரசனைக்கு வக்காலத்து வாங்குவதற்குக் களமிறங்கியிருக்கின்றார் கல்விக் கடல் (?) கஸ்ஸாலி.   கவிதைப் பாதைக்கும் கவிதை போதைக்கும் கச்சை கட்டிக் கொண்டு வழக்காடுகின்றார் கஸ்ஸாலி.

அந்த போதையில் அவர் விழுந்து கிடப்பதால் குர்ஆனை விடக் கவிதை தான் ஈர்ப்பு சக்தி நிறைந்தது என்று கூறுகின்றார்.

வாரிசுரிமை சட்டம், விவாகரத்து, குற்றவியல் தண்டனைகள் மற்றும் இன்ன பிற சட்டங்கள் இடம் பெறுகின்ற வசனங்களும் இவ்வாறு  பொருத்தமாக அமையாது. உள்ளத்தை உருக்குகின்ற ஒரே ஆயுதம் அதற்கு பொருத்தமாக அமைகின்ற இசைப் பாடல்கள்  தான். கவிஞர்கள் வடிக்கின்ற கவிதைகள் அனைத்தும் வெறும் கவிதைகள் அல்ல! அவன் உள்ளத்தின் நிலைகளைத் தான் வார்த்தைகளின்  வாயிலாக வெளியே கொண்டு வருகின்றான். இந்த அடிப்படையில் அவனது கவிதைகள் உள்ளத்தின் வெளிப்பாடுகளாகும். அதனால் சோகத்தில் உள்ளவன் அதை விளங்குவதற்கு சிரமப்பட வேண்டியதில்லை என்ற கஸ்ஸாலியின் வாதம் குர்ஆனை விட இன்னிசைக் கவிதைகள் தான் எளிமையானவை; இனிமையானவை என்பதைத் தான் நிறுவுகின்றது.

இது கவிதைக்கு ஆதரவாகக் கஸ்ஸாலி வைக்கின்ற முதல் வாதமாகும். இஸ்லாத்தைப் பற்றிய ஞானம் இல்லாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் கூட கஸ்ஸாலி கூறும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இது பற்றிய விமர்சனங்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம். 

EGATHUVAM OCT 2016