May 29, 2017

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் - 2

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் - 2

தொடர்: 2

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனஃபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

தொழுகையில் சந்தேகம் வந்தால்...?

எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று ஒருவருக்குச் சந்தேகம் எழுமேயானால் இந்தச் சந்தேகம் துவக்கமாக வருகிறதா? அல்லது அதிமான முறை வந்துள்ளதா? என்றெல்லாம் வகை வகையாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்குமான தீர்வு ஹிதாயாவில் முன்வைக்கப்படுகின்றது.

ஒருவர், தாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா எனத் தெரியாமல் குழம்பி நின்றால் இக்குழப்பம் முதல் முறையாக ஏற்பட்டிருக்குமெனில் அவர் தொழுகையைப் புதிதாக மறுபடியும் தொழ வேண்டும் எனவும், இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.

الهداية شرح البداية - (1 / 76)

ومن شك في صلاته فلم يدر أثلاثا صلى أم أربعا وذلك أول ما عرض له استأنف لقوله عليه الصلاة والسلام إذا شك أحدكم في صلاته أنه كم صلى فليستقبل الصلاة

ஒருவர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் வந்தால் அவர் தொழுகையை மீண்டும் தொழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 76

இவர் குறிப்பிடும் இந்தச் செய்தியை நபிகளார் எங்கே சொன்னார்கள்? யாரிடத்தில் சொன்னார்கள்? என்பதற்கு மத்ஹபு ஆதரவாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவர் குறிப்பிடும் இதே பிரச்சனைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அழகிய தீர்வு நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 990

நபிகளாரின் இந்தத் தீர்வையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் அதிகமான முறை சந்தேகம் வந்தால் அப்போது தான் இதை அமல்படுத்த வேண்டும் என்கிறார்.

தொழுகையில் சந்தேகம் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் பொதுவாக வழிகாட்டியிருக்க, நூலாசிரியரோ அந்தச் சந்தேகம் முதல் தடவை வருகிறதா? அதிகமான முறை வந்துள்ளதா என்று ஆதாரமின்றி பிரிக்கிறார். இது இவர் செய்யும் முதல் தவறு.

அதையடுத்து முதல் தடவை வந்தால் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் இதை நபியின் பெயரால் சொல்லியது அவர் செய்த மிகப்பெரிய பிழையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் மக்களிடையே உரையாற்றிடும் போது அறியாமல் ஹதீஸ்களைத் தவறுதலாகக் கூறி விட்டால் கூட அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்து எக்காளமிடும் மத்ஹபுக்கூட்டம் நபி சொல்லாததை நபி சொன்னதாக தாங்கள் போற்றும் மத்ஹபு அறிஞர்கள் சொல்லியமைக்கு மௌனம் காப்பதேன்? அவமானகரமான மௌனமிது என்பதில் அறிவுடையோர் சந்தேகிக்க மாட்டார்கள்.

கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் உண்டா?

ஸகாத் பற்றிய பாடத்தில் எவை எவைகளுக்கு ஸகாத் வழங்க வேண்டும் என்பதை விலாவரியாக விளக்கிக் கொண்டு வரும் போது நபியின் பெயரால் ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. கருத்து சரியா தவறா என்பதை ஆராயாமல் இப்படி எங்கேனும் நபிகளார் சொல்லியுள்ளார்களா? என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

الهداية شرح البداية - (1 / 102)

ولنا قوله عليه الصلاة والسلام ليس في الحوامل والعوامل ولا في البقرة المثيرة صدقة

கர்ப்பத்தில் உள்ளவைகள், நீர் இறைக்கப் பயன்படும் மாடுகள்உழவு மாடுகள் ஆகியவற்றில் ஸகாத் வழங்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கு ஆதாரமாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம்  102

கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்டம் கூறி விட்டு இவ்வாறு நபி கூறியுள்ளார்கள் என்று இந்த நூலாசிரியர் பதிகிறார்.

கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் வழங்கத் தேவையில்லை தானே? சரியாகத்தானே சொல்கிறார் என்று நாம் கருதி விடக்கூடாது. ஏனெனில் நபியின் பெயரால் ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால் அப்படி ஒரு செய்தியை நபி சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தாக வேண்டும். அப்படி இல்லாமல் வாயில் வந்ததை நல்ல கருத்து தானே என்று என்றெண்ணி நபியின் பெயரால் அள்ளி விடக் கூடாது. அது மோசமான செயலுடன் நபியின் மீது பொய்யுரைப்பதாக ஆகி விடும்.

காரட், பப்பாளி சாப்பிடுவது இரத்த சுத்திகரிப்புக்கு நல்லது என்று நபி சொன்னார்கள் என ஒருவர் எழுதினால், பேசினால் ஆஹா என்னவொரு நல்ல கருத்தை நபி பெயரில் புனைந்து சொல்கிறார் என்று பாராட்டுவோமா? அல்லது ஆதாரமற்றதை நபியுடன் இணைக்காதீர்கள் என்று அவ்வாறு சொல்பவரை கடிந்து கொள்வோமா?

இந்த வேலையைத்தான், கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் இல்லை என நபி சொன்னார்கள் என்ற இந்த விவகாரத்திலும் மேற்கண்ட நூலாசிரியர் செய்துள்ளார்.

(குறிப்பு: மற்ற இரண்டிற்கும் பலவீனமான செய்திகள் உள்ளன)

பொறுப்பாளர் நோன்பு நோற்கக் கூடாது?

நோன்பு தொடர்பான பாடத்தில் ஒருவர் மற்றொருவருக்காக நோன்பு நோற்கவோ, தொழவோ கூடாது என்று சட்டம் கூறிவிட்டு இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார்.

الهداية شرح البداية - (1 / 127)

لقوله صلى الله عليه وسلم لا يصوم احد عن أحد ولا يصلي أحد عن أحد

யாரும் யாருக்காகவும் நோன்பு நோற்கக் கூடாது, யாரும் யாருக்காகவும் தொழவும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 127

நபிகள் நாயகம் இவ்வாறு கூறினார்கள் என்றால் அது நபித்தோழர்கள் எனும் சமுதாயத்தின் வழியாகவே நம்மை வந்து சேரும். இதை அறிவித்த நபித்தோழர் யார்? அவரிடமிருந்து கேட்டறிவித்த தாபிஈ யார்? இந்தச் செய்தி எந்த ஹதீஸ் நூலில் பதிவாகியுள்ளது?

இவற்றுக்கு விடை தெரிந்தோர் உண்டா? மத்ஹபின் தீவிர ஆதரவாளர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.

மேலும் இவற்றுக்கு மாற்றமாக இறந்த பெற்றோர் சார்பில் அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்கலாம் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளார்கள் என்பதற்கு நேரடியான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1952

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1953


இந்த நபிமொழிகளுக்கு முரணாக நபியவர்கள் பேசியதாக ஹிதாயா நூலாசிரியர் கூறுகிறார். இதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. 

EGATHUVAM OCT 2016