சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் 3 - ஹதீஸ்களை மறுத்த இமாம்கள்
தொடர்: 3
எம்.எஸ். செய்யது இப்ராஹீம்
சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையிலிருந்த பல இமாம்கள் திருக்குர்ஆன்
வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி பல ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள் என்று நாம் எடுத்து
வைத்த அடுக்கடுக்கான ஆதாரங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய பரலேவி உலமாக்கள்
அவர்களது வாயாலேயே, “ஆமாம்! எங்களது இமாம்கள் ஒரு
சில ஹதீஸ்களை திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி மறுத்தது உண்மைதான்” என்று ஒப்புக்கொண்ட செய்தியை
விவாதம் குறித்தான தொடரின் முந்தைய பாகத்தில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது காண்போம்.
ஹதீஸ்களை மறுத்த மாலிக் இமாம்
ஒருவர் கடமையான நோன்புகளை களாச் செய்ய வேண்டியுள்ள நிலையில்
மரணித்துவிட்டால் அதை அவரது பொறுப்பாளர் நிறைவேற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக
அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1952
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த
நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது
என்றார்கள்.
நூல்: புகாரி 1953
மேற்கண்ட இந்த ஹதீஸ்களை இது திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்பாடாக
உள்ளது என்று கூறி மாலிக் இமாம் அவர்கள் மறுத்துள்ளார்கள். கீழ்க்கண்ட வசனத்தை தனது
நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக மாலிக் இமாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம்
ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை’’ என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
அல்குர்ஆன் 53:38,39
ஒருவர் தான் என்ன சம்பாதித்தாரோ அதுதான் அவருக்கு வழங்கப்படும்
என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கும் போது, நான் வைக்காத நோன்பை எனது பிள்ளைகள் வைப்பதால் எனக்கு எப்படி
நன்மை கிடைக்கும்? ஒருவருக்கு அவர் சம்பாதித்தது
தானே கிடைக்கும்?
எனவே இந்த வசனத்திற்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுபட்ட
நோன்பை அவரது பொறுப்பாளர்கள் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கவே மாட்டார்கள். இந்த
ஹதீஸை ஏற்க முடியாது என்று இமாம் மாலிக் அவர்கள் மறுத்துள்ளார்கள். இதனை மாலிக் மத்ஹப்
அறிஞரான இமாம் ஸாதிப்பி தனது முவாஃபகாத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு புகாரியில் உள்ள ஆதாரப்பூர்வமான
இந்த இரண்டு ஹதீஸ்களையும் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி இமாம் மாலிக் அவர்கள்
மறுத்துள்ளதால் அவர்களை காஃபிர் என்று நீங்கள் ஃபத்வா கொடுப்பீர்களா என்று நாம் எழுப்பிய
கேள்விக்கு கடைசி வரைக்கும் பரலேவிக்கூட்டம் வாய்திறக்கவே இல்லை.
ஹதீஸை மறுத்த ஹனஃபி மத்ஹபு அறிஞர்கள்
ஒரு வழக்கில் இரண்டு சாட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளிப்பது
மார்க்கக் கட்டளை என்பதை நாம் அறிவோம். ஒருவருக்குத் தனது வழக்கில் ஆதாரமாக இரண்டு
சாட்சியங்கள் கிடைக்கவில்லை; இப்போது என்ன செய்வது என்பதை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதாவது ஒரு சாட்சியத்தோடு அந்த
நபர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். இதை இரண்டு சாட்சிகளுக்கு ஒப்பானதாக
ஆக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள் என்று முஸ்லிம் என்ற கிரந்தத்தில்
ஆதாரப்பூர்வமான செய்தி பதியப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சத்தியம் மற்றும் ஒரு சாட்சியத்தின்
அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் (3526)
ஆனால் இந்த ஆதாரப்பூர்வமான செய்தி திருக்குர்ஆன் வசனத்திற்கு
முரண்படுவதாகச் சொல்லி ஹனஃபி மத்ஹபு அறிஞர்கள் மறுத்துள்ளார்கள்.
தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும்
குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு
ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள்
ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள்
என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும்
(ஆக்கிக் கொள்ளுங்கள்!)
திருக்குர்ஆன் 2:282
மேற்கண்ட வசனத்தில், “உங்கள் ஆண்களில்
இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்!” என்று அல்லாஹ்
கட்டளையிட்டிருக்கும் போது ஒரு சாட்சியுடன் மற்றுமொரு சாட்சிக்குப் பகரமாக சத்தியம்
செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி அனுமதித்திருப்பார்கள்? எனவே இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும்
அது திருக்குர்ஆனுக்கு முரண்படுகின்றது. எனவே
இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சொல்லி ஹனஃபி மத்ஹப் அறிஞரான அபூ ஸைத் அத்தப்பூஸி
அவர்கள் தக்வீமுல் அதில்லா என்ற நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.
அப்படியானால் ஹனஃபி மத்ஹபு அறிஞர்கள் வழிகேடர்களா? அவர்களெல்லாம் உங்களைத் தவறான பாதைக்கு வழிகாட்டி வழிகேட்டில்
தள்ளியுள்ளார்களா? என்று கேட்ட கேள்விக்குக் கள்ள
மௌனம் மட்டுமே பரலேவிக் கும்பலிடமிருந்து பதிலாக வந்தது.
பரலேவிக் கூட்டம் மதிக்கக் கூடிய மத்ஹபு அறிஞர்களே பல ஹதீஸ்களை
பற்பல காரணங்களைக் கூறி மறுத்துள்ளார்கள்; அவர்கள் மறுத்துள்ள
செய்திகள் அனைத்துமே புகாரி முஸ்லிம் உள்ளிட்ட ஆதாரப்பூர்வமான நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செய்திகளையெல்லாம் கேட்ட, சுன்னத் வல்ஜமாஅத் தரப்பில்
பார்வையாளர்களாக வந்த மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தவ்ஹீத் ஜமாஅத் எழுப்பும்
இந்தக் கேள்விகளுக்கு நமது ஆலிம்சாக்கள் தகுந்த விளக்கம் சொல்லி, தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது வைத்த குற்றச்சாட்டுக்களையெல்லாம்
உண்மையென்று நிரூபித்து நமது கொள்கையை(?) நிலைநாட்டுவார்கள்
என்று நம்பிய சுன்னத் ஜமாஅத் தரப்பு பார்வையாளர்களுக்குக் கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது.
பரலேவி ஆலிம்சாக்களின் அசாத்திய மௌனம், தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சரியான கொள்கை தான் என்பதை அவர்களுக்கும்
உலகிற்கும் பறைசாற்றுவதாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து சஹாபக்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகக்
கூறி பல ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள். அது குறித்த செய்திகளை எடுத்து வைத்தோம். அதற்கும்
பரலேவிக் கூட்டம் கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.
குடும்பத்தினர் அழுவதினால் மய்யித் வேதனை செய்யப்படும் என்ற
ஹதீஸை மறுத்த ஆயிஷா(ரலி)
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும்
அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அப்படிச்
சொல்லவில்லை.) ‘இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய
குடும்பத்தினரோ,
இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் என்று சொன்னார்கள்.
(புகாரி 3978)
“இறந்தவரின்
உறவினர் அழுவதினால் இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘‘அவர் (இப்னு உமர்) மறந்து விட்டார். நபியர்கள் ஒரு கப்ரை கடந்து
சென்ற போது கூறியதெல்லாம் ‘இந்த கப்ரிலிருப்பவர் வேதனை
செய்யப்படுகிறார். இவருடைய குடும்பத்தினர் இவருக்காக அழுகின்றனர்” என்றுதான். பிறகு ‘‘ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்” (6:164) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்
நூல்: நஸாயீ (1855)
மேற்கண்ட இரண்டு செய்தியும் கூறுவது என்ன?
இறந்தவருக்காகப் பிறர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவதாக
அறிவிப்பவர்கள் பொய்யர்களில்லை; யாரோ எவரோ கிடையாது;
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்தச் செய்தியை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிய போது தாங்கள் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். ஆனால் இதை ஆயிஷா (ரலி) அவர்கள்
மறுக்கின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. இதுபோன்று நபிகளார்
கூறியிருக்கவே மாட்டார்கள் என்பதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லும் ஆதாரம் என்ன தெரியுமா?
“ஒருவரின் சுமையை
மற்றொருவர் சுமக்க மாட்டார்”
(6:164)
மேற்கண்ட வசனத்தில் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று
அல்லாஹ் கூறுகின்றான். ஒருவரது மரணத்திற்காக நாம் அழுதால் அதற்காக அந்த மய்யித் வேதனை
செய்யப்படும் என்று நாம் எப்படி நம்ப முடியும்? இதை எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும்? அந்த மய்யித், தான் செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிப்பது அல்லாஹ்வுடைய
வசனத்திற்கு எதிராக இருக்கின்றதே! இதை நபிகளார் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்பது
தான் ஆயிஷா (ரலி) அவர்களின் வாதத்தின் சாராம்சம்.
அப்படியானால் திருக்குர்ஆனுக்கு
முரண் படுவதாகச் சொல்லி ஆயிஷா (ரலி) அவர்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை - அதுவும் இப்னு
உமர் (ரலி) அவர்கள் அறிவித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுத்துள்ளார்களே! இதை ஆதாரமாக வைத்து நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களை
காஃபிர் என்று சொல்வீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம்; இது குறித்து விளக்கமளித்தால் வசமாக மாட்டிக் கொள்வோம் என்று
பயந்த பரலேவிக் கும்பல் கடைசி வரைக்கும் இது குறித்து வாய்திறக்கவே இல்லை.
திருக்குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுவதாகக் கூறி அன்னை ஆயிஷா
(ரலி) அவர்கள் மறுத்த இன்னும் சில ஹதீஸ்களை இந்த விவாதத்தில் நாம் எடுத்துக் காட்டினோம்.
அவற்றை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.
EGATHUVAM OCT 2016