May 24, 2017

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - தொடர்: 3

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - தொடர்: 3

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள இன்னொரு கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது அல்லாஹ்வின் தூதர்) என்ற கொள்கை முழக்கத்தில் அவர்கள் கடவுள் அல்ல; கடவுளின் தன்மை பெற்றவர் அல்ல என்பதே அந்தக் கருத்தாகும்.

ஆன்மிகவாதிகள் அனைவரும் வாழும் காலத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ கடவுளாகவோ, கடவுளின் அம்சம் கொண்டவராகவோ, நினத்ததைச் சாதிக்கும் அளவுக்குக் கடவுளுக்கு வேண்டப்பட்டவராகவோ கருதப்படுகின்றனர்.

அவர்கள் அனைவரும் மலஜலத்தைச் சுமந்து கொண்டு எல்லா மனிதர்களைப் போலவே உணவு உண்பவர்களாகவும், மனைவி மக்களின் பால் தேவையுடைவராகவும், நோய்வாய்ப்படுவோராகவும், இறுதியில் மரணிப்பவர்களாகவும் இருந்தனர் என்று தெளிவாகத் தெரிந்த போதும் குருட்டு பக்தியின் காரணமாக அவர்களைக் கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர்.

நபிகள் நாயகம் அவர்கள் தம்மைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் என்று அறிவித்தது இந்த ஆன்மிக மோசடியை சவக்குழிக்கு அனுப்பியது.

அல்லாஹ்வின் தூதர் என்பதால் மனிதத் தன்மைக்கு நான் அப்பாற்பட்டவன் என்று என்னைப் பற்றி நினத்து விடாதீர்கள் என்று தெள்ளத் தெளிவாக அவர்கள் அறிவித்தார்கள்.

முஹம்மது நபி அல்லாஹ்வின் அடிமைதான்; அல்லாஹ் அல்ல என்று திருக்குர்ஆனின் 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10 வசனங்கள் மூலம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் எனக்கு இல்லை என்று திருக்குர்ஆனின் 6:50, 7:188 வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் அறவே இல்லை என்று திருக்குர்ஆனின் 3:127, 6:50, 7:188, 10:49, 10:107 வசனங்கள் மூலம் அறிவிப்பு செய்தார்கள்.

எனக்கே நான் நன்மை செய்ய முடியாது என்று திருக்குர்ஆனின் 6:17, 7:188 வசனங்கள் மூலம் தமது நிலையைத் தெளிவாக்கினார்கள்..

என்னையும் அல்லாஹ் காப்பாற்றினால் தான் உண்டு என்று திருக்குர்ஆனின் 4:106, 9:43, 23:118, 48:2 வசனங்கள் மூலம் மக்களுக்கு விளக்கினார்கள்.

என்னை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது என்பதுதான் எனது நிலை என்று திருக்குர்ஆனின் 6:17, 67:28 வசனங்கள் மூலம் தெளிவாக்கினார்கள்..

ஒரு மனிதனை நேர்வழியில் சேர்ப்பது கூட என் கையில் இல்லை; எடுத்துச் சொல்வது மட்டுமே என் பணி என்று திருக்குர்ஆனின் 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74, 28:56 வசனங்கள் மூலம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதன் அர்த்தத்தை அழகாக விளக்கினார்கள்.

இறைவனின் அதிகாரத்தில் எனக்கு எந்தப் பங்குமில்லை என்று திருக்குர்ஆனின் 3:128, 4:80 வசனங்கள் மூலம் கொள்கைப் பிரடகனம் செய்தார்கள்.

நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று திருக்குர்ஆனின் 3:144, 11:12, 18:110, 41:6 வசனங்கள் மூலம் மக்களுக்கு மெய்யான ஆன்மிகத்தைக் காட்டினார்கள்.

அற்புதங்கள் செய்து காட்டுமாறு மக்கள் கோரிக்கை வைத்த போது நான் மனிதனாகவும், அல்லாஹ்வின் தூதராரகவும் தான் இருக்கிறேன். அல்லாஹ்வின் அம்சம் பொருந்தியவனாக இல்லை என்று திருக்குர்ஆன் 17:90-93 வசனங்கள் மூலம் பதிலளித்தார்கள்.

என்னால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியமுடியாது. எனக்கு மறைவாக இருப்பவைகளை என்னால் அறிய முடியாது என்று திருக்குர்ஆனின் 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43 ஆகிய வசனங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர் என்பதன் அர்த்தத்தை விளக்கினார்கள்.

நான் மனிதனாகவும், அல்லாஹ்வின் தூதராகவும் தான் இருக்கிறேன் என்று பிரகடனம் செய்த காரணத்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவர்கள் கடவுளாக்கப்படவில்லை. அவர்களுக்குச் சிலை இல்லை. கோவில் கட்டப்படவில்லை.

ஆன்மிகத்தின் பெயரால் மற்றவர்களைப் போல் மக்களை ஏமாற்றாமல் தூய கொள்கையைச் சொன்னதால் தான் அவர்களை முஸ்லிம் சமுதாயம் தன்னை விடவும் தன் பெற்றோரை விடவும் பெரிதாக மதிக்கிறது.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து இதுதான்:

அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அனைத்தும் அவர்களின் சொந்தக் கருத்து அல்ல; அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவையே. அவர்களின் போதனைகள் அவர்களின் சொந்தக் கருத்தல்ல என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

தலைவர்களைப் பாராட்டி விழாக்கள் நடத்திவிட்டு, அவருக்குச் சிலை எழுப்பி, மணிமண்டபங்கள் கட்டிவிட்டு அவரது அறிவுரைகளைப் புறக்கணிக்கும் ஏராளமான சமுதாயங்களை நம் பார்க்கிறோம்.

ஆனால் முஹம்மது நபியை இப்படி நாம் கருதக் கூடாது. அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது தான் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதன் சரியான பொருளாகும்.

முஹம்மது நபியவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் சொன்னவை, செய்தவை அனைத்தும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவை தான். அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காத எந்த ஒன்றையும் மார்க்கத்தின் பெயரால் அவர்கள் வழிகாட்ட மாட்டார்கள்.

முஹம்மது நபி தன் மனோ இச்சைப்படி பேசமாட்டார். அவர் பேசுபவை அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவை தான் என்று திருக்குர்ஆன் 53:2,3,4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

முஹம்மது நபி அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் சுயமாக எதையாவது சொல்லி இருந்தால் அவரை வலக்கரத்தால் பிடித்து அவரது நாடி நரம்பைத் துண்டித்திடுவேன் என்று 69:44,45, 47 வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு எதனையும் நான் கூறுவதில்லை என்று மக்களிடம் தெரிவிக்குமாறு 6:50, 10:15, 46:9 ஆகிய வசனங்களில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

முஹம்மது நபியின் பணி அல்லாஹ் சொல்வதை எடுத்துச் சொல்வது தானே தவிர சொந்தக் கருத்தைச் சொல்வதல்ல என்று 5:92, 5:99, 13:40, 16:82, 24:54, 29:18, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது போல் அவர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று 3:32, 3:132, 4:13, 4:59, 4:64, 4:69, 4:80, 4:115, 5:92, 8:1, 8:20, 8:46, 9:71, 24:47, 24:51, 24:52, 24:54, 24:56, 33:33, 33:66, 33:71, 47:33, 48:17, 49:14, 58:13, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது எந்த அளவு கட்டாயக் கடமையோ அதே அளவு அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும் கட்டாயக் கடமையாகும். தூதருக்குக் கட்டுப்படாதவர்கள் முஸ்லிம்களே அல்லர் என்ற அளவுக்கு கடுமையான இவ்விஷயம் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நம்மிடம் பல்லாண்டுகளாக ஊறிப்போன கொள்கைகளும் சடங்குகளும் முஹம்மது நபியால் தடை செய்யப்பட்டவை என்று தெரிய வந்தால் அந்த வினாடியே அவற்றை விட்டு விலகினால் தான் அவர்களை அல்லாஹ்வின் தூதராக மதிக்கிறோம் என்று பொருளாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM AUG 2016