இணை கற்பித்தல் 41 - இறந்தவர்கள் செவியேற்பார்களா?
தொடர்: 41
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் ஸலவாத்தும் ஸலாமும்
சொல்வதால் நபியவர்கள் உயிரோடு இருந்து அதைச் செவியுறுகிறார்கள் என்று பரேலவிகள் முன்வைக்கும்
வாதத்திற்கான பதிலைக் கண்டோம்.
நபியவர்கள் மீது நாம் சலாம் சொல்லும் போது பதிலுக்கு அவர்கள்
இப்போதும் (இறந்த பிறகும்) நம் மீது சலாம் சொல்வார்கள் என்று இவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது தொழுகையில்
அத்தஹிய்யாத் இருப்பில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு
வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ” என்ற துஆவை எத்தனை ஸஹாபாக்கள் நபிகளாருடன் தொழுகையில் ஓதியிருக்கிறார்கள்.
அத்தனை ஸஹாபாக்களுக்கும் நபியவர்கள் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?
அது மட்டுமல்லாமல் ஹி்ஜ்ரி 10-களிலெல்லாம்
இஸ்லாம் மக்கா மதினா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியிருந்தது. பல இலட்சக்கணக்கான
மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். அத்தனை இலட்ச மக்களும் தங்களுடைய தொழுகையில் மேற்கண்ட
அத்தஹிய்யாத் துஆவை ஓதும் போது நபிகளார் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?
தொழுகை நேரம் என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். உலகம் முழுவதும்
24 மணி நேரமும் கடமையான, சுன்னத்தான
தொழுகைகள் என்று நடந்து கொண்டுதான் இருக்கும். அவர்கள் அனைவரும் தொழுகையில் சலாம் கூற
நபியவர்கள் பதில் சலாம் சொன்னார்களா?
நபியவர்கள் பதில் சலாம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அதுதான்
24 மணி நேர வேலையாக இருந்திருக்கும். வேறு எந்த வேலையும் பார்த்திருக்க
மாட்டார்கள். அவர்கள் உயிருடன் உலகில் வாழும் போது தொழுகையில் ஸலாம் கூறிய பல்லாயிரம்
பேர்களில் ஒருவருக்கும் பதில் சலாம் கூறவில்லை என்று இருக்கும் போது இப்போது எப்படி
நாம் சலாம் சொன்னால் பதில் சொல்வார்கள்?
ஆக, திருக்குர்ஆனின் 33:56 வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் தவறானது என்பதை நாம்
புரிந்து கொள்ள முடிகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த வசனத்திற்கான விளக்கத்தை நபியவர்கள்
அன்றே சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். எனவே நாம் குழம்ப வேண்டியதில்லை.
நாம் சலாம் சொன்னால் நபிகளார் பதில் சலாம் கூறுவார்கள் என்று
ஆரம்பித்து கடைசியில் நபிகளார் மட்டுமல்ல அனைத்து நல்லடியார்களும், கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நாம் சலாம் சொல்வதைச் செவியுறுவார்கள்.
பதில் சலாம் சொல்வார்கள் என்ற அளவிற்குச் சென்று விட்டனர்.
இதற்கும் ஒரு ஆதாரத்தைக் காட்டுகின்றனர்.
மண்ணறைகளைச் சந்திக்கும் போது ஓத வேண்டிய கீழ்க்காணும் துஆவை
நபிகளார் கற்றுத் தருகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மையவாடிக்குச் சென்று ”அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ
பி(க்)கும் லலாஹிகூன். அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்
சாந்தி பொழியட்டும்! இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1773
இந்த ஹதீஸைக் கொண்டு இறந்து போன அனைவரும் நாம் பேசுவதையும், சலாம் கூறுவதையும் கேட்கிறார்கள் என்று வாதிடுகின்றனர். “அடக்கம் செய்யப்பட்டவர்களே என்று அழைத்து நாம் சலாம் சொல்வதிலிருந்தே
அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றதா இல்லையா?” என்று கூறுகின்றனர்.
ஆனால் நாம் இந்த ஹதீஸை சற்று சிந்தித்துப் பார்க்கும் போது இந்த
துஆவை நபியவர்கள் ஏன் செய்தார்கள்? எதற்காக நம்மையும்
செய்யச் சொன்னார்கள் என்பது விளங்கும். வேறொரு ஹதீஸை நாம் பார்க்கும் போது இதற்கான
விளக்கம் தெரியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதீ 974
நபியவர்கள் மண்ணறைகளைச் சந்திக்கச் சொன்னது இறந்தவர்களிடத்தில்
பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காவோ அவர்களிடத்தில் உதவி தேட வேண்டும் என்பதற்காகவோ
அல்ல. மாறாக மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் மறுமையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும்
தான் மண்ணறைகளுக்குச் சென்று வர வேண்டும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
நபியவர்கள் அனுமதித்த கப்ர் ஜியாரத் என்பது இறந்தவர்கள் அனைவரும்
அடக்கம் செய்யப்பட்ட பொது மையவாடிக்கு செல்வதுதான். ஆனால் இ்ந்த கப்ரு வணங்கிகள் பொது
மையவாடிக்குச் செல்வதில்லை. மாறாக ஸியாரத் என்ற பெயரில் தனிப்பட்ட ஒருவரை நல்லடியார்
என்று இவர்களாகக் கற்பனை செய்து கொண்டு அவரது கப்ரில் மார்க்கம் தடை செய்த பல காரியங்களை
செய்து வருகின்றனர்.
அங்கு போய் இறந்து போன மனிதர்களிடத்தில் பிரார்த்தனையும் செய்து
இறைவனுக்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலையும் செய்து வருகின்றனர். ஆனால் நபியவர்களோ
இறந்து விட்ட நல்லடியார்களது கப்ருகளுக்கு நாம் சென்றால் நாம் தான் அவர்களுக்காக பிரார்த்தனை
செய்ய வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.
உயிரோடு இருப்பவர்கள்தான் இறந்து விட்டவர்களுக்காக ஏதேனும் உதவி
செய்ய முடியுமே தவிர, இறந்து விட்டவர்களால் உயிரோடு
இருப்பவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை நபியவர்களின் இந்தக் கட்டளையிலிருந்து
நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
எனவே மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபிகளார் மட்டுமல்ல எந்த மனிதருக்கும்
நாம் பேசுவதும் சலாம் சொல்வதும் கேட்காது என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது.
நபிகளார் மீது சலாம் சொல்வதை அவர்கள் நேரடியாகக் கேட்க முடியாது
என்றாலும் மலக்குமார்கள் நம்முடைய சலாமை நபியவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று
ஹதீஸ்களில் வருகின்றது. உலகத்தின் எந்த இடத்திலிருந்து யார் நபியின் மீது ஸலவாத் சொன்னாலும்
அதை வானவர்கள் எடுத்துச் சொல்வார்கள்.
அல்லாஹ் சில மலக்குமார்களை நியமித்து வைத்திருக்கிறான். நீங்கள்
என்மீது சொல்கின்ற சலாமை அவர்கள் எனக்கு எடுத்துக் காட்டுவார்கள் என்று நபியவர்கள்
கூறியதாக வரும் செய்தி நஸாயியில் 1265வது செய்தியாக
இடம் பெற்றுள்ளது.
இந்த செய்தியில் நபியவர்கள் நாம் சலாம் சொன்னால் நேரடியாக கேட்பார்கள்
என்றால் அல்லாஹ் ஏன் மலக்குமார்களை நியமிக்க வேண்டும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்…
EGATHUVAM AUG 2016