May 9, 2017

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை - 3

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை - 3

தொடர்: 3

அப்துந் நாசிர், கடையநல்லூர்

முந்தைய  இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள் ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதை நாம் தொடர்ந்து காண்போம்.

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்

ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும், தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன் வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க தொழுகைக்கு ஓடிவருவார்கள்.

அதுமட்டுமில்லாமல் சில சகோதரர்கள் இகாமத் சொல்லப்பட்ட பிறகு தான் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றச் செல்வார்கள். அவர்கள் தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி, பிறகு உளூச் செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்துவிடும். அல்லது இமாம் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது தொழுகையில் வந்து இணைவார்கள்.

இது போன்ற வீணாண காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தொழுகைக்கு முன்கூட்டியே நாம் தயாராவதால் ஏராளமான நன்மைகளை நாம் அடைகின்றோம். இது அல்லாஹ் நமக்குச் செய்த பாக்கியமாகும்.

தொழுகைக்கு நாம் முன்கூட்டியே வருவதால் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறோம் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

நபியவர்களின் முன்மாதிரி

நபி (ஸல்) அவர்கள் பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் தங்களுடைய வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, தொழுகைக்காக பள்ளியை நோக்கி விரைந்து விடுவார்கள்.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

(நூல்: புகாரி 5363)

முந்தி வருவதே மிகச் சிறந்தது

தொழுகைக்கு நாம் முன்கூட்டியே தயாராவதால் கிடைக்கும் நன்மைகளை அல்லாஹ் நம்முடைய கண்களுக்குக் காட்டவில்லை. அவ்வாறு காட்டினால் அதனை அடைவதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடக்கூடிய நிலை உருவாகிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்:  புகாரி (615)

இப்படிப்பட்ட மாபெரும் பாக்கியத்தை தொழுகையாளிகள் தான் பெறமுடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தொழுகையைப் பேணாதவர்கள் ஒருபோதும் இது போன்ற நற்பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியாது.

பள்ளியை நோக்கும் உள்ளமும் - அர்ஷின் நிழலும்

மறுமை நாளின் வெப்பத்தின் கொடுமை மிகக் கடுமையானதாகும். அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் அந்நாளில் இருக்காது. அப்போது பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தை உடையவர்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அர்ஷின் கீழ் நிழல் கொடுக்கின்றான்.

ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்கும் முன்கூட்டியே பள்ளிவாசலுக்கு வருவது அவரை இத்தகைய பாக்கியத்தைப் பெறக்கூடியவராக ஆக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:

1. நீதி மிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.

4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.

5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.

6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்:  புகாரி (660)

முஸ்லிமுடைய அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

"பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்''

நூல்: முஸ்லிம் (1869)

முன்கூட்டி வருவது நிதானத்தைப் பெற்றுத் தரும்

தொழுகைக்கு மிக மிக முக்கியமானது நிதானமாகும். இதனை நபியவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச் செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் (1053)

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் நாம் அமைதியாகவும், நிதானமாகவும் தொழுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம். சில சகோதரர்கள் தாமதமாக வருவதால் இமாம் ஜமாஅத்தை அடைவதற்காக வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க ஓடிவந்து தொழுகையில் இணைகின்றனர். இது தொழுகைக்கு இருக்க வேண்டிய அமைதியையும், நிதானத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகின்றது. தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இதுபோன்ற நிலைகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ளலாம்.

முன்கூட்டி வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு

ந நபியவர்கள் பாங்கு சொன்னவுடன் வீட்டிலிருந்து தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற ஹதீஸின் மூலம் இது மிகச் சிறந்த நற்செயல் என்பதை நாம் அறிகிறோம்.

ந தொழுகைக்கு ஆரம்ப வேளையில் வருவதன் நன்மைகளை மக்கள் அறிந்தால் அந்த நன்மைகளை அடைவதற்குப் போட்டியிடுவார்கள்.

ந தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தைப் பெற்றவராகிவிடுகிறார். இதன் காரணமாக மறுமையில் அர்ஷின் நிழலைப் பெறும் பாக்கியம் கிடைக்கிறது.

ந தொழுகையில் நிதானம், அமைதி மிகவும் அவசியமாகும். முன்கூட்டியே வருவதன் மூலம் இதனை நாம் அடைந்து கொள்ளலாம்.

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இன்னும் ஏராளமான பாக்கியங்களை  பெறமுடியும். அவற்றை இன்ஷா அல்லாஹ் பின்னர் விரிவாகக் காண்போம்.

தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்புகள்

தொழுகையாளிகள் தொழுகைக்காகக் காத்திருக்கும் போது அதற்காக அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறான். அல்லாஹ் எப்படிப்பட்ட கருணையாளன் என்பதற்கும், தொழுகை எவ்வளவு பெரிய நல்லமல் என்பதற்கும் இது மாபெரும் சான்றாகும்.

பள்ளிவாசலுக்கு முன்கூட்டியே சென்று தொழுகைக்காகக் காத்திருப்பதற்கும், அதுபோன்று ஒரு தொழுகையை முடித்து விட்டு மற்றொரு தொழுகைக்காகக் காத்திருப்பதற்கும் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான். அது பற்றிய நபிமொழிகளைக் காண்போம்.

தொழுகையை எதிர்பார்த்து தூங்கினாலும் நன்மையே!

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். அவர்களுடைய மோதிரம் மின்னுவதை இப்போதும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (5869)

ஒரு தொழுகையை எதிர்பார்த்து நாம் தூங்கிவிட்டாலும் கூட இறைவன் தூங்கிய நேரம் முழுவதையும் தொழுகையாகவே பதிவு செய்கிறான் என்றால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் பாக்கியம் எப்படிப்பட்டது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இவற்றையெல்லாம் தெரிந்த பிறகும் அறவே தொழுகையைப் புறக்கணிக்கிறார்களே! அந்த மக்களின் துர்பாக்கியத்தை நாம் என்னவென்பது?

மலக்குமார்களின் பிரார்த்தனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர்பார்த்து) இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு சிறுதுடக்கு ஏற்படாதவரை (பிராத்திக்கிறார்கள்). இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணைபுரிவாயாக! என்று கூறுகின்றனர்.

தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி (659)

மலக்குமார்கள் பாவமே அறியாதவர்கள். அவர்களின் பிரார்த்தனை கண்டிப்பாக அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். தொழுகையாளிகள் தான் இத்தகைய பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியும்.

பாவங்கள் அழிக்கப்பட்டு, அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 421)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தொழுகைக்காக நாம் காத்திருப்பதால் கிடைக்கும் பயன்களை வரிசையாகக் காண்போம்.

ந ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருந்தால் அவர் தூங்கிவிட்டாலும் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.

ந ஒருவர் தொழுது விட்டு அதே இடத்தில் மற்றொரு தொழுகையை எதிர்பார்த்து காத்திருந்தால் அவரது உளூ நீங்காத வரை அல்லது அவர் அந்த இடத்தை விட்டு நகரும் வரை மலக்குமார்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்; பாவமன்னிப்புக் கோருகிறார்கள்.

ந தொழுகைக்காகக் காத்திருப்பது நம்முடைய பாவங்களை அழித்து நன்மைகளை உயர்த்தும் நல்லறமாகும்.

தொழுகைக்காக நடந்து செல்வதன் சிறப்புகள்

தொழுகையை முறையாக பேணித் தொழுபவர்கள் அதன் மூலம் ஏராளமான நற்பாக்கியங்களை அடைந்து கொள்கின்றனர். அந்த நற்பாக்கியங்களில் ஒன்று தான் தொழுகையை நிறைவேற்றுவதற்காக நடந்து வருபவர்கள் பெறும் நன்மைகள். இதற்கு எத்தகைய பாக்கியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

தொலைவிலிருந்து நடந்து வருபவருக்கு அதிக நன்மை

பள்ளிவாசல் தூரமாக இருந்தால் தொழுகைக்குச் செல்வதற்கு சோம்பல் கொண்டு பல சகோதரர்கள் வீட்டிலேயே தொழுது விடுகின்றனர். இதனை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வீட்டிலிருந்து பள்ளிவாசல் வெகு தொலைவில் இருந்தாலும் நாம் பள்ளியை நாடிச் சென்று தொழுகையை நிறைவேற்றினால் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு வாரி வழங்குகிறான்.

அதிலும் குறிப்பாக இன்று பல பள்ளிவாசல்களில் இணை கற்பிக்கின்ற காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய பள்ளிவாசல்கள் தொழுவதற்கே தகுதியற்ற பள்ளிவாசல்களாகும்.

இணை வைப்புக் காரியங்கள் அரங்கேறாத தவ்ஹீத் பள்ளிவாசல்கள் வெகு தொலைவில் இருந்தாலும் நாம் நாடிச் சென்று அங்கு நம்முடைய தொழுகைகளை நிறைவேற்றும் போது நாம் இந்த நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),

நூல்: முஸ்லிம் (1179)

தொழுகையாளிகள் தான் இத்தகைய பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியும்.

சொர்க்கத்தில் மாளிகை கட்டப்படும்

தொழுகைக்காக ஒவ்வொரு முறை நாம் பள்ளியை நோக்கிச் செல்லும் போதும் அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைத் தயார் செய்கின்றான்.

சுப்ஹானல்லாஹ்! தொழுகை நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களையெல்லாம் பெற்றுத் தருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் (1187)

அறவே தொழுகையை நிறைவேற்றாமல் இருப்பவர்களும், தொழுகை விஷயத்தில் பொடும்போக்காக இருப்பவர்களும் இத்தகைய பாக்கியங்களை எப்படி அடைந்து கொள்ள முடியும்?

தொழுகைக்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்கும் எத்தகைய பாக்கியங்களை அல்லாஹ் வழங்குகிறான் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஒவ்வொரு எட்டிற்கும் பத்து நன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அங்கத் தூய்மை செய்து விட்டு பிறகு தொழுகை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்தால் அவன் பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்காகவும் பத்து நன்மைகளை அவனுடைய இரண்டு எழுத்தர்களும் பதிவு செய்கிறார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல்: இப்னு ஹிப்பான் (2045)

எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமாகும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பதும் தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி (2891)

பாவங்கள் அழிக்கப்பட்டு, தகுதிகள் உயர்த்தப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் (1184)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 421)

வாகனத்தில் வருவதை விட நடந்து வருவது சிறப்பு

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், "இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை'' என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே  கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டு'' என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 1180)

"நான் பள்ளிவாசலுக்கு நடந்துவருவதும் (பள்ளிவாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்'' என்று அந்த மனிதர் கூறியதாகவும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்'' என்று கூறியதாகவும் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு காலடிக்கும் ஒரு அந்தஸ்து

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், "உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு தகுதி உண்டு'' என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 1181)

காலடிகள் பதிவு செய்யப்படும்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?'' என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார் "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்'' என்று (இரு முறை) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1182)

தொழுகைக்காக நடந்து வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு

ந தொழுகைக்காக வெகுதொலைவிலிருந்து நடந்து வருபவர் தான் அதிக நன்மைகளைப் பெறுபவராவார்.

ந காலையிலோ, அல்லது மாலையிலோ பள்ளிவாசலுக்குச் சென்றால் ஒவ்வொரு தடவை செல்லும் போதும் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை அல்லாஹ் தயார் செய்கின்றான்.

ந வீட்டில் உளூச் செய்து பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு எட்டிற்கும் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.

ந தொழுகைக்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமாகும்.

ந வீட்டில் உளூச் செய்து தொழுகைக்காக நடந்து சென்றால் ஒரு எட்டு பாவங்களை அழிக்கிறது. மற்றொரு எட்டு அந்தஸ்துகளை உயர்த்துகிறது.

ந பள்ளிவாசலை நோக்கி அதிகமான காலடிகள் எடுத்து வைத்துச் செல்வது நமது பாவங்களை அழித்து நன்மைகளை உயர்த்துகிறது.

ந நம்முடைய கால் சுவடுகள் பதிவு செய்யப்படுவதுடன் ஒவ்வொரு எட்டிற்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது.

தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM MAR 2013